Thursday, September 28, 2006

கடற்கரய் கவிதைகள்-சுகுமாரன்

எப்போதும் கவிதை, நிகழ்காலத்தின் எதிர்வினை மட்டுமே. வரலாற்றின் விசாரணையும் நிமித்திகத்தின் எதிர்பார்ப்பும் கவிதையின் பரப்பில் சமகாலச் சார்புடனேயே மேற்கொள்ளப் படுகின்றன.புதிய அனுபவ உலகை முன்னிருத்தவும் புதிய உணர்வோட்டத்தை அடையாளப்படுத்தவும் எத்தனிக்கும் இளங்கவிஞர்களுக்கு கவிதையை சமகாலத்தன்மை கொண்டதாக நிலைநிறுத்துவது சவாலான நடவடிக்கை.முன்னுதாரணங்களை அதேபடித் தொடர்வதோ, வழக்கிலிருக்கும் மொழியை அதேபடி எதிரொலிப்பதோ படைப்பாகாது; நகலெடுப்புமட்டுமே என்பதால்இந்தஅறைகூவலை எதிர்கொள்வது தவிர்க்கவியலாததாகிறது. இந்த சவாலைச் சந்திப்பதிலுள்ள நெருக்கடியை கடற்கரயின் 'ஏற்கனவே ' என்ற கவிதை கச்சிதமாகச் சொல்கிறது. ஒரேசமயத்தில் இது கவிதையின் நெருக்கடியாகவும் வாழ்வின் சிக்கலாகவும் பொருள்படுகிறது. கடற்கரயை பிரதிநிதித்துவப்படுத்தும் கவிதையாகஇதை முன்வைக்க முடியாது. எனினும், இந்த அணுகுமுறை சார்ந்தவைதாம் புதிய கவிதையை சமகாலத்தன்மை கொண்டதாக்குகிறது. முன்னுதாரணங்களைப் பின் தொடர்வதல்ல; 'ஒழுங்கான பாதையைக் கடந்து அலுப்பாகிவிட்டது/மாறுதலுக்காக நிற்கிறேன்/ பாதத்தின் கீழே ஓடிக்கொண்டிருக்கிறது சாலை ' என்ற தெளிவே நிகழ்காலத்தின் அடையாளமும் உயிர்ப்பும்.
கடற்கரயின் கவிதையுலகம் எதார்த்தங்களின் கலைந்த சமவெளி. திட்டவட்டமான இடங்களைக்கூட கலைத்து அதிர்ச்சியும் எதிர்பார்ப்பும் ஏற்படுத்துகிற வகையிலான புதிய இடங்களை உருவாக்குவதை தனது கவிதையாக்கத்தின் முறைசாரா ஒழுங்காகக் கொண்டிருக்கிறார். அறை, தொலைவு, வெளி என்று இடமிடமாகப் பெயர்ந்து முடிவற்ற பரப்பில் அமர்ந்து சூரியனை உண்ணும் புலியாக கோடையை உருவகப்படுத்தும் கவிதையை இதன் சான்றாகக் காணலாம்.

இன்னவகையில் சேர்க்கலாம் என்று வகைப்படுத்த முடியாத மீறலை தனது பிரத்தியேக இயல்பாக கடற்கரய் வரித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மனித இருப்பு, அதன்காரணமாக உருவாகும் மனப்பெயர்வுகள்,இயற்கைமீதான கரிசனம்,வாழ்வின் தற்செயலான தருணங்களின் ஆச்சரியம் என நவீன கவிதையில் தொடர்ந்து புழங்கும் அம்சங்களையே மூலப்பொருட்களாகத் திரட்டிக் கொண்டிருந்தாலும் அதன் விளைவுகள் புத்துயிர்க் கவிச்சையுடன் திகழ்கின்றன. கவிதையின் பிறவிக்குணம் இது. மேலோட்டமான பார்வையில் எளிமையும் சிக்கலுமில்லாததாகத் தோன்றுகிறது கடற்கரயின் கவிதைமொழி. ஆனால் உள்ளோட்டங்களும் முரண்களுமாக கிளைபிரிகிறது. அனுபவத்தின் தீவிரம் மொழியை சிக்கலாக்குகிற நிர்ப்பந்தத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனில், இயல்பான அனுபவத்தைக்கூட சற்று திருகலான மொழியில் வெளிப்படுத்தும் ஆர்வக்கோளாறும் கடற்கரயின் கவிதையாக்க முறையில் காணநேர்கிறது. 'வீடு ' கவிதையின் மூன்றாம் அங்கம் அனுபத்தின் தீவிரத்தால் செறிவுபெறுவதையும் 'அதிகாலை தேநீர் ' 'தரைகொத்தும் பார்வை ' ஆகிய கவிதைகள் உணர்வுநிலையின் வெற்றுவார்த்தைக்கூடுகளாகத் தடுமாறுவதையும் உதாரணங்களாகக் குறிப்பிடத் தோன்றுகிறது. திருத்தமான மொழியில் 'காகத்தின் கருணை/ நகரத்தை மிருதுவாக்கி வைத்திருக்கிறது ' (வெயில் காகம்) என்று எழுதுகிற கடற்கரய் உன்னை என்பதை உனை என்று இடைக்குறையாகவும் என், என்று என்பனவற்றை யென்,யென்று ' 'யென ' ' இலக்கணத் திரிபுடனும் பிரயோகிப்பதில் கவிதைக்குச் செழுமை கூடுகிறதா ? நிகழ்கால இருப்பின் துயரங்களை எதிரொலிக்கும் கசப்பும் அலுப்பும் கலந்த குரல்; இயற்கையை புறப்பொருளாகவன்றி அகத்தின் அம்சமாக ஏற்றுக்கொள்ளும் பெருமிதக் குரல்; காதலின் லயிப்பும் விலகலும் ரீங்கரிக்கும் கசிவான குரல்; குழந்தையுலகின் வெகுளித்தன்மையில் நெகிழும் பரவசக்குரல்; தனிமையின் வைபவத்திலும் மூச்சுத்திணறலிலும் இழையும் குரல் - இந்தப் பலகுரல்களின் மொத்த தொனியில் உயிர்கொண்டியங்கும் கவிதையுலகம் கடற்கரயுடையது.
அதன் இயக்கத்தில் மெல்லிய பதற்றமும் சீற்றமும் வெளிப்படுவதை கவிஞரின் பிரத்தியேகத்தன்மையாகக் குறிப்பிடலாம். 'மழையைப் பார்க்க லபிக்காத ஜென்மத்தில்/ என்னதான் மகத்துவம் கிட்டுமோ போங்கள் ', 'பைத்தியத்தின் மொழியில் இரவும் பகலும் ஒன்றாகிறது ' உள்ளிட்ட வரிகள் இதன் உதாரணங்கள். கவிதையின் பொதுப்பிரதேசம் பெரும்பாலும் எல்லாருக்கும் ஒன்றாகவே கிடக்கிறது. முன் நடந்தவர்களும் சக கவிஞர்களும் பகிர்ந்து வெளிப்படுத்திய பின்னும் புதிய இடங்கள் திறந்துகொள்கின்றன. இந்த இடங்களைக் கண்டடைவதே இன்று கவிதையில் ஈடுபடுபவனை சமகாலத்தன்மையுள்ளவனாக்குகிறது. கடற்கரயின் 'குழந்தை சித்திரம் ' இந்த அர்த்தத்தில் நவீன தமிழ்க்கவிதையில் அவருக்கு முக்கியத்துவம் தரும் முயற்சியாகலாம்.

குழந்தைகளின் உலகம் புதிய கவிதையில் ஏறத்தாழ அந்நியமான ஒன்று. குழந்தைகளைப் பற்றியதாகவன்றி குழந்தைகளின் பார்வையில் பதியும் முதிர்ந்த உலகத்தைத் துல்லியமாக இந்தக் கவிதை முன்வைக்கிறது. 'லெளகீகமற்ற குழந்தைகள் அகராதியில் நேற்றென்பது அனுபூதி ' என்ற வரி தொடர் சிந்தனைகளை எழுப்புகிறது. கவிதையுருவாக்கத்தில் நிகழும் மகத்தான சோகம் கவிதைத்தருணங்களை வார்த்தைகளால் நிரப்பவேண்டியிருக்கிறது என்பதுதான் என்று முன்னர் எழுதியிருந்தேன்.(மனுஷ்யபுத்திரனின் 'இடமும் இருப்பும் ' தொகுப்புக்கு எழுதிய மதிப்புரை).வார்த்தைகள் அழிந்து அனுபவமாகத் திரளும் கவிதைகள் எழுதவும் வாசிக்கவும் அபூர்வமாகவே வாய்க்கின்றன.கடற்கரய் கவிதைகள் அத்தகைய அபூர்வ தருணங்கள இயல்பானதாக்கும் என்ற எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் உறுதிசெய்கின்றன.


(கடற்கரயின் கவிதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை)

Friday, September 15, 2006

காலமர சல்லாபி

(உரைநடைக் கவிதை)

1.

அகண்ட பாறை விளிம்பிலிந்து மெல்லவிழுகிறது நிராதரவற்ற ஒரு சல்லாபியின் காலம். கரும்பாறை போல் இறுகிய அவனது நிலங்கள் மறுபடியும் தாகத்திற்கு வாய்பிளந்து கேவலிடும் காட்சியை அவன் மலை உச்சி மீதிருந்து கிரகித்துக்கொண்டிந்தான். காலத்தின் பெரும் பசியைத் தணிக்க உள்ளிறங்கிச் செல்கிறது ஒரு கோப்பை பொருமானமற்ற அவனது சிறுநீர்.

2.

தணிக்க இயலாத காலப்பசிக்குப் புல்லறுக்க ஒரு வயோதியைக் கூலிக்கு அமர்த்தினான் சல்லாபி.கூடை சுமந்து வருபவள் காலத்தைத் தன் சூம்பிய விரல்களால் எண்ணினாள். அவளது விரலில் சுழன்று சுழன்று விளையாடுகிறது காலத்தின் அடவணை.காலப்பசிக்குப் புல்லறுக்க வந்தவளின் தோட்டத்தில்இச்சமயம் விளைச்சல் வேறு இல்லை. அவளது கூடைக்குள்ளிருந்து அறுவடை செய்தபடி மேய்ப்புநிலத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது காலம்.

3.

பாதசாரிகளின் ஆவலுக்கு சல்லாபியின்காலமரம் உற்சாகத்தைக் கனிகளாக்கித் தருகிறது. குலுங்கிக் குலுங்கிக் கொட்டுகிறதுபழத்தை, காலமரம். பழத்தின் ரசத்தை உண்ட சாரிகள் சாவகாசமாகத் திருபுகிறார்கள் அகாலத்தினுள்ளாக.

4.

பாதசாரிகள் சுவைத்து உண்டெறியும்காலத்தின் கொட்டைகள் விழுந்து கொண்டே இருக்கின்றன காலமரத்தின்அடிவேர்களில்.

5.

காலம் ஒரு பெரும்பாறையாக உருண்டுஉருள்கிறது. சல்லாபியும்-காலமும் அதன்மேல் தவம்புரிகிறார்கள். பாறையினுள் சுழன்றபடிகவனிக்கிறது மற்றொருவனின் காலம்.

6.

எல்லாவிதமான நாட்காட்டிகளிலும்,கடிகாரங்களிலும் வாழ்ந்து அலுத்துப்போன காலம் வழமைக்கு மாறாய்ச் சுழலஆரம்பிக்கிறது மணிக்காட்டியின் எதிர் திசை வரிசையில் நின்று.

7.

அடிமரத்தின் விதைகள் விருட்சங்களாக உயர்ந்துக்கிளம்பி சல்லாபியின் தவப்பாறையைத் தொட்டது.அளவிட்டுப் பார்த்து ஆறுதல்கொண்டான் சல்லாபி. காலத்தின் அளவீடுகளை மறுமுறை ஏந்தலாயின சல்லாபியின் கைகள்.
ஆர்.பி.பி.யின் பூனை

நடு ஜாமத்தில் உறவுக்கு அழைக்கும்
கெடாப் பூனையின்
அடித் தொண்டைக்குரல் தடிக்கிறது
சொற்ப வரும்படியில் ஜீவிக்கும்
தாம்பத்யம் பண்ணாதவனை சேர்த்து
எங்கோ கிளப்பிக்கொண்டு போகிறது அது.
கித்தானில் விளையாடும் ஆர்.பி.பி.யின் பூனைகள்
நினைவு மேட்டில் ஏறிகாதுகளை உயர்த்துகின்றன.
வாலை கொடிபோல் ஆட்டுகின்றன.
மொட்டை மாடியை
அங்கிட்டும் இங்கிட்டும்
அல்லோலப்படுத்துகின்றன.
இரவு புகாரற்றுத் திரும்பும்
பெட்டைப் பூனை மீதேறி
இருட்டின் சுவர்களை உடைக்கிறது கெடா
வெண் புனல் பொங்கி
ஜாமத்தை நனைக்கிறது
இருட்டின் கருமை கரைந்து
பொள பொளவெனபுலர்ந்து வருகிறது
பகற்பொழுது.

மாலை

உயர்த்தி நடப்பட்ட
கூடையை நோக்கி
பந்தைப் போட முயலும்
ஆட்டக் கலைஞனைப் போல
சூரியனைக் கொண்டு வந்து
இருட்டின் கூடைக்குள் போடுகிறது பகல்.
ஒரு சிறுமியின் உற்சாகம் ஒத்து
சுறுசுறுப்படையும் பகற்பொழுதை
இரவு விடாமல் விரட்டிக்கொண்டே ஓடுகிறது
பெரிய பெரிய வலைகள்.
வரையறுத்த விதிமுறைகள்.
தீர்மானிக்கப்பட்ட கோடுகள்.
ஆட்டக் கலைஞன் தன் வேலைகளை வேகப்படுத்துகிறான்.
இலக்குத் தவறி விழும் பகற் பந்தை
எடுத்துப் போட
சரசரவென்று மேற்கே இறங்கிக் கொண்டிருக்கிறது
மாலை

தடுமன் எழுத்து

சதுர சதுரமான
உயர்ந்தோங்கியச் சுவர்கள்.
வளர்ந்து நிற்கும் மருத்துவமனை
தொங்கி அலுக்காத
தடுமன் தடுமன் எழுத்துக்கள்
வாசித்துக் கொண்டு வருகிறான் வயசாலி.
மருத்துவமனைக்கு வெளியே நீண்ட கண்களை
இழுத்து வந்து மருந்தருந்த வைக்கிறான் கம்பெளண்டர்.
தடுமன் தடுமன் எழுத்தினைக் கூட்டி
மருத்துவர் படிக்கச் சொன்னதும்
மறைந்தொளியும் எழுத்துக்களைப் பிடிக்க
நீண்ட படிக்கட்டுகளை தழுவத் தொடங்கின
வயசாளியின் கால்கள்.

தன் வாழ்வை எழுதுபவன்

தூரத்து சந்திரன் நடுவானில் தொங்க
தன் இரட்டை எருதுகளை
இரை பொறுக்க விட்டுவிட்டு
எதையோ உற்று நோக்கியவனாய்
நின்றிருக்கிறான் ஒருபழங்குடி.
நிலவொளி ஒவ்வொரு கம்பியாக நீண்டு
அவனது முகத்திற்கு
வெள்ளையடித்துக் கொண்டிருந்தது.
இறந்துபோன பருந்தொன்றின்
இறகுகளை கற்றையாக்கி
தலைக்கு கிரீடம் தரித்தவன்
மேய்ப்பு நிலத்தின் மீதாக
தன் பார்வையைஅப்படியே மேய விடுகிறான்.
பால் மஞ்சளாறு அவன் மீது
விழுந்து கடந்து நகர்கிறது.
தேர்ந்த தைல ஓவியத்திற்கு
இணையான வாழ்வை
அவன் மெல்ல எழுத ஆரம்பிக்கிறான்.

விநோதி

தேகம் முழுக்க ஓவியங்களை
வரைந்திருப்பவளை எனக்குத் தெரியும்.
அவள் கழுத்துப் பகுதியில்
பல வருடங்களாக
நீந்திக் கொண்டிருக்கும் கலம்
கரை சேர முடியாமல்
துறைமுகத்தை தேடிக்கொண்டிருக்கிறது.
அவள் புன்னகைக்கும் உதட்டோரம்
ஆண் புலியொன்று
தன் முன்னங்கால் உயர்த்தி
எப்போதும் நர்த்தனம் பண்ணுகிறது.
அவள் இருதயத்தைத் துளைத்துக் கொண்டிறங்கும்
காதல் அம்பொன்று
என்னை சதா இம்சிக்கிறது.
தாமரைக் கொடிகள் மடித்து
உடல் சர்வமைக்கும்
அவள் பந்தலிட்டிருக்கிறாள்.
அங்கொன்றும் இங்கொன்றும்
அல்லி கமலம் மல்லி
முல்லை குறிஞ்சி காந்தள்
பூத்துக் கொட்டுகின்றன.
ஒற்றைக் கொம்பின் மீதேறி
தோகை அகல மயில் அகவிப்பாடுகிறது.
தாம்புக் கயிரென பின்னிய அவள் கூந்தலில்
பாரம்பரியம் வேர்க்கட்டுகிறது.
கிளி பேச
மயில் ஆட
மான் தாவ
பறவைகள் சல்லாபிக்க
அவளது மோக கொடி இழைகள்
காண்போரை சிறைப் பிடிக்க அலைகின்றன.

Thursday, September 14, 2006

நளாயினி தாமரைச்செல்வியின் நூல் அறிமுகம்- வெளியீடு கடந்த மாதம் கருப்பு மனிதன் நடத்தியது..(அப்படங்கள்தான் இங்கு உள்ளது) அதைப் பற்றிய சங்கதிகளை சில நாட்களில் எழுதுகிறேன்.

Wednesday, September 13, 2006





பகிர்வு


அண்மையில் என் இரண்டாவது கவிதை தொகுப்பிற்கு சிற்பி அறக்கட்டளையின் விருது கிடைத்தது. அதையொட்டி பொள்ளாச்சிக்கு நான் அழக்கப்பட்டிருந்தேன். ஒரு நாள் முழுக்க நிகழ்வுகள் நடந்தேறின.இலங்கை கவிஞர் வ.ஐ.ச.செயபாலன் நார்வே நாட்டிலிருந்து இந்நிகழ்வுக்காகவே வந்திருந்தது அனைவரும் மகிழதக்கதாய் இருந்தது. நானும் இந்திரனும் நண்பர் காளிதாஸ் உதவியுடன் டாப் சிலிப் சென்றோம். காட்டு விளங்குகள் சூழ்ந்த அங்கு ஓர் இரவு தங்கிய அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது. யானைகள் பெருகிய மேற்கு தொடர்ச்சி மலையின் விஷயங்களை விரைவில் எழுதுகிறேன்

Saturday, September 09, 2006



1.
குட்டி கைப் பையோடு
உத்யோகத்திற்கு விரையும் சீனத்துக்காரி
வெளியேறுவதற்கு முன்னதாக
ஆடியில் காண்கிறாள் முகத்தை.
குட்டை பாவாடை
குறுஞ் சிரிப்பு தோன்றி மறைகிறது அதில்.
அலுவல் அழைக்கும் நேரம்
முகத்திற்கு பொலிவு கூடுகிறது.
மாலை காய்ந்த குப்பையாகிவிடும் என்பதை அறிவாள்.
ஆடியில் விழும் முகம்
மெல்லஅலையுறத் தொடங்குகிறது.
தலைக்கு அவள் சூடியிருந்த
வாசனை மலர்கள்
தழைத்து அரும்புகின்றன-ஒரு
வைகறைத் தோட்டத்தின்
வைராக்யத்தோடு.

2.

ஒரு இளவரசனைப் போல கம்பீரம்-
தேர்ந்த நடிகனின் மிடுக்கு-
மர சாய்வு நாற்காலியில் சாய்கிறேன்.
என் பார்வை தாண்டிப் போகிறது-
நகரத்தை,
தோட்டத்தை,
தேசத்தின் வரைபடத்தை,
இப்போது என் தலையை கழற்றி வீசுகிறேன்.
அழகிய ஒரு பூ ஜாடியைப்போல
ஒரு ரோஜாவை அதில் செருகுகிறேன்.
இன்னும் நிறைய வண்ண மலர்கள்
எனக்கு முகம்.
மலர்களின் தோட்டம்-
இளவரசனின் கம்பீரம்-
நடிகனின் மிடுக்கு-
எல்லாம் பொறுந்திய என் முகம்
இன்று முதல்
அழகிய மலர்கள் அரும்பும்
பூக்குடை.


3
நட்சத்திரத்திற்கு
விரல் முளைத்த நளில்
தேவகுமாரன் பூமிக்குள் நுழைகிறான்.
கிறிஸ்துவின் மின் விளக்கு மரம்
வீட்டை ஒளிரச் செய்யும் வேளை
சகலரது வீடுகளிலும்
பசுமைத் தழைக்க முளைவிடுகிறது-
ஒற்றை வால் நட்சத்திரம்.
வானத்தின் கீழ்
வண்ண வண்ண கிறிஸ்து மரம்
ஆயிரமாயிரம் வால் தரித்த
கலர் கலர் நட்சத்திரங்கள்
ஒளி கொட்டும் டிசம்பர் மாதத்தில்
எல்லோரது வீட்டிற்கும்
தேவைப்படுகிறார் ஒர் மீட்பர்.

4.
வானத்து கீழாக
திறந்துக்கிடக்கும் பெட்டினுள்
கொட்டிக் கொண்டே இருக்கிறது
குட்டிக் குட்டி நட்சத்திரங்கள்.
நிறையாத அப் பெட்டியை நிறைக்க
பேரின்பத்தோடு போராடுகிறான் ஒருவன்.
நிறையாத அப் பெட்டியைப் பூட்டும்
சாவிக்கு எதிராக
பெரிதாகிக் கொண்டே போகிறது
தூவாரம்.

Wednesday, September 06, 2006

Monday, September 04, 2006

கடற்கரய் கவிதைகள்

வீடு

1.
நிசப்தம் இறைந்து கிடக்கும்
வீட்டுக் கதவினைத் திறந்து
உள் பிரவேசிக்கின்றேன்.
அருகம் புல் மீதமர்ந்த பனித்துளி போன்று
சோபை கொண்டிருந்த
நிசப்தத்தின் மேலூர்ந்து
என் மென் பாதங்கள் செம்மறியாக மேய்கையில்
சட்டென்று உறைந்து பனிகட்டிகளாகின.
வீட்டின் சீதோஷ்ணம் குறையக் குறைய
வீட்டின் உள் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன் நான்.
தரை படிந்திருந்த திவலைகள் முழுக்கபனிக்கட்டியாகி
வீடு விறைக்கையில்
மெல்ல நிசப்தம் என் மீது மழையெனக் கவிழ்கிறது.
இதுயென் அடர்த்தியின் அளவை
ஒரு பக்கம் கூட்டிக் கொண்டேவும் செல்கிறது.
வீட்டின் உள்ளிருந்த நிசப்தம்
இப்பொழுது என்னுள் கூடு கட்டுகிறது.
2.
வீட்டிடமிருந்து கற்றுக் கொள்ள
என்ன இருக்கிறது நமக்கு.
எதற்கும் மௌனம் சாதிக்கும் அதனிடமிருந்து
எதை நாம்கிரகித்துக் கொள்ள இயலும்.
சகல சௌந்தர்யங்களையும்தனக்குள் அமுக்கிக் கொண்டு
வீங்கி வெடித்திராமல்பரிதவிக்குமதன் மனப்பாங்கும்
எதற்குதவும்.
ஒன்றிடமிருந்து எதை நாம் கற்றுக் கொண்டோமோ
அதை வைத்தே அவற்றை நாம் மடக்குகிறோம்.
புதிய வீடு
புது மொழியையா நமக்குப் பயிற்றுத் தருகிறது.
புதுமையென எதை நம்பினோம் நாம்.
வீட்டிடமிருந்து கிரகிக்க உள்ளது ஏராளம்.
நிசப்தம் தழைக்கத் தருவாகி நிற்கும்
அதன் விசால மனப்பாங்கிலிருந்து கற்றுக்கொள்:
ஒரு மிடறு நிசப்தத்தை.
3.
முடிக்கப்படாத ஆட்டத்தின் சொச்சமாய்
வீடு முழுக்க இறந்து கிடக்கின்றன
கேரத்தின் காய்கள்.
ஆடப்படாத ஓர் ஆட்டத்தின் துவக்கமாய்
ஓர் ஆட்டத்தையாட
எண்ணிக்கொண்டபடி
சிதறிய சில்லுகளை சேகரித்தேன்.
அனேகத்தையும் ஓரிடம் குவித்தேன்
முற்றுப் பெறாத ஓர் ஆட்டம்
துவங்கப்பெறாதஓர் ஆட்டம்
சிதிலமடைந்த ஓர் ஆட்டம்
எவ்வாட்டம் உகந்தது.
ஆடத்துவங்கும்
என்னாட்டத்திற்கு முன்னதாக
நாலாத் திசைகளிலிருந்து
கணையாய்த் தாக்கி
ஆடிக் கொண்டிருந்தன
கேரத்தின் காய்கள்
எதற்கும் நன் நகர்ந்தே இருக்கிறேன்.
4.
யாரும் இல்லாத வீட்டில்
மர்ம உறுப்புகளைப் பிடித்து
சுவைத்துக் கொண்டிருக்கிறா(ள்)ன்.
விழுதெனக் கிளைக்கும்
எல்லா அறையிலும்யாரோ ஒருவன்(ள்)
நம்மைச் சுகித்துக் கொண்டே இருக்கிறான்(ள்)
தன் அகோர நகங்களை வேரெனப் பாய்ச்சி
நமக்குள் சுகம்தேடும் அவனது-அவளது விரலில்
காமத்தின் அனேக முகங்கள் பிரதிபலிக்கின்றன.
யாரும்மற்ற வீடுகளில்
தனித்திருக்கும் ஒருவ(ளோ)னோடு
அங்கில்லாதவர்களும்
இருந்து கொண்டிருக்கிறார்கள்.
எண்ணாத்தில் உருக்கொள்ளும்
வெவ்வேறு முகத்தினை
யாருமற்ற வீட்டிற்கு
அவனா(ளா)ல் மட்டுமே கொன்டு வர இயலும்.
யாருமற்றா வீடே
நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கிறது.
யாருமில்லாத வீட்டில்
யார் யாரோ இருக்கிறார்கள்.
5.
சொல்ல முடியாத துக்கத்தினால்
நிரம்பிவழிகிறது வீடு.
மாறாக ஒரு தினம்
மகிழ்ச்சியினால் நிரம்பிவிடக் கூடும்.
அந்நாளில் அத்துவானத்திலிருந்த
அழகிய தேவதைகள்
நம் வீட்டை ரட்சிப்பார்கள்.
தேவனது விசாரிப்புக்கள்
உங்கள் கதவினை வந்து முறையிட்டு நிற்கும்
அந்நாளில்.
வீட்டின் கொள்ளளவிற்கேற்ப
வீட்டின்ஆரவாரம் கூடிக் கொண்டேவும் செல்கிகிறது.
சின்னஞ்சிறு வீட்டின் கொள்ளாத்த பாத்திரமாய்
மகிழ்ச்சி நிரம்புகையில்
அது,வேறுவேறு வீட்டிற்கும் பரவுகிறது.
எல்லா வீடும் விருந்தினர் பொழுதுகளை
ரம்மியமாக்கித் தருகின்றன.
இம் மந்திரத்தை கடவுள் வீடுகளுக்குப் பழக்கியிருக்கிறார்.
ராதையின் ரம்மியம் நமக்குள் ரகசியமாகிறது.
சிவந்த நெஞ்சில் காய்கள்
பழுத்துக் கனிகளாக உதிர்கின்றன.
விஜயத்தின் வீர்யத்தில்
ஏழு லட்சம் விளக்குகளை
எரியவைத்துவிடலாம் நீங்கள்.
ஒரு வீட்டின் மகிழ்ச்சி
கொஞ்ச தூரங்களை எட்டுகிறது,
ஒரு வீட்டின் துக்கம்
மாறாகபல மைல்களைத் தண்டி விடுகிறது.
6.
வீடில்லாதவர்களுக்கு
வீட்டைப்பற்றிய கனவுகள்
பெரிதாக இருக்கின்றன.
வீடுள்ளவர்களுக்கு
வீட்டின்அசௌகர்யங்களே
பிரதானமாகின்றன.
வாடகை வீட்டு மனம்
ஒரு சொந்த வீடு கேட்கிறது.
சொந்த வீட்டு மனம்
வடகைக்கு ஏங்குகிறது.
7.
வீடுகள்
வித விதமான வாசனைகளால் நிரம்பியது.
குறிப்பிட்ட உபாசனை
சில வீடுகளை நினைவுறுத்தும் நமக்கு.
வீடுகள் தனக்கென்றே
ஒரு ப்ரத்யேக வாசனையை
உருவாக்கிக் கொள்கின்றன.
உபாசனையோடு வந்து நசியைத் தட்டும்
அதிகாலை
முற்றத்தில் நட்சத்திரங்களைக் கொண்டுவந்து
கட்டிப் போட்டிருக்கிறது.
சுகந்தம் உள்ள வீட்டில்
பட்டாம் பூச்சிகள் குடியிருக்கும்.
தனியங்கள் வாசனை தூக்கலாய் இருக்கும்
என் பூர்வீக வீட்டில்
குருவிகள் குடியிருக்கும்.
நல்ல வாசனையை உருவாக்கித்தரும்
என் கிராமத்து வீடு
விலை மதிப்பற்றது.
நல்ல வசனையை உள்ளிழுக்கத் திணறும்
என் நகரத்து வீடு
விலை மதிப்புள்ளாது.
8.
வீட்டில் இருப்பவர்களை
தயவு செய்து வெளியில் போங்கள் என்று
விரட்டும் நாளில்
வீடு சூன்யமாகி விடுகிறது.
ஒரு கலவரம் முடிந்த பிற்பாடு
வீட்டின் வலிமையான எலும்புகள்
முறிந்து கிடக்கின்றன.
பிறகு அது கூட
பலமாதங்களாகும்.
வருடங்கள் தண்டும்.
வீட்டின் நிசப்தம்
நம்மை ஞானியாக்கும்.
வீட்டின் இரைச்சல்
நம்மை சூன்யமாக்கும்

Friday, September 01, 2006

அன்பு தோழமைகளுக்கு

என்னுடைய இன்னொரு ப்ளாக் கருப்பு மனிதன். அதையும் தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்