Monday, June 30, 2008

Friday, June 27, 2008

தலித் இலக்கியம் பின் தங்கி விட்டது.சோ. தர்மன்

சமகால இலக்கிய பரப்பில் மறுக்க முடியாத படைப்பாளி சோ.தர்மன். ஆரம்ப காலங்களில் யதார்த்த வகையான எழுத்துகளை படைத்துக் கொண்டிருந்த இவர் `கூகை' என்ற புதிய வகை நாவலின் மூலமாக நவீன வகை எழுத்தாளராக அடையாளப்படுத்தப்பட்டருக்கிறார். சமகால அரசியல், பண்பாட்டுச் சிதைவுகளை மையமாகக் கொண்ட `கூகை', `இயல் விருது' `தமிழக அரசு விருது' உள்ளிட்ட சில விருதுகளை பெற்றிருக்கிறது.

1980களிலிருந்து எழுதி வரும் சோ.தர்மனின் பூர்வீகம் கோவில்பட்டி அருகில் உள்ள உருளைக்குடி.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பஞ்சாலைத் தொழிலாளியாக வேலை பார்த்த இவர், அந்த வாழ்க்கை அனுபவம் குறித்து இதுவரை ஒரு கதையும் எழுதவில்லை என்பது ஆச்சர்யம். 1992இல் இவரின் முதல் சிறுகதை தொகுப்பு வெளியானது. பிறகு `தூர்வை' (நாவல்) `சோகவனம்' (சிறுகதை) `வனக்குமாரன்' (சிறுகதை) `வில்லிசைவேந்தர்' பிச்சைக்குட்டி பிள்ளை (மோனோகிராப்) `சோ.தர்மன் சிறுகதைகள் முழு தொகுதி' (மருதா) `கூகை' (காலச்சுவடு) என்று தொடர்ந்து எழுதி வருபவர். கோவில்பட்டியிலுள்ள கவிதா விடுதியில் காலை 11 மணிக்கு பதிவு செய்யத் தொடங்கிய இந் நேர்காணல் இரவு வரை நீண்டது. அதன் சுறுக்கப்பட்ட வடிவம்தான் இது.அதோடு இவரின் முதல் நேர்காணல் என்ற தகுதியும் இதற்குண்டு.

தீராநதி : உங்கள் அப்பா ஒரு கூத்துக் கலைஞர். ஒரு நல்ல கதை சொல்லி. கருவிலேயே கதை கேட்டு வளர்ந்தவர் நீங்கள். வாய்மொழி வழியாக கதை சொல்லி வந்த பரம்பரையில் எழுத்து வழி கதை சொல்லியாக பரிணமித்திருக்கிறீர்கள்.கூத்து என்ற மாபெரும் கலையும்,அதில் பரிசோதனைகளை மேற்கொண்டு அதை மேலும் செழுமைபடுத்திய சுயசிந்தனையாளர்களும், பெரும் பிரதியை வெறும் மனப்பதிவாகவே காலம் காலமாக காப்பாற்றி வந்த கலைஞர்களும் அரிதாகி விட்ட சமூகச் சூழலில் இன்றைக்கு நாம் வந்து நிற்கிறோம். ஒரு சமூகத்தின் வாழ்வியல், பிறகான ஒரு தலைமுறைக்கு வரலாறாக மாற்றம் பெறுகிறது என்பதினால் உங்களின் கூத்துக் குடும்பப் பின்னயிலிருந்து பேசத் தொடங்குவோமா?

சோ.தர்மன்: நீங்கள் குறிபிட்டுக் கேட்கும் மாதிரியான ஒரு வாழ்க்கை எனக்கு இயல்பாகவே கிடைத்தது. எங்கள் அப்பா சோலையப்பன் ஒரு கூத்துக் கலைஞர். இராமாயணக் கும்மி என்று சொல்லப்படுகின்ற ஒயில் கும்மியில் ராமர் வேஷம் போடுவார். என் சித்தப்பா லஷ்மணன் வேஜம் போடுவார். ஆக, நான் சிறு வயதிலேயே ராமனின் தோளில் பயணப்பட்டிருக்கிறேன்.சீதையின் மடியில் படுத்துறங்கி இருக்கிறேன். அனுமனின் நீண்ட வாலையும், கழற்றி வைக்கப்பட்ட ராவணனின் பத்து தலைகளையும் என் மடியில் வைத்து விளையாடி இருக்கிறேன். இந்த மாதிரி ரொம்ப நாள் நடந்திருக்கிறது. இது எங்கள் குடும்பத்தில் சில பாதிப்புகளை உருவாக்கியது. என்ன மாதிரியான பாதிப்பென்றால், நாங்கள் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உரிய காலத்தில் விதைத்தாக வேண்டும். உரிய காலத்தில் உழுதாக வேண்டும்.அந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு எங்கள் அய்யா மதுரை,திருநெல்வேலி என்று கூத்தாட போய்விடுவார். அப்போது விவசாய வேலைளெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் எங்கள் அய்யா கூத்திற்குதான் முதலிடம் கொடுத்தார். இன்னமும் கோவில்பட்டி பக்கத்திலுள்ள எங்கள் ஊர் உருளைக்குடியில் சில மாணவர்களுக்கு அவர் கூத்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.இன்னும் எங்கள் கிராமத்தில் ராமராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு எண்பது வயது ஆகப் போகிறது. இந்தக் கூத்துக் கலையை தனக்குப் பின்பாக யாராவது வளர்த்துவிட வேண்டும் என்பதற்காகவும், அழித்து விடக்கூடாது என்பதற்காகவும் பலருக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆக, ஒருநேரத்தில் கதையை கேட்கக் கூடிய அதை நேரடி காட்சிகளாகப் பார்க்கக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது என் பதின்மூன்று வயது வரைக்கும் எனக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. அதனுடைய விளைவாகத்தான் எனக்கு வாசிப்பின் மீதான ஆர்வம் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தீராநதி: சரி,உங்களின் வாசிப்பு சம்பந்தமான விஜயங்களுக்குள் வருவோம். எப்போது வாசிப்பை நவீன இலக்கியங்களின் பக்கம் திருப்ப ஆரம்பித்தீர்கள்?

சோ.தர்மன்: எல்லோரையும் போலத்தான் என்னுடைய வாசிப்பும் ஆரம்பித்தது. முதலில் சிந்துபாத் கதைகளில் தொடங்கி கல்கண்டு, குமுதம் பக்கம் போய்க் கொண்டிருந்தது. என்னுடைய தாய் மாமன்தான் பூமணி. என் அம்மாவுடன் பிறந்தவர். ஆனால் அவர் வாசிக்கக் கூடிய பத்திரிகைகளோ, அவர் எழுதிக் கொண்டிருந்த களமோ எதுவும் எனக்கு அப்போது தெரியாது. ஆனால் எல்லாவற்றையும் விழுந்து விழுந்து படிப்பேன். என்னுடைய பதிநான்கு பதினைந்து வயதில் கோடை விடுமுறைக்காக என் தாய்மாமன் பூமணி வீட்டிற்குப் போய்விடுவேன். அப்போது அவரது வீட்டில் `எழுத்து' பத்திரிகை கிடக்கும். `தீபம்' பத்திரிகை கிடக்கும். இப்படி புதுப்புது பத்திரிகைகளாக கிடக்கும். அப்போது நான் ஒரு நாள் ``படிப்பதற்கு ஏதாவது இரண்டு புஸ்தகம் இருந்தால் கொடுங்க மாமா'' என்று கேட்டேன். அவர் ``நீ படிப்பீயா?'' என்று கேட்டார். நான் ``புஸ்தகங்கள் எல்லாம் படிக்-கின்ற பழக்கமுண்டு'' என்றேன். அவர் ``நீ எது எதுவெல்லாம் படித்திருக்கிறே''என்றதும் நான் சாதாரணமான புஸ்தகங்களை எல்லாம் சொன்னதும் ``அப்படியா?'' என்று சொல்லிவிட்டு இரண்டு புஸ்தகங்களை எனக்கு முதலில் கொடுத்தார். இரண்டுமே கி. ராஷநாராயணன் எழுதிய புஸ்தகங்கள். அதை ஒரே நாளில் நான் படித்துமுடித்து விட்டேன். அதற்கு பிறகு எனக்குள் புதுசா ஒரு மின்னல். அதை அப்படித்தான் சொல்ல வேண்டும். அதுவரை நான் படித்துக் கொண்டிருந்ததெல்லாம் கற்பனையான மனிதர்களைப் பற்றிய புஸ்தகங்கள். அதற்கு மாறாக, அந்த புஸ்தகத்தில் கி. ராஷநாராயணன் என்னோட வாழ்ந்த மக்கள், என்னுடைய அப்பா கதை, தாத்தா கதை பூராவையும் பதிவு செய்திருந்தார்.

நான் படித்த உடனேயே என்னுடைய அய்யாவிடம்அந்த புஸ்தகத்தைக் கொடுத்தேன்.அவருக்கு படிக்கின்ற பழக்கங்கள் உண்டு. இப்பவும் சிலந்தி பூச்சி மாதிரி பெரிய எழுத்தில் இருக்கின்ற ஒரிஜினல் ராமாயண புஸ்தகத்தின் 14 பாகங்களையும் வீட்டில் வைத்திருக்கிறார். யாருக்கும் கொடுக்க மாட்டார். இப்பவும் திடீரென்று ஒரு நாள் எடுத்து அதிலுள்ள யுத்த காண்டத்தை படித்துக் கொண்டிருப்பார். அவர் ராஜநாராயணனின் புஸ்தகத்தைப் படித்துவிட்டு `இந்த மாதிரி ஒரு நாளைக்கு நான் நூறு கதைகளை எழுதுவேனே' என்றார். அந்த அளவுக்கு அவருடைய கதையாக இருந்தது அது. ஆக இந்த மாதிரியான தீவிர இலக்கிய புஸ்தகங்கள் என்பது பூமணி மூலமாகத்தான் எனக்குக் கிடைத்தது. அவர் பக்கத்து ஊராக இருந்தாலும் காலையில் கோவில்பட்டிக்கு வந்து விடுவார். சாயுங்காலம் அவருடைய கிராமத்திற்குத் திரும்புவார். அவருடைய அறிமுகம் கிடைத்தது. பிறகு பா. செயப்பிரகாசம் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள்தான் எனக்குச் சரியான திசையைக் கொடுத்தார்கள்.

தீராநதி : உங்களுடைய முதல் கதை பரிணாமன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த `மகாநகரி' என்ற மாத இதழில் வெளி வந்திருக்கிறது. அந்தப் பத்திரிகையின் அறிமுகம் எப்படி நிகழ்ந்தது?

சோ.தர்மன் : என்னுடைய கவிதைகளை எல்லாம் சேர்த்து புத்தகமாக்கினால் இரண்டு தொகுப்புகள் போடலாம். கவிதை என்றால் என்னவென்றே தெரியாமல் நான் கவிதை எழுதிக் கொண்டே இருந்தேன். கல்லூரி ஆண்டு மலரில் வரும். தினமணி, தினக்கதிர் பேப்பர்களில் வெளி வரும். என்னுடைய வாசிப்பு அதிகமாக அதிகமாக நான் நினைத்ததை கவிதையில் சொல்ல முடியாத ஒரு சூழல் உருவாகியது.அப்போது சிறுகதை எழுதிப் பார்க்கலாமே என்று ஒரு ஆர்வம் வருகிறது.அப்போது எட்டயபுரம் பாரதி விழாவிற்கு பரிணாமன் வந்திருந்தார். எட்டயபுரம் பாரதி விழாவில் தவறாமல் பங்கேற்கக் கூடியவர் அவர். பி. லெனின் வருவார். கல்கி வருவார். இப்படி பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வருவார்கள்.அப்போது நான் சென்றபோது பரிணாமனிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக இருந்து இப்போது ஓய்வு பெற்றிருக்கின்ற தி.சு. நடராசன் அந்தப் பத்திரிகைக் குழுவில் இருந்தார். அவரும் அந்த விழாவிற்கு வந்திருந்தார். அவரை எனக்கு முன்பாகவே தெரியும். அவர்தான் பரிணாமனிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். உடனே அவர் ``ஏதாவது படைப்பு இருந்தா கொடுங்களேன்'' என்றார். ``கவிதைகள்தான் சார் எழுதிக்கிட்டு இருக்கிறேன்'' என்றதும் ``கவிதையை விடுங்க. சிறுகதை எழுத முடிஞ்சா பாருங்க'' என்று தி.சு. நடராசன் என்னிடம் சொன்னார். அப்போது கவிதைக்கு நிறைய பேர்கள் இருக்கிறார்கள். நாம் நூறோடு நூற்றி ஒன்றாக இல்லாமல் சிறுகதை எழுதிப் பார்க்கலாமே என்று எழுதினேன். `விருவு' என்ற சிறுகதை எழுதி அனுப்பினேன். அது இப்போது எனக்கு மிகமிகச் சாதாரண கதைதான்.அந்தக் கதையை அனுப்பிய மறுமாதமே அதை பிரசுரம் பண்ணிவிட்டார்கள். எனக்கோ ஆச்சர்யம். அப்போது அதை ரொம்ப நல்ல கதை என்று அவர்கள் சொன்னார்கள். என்னுடைய முழு சிறுகதை தொகுப்பில் அதை முதல் கதையாகப் போட்டிருக்கிறேன்.

தீராநதி : வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி என்பவரைப் பற்றி மோனோகிராஃப் புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறீர்கள். பரவலாக கவனம் பெற வேண்டிய ஆய்வு நூல் அது. தமிழின் வழக்கம் போல் வந்த இடம் தெரியாமல் கிடக்கிறது. விறுவிறுப்பான நடை.அத்தியாயத்திற்கு அத்தியாயம் `சுவாரஸ்ய தகவல் கொண்ட நூல் அது.பிச்சைக்குட்டி மாதிரியான சுய திறமை கொண்ட கலைஞர்களைப் பற்றிய பதிவுகள் எல்லாம் நம் சமூ-கத்-தில் சொற்பமானதாகவே உள்ளது. இதற்கு காரணமென்ன?

சோ.தர்மன் : வில்லிசை என்பது வேறு மாவட்டத்தில் கிடையாது. தூத்துக்குடி, கன்னியாகுமரி,திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டும்தான் வில்லிசை இருக்கிறது.அதனுடைய தோற்றுவாயே கன்னியாகுமரி,திருநெல்வேலி மாவட்டம்தான். ஒரு கலாபூர்வமான கலைஞன் உருவாகும் போது அதற்கான ரசிகர்கள் தன்னாலேயே வந்துவிடுவார்கள். அவர்கள் சோரம் போக வேண்டிய அவசியம் எல்லாம் கிடையாது. அதற்கு நல்ல உதாரணம் தான் பிச்சைக்குட்டி. அவர் சாகின்ற வரைக்கும் அவருடைய வில்லிசைக் கலையை வில்லிசையாகவே வைத்திருந்தார். அத்தனை சினிமா கலைஞர்களும் அவரைத் தேடி வந்தார்கள். அவரைத் தேடி வராத சினிமா கலைஞர்களே அன்றைக்குக் கிடையாது. என்.எஸ். கிருஷ்ணனை எடுத்துக் கொள்ளுங்கள் டி.எம்.மதுரம், எஸ்.எஸ். ராஜேந்திரன் என்று அவ்வளவு பேர்களும் இவரிடம் கற்றவர்கள்தான். இவரை காமராஜர் கூப்பிட்டுக் கொண்டு சென்று தங்க வைத்து இரண்டு மூன்று நாட்கள் இவர் இசையைக் கேட்ட பிறகு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய கலைஞனாக இருந்தார் பிச்சைக்குட்டி. ஆனால் அப்படியான கலைஞர்களை உருவாக்குவதற்கு இன்றைக்கு யாரும் தயாராக இல்லை.

தீராநதி : காருகுறிச்சி அருணாசலம், பிச்சைக்குட்டி இவர்களை போன்ற கலைஞர்களை பற்றிய பதிவுகள் நம்மிடம் இல்லாததற்கான காரணமென்னவென்று கேட்கிறேன்?

சோ.தர்மன் : கூத்து மட்டும்தான் ரசிப்பதற்கான பொழுது போக்கு என்ற கட்டாயம் இருக்கும் போது அதை கௌரவித்துக் கொண்டிருந்தோம். ஊடகங்களின் வளர்ச்சி வரும் போது அவனுக்குத் தேவையான அனைத்தும் அங்கு கிடைத்து விடுகிறது. இது போக அண்மை காலத்தில் உலகமயமாக்கல் போன்ற கொள்கைகள் வந்த பிற்பாடு நான் தமிழன் என்று சொல்லிக் கொள்ளலாம்.வாழ்க்கையில் ஐரோப்பியனாகத்தான் வாழ்ந்து கொண்டிருப்பேன்.என்னுடைய வாழ்வியல் முறைகள், என்னுடைய குழந்தையின் வளர்ப்புகள், நான் கேட்கக் கூடிய மியூசிக், டான்ஸ் எல்லாமே மேற்கத்திய கலாச்சாரத்திற்கு வந்தாயிற்று. நம்முடைய இசைக் கலைஞர்கள் எனக்கு தேவையில்லாத-வர்களாக ஆகும் போது அவர்களை பற்றிய பதிவுகளும் சாத்தியமில்லாமல்தான்போய் விடுகிறது.

வெங்கட்சாமிநாதன் வில்லிசை பற்றி ஒரு புஸ்தகம் எழுதி இருக்கிறார். பாவைக் கூத்தைப் பற்றி ஒரு பிரமாதமான புஸ்தகத்தை டெல்லியில் இருந்து கொண்டு எழுதி இருக்கிறார். யார் செய்ய வேண்டிய வேலையை யார் செய்திருக்கிறார் பாருங்கள்? இங்குள்ளவர்கள் கலையைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டு முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொண்டுஇருப்பவர்களுக்கு இது பற்றியெல்லாம் எந்த அக்கறையும் கிடையாது. நான் இந்த வில்லிசையை பற்றி ஆய்வு செய்தது கூட ஒரு தற்செயலான காரியம்தான்.எனக்கு வில்லிசை பற்றியோ மற்ற கலைகளைப் பற்றியோ பெரிய அளவுக்கான புலமை இல்லை. அப்படி நான் ஆய்வை மேற்கொண்ட போது அவர் எங்கள் ஊரைச் சார்ந்தவராக இருந்ததினால் இன்னும் கொஞ்சம் ஆர்வமிகுதியில் வேலைகளில் இறங்கினேன். இந்த ஆய்வு நேரத்தில் எனக்கு ஒரு விஷயம் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இன்னும் கொஞ்சம் பச்சையாகவே சொன்னால் யார் யார் எந்த சாதியை சேர்ந்தவர்களோ அந்த சாதிக்காரர்கள் தான் அந்த ஆளுமையானவர்களை பற்றிய ஆய்வு புத்தகத்தை எழுதுகிறார்கள்.வ.உ.சிதம்பரம்பிள்ளை வரலாற்றை பிள்ளைமார்கள்தான் எழுதி இருக்கிறார்கள்.விஸ்வநாததாசன் என்பவரின் வரலாறை விஸ்வநாதன் சாதியைச் சேர்ந்தவர்தான் எழுதி இருக்கிறார்.ஆனால் நான் மட்டும்தான் இந்த விஷயத்தில் விதி விலக்கு.பிச்சைக்குட்டி சைவ பிள்ளைவாள்.நான் சைவ பிள்ளைமார் சாதியை சார்ந்தவன் கிடையாது. அவருடைய கலை வாழ்க்கை மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக செய்தேன்.அதற்காக நான்கு ஐந்து வருடங்கள் உழைத்து உருவாக்கியிருக்கிறேன்.ஏனென்றால் அவரைப் பற்றிய எந்தப் பதிவுமே அதற்கு முன் கிடையாது.இப்போது படிப்பவர்கள் சொல்கிறார்கள். ரொம்ப நல்ல புஸ்தகம். அவருக்குப் பெரிய மரியாதையைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று. ஆக, இதுபோல் அர்ப்பணிப்பு மனநிலையில் செய்யக்கூடியவர்கள் இருந்தால்தான் ஒரு நல்ல கலைஞனைப் பற்றிய பதிவுகளை நம்மால் உருவாக்க முடியும்.

இதுபோக, இன்றைக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளையை போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றிய புஸ்தகத்தை எழுத வேண்டும் என்றால் உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கொண்டு ஒரு புஸ்தகம் எழுதிவிடலாம்.ஆனால் காருகுறிச்சி அருணாசலம் பற்றி என்ன பதிவுகள் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அவரும் ஒரு கலைஞர், மதிக்கப்பட்ட கலைஞர். அவரைப் பற்றி பதிவு பண்ண வேண்டும் என்று வருகிறபோது அவரைப் பற்றிய தகவல்களை தேடித் தேடி எடுக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது. கள ஆய்வு செய்ய வேண்டியது இருக்கிறது. அவருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்களை தேடிச் சந்தித்து நேர்காணல் செய்ய வேண்டி இருக்கிறது.அப்படி தேடிச் சென்று கேட்டால் சொல்ல மறுப்பார்கள். அவர்களோடு உட்கார்ந்து சகஜமாகப் பேசினால் விஷயத்தை பிடுங்கி விடலாம். ஒரு நாள் இரண்டு நாள் என்று தொடர்ந்து போக வேண்டும். நாம் எதுவும் தெரியாதவனைப் போல நம்மை முட்டாளாக்கிக் கொண்டு அவரிடம் பேச வேண்டும். அவரை குருவை போன்ற ஸ்தானத்தில் வைத்துக் கொண்டு கதை கேட்க வேண்டும். இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்துதான் பிச்சைக் குட்டியைப் பற்றிய புஸ்தகத்தை நான் தயார் பண்ணினேன்.

தீராநதி : இந்தப் புத்தகம் வெளிவந்த பிற்பாடு பிச்சைக் குட்டியின் வட்டாரத்தை சார்ந்தவர்கள் படித்துப் பார்த்துவிட்டு விட்டுப்போன தகவல்களை உங்களிடம் சொன்னார்களா?

சோ.தர்மன் :நான் எழுதிய அதே அளவுக்கான விட்டுப்-போன தகவல்கள் இப்போது எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்த மாதிரியான ஆட்களையெல்லாம் நான் சந்திக்கத் தவறி விட்டிருக்கிறேன். அவர்களுக்கு நான் பிச்சைக் குட்டியை பற்றி புஸ்தகம் எழுதியிருக்கும் தகவல் கிடைக்கிறது. கிடைத்ததும் அவர்கள் எனக்கு எழுதுகிறார்கள்.இப்போது நான் மறு பதிப்பு கொண்டு வரும்போது அந்தப் புஸ்தகத்தில் இவற்றையெல்லாம் சேர்க்க இருக்கிறேன்.

தீராநதி :விட்டுப்போன தகவல்களைக் கொடுப்பவர்கள் எல்லாம் பிச்சைக்குட்டியின் சமூகத்தைச் சேர்ந்தவர்களா?

சோ.தர்மன் : ஆமாம். பிள்ளைமார் சங்கத்திலிருந்து கூட என்னைத் தொடர்பு கொண்டார்கள். பல தகவல்களை கொடுத்தார்கள். ஒரு நல்ல விஜயம் பண்ணி இருக்கிறீர்கள் என்றார்கள்.ஒரு பாராட்டுக் கூட்டம் கூட வைக்கிறோம் என்றார்கள். நான் அதற்கு உடன்படவில்லை. அவருடைய பிள்ளைகள் கூட இப்போது நல்ல உயர் பதவியில் இருக்கிறார்கள். அவர்களும் என்னை வந்து சந்தித்தார்கள். நான் எழுதிய இந்தப் புஸ்தகம் காஞ்சி மடத்தின் கவனத்திற்கு போய் இருக்கிறது. காஞ்சிப் பெரியவர் சாகும்போது கூட பிச்சைக் குட்டியின் பாட்டை போடுங்கள் என்று சொல்லி அதை கேட்டதாக ஒரு புதிய தகவல் கிடைத்திருக்கிறது.

காஞ்சி மடத்திலிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. அதில் ``நீங்கள் பிச்சைக் குட்டி பிள்ளையைப் பற்றி எழுதிய புஸ்தகம் எங்களுக்கு கிடைத்தது. அதில் எங்கள் மடத்தையும் பெரியவரை பற்றியும் பதிவு பண்ணி இருந்த விஷயங்கள் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது''என்று எழுதி இருந்தார்கள். கடிதத்துடன் பிரசாதம் அர்ச்சனை அரிசியையெல்லாம் சேர்த்து வைத்து ஒரு பார்சல் அனுப்பி இருந்தார்கள்.

தீராநதி : நீங்கள் காஞ்சி சங்கர மடத்திற்கு தொடர்பில்லாத ஒரு ஆள். ஆனால் பிச்சைக்குட்டிக்கு மடத்திலிருந்து அவர் ஊர் ஊராக சென்று கச்சேரி செய்ய பெரிய காரையே வாங்கி கொடுத்திருக்கிறார்கள். கூடவே தங்க வில்லைகளை கொடுத்து கை விரலுக்கு கணையாழி பண்ணி போட்டுக்கச் சொன்னதாக எழுதி இருக்கிறீர்கள். கலைமீது அவர்களுக்கு இருந்த ஈடுபாட்டால் செய்தார்கள் என்பதை விட பிச்சைக் குட்டியின் சமய பிரச்சாரத்திற்காக இதை செய்திருக்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம்.இந்த இடத்தில் என்னுடைய கேள்வி என்னவென்றால் மடம் சம்பந்தமான தகவல்களை எழுதும்போது கூட பிச்சைக் குட்டியின் பார்வையில் மடத்தின் புரிதல் எப்படி இருந்தது என்ற பார்வையில்தான் நீங்கள் எழுதுகிறீர்கள்.இதனால் வியந்தோதப்பட்ட விதத்தில் அந்த நூல் அமைந்து-விடுகிறது. சமூக பார்வையோடு கூடிய எழுத்து என்பது இல்லா-மல் இருக்கிறதே. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சோ.தர்மன் : நான் எடுத்துக் கொண்ட விஷயம் அதில் பிச்சைக் குட்டி என்கிற ஒரு கிராமிய வில்லிசைக் கலைஞனை பதிவு பண்ண வேண்டும் என்ற அளவில் மட்டும்தான். அதை மட்டும்தான் நான் செய்ய முடியும். மற்ற சமூக பார்வைகளோ, இதர விஷயங்களோ அவரிடம் என்னவாக செயல்பட்டது என்பதை நான் சொல்வதற்கு நான் அவருடைய சமகாலத்து ஆள் கிடையாது. முழுக்க முழுக்க கேள்வி ஞானத்தினால் மட்டுமே திரட்டப்படுகின்ற விஷயங்களாகவே இது இருக்கிறது. அதில் நான் உள்ளே நுழைந்துவிட்டேன் என்றால் நான்தான் இருப்பேனே ஒழிய பிச்சைக் குட்டி இருக்க மாட்டார். கலை இருக்காது. அவருடைய கலைத் தன்மை இருக்காது.மற்ற பதிவு பண்ண வேண்டிய விஷயங்கள் எல்லாம் பின்னுக்குப் போய்விடும். என்னுடைய கருத்துகள் மேலோங்கிக் கொண்டு நிற்கும். அதனால் ஒரு சின்ன `பிட்' விஷயமாக இருந்தால் கூட அதில் அவருக்கு என்ன பங்களிப்பு இருந்தது என்பதை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன். விளாத்திக்குளம் நல்லப்ப சாமிகள் பற்றி கூட ஒரு சின்ன கட்டுரை இருக்கிறதில்லையா?

ஆமாம்.அவர் பைத்தியமாக அலைந்தது மாதிரி ஒரு கட்டுரை வருகிறது.

எல்லோரும் அவரை பைத்தியம் என்றுதான் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அவர் கையேந்தி பிச்சைக்கூட எடுத்ததாக சொல்கிறார்கள். இப்போது கூட அவரது சமாதியில் எல்லோரும் விழுந்து விழுந்து கும்பிடுகிறார்கள்.அரசு கூட விழாவெல்லாம் எடுத்து நடத்துகிறது. ஆனால் அவர் பைத்தியமில்லை என்ற புது விளக்கத்தை பிச்சைக்குட்டிதான் முதன் முதலில் கொடுக்கிறார்.எப்படிக் கொடுக்கிறார். ``அனைவரும் சுவாமிகள் தனது அந்திம காலத்தில் பைத்தியமாக நடமாடினார் என்று கூறுகிறார்கள். நான் அதை ஒப்புக் கொள்வதற்கு இல்லை. ஏனென்றால், சுவாமிகள் வாழ்ந்த காலம் இரண்டு கட்டம். ஒன்று, நாத உபாசனை. அதாவது நாதத்தை உபாசித்து சஞ்சரித்து, தானும் அனுபவித்து, மற்றவர்களையும் அனுபவிக்கச் செய்வது. இந்த நாத உபாசனை அடுத்த கட்டம் அடைந்தது. அதுதான் நாதத்தில் ஒன்றிய கட்டம். பிற்காலத்தில் சுவாமிகள் நாதத்துடன் ஒன்றி விட்டார். இதை நான் வெறும் நிகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை, மிகவும் உண்மை. நானும்கவனித்திருக்கிறேன்.என்னைப்போல் உங்களில் பலரும் கவனித்திருப்பீர்கள்.எவரிடமும் எதையும் பேசாது உணர்வற்று நடமாடிய சுவாமிகள் மைக் மூலமாகவோ அல்லது ரேடியோ மூலமாகவோ கர்நாடக சங்கீதக் குரல் கேட்டால் சடாரென அப்படியே நிற்பார். கை விரல்களை மேல் நோக்கி அசைத்து லயிப்பார். சில சமயம் `பலே' என்பார். அந்தப் பாட்டுமேலே சஞ்சாரம் செய்யத் தோது இல்லாமல் இறங்கிவிட்டால் அவ்வளவுதான். `ச்சே' என்று நகர்ந்து விடுவார். இது எப்படி சாத்தியம்? லௌகீக விஷயங்களில் செல்லாத அவர் இதயம், எப்படி சங்கீதத்திற்கு நின்றது? தலையாட்டியது? பின் பிடிக்காவிட்டால் உதறிச் சென்றது? அதுதான் நாதத்துடன் ஒன்றிய நிலை என்பது. அதாவது சங்கீதம் தவிர வேறு எதையுமே ஏற்காத நிலை. இதை நாம்தான் புரிந்து கொள்ளாமல் சுவாமி அவர்களை பைத்தியம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். சுவாமிகள் பைத்தியம் அல்ல. அவரை புரிந்து கொள்ளாத நாம்தான் பைத்தியம்'' என்று விளக்கம் தருகிறார். ஆக, அவர் ஒரு வில்லிசைக் கலைஞராக இருந்தாலும் கூட ஒரு கர்நாடக இசைக் கலையின் மேதை நல்லப்ப சுவாமிகளை பற்றி அவர் என்ன கருத்தை முன் வைக்கிறார் பாருங்கள்! பிச்சைக் குட்டியும் கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றவர்தான். ஆனால் பிச்சைக்குட்டியை வில்லிசைக் கலைஞராக மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் முறைப்படி அவர் குரு வைத்து கர்நாடக இசையை கற்றவர் என்பது வேறு விஜயம். இன்றைக்குள்ள வில்லிசைக் கலைஞர்களிடத்தில் நீங்கள் பேசிப் பாருங்கள். கர்நாடக இசை பற்றி அவர்களுக்கு எந்த அளவுக்கு ஞானம் இருக்கிறது?

நான் ஓரளவுக்கு இந்த பிச்சைக்குட்டி புஸ்தகத்தை எல்லா வில்லிசைக் கலைஞர்களுக்கும் இலவசமாக கொடுத்திருக்கிறேன்.எல்லோருக்கும் பிச்சைக்குட்டியைத் தெரியும். குரு என்று ஏற்றுக் கொள்கிறார்கள். `வாத்தியார்' என்ற வார்த்தையைத் தவிர மறு வார்த்தையை சொல்ல மாட்டார்கள். ஆனால் யாரும் படிப்பதில்லை. என்ன பண்ணுவீர்கள் நீங்கள்? இவர்களிடம் எப்படி ஒரு கலாப் பூர்வமான சிருஷ்டி வெளி வரும்? வில்லிசையைப் பற்றிய சோதனையை எப்படி இவர்களால் பண்ணிவிட முடியும்?

தீராநதி : எழுதப் படிக்கத் தெரியாத பிச்சைக்குட்டி ஆண்டாளின் வரலாற்றினை கதையாகப் படிக்க அழைப்பு வந்தபோது உடனே அதை ஏற்கிறார். நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் அ. சீனிவாசராகவன் அவர்களைச் சந்தித்து ஆண்டாளை பற்றிய கதையை தயார் செய்து கொடுக்கச் சொல்கிறார். சீனிவாச ராகவன் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் பேராசிரியர். தமிழ்ப் புலமை மிக்கவர். பெரிய எழுத்தாளராக அறியப்பட்டவர். தன்னுடைய `வெள்ளைப் பறவை' எனும் நூலுக்காக மத்திய அரசின் `சாகித்ய அகாதெமி' விருதைப் பெற்றவர். அவர் தயார் செய்து கொடுத்த கதையை வைத்து நிகழ்ச்சியும் செவ்வனே நடந்து முடிகிறது. ஐதீகத்திலும் சாஸ்திரத்திலும் ஊறிய பெரியவர்களெல்லாம் படிக்காத வேந்தரைப் புகழ்ந்து பேசுகிறார்கள்?

சோ.தர்மன் : அதுவரை யாரும் ஆண்டாள் கதையை வில்லிசையில் படித்தது கிடையாது. ஸ்ரீரங்கத்திலிருந்து ``ஆண்டாள் கதையை வில்லிசையில் படிக்க வேண்டும். தொகையை பற்றிக் கவலை இல்லை. நீங்கள் கேட்ட தொகையை நாங்கள் கொடுக்கிறோம்'' என்று ஒரு தபால் வருகிறது. பிச்சைக்குட்டியும் ஒத்துக் கொள்கிறார். ஆண்டாளைப் பற்றி வில்லிசையில் கதை படிக்க வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் சமயத்தில் விடியவிடியக் கூட படிக்க வேண்டியது இருக்கும். அவ்வளவு தூரம் சொல்வதற்கு ஆண்டாளிடம் என்ன விஷயங்கள் இருக்கிறது? அதற்கு பிறகுதான் யோசிக்கிறார். ஆண்டாள் குழந்தையாகவே கண்டெடுக்கப்படுகிறாள். அவளுக்கு பூர்வீகமே இல்லாமல் போகிறது. அப்படி ஒரு பூர்வீகம் இருந்தால் அவளின் அம்மா, அப்பாவின் ராஷ பரம்பரையை பற்றி ஒரு இரண்டு மணி நேரம் படிக்கலாம். அப்படி ஒன்றுமே இல்லை!? அதற்காகத்தான் அவர் அ. சீனிவாசராகவன் என்பவரிடம் போகிறார். இலக்கியப் புலமையுள்ள பேராசிரியர் அவர். இப்போது இருக்கின்ற பேராசிரியர்களைப் போன்றவர் இல்லை அவர். ஆங்கிலத்துறைப் பேராசிரியர் இவரை பார்த்ததும் ``வாப்பா... பிச்சைக் குட்டி. நீ பெரிய பெரிய சமஸ்தானத்-திற்கு எல்லாம் போவீயே? ஏன் என்னிடம் வந்திருக்குற'' என்று கேட்கிறார். இரண்டு பேரும் நண்பர்கள்தான். அப்போது விவரத்தைச் சொல்கிறார். உடனே கல்லூரிக்கு `லீவு' போட்டு விட்டு உலக இலக்கியங்களில் உள்ள ரோமியோ ஷூலியட் லைலா மஜ்னு, ஜேக்ஸ்பியர் என்ற அத்தனை காதல் கதைகளையும் பிச்சைக்குட்டியிடம் சொல்கிறார். அதை முழுக்க பிச்சைக்குட்டி வில்லிசைக்கு தகுந்த மாதிரியான மெட்டுகளாக மாற்றுகிறார். இத்தனையும் சேர்த்து ஆண்டாள் கிருஷ்ணனை நோக்கிப் பாடுகின்ற காதல் பாடல் வரிகளாக பிச்சைக்குட்டி, மாற்றுகிறார். மாற்றி ஷ்ரீரங்கம் போய் வில்லிசை நிகழ்த்துகிறார். அதைப் பார்த்த ஐதீகமான ஆட்கள் எல்லாம் ``பிச்சைக்குட்டி உங்களைப் பார்த்தா ஐதீகமான ஆள் மாதிரியும் தெரியுல... ரொம்ப ஒழுக்க சீல விதிகளை கடைப்பிடிச்சு வாழ்கின்ற ஆள்மாதிரியும் தெரியுல.. இன்னைக்கு மாதிரி ஒரு ஆண்டாள் கதையை நாங்கள் இதுவரைக்கும் கேட்டதே இல்லை'' என்று சொன்னார்களாம். அதற்கு பிச்சைக்குட்டி நகைச்சுவையாக அந்த சீனுவாசராகவனின் (கதை எழுதி கொடுத்த பேராசிரியர்) `புண்ணியம்' என்றாராம்.

இந்த இடத்தில்தான் நமக்கு ஒரு கலைஞனுக்கான தேடல் பிச்சைக்குட்டியிடம் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.இன்றைக்கு நம்மிடம் கலைஞர்கள் இல்லையென்று நாம் சொல்லவில்லை. கலைஞர்களுக்கான தேடல் என்பதே இல்லை என்று சொல்கிறோம். எல்லோருமே சினிமாப் பாடல் மெட்டுக்களை வைத்துக் கொண்டு ஒப்பேற்றுகிறார்கள். புதுப் புது மெட்டுக்களை உருவாக்க யாரும் முயற்சிப்பதில்லை.பிறகு பிச்சைக்குட்டியோ தானே பாடல்களை எழுதுவார். ஆனால் இன்றைக்கு உள்ளவர்களிடம் பாடல் எழுதுகின்ற தகுதி யாரிடமுமே இல்லை. இரவல் பாடல்களைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இந்த ஊரில் ஒரு பாடலைக் கேட்கிறேன். திருநெல்வேலிக்கு போய் ஒருவரின் பாடலைக் கேட்கிறேன், அவரும் அதே பாடலைத்தான் பாடுகிறார். பிறகு ஏன் இதை நான் கேட்க வேண்டும்? ஆக மொத்தத்தில் கலை என்பதில்லை.

தீராநதி : நீங்கள் பேசியதிலிருந்து சுய சிந்தனை வெளிப்படுகின்ற ஒரு கலையாற்றல் என்பது இன்றைக்கு இல்லாமல் போய்விட்டது என்ற ஒரு விஜயம் பிடிபடுகிறது. இந்த விபத்து, கலைஞர்கள் வியாபாரிகளாக ஆனதினால் நிகழ்ந்ததா?

சோ. தர்மன் : வியாபாரிகளாக ஆனதினால் நிகழ்ந்ததென்று சொல்ல முடியாது. அவர்களுக்குள் ஒரு சலிப்புத் தன்மை வருகிறது. இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்தக் கலையை கற்றுக் கொண்டால் நம்மால் என்ன பெரிய அளவில் சம்பாதித்து விட முடியுமா? அல்லது பேரும் புகழும் வாங்கி விட முடியுமா? சினிமாவுடன் போட்டி போட்டு நம்மால் என்ன செய்து விட முடியும் என்ற சலிப்புத்தன்மை தான் அதற்கு காரணமாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்.

இன்றைக்கு கோயில் திருவிழா நிகழ்ச்சிகளுக்குக் கூட நல்ல கிராமியக் கலைஞர்களை கூப்பிடுவது கிடையாது. பெரிய பெரிய திரைகளைக் கட்டி சினிமா போடுகிறார்கள். சமீபத்தில் வெளியான புதுப்புது படங்கள் கூட சி.டி.யில் கிடைத்து விடுவது அவர்களுக்கு மேலும் சௌகர்யமாகி விட்டது. படிப்பறிவே இல்லாத மகாகலைஞர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு நம் சமூகத்தில் மரியாதை இல்லை.நான் சமீபத்தில் வில்லிசையை பற்றிய ஆய்வை மேற்கொண்ட போது ஒரு சிறு சந்தேகம் வந்தது. வில்லை மையப்படுத்தி ஒருவன் ஒரு போட்டியை வைத்திருப்பானா? இந்த வில்லை ஒடித்துவிட்டால் என்னுடைய பொண்ணைக் கட்டிக்கோவென்று எவனாவது ஒருவன் சொல்லுவானா? இங்கே ஏதோ ஒரு நெருடல் வருகிறது எனக்கு. இந்தச் சந்தேகம் ஒரு நியாயமான சந்தேகம். ஒரு முட்டாள், ஒரு முரடண் கூட ஒரு வில்லை வளைத்து விடலாம், தூக்கிவிடலாம். அப்போது சீதையை கட்டிக் கொடுத்து விடுவானா அவன்? ஏன் அவன் இந்த வில்லை மையப்படுத்துகிறான்?

நான் என்னுடைய தமிழ்ப் பேராசிரியர் மற்றும் பல பேரிடம் கேட்டேன். `கம்பன் மன்றம்' என்றே வைத்து நடத்திக் கொண்டிருக்கின்ற ஆட்கள். `திருவள்ளுவர் மன்றம்' என்று நடத்தி கொண்டிருக்கின்ற ஆட்கள் இப்படி போர்டு போட்டுக் கொண்டிருக்கிற பல பேராசிரியர்கள் இருக்கிறார்கள். அந்த ஊரில் அவர்கள்தான் புலமையானவராக, தன்னைக் காட்டிக் கொள்வார்கள். அவர்களிடமெல்லாம் போய் இந்த சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டேன். அப்படி கேட்டதற்கு `நீ யாரு?' `எங்க இருக்குற?' `இத தெரிஞ்சு நீ என்ன செய்யப் போற?' என்றார்கள். ஆக, தனக்குத் தெரியாது என்ற விஜயத்தை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள். நான் கேட்கும் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய அவர்களுக்குத் தெரியவில்லை.

ஒரு கிராமத்தில் படிப்பறிவு இல்லாத ஆள். வயதான ஆள். ஆனா மகாபாரதத்தைக் கரைத்துக் குடித்தவர். அவர் இப்போது இறந்து விட்டார்.

தீராநதி : அவர் பெயர்?

சோ. தர்மன் : அவர் பெயர் வெங்கடாசலபதி. அவருடைய ஊரு வெங்கடாசலபுரம். அங்க அவரிடம் கேளுங்களேன் என்று சிலர் சொன்னார்கள். சரியென்று அவரை தேடிப் போனால் அவரிடம் சிலர் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவருடைய வேலையே இதுதான். இது போல கதை சொல்லிகள் கிராமத்தில் நிறையப் பேர் இன்றைக்கும் இருக்கிறார்கள். அவர்களை தேடிப் போவோர்கள் வேண்டுமென்றால் இன்றைக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் அவர்களாகவே இப்போதும் இருக்கிறார்கள்.அவர்கள் மாறிப்போகவே இல்லை. அவரிடம் சென்று ``அய்யா எனக்கு இந்த மாதிரி ஒரு சந்தேகம்'' என்று சொன்னேன். என்னை உட்காரச் சொன்னவர் அந்த சந்தேகத்திற்கான விளக்கத்தை கம்பனுடைய வரியிலிருந்தே எடுத்துச் சொன்னார். ``சீதை ஒரு இடத்தில் மைதானத்தில் பந்து விளையாடிக் கொண்டிருப்பதாக காட்சி. அப்படி பந்து விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு வில் மைதானத்-திற்குள் கிடக்கிறது. இவள் அந்த வில்லை ஒத்தைக் கையால் எடுத்து தூரப் போட்டு விட்டு மறுபடியும் விளையாடுகிறாள். இதை ஜனகன் மேலிருந்து பார்க்கிறான். எவ்வளவு கனம் வாய்ந்த வில் இது. இதை ஒத்தைக் கையினால் எடுத்து இவள் தூரப் போடுகிறாளே? அப்போது இவளுக்கு எவ்வளவு பெரிய பலசாளி கணவனாக வரவேண்டும். இவளுக்கு சமமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கவே அந்த வில்லை மையப்படுத்தி அந்தப் போட்டியை வைத்திருக்கிறான்'' என்று சொன்னார். அவரால் அதை விளக்க முடிகிறது. இன்றைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் பேராசிரியர்களால் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முடியவில்லை. தமிழ்த் துறைத் தலைவன் என்கிறான்! தமிழ்த்துறைப் பேராசிரியர் என்கிறான்! விடிய விடிய பட்டிமன்றம் பேசுகிறான். அதே மாதிரி இன்னொரு சந்தேகம். வில்லிசை பற்றிய சந்தேகம். வில்லிசை பற்றி இதுவரை வந்த புஸ்தகத்தில் என்ன எழுதி இருக்கிறார்கள் என்றால் இந்தக் கலை இரண்டாயிரம் வருடம் முந்தியது என்று எழுதி இருக்கிறார்கள். போன மாதம் `செம்மல'ரில் கூட ஒருவர் எழுதி இருக்கிறார். இரண்டாயிரம் வருடத்திற்கு முந்தின இசைக்கலை என்று. இதில் என்னால் உடன்பட முடியவில்லை. நான் ஓரளவிற்கு சங்க இலக்கியங்களை எல்லாம் படிக்க ஆரம்பித்த பிற்பாடு அதில் எங்கும் வில்லிசையைப் பற்றின பதிவு என்பது எங்கேயுமே இல்லை. சிலப்பதிகாரத்தில் பதிவு செய்யப்படாத கூத்துக் கலைகளே கிடையாதே! எல்லாக் கூத்துகளையும் இளங்கோவடிகள் பதிவு செய்திருக்கிறாரே! அப்போது இவர்கள் வில்லிசையை பற்றிச் சொல்கின்ற காலகட்டங்கள் என்பது பொய்யா? அது கற்பனையா? அப்புறம் பைய தொல்காப்பியத்திற்குள் போகும் போது முதலில் தோன்றியது தோல் கருவிகள் என்று சொல்கிறார். அப்புறம் துளைக் கருவிகள். மூன்றாவதாகத்தான் நரம்புக் கருவிகளுக்கு வருகிறார். அப்போது இவர்கள் சொல்லும் காலகட்டம் எல்லாம் முதல் இரண்டிலேயே அடிப்பட்டு விடுகிறது.நரம்புக் கருவிகள் என்று வருகிற போதே ரொம்ப கிட்டத்திற்கு வந்து விடுகிறோம். சரி, இன்னும் கொஞ்சம் விசாரித்துப் பார்க்கலாம் என்று பேராசிரியர்களிடம் கேட்டால் தங்களுக்குத் தெரியவில்லை என்ற பதிலைத்தான் மறைமுகமாகச் சொல்கிறார்கள்.பிறகு நானே தொடர்ந்து முயற்சித்த போது பெரும்பாணாற்றுப் படையில் ஒரு வரி வருகிறது.

``குமிழின்/புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்/வில்யாழிசைக்கும் விரலெறி குறிஞ்சி'' (பெரும்பாண் 169-184) இந்த வரியைத் தவிர வேறு வரிகள் இருக்கலாம். ஆனால் நானறிந்த அளவில் இந்த ஒரு வரிதான் இருக்கிறது.அப்போது மேற்கொண்டு ஆய்வு செய்யும் போது வில்லிசை என்பது அவ்வளவு காலத்திற்கு (இரண்டாயிரம்) முந்தி தோன்றி இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அது ஒரு பூர்வீகமான கலையும் அல்ல. தற்செயலாக உருவான இந்தக் கலைதான் பிற்காலத்தில் வில்லிசையாகப் பரிணமித்திருக்கிறது. ஏனென்றால், நிறைய கலைகள் விளையாட்டிலிருந்துதான் கூத்தாக மாறி இருக்கிறது. அது போன்றுதான் இந்தக் கலையும் உருவாகி இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தேன். இங்கே இன்னொன்றும் முக்கியம். எந்த ஆய்வும் இதுதான் இறுதியானது என்று சொல்லிவிட முடியாது. நாளைக்கு ஒரு ஆய்வாளன் வந்து தர்மன் எழுதி இருப்பது தப்பு என்று சொல்லலாம். அதற்குப் பெயர்தான் ஆய்வு. எல்லா ஆய்வுகளும் உண்மையை நோக்கித்தான் போகின்றன. அதில் என்னுடைய ஆய்வு என்பது கொஞ்சம் ஒருபடி கிட்டத்தில் போய் இருக்கிறது, அவ்வளவு தான். `நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்' போன்ற சில ஆய்வு மையங்களிலிருந்தெல்லாம் இது நல்ல ஆய்வென்று சொன்னார்கள்.

தீராநதி : வில்லிசையைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் வரலாற்று நூல்களை, பண்பாட்டு நூல்களை எழுதி இருக்கிறார்கள். சுப்பு ஆறுமுகம் கூட ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். அதில் அவர் வேட்டைக் கருவியான கொலைக் கருவி, கலைக் கருவியான போதே வில்லிசை பிறந்தது என்ற கருத்தை வைக்கிறார்.வில்லிசைபற்றியபல ஆய்வுகள் புராணங்களோடு தொடர்புடையவனாக உள்ளன.நீங்கள்தான் முதன் முதலாக சமூகவியல் பார்வையிலான ஆய்வை வில்லிசையைப் பொறுத்த அளவில் மேற்கொள்கிறீர்கள். அதோடு இந்தக் கலை, நாட்டார்களின் மரபுவழி வந்த பண்பாட்டுக் கலை என்று ஒரு இன வரைவியல் தன்மையில் நோக்குகிறீர்கள்.கூடவே மார்க்சிய கருத்தியலின் படி ஆய்வை செலுத்தி இருக்கிறீர்கள். உங்களை அறியாமலே இந்த ஆய்வு மார்க்சிய நோக்கிலான ஆய்வாக வந்திருக்கிறதா? அல்லது அந்தத் தத்துவ புலத்தோடுதான் ஆய்வையே மேற்கொண்டீர்களா?

சோ.தர்மன் : சுப்பு ஆறுமுகம் சொல்வதைப் போல எந்த ஒரு கலையும் ஒரே நாளில் தோன்றிடவே முடியாது.பல்வேறு வகையில் வளர்ந்து வளர்ந்து இறுதியான ஒரு கலை வடிவத்திற்கு வர பல மாதங்கள் பல வருடங்கள் ஆகவே செய்யும். வில்லிசைக் கலையோடு சம்பந்தப்பட்ட உபகரணங்கள் முழுக்க முழுக்க பனையோடு சம்பந்தப்பட்டவை. சங்க இலக்கியத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் எல்லாக் கூத்துகளுமே கள்ளுண்ட பின்பு நிகழ்த்தப்பட்டதாகவே வரும். கவனிக்க வேண்டியது இது. இப்படியே போகும்போது தான் அந்த ஆய்வு தவிர்க்க முடியாமல் இனவரைவியலுக்குச் சென்றது. தவிர்க்க முடியாத ஒன்று அது. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து பார்க்கும்போது அந்த இடத்திற்குதான் என்னால் வர முடிந்தது. ஏனென்றால், நாடார் சமூகம் என்பது ரொம்பக் கடுமையான உழைப்பாளிகள் நிறைந்த சமூகம். பனையேறுவது என்பது சாதாரண தொழில் இல்லை. உடலிலுள்ள அத்தனை உறுப்புகளும் இயங்கக் கூடிய ஒரு வேலை பனையேறுதல் என்பது. அவர்களால் கள்ளுண்ணாமல் இருக்கவும் முடியாது. அவர்களால் பாட்டுப் பாடாமல் இருக்கவும் முடியாது. அவர்களுடைய தனிமை என்ற ஒன்று இருக்கிறது பாருங்கள். அவர்கள் காட்டிற்குள் தான் இருக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு காட்டை குத்தகைக்கு எடுத்து விடுவார்கள். இந்தப் பனைத் தொழில் மாதிரி நேரம் தவறாமையான தொழில் வேறு எதுவும் இருக்க முடியாது. நாம் ஒரு சொட்டு பதநீர் குடிக்கிறோம் இல்லையா, அதற்காக அச் சமூகத்து மக்கள் படுகின்ற பாடு இருக்கிறதில்லையா, அதுவெல்லாம் இன்னும் இலக்கியத்தில் பதிவு செய்யப்படவே இல்லை. காலையில் ஒரு பனையேறி மரத்தில் ஏறி பனையின் பாளையை சீவி விட்டு விட்டு கலையத்தைக் கட்டிவிட்டு வருவார். மதியமும் அவர் அதே குறிப்பிட்ட நேரத்திற்குப் போக வேண்டும். அதே போல சாயுங்காலமும் அவர் போக வேண்டும். அப்படி; தொடர்ந்து போய் பாளையை சீவாவிட்டால்,இரண்டு நாள் தொடர்ந்து அவர் வெளியூர் போய்விட்டால் பாளையின் கண் அடைத்து அதில் பனங்காய் திரண்டு விடும். அதற்குப் பிறகு அந்தப் பனையில் இவரால் கள் இறக்க முடியாது. பதநீர் இறக்க முடியாது. ஆக, பிணையல் மாதம் மாதிரி அந்தப் பனை காட்டிற்குள்ளாகவே ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு அந்தப் பனைக்கு அடியிலேயேதான் கண்காணித்துக் கொண்டு கிடக்க வேண்டும். இவர் வெளியூர் செல்ல நேர்ந்தால் மாற்று ஆளை நியமித்து விட்டுதான் செல்ல முடியும். அப்படியான ஒரு தொழில் அது. அவ்வாறு கண்காணித்து தான் ஒரு சொட்டு பதநீரை இவர்களால் இறக்க முடியும். இவ்வளவு கஷ்டமான தொழில்தான் அவர்கள் பார்க்கக் கூடிய தொழில். அந்த ஆறுமாதம் ஊரை விட்டு அவர்கள் தனிமைப்படும்போது அவர்களுக்கான பொழுது போக்கு என்ன இருக்கிறது? எதுவுமே கிடையாது. அந்தச் சமயத்தில் வில்லிசை என்பது அவர்களின் பொழுதுபோக்குக் கலையாக பரிணமித்திருக்கிறது என்ற கோணத்தில் என்னுடைய ஆய்வை நான் கொண்டு போய் இருக்கிறேன்.

தீராநதி : இங்கே பனைக்கும் வில்லிற்கும் எந்த இடத்தில் சம்பந்தம் வருகிறது?

சோ.தர்மன் : வில்லிசையில் பயன்படுத்தப்படுவது மொத்-தம் ஐந்து உபகரணங்கள். இப்போது வரை வில்லிசைக்குப் பயன்படுத்தப்படும் வில்லை கூந்தப்பனையில்தான் செய்கிறார்கள். அந்த வில்லை வளைத்து வில்லின் இரு புறமும் இணைத்துக் கட்டியிருக்கும் கயிறு பனையின் நாரினால் செய்யப்பட்டது. வில்லிசையில் பிரதான வாத்தியமாக பயன்படுவது மண் பானை குடம்தான். அந்தக் குடம் நாடார்கள் கள்ளிறக்கப் பயன்படுத்தும் மண் கலையம்தான். குடத்தை அடிக்கும் பட்டை பனையிலிருந்து கிடைப்பதுதான். பானையின் கீழே இருக்கும் பிறுமனை அதுவும் பனை சில்லடை தான். அவன் அடிக்கும் வீசுகோல் மாட்டிற்குப் பயன்படுத்துவது. வில்லில் கட்டி இருக்கும் சலங்கை மாட்டின் கழுத்தில் கட்டி விடும் நார்த்தங்காய் சலங்கை என்று சொல்வார்களே அதே தான். ஐந்தே ஐந்து வாத்தியங்கள் முதலில் இருந்தது. பிச்சைக் குட்டி மாதிரியான ஆட்கள் வந்து கொஞ்சம் நவீனப்படுத்திய பிற்பாடுதான் ஆர்மோனியம், தபேலாவையெல்லாம் உள்ளே கொண்டு வருகிறார்கள்.நவீனப்படுத்துவதற்கு அவர்களுக்கு அவை தேவைப்பட்டிருக்கின்றன.

தீராநதி : சரி, உங்களின் வாதப்படியே பார்த்தால் முதலில் நாடார் மக்களின் இசைக் கலையாக இருந்த ஒன்று பிறகு எப்படி பிச்சைக்குட்டி போன்ற இசை வேளாளர் என்று குறிக்கப்படுகின்ற சைவப்பிள்ளைமார்களின் இசைக்கலையாக மாறியது?

சோ.தர்மன் : பிச்சைக்குட்டிதான் முதன் முதலில் அந்தக் கலையை கையில் எடுக்கிறார். அவருக்கு முன்னால் இருந்த அத்தனை வில்லிசைக் கலைஞர்கள் நாடார் சமூகத்திலிருந்துதான் உருவாகி இருக்கிறார்கள்.வில்லிசை என்பது வெளியில் பிரபலமடையாமல் இருந்ததற்கு காரணம் என்னவென்று பார்த்தால் நாடார் சமூகம் என்பது ரொம்ப ரொம்பத் தீண்டப்படாத சமூகமாக இருந்ததினால்தான். திருவிதாங்கூர் சமஸ்தான வரலாற்றை எல்லாம் நாம் படித்துப் பார்த்தால் அந்தச் சமுதாயத்தை மாதிரி அடிமைப்படுத்தப்பட்ட சமுதாயம் வேறு எதுவுமே இல்லை என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.அவர்கள் சார்ந்திருந்த தொழிலும் அப்படித்தான் இருந்தது. ஊரை விட்டு காட்டில் தனித்திருந்து தொழில் செய்ய வேண்டும்.

தீராநதி : உங்களுக்குத் தெரிந்த அளவில் எப்படி எல்லாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் அம்மக்கள்?

சோ.தர்மன் : தோள் சீலைப் போராட்டம் என்ற பெரிய போராட்டமே இருந்திருக்கிறதே? வள்ளியூர் பக்கத்தில் ஏதோ ஒரு சந்தை இருக்கிறது. தாலி அறுத்தான் சந்தை என்றுதான் அதற்குப் பெயர். தோள் சீலை அணியக்கூடாது என்பதை மீறி இந்தச் சமூக மக்கள் தோள்சீலை போட்டுக் கொண்டு போன போது `எப்படி நீ சட்டை போடலாம்' என்று பிடித்துக் கிழிக்கும் போது தாலியையும் சேர்த்து அறுத்து விடுவான். மிகப் பெரிய வரலாறு இருக்கிறது இதற்கு. பதிவும் செய்திருக்கிறார்கள். கூரை வீட்டில்தான் அவர்கள் வசிக்க வேண்டும். இன்றைக்கு ஊர் உலகம் முழுக்க அவர்கள் கையில் தான் வியாபாரம் இருக்கிறது. ஆனால் அன்றைக்கு இவர்கள் வியாபாரம் செய்யும் காசை கீழே வைத்துவிடவேண்டும். கடைக்காரர் பொருளை வைத்த பிற்பாடு இவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கையிலிருந்து நேரடியாக வாங்க முடியாது. அத்தனையும் மீறி இன்றைக்கு தங்களின் கடின உழைப்பின் மூலமாக நல்ல ஒரு அடையாளத்திற்கு வந்திருக்கிறார்கள். அதுவரை காட்டிற்குள்ளாகவே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த கலை, கோயிலுக்குள் வரவே இல்லை. காட்டிற்குள் இருக்கும் போது அவர்களின் கதை எப்படி இருந்திருக்கும் என்றால், நாடார் மக்கள் செய்த வீர தீரச் செயல்கள். பனைமரத்திலிருந்து கீழே விழுந்து மரணமுற்றவர்களின் கதைகள். அவர்கள் பட்ட கஷ்டங்கள். அபரிமிதமான லாபங்கள் இவைகளை மையமாக வைத்து பாட்டு படித்து கொண்டிருந்தார்கள். வில் என்பது இசை கருவியே இல்லையே? அது ஒரு போர்க்கருவி.

இப்படியே கால வளர்ச்சியடையும் போது அச்சமூதாயமும் தன்னை நிலை நிறுத்தும் அளவிற்கு வரும் போது அக்கலை, காட்டை விட்டு வெளியில் வருகிறது. ஏனென்றால், அவர்களுக்கு அதற்குமுன் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. பத்திரகாளி கோயில் அவர்கள் உருவாக்கிய கோயில் தெரியுமா உங்களுக்கு? அப்போது எங்களுக்கென்று ஒரு தெய்வத்தை உருவாக்கிக் கொள்கிறேன் என்று அவர்கள் உருவாக்கிய தெய்வம் பத்திரகாளி. இதே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மூக்க நாடாரை வெட்டிக் கொல்கிறார்கள், கோயிலுக்குள் போனதற்காக. மூக்க நாடாரை வெட்டிக் கொல்லப்பட்ட இடம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் போனால் யாரும் காட்டுவார்கள். இருளப்ப நாடாருக்கும் சேதுபதி மன்னருக்கும் இடையே நடந்த கோர்ட் வழக்குகளை எடுத்தோம் என்றால் இரண்டு வால்யூம் போடலாம். இருளப்ப நாடார் க்ஷிs சேதுபதி மன்னருக்கும் நடந்த வழக்குகளை எடுத்தீர்களென்றால் இதே தான். லண்டன் பிரிவிவ் வரைக்கும் போகிறார்கள். நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. லண்டன் பிரிவிவ் வரைக்கும் என்ன தீர்ப்பு வருகிறது? அதற்கு முன் அவர்களை என்ன காரணத்திற்காக தீண்டத்தகாதவர்களாகச் சொல்கிறார்கள் என்று பார்த்தால் அது ஒரு வேடிக்கையான விஷயம். `நீ வந்து போதைப் பொருளை உருவாக்குபவன். போதையை உண்பவன். இந்து தருமத்தின்படி இது இரண்டும் தப்பு. ஆகவே, கோயிலுக்குள் உனக்குஅனுமதி கிடையாது.'' இதைத்தான் சொல்கிறான் பிரிட்டீஷ்காரன். அப்போது இவர்கள் ``நாங்கள் இப்போது அந்தத் தொழிலை செய்யவில்லை. நாங்கள் அந்தத் தொழிலை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது'' என்று இவர்கள் பதில் மனுதாக்கல் பண்ணுகிறார்கள். ``நீ அந்தத் தொழில்தான் பார்க்கிறாய்'' என்று அந்த மனுவை தள்ளுபடி பண்ணிக் கொண்டே வருகிறான்.

இந்த விஷயத்தில் ஓரளவுக்கு பிரிட்டீஷ்காரர்கள் நியாயமாகவும் நடந்திருக்கிறார்கள்.பக்கத்தில்ஓட்டப்பிடாரம்என்றவ.உ.சிதம்பரம்பிள்ளையினுடைய ஊர்.கோவில்பட்டியில் முன்பு தாலுகா அலுவலகம் கிடையாது.தாலுகா அலுவலகம் பிரிட்டீஷ் காலத்தில் ஓட்டபிடாரத்தில்தான் இருந்தது. கோவில்பட்டியிலிருந்து இரண்டு எஸ்.சி.கள் அந்த தாலுகா ஆபீஸுக்கு வேலைக்குப் போகிறார்கள். தினமும் `லேட்டாக' போகிறார்கள். தாசில்தார் ரேங்கில் இருந்த துரை ``ஏன் நீ தினமும் லேட்டாக வருகிறாய்'' என்று இவர்கள் இருவரையும் கேட்கிறான். அதற்கு இருவரும் ``நாங்கள் கோவில்பட்டியிலிருந்து தினமும் வருகிறோம் துரை'' என்கிறார்கள். ``ஏன் இங்கேயே வீடு பார்த்துத் தங்க வேண்டியதுதானே''என்றதற்கு ``எங்களுக்கு யாரும் இங்கே வீடு கொடுக்கமாட்டேன் என்கிறார்கள்.'' ``ஏன் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள்'' என்று துரை மறுபடியும் கேட்க, ``நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இங்கே பிள்ளைமார் சாதியர்களின் ஆதிக்கம் அதிகம். அதனால் வீடு கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்'' என்று இருவரும் பதில் தர, `இது உண்மையா என்று விசாரி' என்று ஒரு அதிகாரிக்கு உத்தரவிடுகிறார் துரை. அதிகாரி சென்று விசாரித்து கொண்டு வந்து ``உண்மை.அவர்களுக்கு வீடு இங்கு மறுக்கப்படுகிறது'' என்று சொன்னவுடனேயே துரை எழுதுகிறான் ``நாளையிலிருந்து ஓட்டபிடாரத்திலுள்ள தாலுக்கா ஆபீஸ் கோவில்பட்டிக்கு மாற்றப்படுகிறது'' என்று, அப்போது அங்கிருப்பவர்கள் எல்லாம் கோவில்பட்டிக்கு பஸ்ஸில் வர ஆரம்பிக்கிறார்கள். கோவில்பட்டிக்கு அப்படி வந்ததுதான் இந்த தாலுகா ஆபிஸ். இதற்கு எந்த வருடம். எந்தத் தேதி என்பதற்கு ஆவணங்கள் எல்லாம் இருக்கிறது. பிரிட்டீஷ்காரன் இது மாதிரி பிரச்னைக்குள் போகவே மாட்டான். நியாயம் தர்மம் எல்லாம் சொல்லவே மாட்டான்.

தீர்த்தம் என்று சொல்கிறோம் இல்லையா. அப்படி தீர்த்தம் பிடிப்பதில் ஒரு தகராறு வருகிறது. இரு கோஷ்டிகக்குள் நான் தான் முதலில் தீர்த்தம் பிடிப்பேன் என்று தகராறு எழுந்து,இருதரப்பினரும் அரிவாள் கம்புகளுடன் வருகிறார்கள். கோர்ட்டிற்குப் போகிறது வழக்கு. பிரிட்டீஷ்காரன் தீர்த்தம் என்றால் என்னவென்று கேட்கிறான். அப்போது அவர்கள் விளக்குகிறார்கள். உடனே நீதிபதி ஒரே குழாயில் இரண்டு வழிகளை வைத்து இருதரப்பினரையும் ஒரே சமயத்தில் பிடித்துக் கொள்ளச் சொல் என்று தீர்ப்பு வழங்கி விடுகிறான். அதே மாதிரி சாதாரணமான ஒரு பெண் ஷமீன் கூட உறவு வைத்து கள்ள உறவில் ஒரு குழந்தையைப் பெறுகிறாள். அந்த மன்னர் யார்? அந்தப் பெண் யார் என்பதற்குள் நாம் போக வேண்டாம். அந்தப் பெண் லண்டன் பிரிவிவ் வரைக்கும் இந்த ஷமீனை வழக்குக்கு இழுக்கிறாள். மேற்படி இவர் மூலமாக எனக்கு இந்தக் குழந்தை பிறந்தது. எனக்கான எதையும் இவர் கொடுக்கவில்லை என்று கோர்ட்டில் வாதாடுகிறாள். இது முறை தவறி பிறந்த குழந்தை ஆகையால் எதுவும் கிடையாது என்று தீர்ப்பாகிறது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒரு சாதாரண ஏழைப் பெண் நீதி கேட்டு லண்டன் வரை அவளால் போக முடிந்திருக்கிறது அன்றைக்கு. இன்றைக்கு உள்ள நிலவரப்படி ஒரு சாதாரண ஒன்றிய கவுன்சிலர் மீது போய் தைரியமாக கம்ப்ளைண்ட் கொடுக்க முடிகிறதா நம்மால்? அப்படிக் கொடுத்தால் மறுநாளே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விடுகிறான்.

தீராநதி : நான் கேட்ட கேள்வி, எப்படி பிள்ளைமார் சமூகத்திற்கு இக்கலை கைமாறியது என்பதை பற்றி?

சோ.தர்மன் : பிச்சைக்குட்டி பிள்ளையின் குருவான அய்யம்பிள்ளை தான் முதலில் வில்லிசையை கோயிலுக்குள் நிகழ்த்தப்படும் ஒரு கலையாக கொண்டு வந்து பெருமை சேர்க்கிறார். கிராமியக் கலைகள் பலவற்றை அய்யம்பிள்ளை பெருதெய்வ வழிபாட்டிற்குள் கொண்டு வருகிறார். ஒரு நல்ல கலை எங்கு நடத்தப்பட வேண்டுமோ அங்கு மறுக்கப்படுகிறது. அது கூடாது என்று சொல்லி அவர் அதை கையில் எடுக்கிறார். அப்படி வரும் போது ஐம்பெரும் காப்பியங்களான அத்தனையையும் வில்லிசைக்குள் கொண்டு வருகிறார்கள். பிச்சைக்குட்டி பிள்ளை தொழிற்சங்க வாதியாக இருந்தவர். ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்தவர். ஹோமியோபதி டாக்டராக இருந்தவர். அதற்குப் பிறகு சாத்தூரிலுள்ள ஆயிரம் வைசிய மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்தவர்.அதை எல்லாவற்றையும் ரிசைன் பண்ணிவிட்டு முழுநேர வில்லிசைக் கலைஞராக மாறுகிறார்.

தீராநதி : வியாபார ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக நாடார்கள் அடைந்த வளர்ச்சியின் அளவிற்கு இலக்கிய ரீதியான வளர்ச்சி என்பது அவர்களிடத்தில் நடந்திருக்கிறதா?

சோ. தர்மன் : நாம் ரொம்ப ரொம்ப தவறாக அதைப் புரிந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு தமிழ் நாட்டில் எழுதிக் கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களில் பலர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள் கவனமாகப் பதிவு செய்ய வேண்டும். அவர்கள்தான் அதிகம். நமக்குத் தெரியாமல் இருக்கிறது. ஆனால் நாம் ஐயர் எங்கே இருக்கிறார்கள் என்று தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவர்களோடு ஒப்பிடுகையில் ஐயர் எழுத்தாளர்களே இன்றைக்கு இல்லை. ஆனால் அவர்களை விமர்சித்தே நாம் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் இன்றைக்கு தலித் எழுத்தாளர்களே கம்மி.

தீராநதி:இதுவரை தமிழில் பதிவாகியுள்ள தலித் இலக்கியங்கள் என்று பறைசாற்றப்படுகின்ற எந்த எழுத்துமே என்னை ஆகர்ஷிக்கவில்லை என்று எழுதி இருக்கிறீர்கள். தலித் கதையாடலை, தலித்தின் தனித்தன்மையை தலித் சமூகச் சித்திரங்களை கலாபூர்வமாக சித்திரித்து சிருஷ்டிக்கும் ஒரு உன்னதக் கலைஞன் இனிமேல்தான் வர வேண்டும் என்று முன்பு ஒருமுறை எழுதி இருந்தீர்கள். மேற்சொன்ன இந்த மூன்று நாவல் குறித்தும் கலா பூர்வம் இல்லை என்கிறீர்கள். நீங்கள் சொல்லும் கலா பூர்வம் என்பதன் அளவீடு என்ன?

சோ. தர்மன்: நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி ரொம்ப ரொம்ப முக்கியமான கேள்வி. கலாபூர்வமான சிருஷ்டி என்பது என்னவென்றால் கதை எல்லோருக்கும் தெரியும். கதை தெரியாத ஆட்களே கிடையாது. அந்தக் கதையை எழுதுவதற்கும் எல்லோருக்கும் தெரியும். அதைக் கலாபூர்வமாக எழுதுவதற்கு எழுத்தாளனுக்கு மட்டும்தான் தெரியும். அந்த எழுத்தாளன் என்பவன் யார்? முதலில் உதாரணத்திற்கு புதுமைப்பித்தனின் ஒருகதை. அவர் எழுதுகிறார் : ``வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் குழந்தை தன்னுடைய கால்களை முக்கி விளையாடிக் கொண்டிருந்தது. கால்களை முக்கி முக்கி விளையாடியபோது தன் காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு சூர்ய ஒளி பட்டு மின்னியது. இப்போது குழந்தை கால்களை தண்ணீருக்குள்ளேயே வைத்துக் கொண்டது.'' இந்த மூன்று வரிகளையும் எழுதிவிட்டாரா? அப்புறம் மேற்கொண்டு அடுத்த வரியை எழுதுகிறார். ``அப்புறம் என்ன? ஆணானப்பட்ட சூர்யபகவான் குழந்தையின் கால் தரிசனத்திற்காக காத்திருந்தார்.'' இதுதான் கலாபூர்வம்.

இன்றைக்கு இந்த மாதிரி கலாபூர்வமான எழுத்தில் நம்பர் ஒன் யார் என்றால் மா.அரங்கநாதன். தமிழ்ச் சிறுகதையில் சமகால சாதனையாளர் யாரென்றால் மா. அரங்கநாதனைதான் நான் சொல்வேன். இன்றைக்குப் பேசுகிறார்கள் தலித் கதை, தலித் கதை என்று... எத்தனை தலித் கதைகளை மா. அரங்கநாதன் எழுதி இருக்கிறார் தெரியுமா? தலித் எப்படி உருவானான் என்று எழுதி இருக்கிறார். தொழில் ரீதியாக எப்படி ஷாதியைப் பிரித்தார்கள் என்று எழுதி இருக்கிறார். அவருடைய `உவரி' என்று ஒரு கதை. டூர் வருகின்ற பஸ் ஒன்று உவரி என்ற கிராமத்தின் பக்கத்தில் வரும்போது பிரேக் டவுண் ஆகி விடுகிறது. அப்போது ஒரு தம்பதி பச்சைக் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு வந்து ``பக்கத்தில் கடை எங்கிருக்குங்க... குழந்தை அழுகிறது. பால் வாங்கிக் கொடுக்க வேண்டும்'' என்று எதிரில் வருகின்ற ஒரு விவசாயிடம் கேட்கிறார்கள்.

நல்ல மதிய நேரம். உடனே அவர் சொல்கிறார். ``இந்த வெயிலிலாம்மா போகப் போறீங்க. பாவம் அந்தக் குழந்தை என்ன பாடுபடும். இந்தாங்க இந்தத் துண்டை போத்திக்கிடுங்க. நான் இந்த மரத்தடியில்தான் நிற்பேன் பிறகு வரும்போது துண்டைக் கொடுங்க'' என்று கொடுக்கிறார். இதுவரை கதை. அப்போது இருவரும் போன பின்பு விவசாயி சொல்வதாக எழுதுகிறார். ``இந்த ஊர்லதான் முதன் முதல்லா சாலமன் வந்து இறங்கினானாம். இந்த ஊர்ல இறங்காம, வேற எந்த ஊர்ல இறங்குவான்'' என்று எழுதுகிறார். இந்த இரண்டு வரியில் சாலமன் பற்றிய பெரிய ஹிஸ்டரியை அப்படியே கொண்டு வந்து இறக்குகிறார் இல்லையா, இதான் கலாபூர்வம். அதற்குப் பிறகும் கதை நமக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.

அதேபோல ``சிலுவையில் தொங்கிய ஏசு கிறிஸ்துவை வழிபட்டுக் கொண்டிருந்த முத்துக்கருப்பனை ஷன்னல் வழியாக ஃபாதர் பார்த்தார். நேரடியாக போய் ``யாரப்பா நீ'' என்றார். முத்துக்கருப்பன் சொன்னான் ``சாமி ஸ்தோத்திரம். நான் சுசீந்திரன் தானுமலையானை தரிசித்துக் கொண்டிருந்தேன். தானுமலையானை தரிசிக்கும்போது அங்கு எனக்கு கர்த்தர் தரிசனம் தந்தார். நேரடியாக கோத்தாறு வந்துவிட்டேன்'' என்று சொன்னான். அப்போது ஃபாதர் சொன்னார். ``இனிமேல் நீ வழிபட வேண்டியது தானுமலையானை அல்ல; கர்த்தரைத்தான்'' என்றார்.

முத்துக்கருப்பன் சொன்னான். ``ஃபாதர் நான் இப்போது கர்த்தரை வழிபட்டுக் கொண்டிருக்கும்போது தானுமலையான் அல்லவா தெரிகிறார்'' என்று எழுதுகிறார். இது கலை. இது மாதிரி நான் முயற்சி பண்ணி இருக்கிறேன். அதில் நான் தோற்று இருக்கலாம். போர் ஹே எழுதுகிறார். புலி, கடவுளிடம் போய் சாகா வரம் கேட்டது. கடவுள் சொன்னார். முடிந்தால் கவி தாந்தேயிடம் போய்க் கேள். நீ கேட்கும் வரம் சாத்தியமாகலாம் என்கிறார். புலி தன் கம்பீரமான நடையை கவி தாந்தேவிடம் காட்டி விட்டு சுருண்டு படுத்துக் கொண்டது. கவி தாந்தே புலியின் கம்பீரத்தையும் அதன் வரிக் கோடுகளையும் தன்னுடைய கவிதையின் ஒரு வரியில் பதிவு செய்தார். புலி சாகா வரம் பெற்றது. என்ன சொல்கிறார். கவிதைக்குதான் சாகவரம் உண்டென்கிறார். இதான் கலாபூர்வம் என்பது.

தீராநதி:இப்படி முடிவற்ற ஒரு வரிக்காக கலையை ரசிப்பது என்பதை சுந்தரராமசாமி செய்திருக்கிறார்.தேவதச்சன் கவிதைகளில் அசாத்தியமாக செய்திருக்கிறார்.ஆனால் பலருடைய நாவல்களில் கலாபூர்வம் இருந்தால் விஷயம் இல்லை. விஷயம் இருந்தால் கலாபூர்வம் இல்லை. இந்தச் சிக்கலை எப்படி அகற்றுவது?

கோ.தர்மன்:விஷயம் இல்லாமல் கலாபூர்வம் செய்தோமானால் அந்தரத்தில் நிற்கும். அதற்கு சரியான உதாரணம் - யுவன் சந்திரசேகர், ஜெயமோகனிடம் கதைக்கான விஷயங்கள் நிரம்பவே இருக்கும். அவரை நிராகரிக்கவெல்லாம் முடியாது. கரிசான் குஞ்சு எழுதுகிறார். செத்த மாட்டை விட்டு விலகி ஓடி விடும் உண்ணிகளைப் போல் அவனுடைய நண்பர்கள் அவரை விட்டுப் போய்விட்டார்கள் என்று எழுதுகிறார். இந்த உதாரணத்தை யார் எழுத வேண்டும். இன்றைக்கு கூப்பாடு போடுகின்ற தலித்துக்கள் அல்லவா எழுத வேண்டும். நான் இன்று அந்த ஒரு வரியை படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

தீராநதி : நெடிய கல்வி பாரம்பரியமுள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மொழியைக் கையாளுவதற்கும், இப்போதுதான் கல்வியறிவை பெற்று எழுத வந்திருக்கின்ற தலித்துகள் மொழியை கையாளுவதற்கும் வேறுபாடு இருக்குமல்லவா?

சோ.தர்மன் : நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் கருத்து சரியானது. இதுபற்றி நிறைய இடங்களில் நானும் விவாத்திருக்கிறேன்.தலித் எழுத்துகளுக்கு எந்த முன்மாதிரியுமே இல்லை. ஆனால் மற்ற எழுத்துக்கு நீண்ட பாரம்பர்யம் இருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்கு முன்மாதிரி இல்லை, இல்லை என்றே சொல்லிக் கொண்டிருக்க முடியும்?

தீராநதி : இலக்கியத்திற்குள் தலித்தியம் என்பது ஒரு சங்கம் கட்டுவதைப் போல மாறிவிட்டது. இதைச் சொல்வதினால் கோபிப்பவர்களும் இருக்கிறார்கள். எந்தப் படைப்பும் ஒரு அமைப்பை நிறுவுவதற்காக உருவாக்கப்படும் போக்கு ஆரோக்கியமானதா?

சோ. தர்மன் : அண்டம் முழுவதுமே படைப்புக்கான கருவாக இருக்கும்போது நான் குறிப்பிட்ட ஒன்றை மட்டும்தான் எழுதுவேன் என்றால் நீ உன்னை சுருக்கிக் கொள்கிறாய் என்றுதான் அர்த்தம். இன்றைக்கு வாசகன் என்பவன் எழுத்தாளனைக் கடந்து விஷய ஞானம் உள்ளவனாக மாறிவிட்டான். அப்போது சொல்கின்ற முறையில்தான் அவனைப் படிக்க வைக்க முடியும். என்னுடைய `கூகை' கதையின் பிற்பகுதியில் அந்தப் புனைவை நான் செய்திருக்கிறேன். அதில் சிலரின் பார்வையில் நான் ஒருவேளை தோற்று இருக்கலாம். அது எனக்கு கௌரவமான தோல்வி.

தீராநதி : ஊருக்குள் எப்படி ஒதுக்குப் புறமாக சேரிகளை உண்டாக்கி கொடுத்திருக்கிறார்களோ அதேபோல தான் தலித் இலக்கியம் என்பதை இலக்கியத்திற்குள் ஒரு ஓரமாக `காலனி'போன்று உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.எங்கள் எழுத்தையும் பொது இலக்கியம் என்ற வரையறைக்குள்ளாகவே வகுக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதுபோல குழப்பங்கள் ஏன் நிலவுகிறது?

சோ. தர்மன் : நான்கு மாநிலங்கள் கூடி ஏற்பாடு செய்திருந்த சாகித்திய அகாதெமி கூட்டத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்பாகவே ``என்னை பிறப்பால் வேண்டுமென்றால் தலித் என்று குறிப்பிடுங்கள். ஆனால் எழுத்தால் என்னைப் பிரிக்காதீர்கள்'' என்றேன். இலக்கியத்தில் என்ன இட ஒதுக்கீடு என்று கேட்-டிருக்கிறேனே. ஆனால் மற்ற எல்லோருமே தன்னை தலித் எழுத்தாளர் என்று சொல்லிக் கொண்டுதான் எழுதினார்கள்.இன்றைக்கு அவர்கள் தலித் அங்கீகாரத்தை அழிப்பதற்கு என்ன காரணமென்றால் தலித் இலக்கியம் பின் தங்கி விட்டது.

தீராநதி: அப்போது 90களிலிருந்து வெளிவந்திருக்கும் ஒரு தலித் படைப்பு கூட உங்களை கவரும்படியாக இல்லையா?

சே.தர்மன் : இதுவரைக்கும் கிடைத்த தலித் இலக்கியங்கள் எனக்குச் சொன்ன விஷயங்கள் இவை : தலித் என்றால் எண்ணெயே தேய்க்காமல் பரட்டைத் தலையோடு இருப்பான். எதற்கெடுத்தாலும் கோபப்படுவான். சண்டை போடுவான். தலித் பொம்பளை என்றால் அவள் லேசாக சோரம் போவாள். தலித்துகளை லேசில் ஏமாற்றிவிடலாம். இதை மீறி என்ன கொடுத்திருக்கிறது தலித் எழுத்துக்கள்? தலித் பண்பாட்டைக் கொடுத்திருக்கிறதா? தலித்தினுடைய பாஷையையாவது கொடுத்திருக்கிறார்களா? இவர்கள் எழுத்தில் பேசும் தலித் பாஷையே போலியானது.