Thursday, February 28, 2008

வ.ஐ.ஜெயபாலன் நேர்காணல்




விடுதலைப் புலிகளைப் பற்றி பல வதந்திகள் நிலவும் சூழலில், உண்மை அறிய நார்வேயிலிருக்கும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனைத் தொடர்பு கொண்டோம். இலங்கையில் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நார்வே அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருப்பவர் இவர். (முன்னைய பேட்டியின்போது சமாதானத்துக்கான நார்வே விசேட துதுவருக்கு வெளிவாரி ஆலோசகராக பணிபுரிந்ததை பதிவுசெய்தார்கள். இம்முறை தவறுதலாக குழுவில் இடம் பெற்றதாக பதிவாகியிருக்கிறது - ஜெயபாலன்)




இலங்கைத் தமிழர் நிலை இப்போது எப்படி உள்ளது?


‘‘பொதுமக்கள் மீதான தொடர் விமானக் குண்டு வீச்சுகளும் பீரங்கித் தாக்குதல்களும் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கு எதிரான கடற்படையின் அட்டூழியங்களும் அதிகரித்துள்ளது. மறு புறத்தில், அதிகரித்துவரும் மருந்து, உணவுப் பொருட்கள் எரிபொருள் நெருக்கடி விரைவில் தமிழ் மக்களைப் பட்டினிச் சாவுக்குள் தள்ளிவிடும். சர்வதேச கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகள் தமிழ் மக்களுக்குக் குறைந்த பட்ச பாதுகாப்பாக இருந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்டதால், ஜனவரி 16_ல் இருந்து சர்வதேசக் கண்காணிப்புக் குழுவினர் வெளியேறிவிட்டார்கள்.இது விடுதலைப் புலிகளின் மீதான யுத்தம் என்று சிங்கள அரசால் குறிப்பிடப்பட்டாலும் இது விடுதலைப் புலிகள் உருவாவதற்கு முன்னமே ஆரம்பித்த தமிழர்மீதான யுத்தத்தின் தொடர்ச்சி என்பதை மறைக்கமுடியாது.’’


இந்தப் போர்ச் சூழலில் இந்தியா என்ன நிலைப்பாட்டில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?


‘‘இந்தியா, தமிழகம் _ இலங்கைத் தமிழர்களின் நலன்கள் வரலாற்றால் இணைக்கப்பட்டது. இது உடைந்தால் எல்லா தரப்பும் பாதிக்கப்படும். இதனாலும் நீடிக்கும் எங்கள் பகையாலும் சீனாவும் பாகிஸ்தானும் ஏனைய இந்திய விரோதிகளும்தான் பயனடைவார்கள்.தமிழருக்கெதிரான இனக்கொலைப் போரில் இலங்கை அரசுக்கும் கடற்படைக்கும் உதவுவதை இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். நாம் அழிக்கப்பட்டாலும் தமிழர் இனக்கொலைக்கு இந்தியாவும் உதவியது என்கிற பழிச்சொல் வேண்டாம்.’’


பிரபாகரனின் துணைவியார் மதிவதனி ஈழ அகதிகளுடன் சேர்ந்து மின்னல் வேகப் படகுமூலம் தமிழகம் வந்துவிட்டதாக வரும் தகவல்கள் உண்மையா?


‘‘இதுபோன்ற அடிப்படைகள் இல்லாத வதந்திகளுக்கும் ஊகங்களுக்கும் எப்படிப் பதில் சொல்வது? ஆயிரம் ஆயிரம் வருடங்களாக சிங்கள அரசுகளிடம் இருந்து இலங்கைத் தமிழருக்கு தமிழ்நாடுதான் பாதுகாப்பாக இருந்தது. 1620 வரை நீடித்த இலங்கைத் தமிழரின் யாழ்ப்பாண அரசுக்கு தஞ்சாவூரில் இருந்துதான் படை திரட்டப்பட்டது. அதன்பின்னர் போர்த்துக்கீசியர் காலத்தில் மதரீதியான ஒடுக்குதலுக்கு அஞ்சி நம்மவர்கள் இராமேஸ்வரத்துக்கும் வேதாரணியத்துக்கும்தான் தஞ்சமென்று ஓடி வந்தார்கள்.’’


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சமீபத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்து விட்டதாக செய்திகள் வருகின்றனவே?


‘‘இது அடிக்கடி இலங்கைப் படையினரால் சொல்லப்படுகிற சேதிதானே? சிங்கள ஆட்சியாளர்கள் பிரபாகரனோடு போராட்டம் முடிந்துவிடுமென்கிற அவர்களது நப்பாசையில் தங்கள் கனவைச் சொல்கிறார்கள். விடுதலைப் புலிகளின் அமைப்பை நன்கு அறிந்தவன் என்கிற வகையில் அவர்கள் கனவுகள் எதுவுமே நனவாகாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.’’


விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பிரபாகரனின் மகன் தலைமை ஏற்கப் போவதாகச் சொல்கிறார்களே?


‘‘இந்தச் சேதிக்கும் அடிப்படை எதுவும் இல்லை. சார்லஸ் அன்ரனி கல்விக்காக லண்டன் போனபோது தப்பி ஓடி விட்டதாகச் சொன்னார்கள். இப்ப திரும்பிவந்து போராட்டத்தில் இணைந்து கொண்டதும் தலைவராகப் போகிறார் என்கிறார்கள். இந்த இரண்டு கருத்துக்களும் அடிப்படையில் ஒன்றுதான்.’’.

Friday, February 01, 2008

சினிமாக்காரர்கள் பெரியாரைத் தொலைத்துவிட்டார்கள்-தமிழவன்



தமிழ் சமகால இலக்கிய உலகில் தமிழவன் குறிப்பிடத்தக்க படைப்பாளி. அமைப்பியல் தத்துவத்தை தமிழ்ச் சமூகத்திற்குள் கொண்டு வந்தவர். ‘ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ ‘ஜி.கே. எழுதிய மர்ம நாவல்’, ‘வரலாற்றில்படிந்த நிழல்கள்’ போன்ற நாவல்களை நவீன வடிவத்தில் எழுதி வெளியிட்டவர். இதன் மூலம் புது வகையான நடையை மேற்கொண்டவர். வார்ஸா பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு தமிழ் போதித்துவிட்டு தற்சமயம் ஆந்திர மாநிலம் திராவிடன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை தோற்றுவித்து அதன் தலைவராக இருந்து வருகிறார். இவரது சமீபத்திய நாவல், ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’. இவரின் அசல் பெயர் கார்லோஸ். தீராநதிக்காக ஆந்திரமாநிலம் குப்பத்தில் உள்ள திராவிடன் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட நேர்காணல் இது.
தீராநதி: இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு வெளிவர இருக்கும் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ என்ற உங்களின் புதிய நாவலை தோதாக வைத்துக் கொண்டு நமது பேச்சைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். நாவலின் வடிவம், கதைக்களம், பின்புலம் பற்றி முதலில் சுருக்கமாகச் சொல்லுங்கள்?
தமிழவன் : வார்ஸாவுக்கு நான் 2001_ல் தமிழ்ப் பேராசிரியராக வேலை செய்யச் சென்றேன். எனக்கு முன்னால் தி.சு. நடராஜன், இராமசுந்தரம், க. சுப்பிரமணியம், நாச்சிமுத்து, இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் அங்கு சென்று தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிந்து விட்டுத் திரும்பி இருக்கிறார்கள். அதில் இந்திரா பார்த்தசாரதி மட்டும்தான் நாவலாசிரியர். நானும் சென்று வழக்கமான தமிழ்ப்பேராசிரியர் வேலையைத்தான் செய்துகொண்டு இருந்தேன். கடைசியில் ஆறுமாதம் பணி நீட்டிப்பு எனக்குக் கொடுத்தார்கள். அங்கு சென்று வேலை செய்து கொண்ட காலங்களில் ‘பொலிஷ்’ மொழி இலக்கியம் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். ‘பொலிஷ்’ மொழியில் வேகமாக வாசிக்கக் கூடிய ஆற்றல் எனக்கு இல்லாததால் ஆங்கிலப் புத்தகங்களை வாங்கி வாசித்துக் கொண்டிருந்தேன். அங்கு ஆங்கிலப் புத்தகங்களை விற்பனை செய்யும் கடைகள் மிகவும் குறைவு. ஒரு சில கடைகளில் மட்டும்தான் ஆங்கில நூல்கள் விற்பனைக்கு இருக்கும். ‘அமெரிக்கன் புக் சென்டர்’ என்ற ஒரு ஆங்கிலப் புத்தக விற்பனையகத்திலிருந்துதான் நான் புத்தகங்கள் வாங்கிப் படிப்பேன்.இந்தியாவில் இருந்த காலங்களில் வேலைப் பளு காரணமாக எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க நேரம் இல்லாமல் தவித்தேனோ அந்தப் புத்தகங்களையெல்லாம் வாங்கி அங்கிருக்கும்போது படிக்கத் தொடங்கினேன். குறிப்பாக எல்லாவிதமான ‘கிளாசிக்’ நூல்களையும் வாங்கி வாசித்தேன். அப்படிப் படிக்கும் சமயத்தில் அதற்கான சிந்திப்பிலேயே சதாசர்வகாலமும் இருந்தேன். என்னைப் பொறுத்தளவில் நான் இரண்டு துறைகளிலும் கால் ஊன்றிக் கொண்டிருப்பவன். ஆய்விலும் என்னுடைய பங்களிப்பு இருக்கிறது என்று நான் கருதுகிறேன். தற்கால இலக்கியத்திலும் எனக்கு தொடர்ச்சியான ஈடுபாடு இருக்கிறதென்றும் நினைக்கிறேன். இப்படி வாசித்துக் கொண்டிருக்கும்போது இன்றைய சமகால நாவல் உலகம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். இந்தப் புரிதலால் எனக்குள் ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற உத்வேகம் உண்டானது. ஏற்கெனவே இந்தியாவில் நான் நாவல் எழுதிக் கொண்டிருந்தவன் என்பதால் இந்த ஆவல் இயல்பானதொன்றாகவே உணர்ந்தேன்.முதலில் ‘காதலோடு கூடிய போர்க் காலம்’ என்ற ஒரு ஸ்கிரிப்ட்டைத்தான் தயார் செய்தேன். 1965_ல் பாளையங்கோட்டையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து அந்த நாவலை எழுதி இருந்தேன். இன்றைக்குள்ள பல இளைஞர்களுக்கு இந்தி எதிர்ப்புக் காலகட்டத்தில் நடந்த போராட்டங்கள் பற்றி போதுமான புரிதல் இல்லாததனால் அந்தத் தகவல்களை இலக்கியத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று கருதி அந்த நாவலை எழுதி முடித்தேன். மொத்தம் இருநூறு பக்க அளவில் முடி.ந்தது அந்நாவல். அதற்கு பிற்பாடு எனக்கு நாவல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இல்லாது போனது. இந்த சமயத்தில் திடீரென்று ஆறுமாதம் நீட்டிப்பு கிடைத்ததால் சரி, நாம் ஏதாவது ஒரு நாவலை எழுதி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். நாவல் எழுதுவததற்கு மன ஒருமைப்பாடு என்பது ரொம்ப முக்கியம். இந்த சமயத்தில் கிடைக்கின்ற ஓய்வு நேரத்தை நாவல் எழுதுவதற்கு ஒதுக்கி விடவேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டேன். அங்கிருந்து வெளியாகும் ‘ஆன் லைன்’ வெப் சைட்டுகளில் ஒரு சில அனுபவ ரீதியிலான சின்னச் சின்ன கட்டுரைகளை எழுத மட்டுமே நேரம் கிடைத்த எனக்கு, இந்தப் பெரிய ஓய்வு என்பதை உருப்படியான காரியத்திற்குச் செலவிட்டாக வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.இந்த நேரத்தில் இன்னொன்றையும் நான் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டுச் சிறுபத்திரிகைச் சூழலிலிருந்து சென்றவன் என்ற வகையில் எனக்கு இங்கிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளோடு உள்ள உறவு இந்தக் காலத்தில் தடைப்பட்டுப் போனது. சுத்தமாக தொடர்பே இல்லாமல் உறவு அறுந்து போய்விட்டது. ஆகையால் இங்கே உள்ள இலக்கியச் சூழலில் என்ன நடக்கிறது என்பதே எனக்குத் தெரியாமல் போய் விட்டது. வருடத்தில் ஒன்பது மாதங்கள் வெறும் பனி மட்டுமே பொழிகின்ற ஒரு நாட்டில் நான்கு வருடங்களைக் கழிக்க வேண்டியதாகிவிட்டது. ஒரு இலை தழைகளைக் கூட நீங்கள் பார்க்க முடியாது. எங்கு பார்த்தாலும் வெறும் பனி மட்டுமேதான் கண்களுக்குத் தெரிகின்ற ஒரு சூழலில் ஒன்று, நமக்கு சிறு வயது ஞாபகங்கள் மிதந்து வரும். அதற்காக ஒரு நாவலை எழுதினேன். அது, காதலோடு கூடிய போர்க்கலம். இரண்டு _ அனைத்துலக வாசகர்களை மனதில் வைத்து ஒரு தமிழ் நாவல் எழுத வேண்டும் என்பதற்காக ஒரு நாவலை எழுதினேன். அனைத்துலக வாசகர்களைக் கருத்தில் வைத்து எந்தத் தமிழ் நாவல்களும் வெளிவருவதில்லை என்ற எண்ணம் எனக்கிருந்ததனால் (இதை தற்பெருமைக்காக நான் சொல்லவில்லை. அதற்கான கட்டத்தை நான் தாண்டிவிட்டேன். சிறு வயதில் சில காரியங்களை அகங்காரமாக எடுத்துக்கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி யிருக்கிறேன். இப்போது நான் அப்படி நிச்சயமாக பேசுவதில்லை) இந்த எண்ணத்தை முன் வைத்து ஒரு நாவலையும் எழுதி முடித்தேன். அந்த இரண்டாம் நாவல்தான் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்.’ முதல் நாவல் இன்னும் பிரசுரமாகவில்லை.நான் கன்னட மொழிச் சூழலில் இருந்த காலத்தில் அப்போது கன்னடமொழி நாவல்கள் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படுமா? என்ற ஒரு விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததைக் கவனித்திருக்கிறேன். இந்தக் காலத்தில் தான் சல்மான் ருஷ்டி போன்றவர்கள் இந்திய நாவல்கள் எதுவும் சரியாக இல்லை. அனைத்துலக வாசகர்களை மனதில் கொண்டு நாவல் வெளி வருவதில்லை என்ற கருத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு விதத்தில் சல்மான் ருஷ்டி சொல்வதென்னவோ உண்மைதான். இந்திய மொழிகளில் வெளிவருகின்ற நாவலை அனைத்துலக வாசகனுக்கு மொழி பெயர்த்துக் கொடுத்தால் அவன் அதை அனைத்துலக நாவலாக எடுத்துக் கொள்ளமாட்டான்.இன்றைக்கு உதாரணமாக ஹாருக்கி மொரகாமி என்பவர் எழுத ஆரம்பித்திருக்கிறார். ரொம்ப கவனத்திற்குரிய ஒரு எழுத்தாளர் அவர். ஜப்பானிய பின்னணியிலிருந்து அவர் எழுதுகிறார். ஆனால் அனைத்துலக வாசகர்களை இலக்கு வைத்து எழுதுகிறார். நமது இந்திய மொழிகளில் இந்த மாதிரி இலக்கு வைத்து எழுதுகின்ற எழுத்தாளர்கள் இல்லை. ஏனென்றால் நமது கலாசாரத்தில் நாவல் எழுவதற்கு ஒரு எல்லையை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குள்ளாகத்தான் நாம் எழுதுகிறோம். இப்படி எழுதவில்லை என்றால் நமது வாசகன் அதற்குள் பழக்கப் படமாட்டான். இவனுக்கு பழக்கப்பட்ட விதத்தில்தான் நீங்கள் சொல்ல வேண்டும். இதற்காக நாம் ஒரு சின்ன எல்லையை உருவாக்குகின்றோம். ஆனால் இதற்கும்மேல் அனைத்துலக வாசகர்கள் என்ற ஒரு பெரிய எல்லை இருக்கிறது. தமிழிலக்கியத்தில் அனைத்துலக வாசகர்களைக் குறி வைத்து எழுதக்கூடிய எழுத்து ஒன்றை முயற்சி செய்து பார்ப்போமே என்றுதான் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ என்கின்ற இந்த நாவலை நான் எழுதினேன்.
தீராநதி: இந்த நாவலின் உள்ளடக்கம் என்ன?
தமிழவன்: இதுவரை நான் பேசியது முழுக்க இந்நாவல் எழுதுவதற்கான உந்துதல் எப்படி ஏற்பட்டது என்பதை ஒட்டியது. இங்கிருந்து வார்ஸாவுக்கு ஆசியவியல் நிறுவனத்திற்கு தமிழ் போதிக்கும் ஆசிரியராக போய் சேர்ந்தேன் இல்லையா? அப்போது இரண்டு வகையான பாதிப்புகள் எனக்குள் ஏற்பட்டது. ஒன்று _ நான் கர்நாடகத்தில் முழுக்க தமிழ்ப் பேராசிரியனாக இருந்தவன். யாராவது என்ன பேராசிரியர் நீங்கள் என்று கேட்டால் தமிழ்ப்பேராசிரியர் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் என்னை குறைவாக எடைபோட்டு விடுவார்களோ என்ற தாழ்வு மனப்பான்மை. இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மையோடு வார்ஸாவுக்குச் சென்றால் என்னை தமிழ்ப்பேராசிரியன் என்பதற்காகவே முதன்முதலாக பெருமைப்படுத்தியது அந்த வார்ஸா பல்கலைக்கழகம். அங்கிருந்த மாணவர்கள் என்னிடம் நான் தமிழ் படிக்கின்றேன் என்று பெருமிதத்தோடு சொன்ன போது குற்ற உணர்வில் குமைந்தேன். இது நாள் வரை ஒரு சிறு பிராந்திய மொழிக்குள் அகப்பட்டுக் கொண்டு முட்டாள் தனமாக தாழ்வு மனப்பான்மையில் உழன்று இருக்கிறோமே என்று சங்கடப்பட்டேன். அனைத்துலகப் புகழ் பெற்ற தமிழ்மொழிப் பேராசிரியன் நான் என்று பெருமைப்பட்டல்லவா இருக்க வேண்டும் என்று சிந்தித்தேன்.தமிழ் மொழி மற்ற இந்திய மொழிகளைப் போன்ற ஒரு மொழியல்ல; இந்தி என்ற செயற்கையான மொழி ஒன்றை செயற்கையாக பிரபலப்படுத்தி ஃபிரெஞ்ச், ஆங்கிலம், ரஷ்யன் போன்ற மொழிகளுக்கு இணையாக யுனஸ்கோ உள்ளிட்ட அளவில் மதிப்புக் கொடுத்து உலகம் முழுக்க உள்ள பல பல்கலைக்கழகங்களின் மூலம் இன்றைக்கு பரப்பப்படுகிறது. இதற்காக மத்திய அரசு கோடிக் கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. என்னுடைய பேராசிரியர் பணி என்பது இந்தியத் தூதரகத்துடன்தான் இணைக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியப் பிராந்திய மொழிப் பேராசிரியர்கள் எல்லோருக்கும் இந்தியத் தூதரகம்தான் மாதச் சம்பளத்தினை வழங்கும். உலகம் முழுக்க உள்ள 110 இந்தியத்தூதரகங்களில் இந்தி மொழியைப் பரப்புவதற்கென்றே கலாச்சார செயலாளர் என்ற பதவி ஒன்று இருக்கிறது. அந்தப் பதவியில் இருக்கின்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரிகளின் தலையாய வேலைகளில் ஒன்று இந்தி மொழியைப் பரப்புவது என்பது. இந்தி எதிர்ப்பு என்பதெல்லாம் இனித் தேவையில்லை. அதற்கான காலகட்டங்களெல்லாம் போய்விட்டது என்று பல அரசியல் தலைவர்கள் சமீபகாலமாக தமிழ் நாட்டில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நினைப்புகளெல்லாம் தவறானவை. இந்தி மொழி ராஜஸ்தான் என்ற மொழியைக் கொன்று கொண்டிருக்கிறது. ‘மைதிலி’ என்ற மொழியின் இருப்பையே இன்றைக்கு கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. ஆக இந்தி மொழி என்பது வருங்காலங்களில் பிராந்திய மொழிகளை பயங்கரமாக கொல்லப் போகிறது. அதனால் இந்தி எதிர்ப்பு என்பது ஒவ்வொரு மொழியிலும் இருந்தால் தான் அந்தந்த மொழிகளும், வட்டார கலாச்சாரங்களும் உயிர் பெற முடியும் என்பது எனக்குப் புரிய வந்தது. போலந்து நாட்டில் முப்பது ஆண்டுகளாக தமிழ் படிக்கும் பாரம்பர்யம் இருக்கிறது. இதனைத் தொடங்கி வைத்தவர் இராமசுந்தரம். இரண்டாம் உலகப்போரின் போது முதன்முதலாக குண்டு போடப்பட்ட நகரம் வார்ஸா நகரம். புதிய உலகத்தினுடைய ஒரு வரலாறு படைக்கப்பட்ட ஒரு இடத்தில் நான் இருக்கிறேன். வார்ஸா பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற புத்தி ஜீவிகள் எல்லோரும் கம்யூனிஸ வீழ்ச்சியை எப்படிப் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டபோது நான் அதிர்ந்துபோனேன். ஏனென்றால் நான் தென் இந்தியாவைப் பொறுத்தளவில் குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தளவில் மார்க்ஸிய மரபின் வழியிலிருந்து பல விஷயங்களைப் புரிந்து கொண்டு உருவான ஒரு புத்திஜீவி. மார்க்ஸியத்தின் மூலமாகத்தான் உலகத்தைப் பார்க்கிறேன். நான் வார்ஸாவுக்குச் சென்றபோது மார்க்ஸியம் என்ன ஆயிற்று என்ற கேள்வியோடுதான் அங்கு சென்றேன்.முதன் முதலாக நான் வார்ஸா கடைத்தெருவிற்குத் சென்றபோது என் அருகாமையில் நின்ற காரைப் பார்த்து ஒருவன் ‘அதை பார்க்காதே. அது கம்யூனிஸ காலகட்டத்தினுடையது. நன்றாக இருக்காது. ஆகவே பார்க்காதே?!’ என்றான். அதே போல ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நான் காரில் சென்றபோது அந்த வண்டியின் டிரைவர் வலது பக்கம் கை காட்டி ‘‘அதோ தெரிகிறதே பார் ஒரு கட்டிடம். அது ஒரு காலத்தில் எங்களை பயங்கரமாக பயமுறுத்திய கட்டடம்’’ என்றான். என்ன கட்டடம் என்று நான் கேட்டதற்கு ‘‘கம்யூனிஸ கட்சியின் தலைமைச் செயலகம்’’ என்றான். அதே போல வார்ஸாவில் மிக பிரமாண்டமான ஒரு டவர் இருக்கிறது. அந்தப் பக்கம் செல்லும் எல்லோருமே அதைப் பார்த்து ‘‘இதை நாங்கள் வெறுக்கிறோம்’’ என்பார்கள். ஏன்? என்று நான் விசாரித்த போது ‘‘ஸ்டாலின் கொடுத்த கொடை இது. அந்த ஆள் எங்களுக்கு கொடை வழங்குகிறானாம்?!’’ என்று கிண்டல் செய்தார்கள். போர்டிங் ஸ்கூல்களில் நமது பிள்ளைகளை கொண்டு போய்ச் சேர்த்தால் நமது பிள்ளைகள் அந்தப் பள்ளியை வெறுப்பார்கள். அங்குள்ள ஃபாதர்கள் பிள்ளைகளை நடத்துகின்ற முறையைப் பார்த்து குழந்தைகள் அப்படி நினைக்கும். அது போல ஒரு ஆட்சி போலந்தில் நடந்து இருக்கிறது. பல்கலைக் கழகங்களிலெல்லாம் ஒற்றர்கள் இருப்பார்களாம். யாரை எப்போது கைது செய்வார்கள் என்பதே தெரியாதாம். இந்த மாதிரியான ஒரு கம்யூனிஸ ஆட்சிதான் ஐரோப்பாவில் இருந்திருக்கிறது. இது ஒரு வரலாற்று ரீதியிலான திருப்பம். இதற்கு பின்புலமாக அவர்களுக்கு மதத்தை நோக்கிய ஓர் ஈர்ப்பு இருந்திருக்கிறது. இதையெல்லாம் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ என்ற என்னுடைய நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். கிழக்கத்திய கலாச்சாரத்தை நோக்கி அவர்களுக்கு எப்படி ஓர் ஈர்ப்பு வருகிறது என்பதை நாவலில் சொல்லி இருக்கிறேன். வார்ஸா பல்கலைக்கழகத்தில் எனக்குச் சொல்லப்பட்ட பல நிஜக் கதைகளையெல்லாம் கற்பனையான பாத்திரங்களின் மூலமாக இங்கு கொண்டு வந்திருக்கிறேன்.இந்த நாவலை வடிவத்திலேயும், உள்ளடக்கத்திலேயும் முற்றிலும் புதிய வகையான வாசகர்களை மையமாக வைத்து எழுதி இருக்கிறேன். இதை மொழிபெயர்த்து போலீஷ்காரர்களுக்கு கொடுத்தால் இதை அவர்கள் எங்களுடைய நாவல் என்று சொல்ல வேண்டும். அதே நேரத்தில் நமது வாசகர்களின் வாசக ஈர்ப்பும் குறையக் கூடாது. இந்தப் புள்ளியை மையமாக வைத்து இதை நான் எழுதி இருக்கிறேன்.
தீராநதி: நீங்கள் குறிப்பிட்ட ஹாருக்கி மொரக்காமி என்ற எழுத்தாளர் ஜப்பானிய கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்து தற்சமயம் அமெரிக்காவில் வாழ்ந்து வருபவர். அவர் அங்கிருந்துகொண்டு சர்வதேச பின்புலத்தோடு ஜப்பானிய கலாச்சாரத்தை முன்வைக்கிறார். ஆனால் இந்தியாவிலிருந்து அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்குக் குடியேறிய நமது எழுத்தாளர்கள் அங்கு சென்றும் இந்தியாவில் தாங்கள் கழித்த பால்ய பருவத்தையே ழிஷீstணீறீரீவீணீ மனநிலையில் நின்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ் எழுத்துக்களில் ழிஷீstணீறீரீவீணீ வின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த ழிஷீstணீறீரீவீணீ வை தாண்டவே முடியாதா? ஏன் இந்த விபத்து நிகழ்கிறது?தமிழவன்: இது ஒரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வியை இரண்டு விதங்களில் நான் பார்க்கிறேன். ஹாருக்கி மொரக்காமியை பொறுத்த அளவில் அவர் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் நாவல் வரை எல்லா எழுத்துக்களையும் நான் படித்துவிட்டேன். அதே போல போர்ஹெஸின் சகல எழுத்துக்களையும் நான் வாசித்துவிட்டேன். மொரக்காமி மதுவைக் கலந்து விற்பனை செய்கின்ற ஒரு சின்ன கடையை நடத்திக் கொண்டிருந்தவர். அவர் மெத்தப் படித்த படிப்பாளியோ அல்லது பெரிய எழுத்தாள குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவரோ இல்லை. திடீரென்றுதான் அவர் நாவல் எழுத ஆரம்பித்து உலகப் புகழ் பெற்றார். அதற்கு பிற்பாடு பெரிய செல்வந்தராகி அமெரிக்காவில் இப்போதுதான் குடியேறி இருக்கிறார் போலுள்ளது. அதற்கப்புறம்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவரது எழுத்துக்கள் அமெரிக்காவிலும் புகழடைந்தன.இதற்கு என்ன காரணம் என்றால் அவர் நவீன ஜப்பானைத்தான் எழுதுகிறார். சிறுவயதிலிருந்தே பழைய கடைகளில் அவர் வாசித்திருந்த அமெரிக்க நாவல்களின் தாக்கத்தினால் அவரது எழுத்துக்கள் இயல்பாகவே உலககளாவிய வடிவத்தில் வெளிப்பட்டன. ஐரோப்பிய கலாச்சாரத்தைப் போல ஒரு ஜப்பானிய கலாச்சாரம் இன்று வளர்ந்து கொண்டு வருகிறது பாருங்கள், அந்த நவீன வாழ்க்கையைத்தான் அவர் தனது எழுத்தின் மையமாக எடுத்துக் கொள்கிறார். மரபார்ந்த ஜப்பானிய கலாச்சாரத்தை எடுத்துக் கொள்ளும் மொரக்காமி அனைத்துலக விஷயங்களையும் தனது நாவல்களில் சேர்த்துக் கொள்கிறார்.அடுத்து நீங்கள் கேட்ட ழிஷீstணீறீரீவீணீ விஷயத்திற்கு வருவோம்?! வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்களை மொத்தமாகச் சேர்த்து ‘ஈழத்தமிழ்க் கவிதைகள்’ என்ற முழுதொகுப்பை நான் கொண்டு வந்திருக்கிறேன். இதை கன்னடத்தில் மொழிபெயர்த்து கொண்டு வந்தேன். அவர்களின் போராட்டம் பிற மொழிக்காரர்களுக்கும் தெரியவர வேண்டும் என்பதற்காக இதைச் செய்தேன். அதில் எல்லா கவிதைகளும் இந்த ழிஷீstணீறீரீவீணீ தன்மையைச் சேர்ந்ததாகவே இருந்தன. நமது வீட்டை விட்டு ரொம்பக்காலம் வெளியில் சென்றவுடன் நம்மை இரண்டுவிதமான மனோபாவங்கள் விரட்டுகின்றன. ஒன்று_நமது சிறு பருவமும், நாம் பிறந்து வளர்ந்த ஊரின் நினைவுகளும். அதுதான் நம்மை ழிஷீstணீறீரீவீணீ விற்குள் இழுத்துக் கொண்டு வந்து தள்ளுகிறது.இரண்டு _ தாய் வழிபாடு என்கின்ற ஒரு மரபு நமக்கு இருக்கிறது இல்லையா அதுதான் நம்மை தொடர்ந்து ழிஷீstணீறீரீவீணீவிற்குள் ஆட்படுத்துகிறது. தாய்வழிபாடு என்று வேறு தேசத்து எழுத்தாளர்களும் எழுதினாலும் அவர்கள் ழிஷீstணீறீரீவீணீ என்கின்ற அம்சத்தில் அப்படியே விழுந்துவிடுவதில்லை. அதை தாண்டிச் செல்கிறார்கள். இது தமிழ் மற்றும் இந்திய எழுத்தாளர்களுக்குள் நடப்பதில்லை. நமது எழுத்துக்கள் வட்டார எழுத்துக்களாக சுருங்கிப் போவதற்கான காரணம் இதுதான். இது ஒரு கலாச்சாரப் பிரச்னை என்று எனக்குத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தளவில் ஒரு எல்லைக்கு மேல் சென்று என்ன சொல்வேன் என்றால், நாவல் இலக்கியம் என்பது மேற்கைப் பார்த்து இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் வந்தது. அப்படி உருவான நாவல்கள் இந்தியத் தன்மைக்கு ஏற்ப மறு வடிவம் கொண்டது. பாருங்கள் அங்கேயே பிரச்னை ஆரம்பித்துவிட்டது.நமது இந்தியத் தன்மைக்கு ஏற்ப ஜோக்ஸ் அது இது என்று எல்லாவற்றையும் சேர்த்து நம் வாசகர்களைக் கவரும்படியான ஒரு வடிவத்தில் நாவலை முதன்முதலில் கொடுத்தார்கள். ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நாவலில் இதற்கான எல்லா அம்சங்களின் வேர்களையும் நீங்கள் தேடிப்பிடிக்கலாம். நமது வாசகர்களைக் கவரும்படியாக இருக்க வேண்டுமென்றால் நமது பிரச்னைகளைக் கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்து நாவலைச் செய்தார்கள். நமது பிரச்னைகளை எழுதும் போது நாவல் வடிவத்தில் ஏதோ ஒரு அனைத்துலக தன்மை குறைபட்டுப் போய்விட்டது. ஆக, நாம் எழுதுவது எல்லாம் நம் நாவல்களே ஒழிய அனைத்துலக நாவல்கள் அல்ல; ஒரு விதத்தில் நாவல் அல்லாத நாவல்களை நாம் எழுதிக் கொண்டிருக்கிறோமா? என்ற கேள்வியும் இதற்குள் வருகிறது.
தீராநதி : அனைத்துலக நாவலுக்கான தன்மையை நோக்கி நாம் நகர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் இன்றைக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அந்த மாதிரியான அம்சம் என்பது ஆரோக்கியமானதொன்று. ஆனால் அலெக்ஸ் ஹேலி, சினுவா ஆச்சிப்பி போன்றவர்கள் அவர்களின் மரபார்ந்த விஷயங்களை, கலாச்சாரங்களை, பிரச்னைகளை ஒரு நாவலாகச் சொல்லும் போதுகூட அதில் அனைத்துலக வாசிப்புத்தன்மை என்பது இருக்கிறது. இந்தச் சிக்கலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழவன் : இந்தச் சிக்கலுக்கு முக்கியமான காரணம் தமிழ் நாவல்களுக்கு ‘எடிட்டிங்’ என்பது இல்லாமல் இருப்பதுதான் என்று நினைக்கிறேன். இதுவரை எந்தப் பதிப்பகமும் ஒரு நாவலை ‘எடிட்டிங்’ செய்து முறையாக வெளியிட்டதாக தகவலே இல்லை. ‘‘லிட்ரரி எடிட்டிங்’’ என்பது நமது கலாச்சாரத்திலேயே இல்லை. வெளிநாடுகளில் உள்ள பதிப்பகங்கள் ஒரு நாவலை ‘எடிட்டிங்’ செய்து வெளியிடுவதில் அக்கறை காட்டுகின்றன. அப்படி எடிட்டிங் செய்யக் கொடுக்கும் போது எடிட்டர் என்பவர் இதுவெல்லாம் அனைத்துலக வாசகனுக்கு வேண்டாதது என்று முடிவு செய்வார். இந்த மாதிரி நாமும் நமது நாவலை ‘இன்டர்நேஷ்னல் எடிட்டிங்’கிற்கு உட்படுத்தினாலே அது நாவலுக்கு இன்னொரு வடிவத்தைக் கொடுக்கும். சினுவா ஆச்சிப்பியின் நாவலில் செய்திருப்பது இதைத்தான். ஹாருக்கி மொரக்காமியின் பெரிய நாவலொன்று சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டு வரும்போது பாதிக்குமேல் வெட்டித் தள்ளிவிட்டார்கள். ஜெர்மன் மொழியில் அது மொழி பெயர்க்கப்பட்டு வெளியான போது தொலைக்காட்சிகளில் பெரிய விவாதத்தைக் கிளப்பியது. அப்போது அவர்கள் சொன்னார்கள் ‘‘இது அசலான ஜப்பானிய நாவல் அல்ல; நமக்காக மறு உருவாக்கம் செய்யப்பட்ட நாவல்’’ என்று. தமிழ் நாவலில் ஏன் ‘எடிட்டிங்’ என்பதே இல்லை என்றால் இவை எல்லாம் தமிழனுக்காக எழுதப்படுகின்ற நாவல்கள். மனதிற்குள் நான் ராஜராஜசோழன் என்றோ, பாண்டியன் என்றோ, சங்ககாலத்துப் பெருமை இது என்றோ பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் இவை உங்களுக்குப் பயன்படாது. இந்தியாவிற்குள் நாம் இருக்கின்றவரை நாம் அடிமைகள்தான். நமது அடிமைத் தனத்தைப் புரிந்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.சமீபத்தில் கலைஞர் ‘ராமர் பாலம்’ பிரச்னை தொடர்பாக உண்ணாவிரதம் இருந்தபோது அனைத்திந்திய மீடியாக்கள் முழுவதும் கலைஞருக்கு எதிரான கருத்துக்கள் வெளியிட்டன. ஏதோ தமிழ்நாட்டில் பயங்கரமான பிரச்னை ஒன்று நடந்துவிட்டதைப் போல சித்திரித்தார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் தமிழர்கள் தங்களுடைய அனைத்துலக அடையாளத்தை மறு உருவாக்கம் செய்து பார்க்கின்ற ஓர் அறிவுப்பூர்வமான அரசியல் இங்கு வராமல் போனதால்தான். தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதிகளும் மனிதவள மேம்பாட்டு துறைக்கான அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற மாட்டார்கள். கலாச்சாரத் துறை அமைச்சராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார்கள். அதே போல என்.பி.டி.னுடைய தலைவராக ஒரு தமிழன் இருக்க வேண்டும் என்று ஒருவர் கூட ஆசைப்பட்டதில்லை. கன்னட மொழிக்காரர்கள் அந்தத் துறை தனக்குத்தான் வேண்டுமென்று சண்டை போட்டு வாங்குகிறார்கள். சாகித்ய அகாடமியின் தலைவராக வரவேண்டும் என்று இந்தி மொழிக்காரனும், பெங்காலி மொழிக்காரனும், கன்னட மொழிக்காரனும்தான் சண்டைபோட்டுக் கொண்டு இருக்கிறானே ஒழிய, தமிழனுக்கு அந்த மாதிரி ஒரு பதவி இருக்கிறதென்றே தெரியாது.கலாச்சாரம் என்பது உங்களுடைய வரலாற்றை எப்படித் தீர்மானிக்கிறது என்பதை கட்டாயம் நீங்கள் புரிந்து கொண்டே ஆக வேண்டும். இன்றைக்கு படு வேகமாக மாறிவரும் நவநாகரிகமான விஷயமாகட்டும் அல்லது வேறு எந்தவிதமான விஷயமாகட்டும் அதைப் புரிந்து கொள்வதற்கு கலாச்சார புரிதல் என்பது மிக மிக முக்கியமானது. ஒரு மத்திய மந்திரியாக இருப்பவரைவிட நாவல் எழுதுகின்ற ஒருவர் தமிழனுக்கு முக்கியமானவர் என்பேன். அரசியல்வாதி என்பவர் இரண்டாம் பட்சம்தான். கலாச்சாரவாதி என்பவர் பெரிய ஆளுமை. ஆனால் தமிழ்நாட்டில் குட்டி நடிகர்களும் நடிகைகளும்தான் கலாச்சாரவாதிகளாக முன் நிறுத்தப்படுகிறார்கள். இதுவெல்லாம் துக்கமான விஷயமில்லாமல் வேறென்ன? நாவல் என்கின்ற ஒன்றை எடுத்துக் கொண்டால் அரசியலுக்குப் போகவேண்டும். வரலாற்றுக்குப் போகவேண்டும். அரசியலும் வரலாறும் அரசியல்வாதியிடம் இல்லை நாவலாசிரியனிடம் தான் உள்ளன. அதனால்தான் சொல்கிறேன், அரசியல்வாதியை விட நாவலாசிரியன் முக்கியமானவன். இப்படியெல்லாம் ஒரு விவாதத்தை நாம் முன்னெடுத்துக் கொண்டுபோக வேண்டும்.
தீராநதி: இலக்கியம் என்பது கலாச்சாரத்தின் செய்தியாகவும் அதே சமயம் அதனுடைய கூச்சலாகவும் இருக்கிறது. அது கலாச்சாரத்தின் தலைநகரமாகவும் அதே சமயம் அது சீர்குலைவுக்கான ஆற்றலாகவும் கூட இருக்கிறது. அது வாசிப்பைக் கோருவதும், அர்த்தம் தொடர்பான பிரச்னைகளில் வாசகர்களை ஈடுபடுத்துவதுமான ஒரு எழுத்துமுறையாகவே உள்ளது என்று ஜானதன் கல்லர் குறிப்பிடுகிறார். உங்களின் தத்துவ பின்புலத்திலிருந்து ஒரு படைப்புக்கு கலாச்சாரம் முக்கியமானதா? அழகியல் முக்கியமானதா? என்றால் நீங்கள் இதற்கு முன்னால் கலாச்சாரம்தான் முக்கியமானது என்ற முடிவை எட்டி இருக்கிறீர்கள்! அழகியலை விட கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை எப்படி முக்கியமானதாக நீங்கள் நிறுவுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?
தமிழவன் : ரொம்ப ஆழமான ஒரு பிரச்னை இது. இதை நீங்கள் சரியாக கேட்டிருக்கிறீர்கள். கலாச்சாரத்திற்கும் அரசியலுக்கும் இடையில் ஓர் இடைவெளி இருந்தாலும், ஒரு சில குறிப்பிட்ட கட்டங்களில் இரண்டிற்கும் முரண்பாடு இருந்தாலும் இரண்டிற்கும் ஒரு தொடர்பு என்பது எப்போதும் உண்டு. உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். தி.மு.க. வின் காலகட்டத்தில்தான் கலாச்சாரத்திற்கும் அழகியலுக்குமான ஒரு தொடர்பு இல்லாமல் போனது. தி.மு.க.வின் அரசியல் காலகட்டத்தில் இந்த இரண்டிற்குமான தொடர்பு இல்லாமல் போனதற்கான வரலாற்றுக் காரணம் என்னவென்று பார்த்தால் இந்த அழகியலை முன்வைத்தவர்கள் பிராமணர்களாக இருந்தார்கள் என்பதுதான். மணிக்கொடி, எழுத்து, கசடதபற போன்ற பத்திரிகைகள் அழகியலை வலுவாக முன்வைத்தன. தி.மு.க.வைப் போலவே இடதுசாரிகளும் அழகியலுக்கு எதிரானவராக தங்களை முன் நிறுத்திக் கொண்டார்கள். இந்த காலகட்டத்தில்தான். க.நா.சு.வை நான் ஆதரிக்கிறேன். நான் க.நா.சு.வை ஆதரித்தவுடன் தி.மு.க.வினரும், இடதுசாரிகளும் அவரை ஒரு பிராமணர் என்று சொல்லி ஒரு போர்வையைப் போட்டு அமுக்கப் பார்த்தார்கள். தமிழ்க் கலாச்சாரத்திற்குள் வரலாற்று ரீதியாக தொடர்ந்து நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்துப் பார்த்தீர்களென்றால் அழகியலை எல்லோருமே கொலை செய்திருக்கிறார்கள். ‘எழுத்தில்’ தொடங்கிய இந்த சிறுபத்திரிகை மரபுதான் தொடர்ந்து அழகியல் பக்கம் நின்று கொண்டிருந்தது. சென்னையில் முற்போக்கு எழுத்தாளர்களின் தேர்தல் நடந்தபோது, க.நா.சு. அவர்கள் எதிரி அணியில் நின்றார் என்று சொல்லி அவரை ஒரு பாஸிஸ்ட்டாக சித்திரித்தார்கள். அழகியல்வாதிகள் எல்லாம் இடதுசாரிகளுக்கு எதிரானவர்கள் என்ற ஒரு நிலைப்பாட்டை க.நா.சு.வே எடுத்திருக்கிறார். எனவே இந்த விஷயத்தில் க.நா.சு.வும் விமர்சிக்கப்பட வேண்டியவர்தான் என்பதில் ஐயமில்லை. வரலாற்றின் காலகட்டத்தில் க.நா.சு எதிரிகளின் பக்கமாக சாய்ந்துவிட்டார். ஆனால் கடைசி கட்டத்தில் இந்த நிலைப்பாட்டை மாற்றினார்ஆனால் க.நா.சு.வின் இன்னொரு முகமான அழகியல் முகத்தை தமிழர்கள் பாதுகாக்க வேண்டும். அதற்காக நாம் அவருக்கு விழா எடுக்க வேண்டும். இதை நான் ரொம்ப முக்கியமான செய்தியாகச் சொல்ல விரும்புகிறேன். 1980_களில் வெளியான ‘படிகள்’ போன்ற பத்திரிகைகளும் வேறு சில நண்பர்களும் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தோம். ஆக பிராமணர்களின் கூட்டத்திலிருந்து அழகியலை நாங்கள் மீட்டு வெளியில் கொண்டு வந்தோம். இதற்கு பிராமணர்களின் மத்தியிலும் பல எதிர்ப்புகள் இருந்தன.அழகியல் என்பது பிராமணர்களுக்கு உரியது. அதனால் அதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்ற பேச்சுகள் எல்லாம் அர்த்தமற்றது. அப்படி யாருக்கும் எழுதி வைக்கப்பட்ட ஒன்றல்ல அழகியல் என்பது. அழகியலையும் கலாச்சாரத்தையும் இணைக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. நீங்கள் மேற்கோள் காட்டிய ஜானதன் கல்லர் விஷயத்திற்குள் வருவோம். அழகியலுக்கும் கலாச்சாரத்திற்கும் சில வேளைகளில் முரண்பாடு வரும். ஆனால் இரண்டுமே இணைந்து போகக்கூடிய கூறுகள் இன்றைக்கு வந்திருக்கின்றன. பின்நவீனத்துவம் என்று சொல்லக் கூடிய புதிய கலாச்சாரம் இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறது. குறிப்பாக இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கலாச்சாரமும் அழகியலும் ஒன்றாக இணைகின்றன. இணைந்தால்தான் சரியான ஓர் உலகப்பார்வை உங்களுக்குக் கிடைக்கும்.
தீராநதி : அப்போது நீங்கள் உங்களின் பழைய நிலைப்பாட்டிலிருந்து மாறி வந்து இருக்கிறீர்கள் இல்லையா?
தமிழவன் : உங்களின் பார்வை சரியானதுதான். ஆரம்பகட்டத்தில் நான் வெறும் கலாச்சாரத்தின் மட்டத்திலேயே நின்றால் போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கலாச்சாரத்திற்குள் அழகியல் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஏனென்றால் நானும் எனது கருத்துக்களை இடதுசாரிகளிடமிருந்து கற்றுக் கொண்டவன் என்பதால் இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்தேன்.
தீராநதி : நாம் இதற்கு முன் நாவலைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். ரொலாண்ட் பார்த் தனது ‘பிரதி தரும் இன்பம் (ஜிலீமீ ஜீறீமீணீsuக்ஷீமீ ஷீயீ tலீமீ tமீஜ்t) என்ற கட்டுரையில் கற்பனையில் உருவாக்கப்பட்ட கதா பாத்திரங்களுக்காக ஆசிரியன் கண்ணீர் வடிப்பதும், அதைப் படித்துவிட்டு வாசகர்களும் கண் கலங்குவதும் ஒருவித தற்காலிக மனச்சிதைவு நோய் என்கிறார். நமது மொழியில் வருகின்ற பல நாவல்கள் இந்தத் தன்மையோடுதானே வெளிவருகின்றன?
தமிழவன் : இந்தக் கேள்வியும் ஒரு ஆழமான விஷயத்தை எழுப்பக்கூடிய ஒன்றுதான். இலக்கியத்திற்கு என்ன பயன்பாடு இருக்கிறது? இலக்கியத்திற்கு நவீன வாழ்க்கையில் என்ன இடம் இருக்கிறது? இப்படி பிரச்னைகள் சார்ந்த விஷயம் இது. உங்களை ஏதோ ஆழ்ந்த கனவுக்குள்ளாக ஆழ்த்துவது, ஏதோ ஒரு மாய இன்பத்தை வழங்குவது என்று இலக்கியத்திற்கு ஒரு தன்மை இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் பின்நவீனத்துவத்திற்கு முக்கிய இடமிருக்கிறது என்று ஏன் சொல்கிறோம் என்றால் இந்தக் குறைகளையெல்லாம் பின் நவீனத்துவம் தான் கண்டுபிடித்திருக்கிறது. ‘சுய பிரதிபலிப்பு’ என்ற ஒரு கருத்தாக்கம் பின் நவீனத்துவத்தில் இப்போது வந்திருக்கிறது. அது என்னவென்றால் நீங்கள் நாவல் எழுதும்போது ‘இது நாவல்’ என்று சொல்லிக் கொண்டே போக வேண்டும். எம்.ஜி.ஆரின் படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு ஓÊட்டுப்போடப் போகிற மனோபாவம்தான் இலக்கியத்திற்குள்ளும் நடக்கிறது.இலக்கியத்திற்குள் இருக்கின்ற அழுகுணித் தன்மையை எப்போதுமே பரிசோதிக்கவும் அதிலிருந்து மனிதர்களை பாது காக்கவும் கூடியதுதான் இலக்கிய விமர்சனம். அந்தப் பாதுகாப்பும் விமர்சனமும் நமக்குத் தேவையாகிறது. இந்த மாதிரியான கும்பல் இலக்கியத்திற்கும் நல்ல இலக்கியத்திற்குமான வேறுபாட்டை க.நா.சு.தான் முதலில் சொன்னார். அதற்காக அவர் ‘‘நான் சொல்கின்ற பட்டியலை மட்டுமே படி’’ என்றார். அப்படி ஒரு பட்டியலை அவர் வெளியிட்டதுகூட நல்ல காரியம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்த அளவில் நீங்கள் எழுப்பிய இந்தப் பிரச்னையை ரொம்ப ஆழமான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால் தமிழர்கள் எல்லோரும் உணர்ச்சி மயமானவர்கள் என்று அரசியல்வாதிகளிலிருந்து சாதாரண ஆட்கள் முதற்கொண்டு சொல்கிறார்கள். உணர்ச்சிவசமான இந்த மனிதக் கூட்டத்திற்கு இந்த விவாதம் ரொம்ப முக்கியமானதாக நாம் எடுத்துக் கொண்டு சர்ச்சித்து இருக்க வேண்டும். ஆழமாக விவாதித்திருக்க வேண்டும். எனவே ‘பிரதி தரும் இந்த இன்பம்’ இருக்கிறதல்லவா இது பல கொடூரங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். ரொலாண்ட் பார்த் சொல்வது உண்மைதான். என்னுடைய நாவல்களில் வாசகனை நோக்கி கேட்கக்கூடிய ஒரு குரலைக் கொண்டு வருவதை முக்கியமான விஷயமாக முயற்சித்திருக்கிறேன்.
தீராநதி : உங்களுடைய பிரதிகளை வாசிக்கும் போது ஒரு வாசகன் என்பவன் இவ்வளவு முயற்சிகளை இவர் மேற்கொண்டிருக்கிறார் என்ற மைய இழையைப் பிடிக்க முடியும். இதை கட்டமைப்பதற்கான சகல வேலைகளையும் நுட்பமாகச் செய்திருக்கிறீர்கள். ‘‘ஜி.கே. எழுதிய மர்ம நாவலில்’ பௌத்தம் பற்றிய எதிர் கருத்துக்களை இலங்கைத் தமிழன்தான் எழுதுவதாக சொல்லப்படுகிறது. மைய இழையாக, உட்பொருளாக, ஆழமாக நீங்கள் வைத்த பிரதியை அதே ஆழத்தோடு கூடிய ஒரு வாசிப்பு இங்கு நடந்திருக்கிறதா?
தமிழவன் : ஒரு வகையில் தோல்வியுற்ற விமர்சகன் என்று என்னை நான் சொல்லிக்கொள்கிறேன். பல காலங்கள் கழித்து இப்போதுதான் தமிழ்த்துறைத் தலைவராக வந்திருக்கிறேன். நான் என்றைக்கும் தமிழ்த்துறை பக்கம் தலைகாட்டியவனே கிடையாது. என்னுடன் பணிபுரிகின்றவர்கள், நண்பர்கள் யாருமே என்னுடைய எழுத்தைப் படித்தவர்கள் கிடையாது. அனந்தமூர்த்தி போன்றவர்கள் என்னிடம் ‘‘உங்களுடைய எழுத்தையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்கிறார்களா? ஏதாவது அங்கீகரிக்கிறார்களா?’’ என்று கேட்பார்கள். அதற்கு, அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்று பதில் சொல்லி இருக்கிறேன். இந்த மாதிரியான புதிய குரல்களை ஏதோ ஒரு வகையில் இவர்கள் அங்கீகரிக்கவில்லை. நானும் சங்க இலக்கியத்தைப் பற்றி எழுதி இருக்கிறேன். நச்சினார்க்கினியரைப் பற்றி எழுதி இருக்கிறேன். ஆனால் அந்த எழுத்தில் ஒரு மாறுபட்ட தன்மை இருக்கிறது. யாருமே அதை எடுத்துக் கொண்டு பிரச்னைக்கு உட்படுத்தி அறிவுபூர்வமாக விவாதித்ததில்லை. ஒரு சிலர் நான் ‘திருப்பாவை’ பற்றி எழுதியதைப் படித்துவிட்டு ‘இவன் அபாயகரமான மனிதன்’ என்று சங்கேதமாக பேசி அக்கருத்தைப் பரப்பி இருக்கிறார்கள். வைஷ்ணவ மதத்தைச் சார்ந்தவர்கள் இந்தக் காரியத்தைச் செய்தார்கள்.
தீராநதி : அமைப்பியல் என்ற தத்துவ பின்புலத்திலிருந்து தொடங்கிய உங்களின் சிந்தனை படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு பின் நவீனத்துவம் வரைக்கும் வந்து சேர்ந்திருக்கிறது. தமிழவன் என்றாலே ஞானக் கூத்தன் கவிதைகளை முதலில் விமர்சித்து பிறகு அந்நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து ஆதரித்து எழுதியதுதான் நினைவுக்கு வருகிறது. தற்கால தமிழ்க் கவிதைகளின் தொடர் வாசகனாகவும், விமர்சகனாகவும் இருந்து வருகிறீர்கள். பின்நவீனத்துவ கோட்பாடு கவிதைகளை நிராகரிக்கின்றது. கவிதை என்பது குறியீடுகளாலும், ஏகப்பட்ட அர்த்தங்களின் சுமையாலும் ஆனது. மரபார்ந்த கவிதைகள் வித்தியாசமான மொழிப் பிரயோகத்தால் ஆனவை என்றால் நவீன கவிதையோ மொழியை வன்முறையாக்கிக் கொண்டுதான் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கிறது என்று ரொலாண்ட் பார்த் சொல்கிறார். கூடவே பொதுப்படையாகப் பார்த்தால் கவிதை என்பது பொருட்களின் அந்நியப்படுத்தப்படாத அர்த்தங்களைத் தேடிக் கொண்டிருப்பதே என்றும் எழுதுகிறார். நீங்கள் பின் நவீன கருத்தாக்கத்தைக் கொண்டு கவிதை என்ற வடிவத்தை நிராகரிக்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா?
தமிழவன் : சமீப காலமாக கவிதைகளைப் பற்றி எழுதுவதை தவிர்த்துக் கொண்டு வருகிறேன். புதுக் கவிதைகள் தோன்றிய காலத்திலிருந்து தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற வகையில் எங்கு புதுக் கவிதைகள் பற்றி எழுதுகின்ற வாய்ப்புக் கிடைத்தாலும் உடனடியாக அதைப் பயன்படுத்தி எழுதிக் கொண்டேதான் இருந்திருக்கிறேன். வார்ஸாவுக்குச் சென்ற நான்கு ஆண்டுகளில் தமிழில் நடந்திருக்கும் பெரிய மாற்றத்தை நான் புரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டேன். சமீப காலமாக, குறிப்பாக நான்கு ஆண்டுகளாக பெண்கள் தமிழ்க் கவிதைகளில் செய்திருக்கின்ற மாற்றத்தை முக்கியமானதொன்றாக நான் பார்க்கிறேன். ஆழமாக இதைப் புரிந்து கொண்டு இவற்றைப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
தீராநதி : ரொலாண்ட் பார்த் சொல்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறேன்?
தமிழவன்: தமிழில் இதுவரை இல்லாத ஒரு பெரிய மாற்றம் கவிதைகளில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் பல மொழிகளிள் யாப்பைத் துறந்த சமயத்திலும்கூட விடாமல் பிடித்துக் கொண்டிருந்த தமிழ் மொழியில் இந்த மாற்றம் அதிரடியானது. புதுக்கவிதைக்குள் ஏதோ ஒரு ரகசியம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ரொலாண்ட் பார்த்துக்கு வேண்டுமென்றால் ஃபிரெஞ்ச் மொழிகளில் நடக்கின்ற ரகசியங்களை பிடிக்க முடியாமல் போய் இருக்கலாம். ஃபிரெஞ்ச்சை விட ஆழ்ந்த பாரம்பரியம் கொண்ட தமிழ் மொழியில் பரிச்சயம் உள்ள எனக்கு இப்போது தமிழில் நடந்து கொண்டிருக்கிறதில் ஏதோ ஒரு தொடர்ச்சி இருக்கிறது என்றே படுகிறது. 1980களில் இருந்த இலக்கிய விமர்சனத்தை இன்றைக்கு எல்லோரும் அழித்து விட்டார்கள். அன்று அடிதடி, தகராறுகள் எல்லாம் நடக்கும். ஆனால் அதோடு கூடிய தத்துவ விவாதமும் இருந்துகொண்டேயும் இருக்கும். சண்டை போட்டுதான் பல விஷயத்தை நாம் கற்றுக் கொள்வோம். இதைத்தான் சமீபத்தில் இப்போது எம்.எல்.ஏ.யாக இருக்கும் ரவிக்குமாரிடம் பேசிக் கொண்டிருந்த போது வலியுறுத்தினார்.
தீராநதி : தமிழில் சமகாலமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் கைனோகிரிடிசிஸம் (ரீஹ்ஸீஷீநீக்ஷீவீtவீநீவீsனீ) என்பது செழுமையாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். (கைனோ கிரிடிசிஸம் என்பது பெண் எழுத்தாளர்களிடத்திலும் பெண்களுடைய அனுபவத்தைச் சித்திரிப்பதிலும் அக்கறை கொண்ட பெண்ணிய விமர்சனமாகும்) ஆனால் இங்கு அந்தப் பெயர்களில் பெண்ணிய எழுத்துக்கள் அணுகப்படுவதில்லை...
தமிழவன் : கைனோகிரிடிசிஸம் என்பதெல்லாம் இங்கே வராது. அமைப்பியலை நாங்கள் இங்கு கொண்டு வந்தபோது கூட தமிழுக்கு ஏற்ற தன்மையில் அது வலியுறுத்தப்பட்டது. பின் அமைப்பியலுக்கும் இது பொருந்தும். தமிழ் மக்களுக்கு வாழ்க்கை என்பது முக்கியம். வாழ்க்கைக்கான சில விஷயங்கள் கலாச்சாரத்தில் இருக்கிறது. அதோடு இணைத்துதான் நம்முடைய சிந்தனையும் போக வேண்டும். அதற்காகத்தான் தொல்காப்பியத்திற்கு நான் தேடிப் போனேன். அமைப்பியலை முன் வைத்த மேலை நாட்டவர்களுக்கும் நமது தொல்காப்பியத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அமைப்பியலும் மொழியியலிலிருந்து வந்தது என்று சொல்கிறார்கள். நமக்கும் மொழியியல் பற்றிய ஆழ்ந்த பார்வைகள் தொல்காப்பியத்தில் இருக்கிறது. அவர்களைவிட பழைமையான சிந்தனை நமது தொல்காப்பியத்தில் இருக்கிறதே! அதையெல்லாம் தெரியாமல் உடனே அவர்கள் சொல்வது போல் அதே பாதையில் செல்லக் கூடாது. இல்லையென்றால் நமது பார்வை போலித்தனமாக மாறிவிடும். ஆக, மேற்கத்திய பெண்ணியவாதிகளின் அதே தன்மைகள் இங்கேயும் வேண்டும் என்றெல்லாம் சொல்ல முடியாது. தமிழ்த் தன்மை கொண்ட பெண்ணியக் கவிதைகள்தான் இங்கே உருவாகும்.
தீராநதி : என்னுடைய கேள்வியை முடிப்பதற்குள் முன்னதாகவே பேச ஆரம்பித்துவிட்டீர்கள். சரி, அதுவும் ஒருவிதத்தில் நன்மைதான். பெண்ணியக் கோட்பாடு இருவிதமான இழைகளை உள்ளடக்கியுள்ளது. ஒன்று அது உளப் பகுப்பாய்வை அதனுடைய உறுதியான பாலியல் அடிப்படைகளுக்காகப் புறக்கணிக்கிறது. மற்றது ஜாக்குலீன் ரோஸ் (யிணீஹீuமீறீவீஸீமீ ஸிஷீமீs), மேரி யெ கொபஸ் (விணீக்ஷீஹ் யிஷீநீஷீதீus), மற்றும் காஜா சில்வர்மன் (ரிணீழீணீ ஷிவீறீஸ்மீக்ஷீனீணீஸீ) போன்ற பெண்ணிய அறிஞர்கள் உளப்பகுப்பாய்வைச் சிறப்புற மறுவெளிப்பாடு செய்திருப்பதை இணைத்துக் கொள்கிறது. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை உளப்பகுப்பாய்வு நெறிமுறைகளை இயல்பாக்கிக் கொள்வதில் உள்ள சிக்கல்களைப் புரிந்து கொள்கிறார்கள். அந்த அம்சத்தைக் கொண்டுள்ள உளப்பகுப்பாய்வின் மூலமே பெண்களின் இக்கட்டை ஒருவரால் புரிந்து கொள்ளவும் மறு கற்பனை செய்து பார்க்கவும் நம்பிக்கை கொள்ளவும் முடியும். இலக்கியப் பெரும் திரட்டை (லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் நீணீஸீஷீஸீ) விரிவாக்கியதன் மூலம் புதிய விவாதப் பொருள்களின் பரப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் பெண்ணியம் அதனுடைய பல்வகைத் திட்டவரைவுகளினூடே அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இலக்கியக் கல்வியில் முக்கியமான மாற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. ஆனால் இங்கு பெண்ணியம் சார்ந்த கவிதைகள் வெளியான அளவிற்கு அதன் தத்துவங்கள் எழுதப்படவில்லை. அறிமுகப்படுத்தப்படவில்லை. தத்துவப் பார்வை இல்லாததனால் இவை மலினமான அணுகுமுறையோடு அலசப்படுகின்றனவா? அதைப் பற்றி கேட்கிறேன்?
தமிழவன் : நீங்கள் சொல்வது சரியானது. ‘உடல் அரசியல்’ என்ற சொல் இருக்கிறதில்லையா அதை ஆங்கிலத்தில் ‘பாடி பாலிடிக்ஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த ஆங்கில வார்த்தையைத்தான் இவர்கள் தங்களுக்குத் தெரிந்த பொருளில் எடுத்து மொழிபெயர்த்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மேற்கத்திய தத்துவப் பரப்பில் நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் பேர்கள் எந்தளவுக்கு முக்கியமானவை என்பது எனக்குத் தெரியவில்லை. லுசி ஈரிகரே என்பவரின் புத்தகத்தை வார்ஸாவில் நான் இருந்த போது வாசித்தேன். அவர் கிழக்கு மற்றும் மேற்கு கலாச்சாரத்தைப் பற்றி அதில் எழுதி இருக்கிறார். அவர் ஒரு உளப்பகுப்பாய்வாளர். தீவிரமான யோகாவில் ஈடுபட்டு, அதில் பெண்களுக்கு ஏற்படும் மனோநிலை என்ன? அதனால் உண்டாகும் பிரச்னைகள் என்ன? என்று ஆராய்ந்து பெண்ணிய நோக்கில் ஒரு புதுப் புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார். பெண்ணியத்தில் கிழக்கத்திய சமூகங்கள் எப்படி யோக நிலையில் ஈடுபாடு கொள்கிறார்கள் என்று நுட்பமாக ஆராய்ந்திருக்கிறார்.ஆண் பெண் உறவில் ஏற்படும் அழுத்தத்தை நமது நாட்டில் சமணம் வந்த பிற்பாடு அடக்கி இருக்கிறது. இவர் அதைப் பற்றி தரவாக வைத்து ஆராய்ந்து அந்த அழுத்தத்தை முழுவதுமாக வெளியேற்றிவிட வேண்டும் என்கிறார். மனித மனநிலை நாகரிகத்தினால் இறுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவத்திலும் கூட அது இறுக்கப்பட்டிருக்கிறது. சிறையில் அடைப்பதைப்போல மனித உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு கிடக்கிறது. அந்தக் கட்டுப்பாட்டை கொஞ்சம் நெகிழ்த்தினாலும் கூட பெரிய எதிர்ப்புகள் நமது கலாச்சாரத்தில் ஏற்படுகின்றன. சமீபத்தில் நடிகை குஷ்புவின் பிரச்னையில் அதுதான் நடந்திருக்கிறது. சங்க இலக்கியம் என்பது இந்தக் கட்டுப்பாடை மீறியதொரு வாழ்க்கை. தொல்காப்பியத்தில் ‘களவியல்’ என்பது இயல்பானதொன்று. பரத்தையிடம் போதல் என்பது இயல்பானதொன்றாக சொல்லப்படுகிறது. ‘கள்’ உண்ணுதல் என்பதும் கூட சங்க இலக்கியத்தில் அங்கீகரிக்கப்பட்டதொன்றாகவே இருந்திருக்கிறது. மகிழ்வான ஒரு நிகழ்வு அது.சமண கருத்துகளுக்கு தமிழ்ச் சமூகம் ஆட்பட்ட பிற்பாடு தொல்காப்பிய கருத்துகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையான கருத்துகள் இங்கு ஏற்பட்டிருக்கின்றன. சமண மரபில் வந்த வள்ளுவர் ‘கள்ளுண்ணாமை’ என்ற தனி அதிகாரத்தையே எழுதுகிறார். ஆக, ‘மகிழ்வு’ என்பதை பெண் கவிதைகளில் பார்க்கும் போது முதன் முதலாக இந்தப் பிரச்னையை தொடத் துவங்கி இருக்கிறார்கள். பெண்களும் தங்களுடைய உடலை மகிழ்ச்சியோடு பார்க்கலாம் என்று ஒரு புதுக் குரல் உள்ளே வந்திருக்கிறது. அது ஆழமாக சிந்திக்கக் கூடிய ஒரு விஷயமாக எனக்குப் படுகிறது. நமது சமூகத்தில் இந்தக் குரல்கள் இப்போதுதான் உள்ளே வந்திருக்கின்றன. இதை முற்றிலும் ‘போலி’ என்று ஒதுக்கவும் முடியாது. அதே சமயத்தில் விமர்சன தளம் ஒன்று இதற்கெல்லாம் இங்கே இல்லாதிருப்பதுதான் பெரிய ஆபத்தென்றும் நினைக்கிறேன்.
தீராநதி: இதுவரை கல்வி புலமாக இது வளர்த்தெடுக்கப்படாமல் இருக்கிறதல்லவா அந்தச் சிக்கலைப் பற்றி கேட்கிறேன்?
தமிழவன்: இந்தத் தோல்விக்கு முதற் காரணம், ‘போலி’ பல்கலைக் கழகங்கள். கோடிக்கணக்கான மத்திய தரவர்க்கத்தினுடைய பணத்தை ஹிநிசி என்பது இங்கே அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பல்கலைக் கழகங்கள் எல்லாம் மக்களுடன் இணைந்த ஆய்வுகளோ ஆராய்ச்சிகளோ நடத்துவதே இல்லை. ஒரு சிறுபத்திரிகைக்காரனையாவது அழைத்து எந்தப் பல்கலைக்கழகமாவது ஆராய்ச்சி செய்கிறதா? பெண் கவிதைகளில் நடந்திருக்கும் மாற்றங்கள் நமது சமூகத்தில் தற்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் நேரடி பிரச்னைகள். இந்த விவாதங்களையெல்லாம் பல்கலைக்கழகங்கள்தான் எடுத்துக் கொண்டு விவாதித்திருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் பல்கலைக் கழகங்கள் தோற்றுப் போய்விட்டன. துணை வேந்தர்கள் தோற்றுப்போனார்கள். நமது கல்வி அமைச்சர்கள் தோற்றுப் போனார்கள். அகாடமிகள் தோற்றுப் போயின. சிறுபத்திரிகைகள்தான் இதை தூக்கிக்கொண்டு கடினமாக உழைக்கின்றன. பல மொழி பெயர்ப்புகளை சொந்தச் செலவில் வெளியிடுகின்றன.முழுச் சுதந்திரம் கொடுத்து பல்கலைக் கழகம் ஒரு துறையை உருவாக்குவதற்கு இன்றைக்கு எனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கும் நேரத்திலும் கூட முழுவதுமாக இந்தக் குரலை என்னால் உள்ளே கொண்டு சேர்க்க முடியவில்லை. அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.
தீராநதி: தத்துவ அறிவு என்பது வாழ்க்கைக்கு தேவையானதொன்று. தத்துவம் என்பது குழப்பமடைந்த மனித இனம் மீண்டும் சரியாகச் சிந்திப்பதற்குச் செய்யும் முயற்சியாகும் என்று சமகால தத்துவ ஆய்வாளரான எட்வர்டு கிரெய்க் சொல்கிறார். நீட்ஷேவோ தத்துவவாதியை ‘ஒரு பயங்கரமான வெடி மருந்து; அவனிடமிருந்து எதுவும் பாதுகாப்பாகத் தப்பிக்க முடியாது’ என்கிறார். தத்துவ அறிவை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?
தமிழவன்: இது ஒரு மையமான பிரச்னை. சிறுபத்திரிகைகள் சூழலில் இயங்குகின்ற நண்பர்கள் மத்தியில் தத்துவம் பற்றிய ஆராய்ச்சி விவாதமெல்லாம் மீண்டும் வந்திருக்கிறது. முன்பெல்லாம் நான் மேலைக் கலாச்சாரத்தில் இருக்கிற தத்துவ கருத்தாக்கங்களை அப்படியே கொண்டு வந்து இங்கே வைத்து விவாதித்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், தமிழ்த் தேசிய மனோபாவத்திற்குள் (சுமார் ஆறுகோடித் தமிழர்கள் மத்தியில் இயங்கக் கூடிய மனோபாவத்தின் அடையாளத்தை நான் தமிழ்த் தேசிய மனோபாவம் என்று குறிப்பிடுகிறேன்) தத்துவம் பற்றிய விவாதம் மிக மிக முக்கியமானது. சைவ சித்தாந்த மரபு, பௌத்த மரபு, சமண மரபு என்று பல தத்துவ மரபுகள் தமிழ்ச் சமூகத்திற்குக் கண்டிப்பாக இருந்திருக்கிறது. தற்கால தத்துவ மரபு என்பதை நாம் மேற்கத்திய சிந்தனையாளர்களோடு இணைத்து வைத்து இன்றைக்கு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். தத்துவத்தைப் பொறுத்தவரை இரண்டு விதமான போக்குகள் உண்டு. ஒன்று: தத்துவம் வாழ்க்கைக்குத் தேவையானது என்பது. இரண்டு: தத்துவம் அழிவைக் கொண்டு வந்துவிடும் என்பது.உலகத் தத்துவ மரபில் நீட்ஷேவின் தத்துவம் மிக முக்கியமானது. தன் வாழ்நாள் முழுவதும் தத்துவத்திற்கே செலவழித்த ஒரு தத்துவவாதியான நீட்ஷேதான் நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கருத்தையும் சொல்லி இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. ஆகையால் தான் தெரிதா கூட தனது சிந்தனைகளை விளக்க இலக்கியத்தை கையில் எடுக்கிறார். போகப்போக தெரிதா தத்துவவாதியா? இலக்கியவாதியா? என்ற சந்தேகம் எழுகிறது. நமது தத்துவத்தை தேசியமயப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. சைவசித்தாந்தத்தில், மணிமேகலையில், பக்தி இலக்கியத்தில் இருக்கக் கூடிய வைஷ்ணவம் போன்ற தத்துவ மரபுகளை ஆழமாக மீண்டும் நாம் வாசிக்க வேண்டும். தொல்காப்பியம் இன்று மறுபடியும் ஒரு ஃபேஷனை போல மேலெழுந்திருப்பதின் அர்த்தம் அதுதான். இன்றைக்கு எல்லோரும் உரைமரபுகள் மிகவும் முக்கியமானவை என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். 1980_களில்தான் இந்தப் பார்வை வலியுறுத்தப்பட்டது. அதற்குக் காரணம் என்னவென்றால் தெரிதாவினுடைய கருத்துக்களை நம்முடைய உரைமரபுகளோடு இணைத்துதான் புரிந்துகொள்ள முடியும் என்ற ஒரு குரல் இங்கு உருவானது. ஆக, நான் என்ன சொல்கிறேன் என்றால் தத்துவத்தை தமிழர்கள் மிகவும் தீவிரமான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் பரிதாபம் என்னவென்றால் சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள தத்துவத்துறையில் எந்த மாணவர்களும் சேர்வதேயில்லை. பெங்களூர் பல்கலைக்கழகத்திலுள்ள தத்துவத்துறையை சமீபத்தில்தான் மூடினார்கள். சிறுபத்திரிகைகளின் தத்துவ இயக்கத்திற்கு எந்த அரசும் பணஉதவி செய்வதில்லை. ஆனால், சாகித்ய அகாடமியில் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. டெல்லியிலிருந்து சாகித்ய அகாடமியின் உயர் அலுவலர் ஒருவர் சென்னைக்கு வருகிறார் என்றால் சுமார் 30 ஆயிரம் ரூபாய் விமானச் செலவுக்காக வழங்கப்படுகிறது. இந்தச் செலவில் அடிக்கடி விமானத்தில் பலர் பறந்து கொண்டிருக்கிறார்கள். யாராவது கணக்கெடுப்பு நடத்தினால் சாகித்ய அகாடமியின் பரிசுக்கு எவ்வளவு பணம் செலவாகிறது, விமானச் செலவுக்கு எவ்வளவு பணம் செலவாகிறது என்று பார்த்தால் 90 சதவீதப் பணம் விமானச் செலவுக்காக மட்டுமே செலவழிக்கப்படுவது தெரிய வரும். வருடத்திற்கு புத்தகத்திற்கு வழங்கப்படும் பரிசுத் தொகை 25 ஆயிரத்தை அதிகப்படுத்தச் சொல்லி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு இருக்கக் கூடிய நிர்வாகத்தினர் அதற்கு ஒப்புதல் வழங்க மறுக்கிறார்கள். இதையெல்லாம் ஏன் நாம் பொது தளத்திற்குள் விவாதிக்கத் தொடங்கவில்லை என்பது எனக்கு புதிராகவே இருக்கிறது.
தீராநதி : உங்களின் தொடர் பேச்சில் மைய இழையாக ழான் பொத்திரியாரின் (யிமீணீஸீ ஙிணீஸீபீக்ஷீவீறீறீணீக்ஷீபீ) ஹைபர் ரியாலிட்டி என்ற கருத்தாக்கம் வந்துகொண்டே இருக்கிறது. ‘‘உண்மை இறந்து விட்டது. இங்கு எதுவுமே நிஜம் இல்லை. நகல்களின் பிம்பங்களை பொழிந்த படிதான் டி.வி. கம்ப்யூட்டர், சினிமா, பத்திரிகை, விளம்பரங்கள் யாவுமே இருக்கின்றன. இந்த நகல்கள்தான் நமது கலாச்சாரத்தின் உண்மைகள்’’ என்று அவர் சொல்கிறார். நமது தமிழகத்தில் கூட சமீப காலமாக ‘சேகுவேரா’ என்ற டி_ஷர்ட் பிம்பம் உண்மை பிம்பத்தைவிட கவர்ச்சியாகவும், வியாபார நுகர் பொருளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள்? இன்றைய அரசியலை நீங்கள் புரிந்து கொள்ள இவை உங்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கின்றன?
தமிழவன் : ஒரு விதமான பின் நவீனத்துவ அரசியல் என்பது இங்கேயும் செயல்படுகின்றது என்பது உண்மைதான். இந்தியாவிலேயே இந்தப் பிம்பங்களின் கவர்ச்சியில் அதிகமாக சிக்கி கலாச்சாரத்தை இழந்தவர்கள் நமது தமிழர்கள்தான். சினிமாவில் வருகின்ற பிம்பங்களை நிஜமெனக் கருதி அவர்களை தங்களின் விடுதலையை பெற்றுத்தரக் கூடிய தலைவர்களாக பார்த்து பிரமித்தார்கள். தொலைக்காட்சியைப் பார்த்து அதில் பேசுகின்ற மொழியை இன்றைக்கு நமது பிள்ளைகள் பழகத் தொடங்கி இருக்கிறார்கள். இதுபோல வாழ்க்கையே சினிமாவாக மாறி இருக்கிறது. வரலாற்று ரீதியாக விஜய நகரப் பேரரசு தமிழகத்திற்கு வந்தபோது பெரும்பாலான தெலுங்கர்கள், பிறமொழியினர் எல்லாம் நம் சமூகத்திற்குள் வருகிறார்கள். இவர்களிடம் ஒரு சாராம்சத்தன்மை என்பது இல்லை. வீட்டுக்குள் ஒரு மொழியைப் பேசிக்கொண்டு வெளியில் ஒரு மொழியைக் கையாண்டார்கள். இன்றைக்குப் பிறமொழி பேசுகின்றவர்களை நான் தமிழர்கள் இல்லை என்று சொல்லமாட்டேன். இவர்களும் தமிழர்கள்தான். இவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இவர்களெல்லாம் சேர்ந்து ஒரு தமிழ் அடையாளத்தைக் கட்டி உருவாக்கி இருக்கிறார்கள் இல்லையா அதுதான் பின் நவீனத்துவ அடையாளத்தின் அடிப்படை.தமிழர்கள் அல்லாதவர்கள் கூட தன்னை வெளிச்சமூகத்திற்குள் ‘தமிழன்’ என்று அடையாளப்படுத்திக் கொள்வது ஒரு பின் நவீனத்துவ ‘ஐரனி.’ இங்கே ஒரு மலையாளி முதல்வராக வரலாம், கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக ஆட்சி செய்ய முடிந்திருக்கிறது. இந்த மாதிரி பின் நவீனத்துவ ‘ஐரனி’ தமிழ்ச்சமூகத்திற்கு பலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பின் நவீனத்துவக் கோட்பாடு இல்லாமல் வேறு எந்த அடிப்படையிலும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அதேபோல சினிமாவும் அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கிறது. அதுவும் இதன் அடிப்படைதான். பழைய காலத்தில் பெரியார் சொன்னதுபோல இவர்களை கூத்தாடிகள் என்று சொல்லி ஒதுக்க முடியாது. பெரியாரும் சினிமாக்காரர்களை தொலைக்கப் பார்த்தார். ஆனால் நடக்கவில்லை. கடைசியில் சினிமாக்காரர்கள் பெரியாரைத் தொலைத்து விட்டார்கள். இன்று பெரியாரைக் காணவில்லை. அவரைத் தேட வேண்டியதாக இருக்கிறது. இதுவெல்லாம் பொத்திரியார் சொல்லும் ‘உண்மை இறந்துவிட்டது’ என்ற கருத்தோடு பொருந்திப்போகக்கூடிய ஒன்றுதான்.

Thursday, December 13, 2007

மார்க்வெஸ்ஸின் ஒரு நூற்றாண்டுத் தனிமை மாதிரி எனது பத்தாண்டுத் தனிமை வாசம் இது-நாகார்ஜுனன்


நவீன இலக்கியவாதி என்ற அடையாளத்தை மீறி ஒரு கள இயக்கவாதியாக செயல்பட்டவர் நாகார்ஜுனன். ஒரு காலத்தில் பேசப்பட்ட அளவிற்கு எதிர்ப்புகளை சம்பாதித்தவர். சில வருடங்களாக லண்டன் ஙிஙிசி_யில் பணி. சமீபத்தில் சென்னை வந்திருந்தவரை தீராநதிக்காக சந்தித்தோம். முரட்டுத்தனம், அடவாடியான ஆள் என்ற பழைய அடையாளங்கள் எதுவுமின்றி பக்குவமாய் பேசினார். இவ்வளவு இயல்பான மனிதரா இவர் என்று நம்மை யோசிக்க வைத்தது அவரது நடவடிக்கைகள். காலம் நாகார்ஜுனனை எவ்வளவோ மெருகேற்றி இருக்கிறது என்பதை உணர்த்தியது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நவீன இலக்கியப் பரப்பில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் நாகார்ஜுனனின் முதல் நேர்காணல் இது



.தீராநதி : உங்களுடைய பின்புலத்திலிருந்து நமது உரையாடலைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் உங்களின் இயக்கம் குறித்த தகவல்கள் எதுவும் தமிழிலக்கியப் பரப்பில் அவ்வளவாகப் பதியப்படவே இல்லை. ஒரு வாசகப் புரிதலுக்காக இத்தகவல்கள் உதவுமென்பதால், பேச்சை இம்மய்யத்திலிருந்து தொடங்குவோம்?நாகார்ஜுனன் : என்னுடைய அம்மா, தி. ஜானகிராமன், ஜெயகாந்தனின் அதிதீவிர வாசகி. நான் பிறந்தது பிராமண சமுதாயத்தில்தான் என்றாலும்கூட திருமூலர், சிவவாக்கியர், வள்ளலார் போன்றவர்களின் அறிமுகம் எங்கள் குடும்பத்தில் இயல்பாக நடந்திருக்கிறது. எங்கள் தாத்தாவின் மூலமாக இந்த அறிமுகம் நடந்திருக்கிறது என்று சொல்லலாம். தாத்தாவின் தாயார் வள்ளலாரின் பாடல்களை மனப்பாடம் செய்யாமல் நன்கு பாடக்கூடிய ஆற்றல் பெற்றவராக இருந்தார். சாதியைத் தாண்டி யோசிக்கின்ற அழுத்தம் எங்களது வீட்டில், ஒரு சீர்திருத்த அளவில் இருந்துகொண்டிருந்தது என்று சொல்வேன்.ராமானுஜரின் மரபை ஏற்கக்கூடிய ஆண்டாள் பாசுரங்களை என்னுடைய அம்மா இசைநயத்தோடு வீட்டில் பாடுவார். அவருக்கு கர்நாடக சங்கீதம் நன்றாக வரும் என்பதால், அந்த இசை ராகங்கள் எங்களது வீட்டை எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும். ஒரு சாதாரண பிராமணக் குடும்பத்தில் நிலவுகின்ற கட்டுப்பாடுகள், நீக்குப் போக்குகளோடுதான் நாங்கள் வளர்ந்தோம்.தஞ்சாவூரில் நான் பள்ளிப்படிப்பில் இருந்த பருவத்தில் எல்லா ஆசிரியர்களும் திராவிட இயக்கத்தினுடைய பெரிய தாக்கத்திற்கு ஆட்பட்டவர்களாக இருந்த காரணத்தினால், என் தமிழ்ப்பற்றைப் பார்த்துவிட்டு, என்னை அவர்களின் வீட்டுப் பிள்ளையைப் போல எடுத்து வளர்த்தார்கள். குறிப்பாக, இவர்கள் எல்லோரும் Protastant கிறிஸ்துவப் பிரிவைச் சார்ந்தவர்கள். ஆபிரஹாம் பண்டிதர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். பிற்பாடு சென்னை வந்த நாளில் சாந்தோம் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என் தமிழ்ப்பற்றைக் கண்டு வியந்து, தன் மகனைப் போல அரவணைத்தார்கள். தமிழில் படிக்கவேண்டும், தமிழில் சொந்தக் கற்பனை வளத்தோடு கவிதை, கட்டுரை, கதைகள் எழுதவேண்டும் என்று உத்வேகப்படுத்தினார்கள். இந்த மாதிரியான ஓர் அழுத்தத்துடன் என் தமிழார்வம் செயல்பட்டது. ஆனால் என் பதினைந்தாம் வயதில் இந்த அழுத்தத்திலிருந்து நான் முற்றிலுமாக விலகிவிட்டேன். றிஹிசிக்கு பிற்பாடு தமிழை நான் முறையாகப் பயிலவே இல்லை. அந்த அளவுக்கு பெரிய இடைவெளி உண்டானது. சயின்ஸ் படிக்கவேண்டும் என்று தமிழை நிறுத்தியேவிட்டேன்.PUCவரை எந்தத் தமிழ் வாத்தியார்களுடைய கண்டிப்பும், அரவணைப்பும் ஒரு வரப்பிரசாதமாக இருந்ததோ, அதுவே பிறகு பெரிய தொந்தரவாக மாறிவிட்டது.எங்கள் மாமா சேதுராமன் சென்னை ‘நாரதகான சபா’வில் இருந்து செயலாற்றி, பின் அதிலிருந்து விலகி, ‘பிரம்மகான சபா’ தொடங்கியவர் என்பதால், அந்த சபாக்களில் எப்போதும் இசைக் கச்சேரியும், நாடகங்களும் சகஜமான ஒரு நிகழ்வாக நடந்துகொண்டே இருக்கும். எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, வசந்தகுமாரி போன்ற பெரிய கர்நாடக இசைக் கலைஞர்கள் எல்லோரும் சர்வசாதாரணமாக வந்து எங்கள் வீட்டில், சபாவில் பாடி இருக்கிறார்கள். அதே போல எம்.எஸ். விசுவநாதனுடைய உதவியாளரான ஜோசப் கிருஷ்ணா, இளையராஜாவின் குருநாதரான தன்ராஜ் போன்றவர்களெல்லாம் எங்கள் மாமாவின் நண்பர்கள். நவாப் ராஜமாணிக்கம், அவ்வை சண்முகம், ஆர்.எஸ். மனோகர், புல்லாங்குழல் மாலி, நாடக ஆசிரியர் சோ இப்படி எல்லோரும் என் மாமாவின் நெருங்கிய சிநேகிதர்கள். இதில் ‘சோ’வும், என் மாமாவும் விவேகானந்தா கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். இப்படிக் கலைஞர்களின் தினசரி புழக்கத்தின் நடுவில் நான் வளர்ந்தேன். சங்கீதம், நாடகம், இலக்கியப் பரிச்சயம் எல்லாம் எனக்குள் இயல்பாகப் பதிந்திருக்கிறது. வேறு எங்கிருந்தோ இதை திடீரென்று யாரும் எனக்கு எடுத்துவந்து கொடுக்கவில்லை. இப்படியான ஒரு சூழலில் வளர்ந்த எனக்கு, இந்த ரசனை வரவில்லை என்றால்தான் தப்பு. எங்களின் வீட்டில் பலருக்கு அது வரவேயில்லை. அப்படியான ஒரு தப்பும் நடந்திருக்கிறது என்பதால் அதையும் சேர்த்தே குறிப்பிட விரும்புகிறேன். எந்தப் பின்புலத்தின் நடுவில் இருந்து இந்த ரசனையோடு வளர்ந்தேனோ அதுவே பிறகு பெரிய தொந்தரவாக எனக்குள் மாறிவிட்டது. நான் இதிலிருந்து விலகினேன். சபா நாடகங்களை வெறுத்தேன். கர்நாடக சங்கீதம் கேட்பதையே தவிர்த்தேன். பெரிய புரட்சி எனக்குள் நடந்திருக்கிறது. ஆகையால் இதிலிருந்து விலகி நான் ஓடிவிட்டேன். படிப்பு விஷயத்தில் நான் கெட்டிக்கார மாணவன் என்பதால், எனக்கு ஐ.ஐ.டி.யில் இடம் கிடைத்தது. உடனே ‘பி.டெக். சேர்ந்துவிட்டேன். நான் பி.டெக். படித்த அந்த ஐந்தாண்டுகளும் சென்னை மயிலாப்பூர் பிராமண பிரச்னைகள், பழக்க வழக்கங்கள் என்று இவற்றிலிருந்து நான் முற்றிலுமாக விலகிவிட்டேன். இதே காலகட்டத்தில் நெருக்கடி நிலை அமலாக்கத்தில் இருந்த காரணத்தினால் எமர்ஜென்ஸியை எதிர்க்கின்ற இடதுசாரியக் கருத்துக்களினால் நான் ஆகர்ஷிக்கப்பட்டேன். இது எதுவுமே எங்கள் வீட்டிற்குத் தெரியாது. இதை நான் ரகசியமாகவே செய்தேன். நான் ஐ.ஐ.டி.யில் படித்த காலத்தில் பல பொறியியல் கல்லூரி மாணவர்கள் இலக்கியம் வாசிப்பவர்களாக, இடதுசாரிகளாக இருந்தார்கள். அவர்களில் பல பேர் ‘மனஓசை’, ‘கசடதபற’, ‘பிரக்ஞை’, ‘கணையாழி’ போன்ற இதழ்களின் வாசகர்கள். இவ்வாறான ஒரு சூழல் அன்றைக்கு அங்கிருந்திருக்கிறது. இன்றைக்கு அதை நினைத்துக்கூடப் பார்க்க இயலாது.1971_இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் எங்கள் குடும்பத்தினர் எல்லோரும் ஒட்டுமொத்தமாக தி.மு.க.வை எதிர்த்து ஸ்தாபன காங்கிரஸ் மற்றும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியை ஆதரித்தார்கள். அவர்களின் அந்த ஆதரவு மனநிலை என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ‘சோ’ அன்றைக்கு பிராமணர்கள் மத்தியில் பெரிய சக்தியாக விளங்கினார். நானோ இடதுசாரி, இந்திரா காங்கிரஸின் ஆதரவாளராக இருந்தேன். அப்போது எனக்கு 13 வயது. வீட்டிலுள்ள எல்லோரிடத்திலும் இந்தக் கூட்டணிக்குத்தான் நான் ஓட்டுப் போடப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். குறிப்பாக, என் தாத்தாவிடம் வங்கிகளை தேசியமயமாக்கியது சரி, மன்னர் மானிய ஒழிப்பு கொண்டு வந்தது சரி என்று விவாதித்திருக்கிறேன். 72_இல் நக்ஸல்பாரி இயக்கத்தின் தூண் தோழர் சாரு மஜும்தார் கொலை செய்யப்பட்டபோது, அதற்காக நான் வருந்தியது இன்றைக்கும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. இதையெல்லாம் ஒரு அரிதான சூழலாக இன்று நான் பார்க்கிறேன்.1974, 75_ல் மிகத் தீவிரமாக சென்னை சிந்தாதரிப் பேட்டையில் நடந்த தொழிலாளர் போராட்டத்தை நான் நேரடியாக நின்று பார்த்திருக்கிறேன். ஒரு விளிம்பில் இருந்துகொண்டு இவற்றைக் கவனித்திருக்கிறேன். ஆனால், இவை யாவையும் என் படிப்பைப் பாதிக்கவில்லை. படிப்பு விஷயத்தில் வெகு தீவிரமான மாணவனாக நான் இருந்ததனால், என் படிப்புக்கெடாமல் பார்த்துக்கொண்டேன். என்னுடைய ‘கேரியர்’ ஒன்றாகவும், என்னுடைய ‘அவுட் லுக்’ ஒன்றாகவும் ஒரு முரண்பாட்டோடு சென்றிருக்கின்றன. இந்த முரண்பாடு 1975, 76_ல் உச்சத்திற்கு வந்தது. இந்த சமயத்தில் அமெரிக்க வல்லரசு வியந்தாமில் தோல்விகண்டு வெளியேறியது. அப்போது இந்தப் படிப்பை நாம் ஏன் படிக்கின்றோம் என்ற பெரும் கேள்வி எனக்குள் எழுந்தது. நாம் முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காக இந்தப் படிப்பைப் படிக்கின்றோமா? அல்லது அரசாங்கத்திற்கு சேவை செய்வதற்காக இந்தப் படிப்பைப் படிக்கின்றோமா? என்று யோசிக்கத் தொடங்கினேன். ஆனாலும் 16, 17 வயது ஒரு மாணவனின் மனநிலையோடு நின்று இதனால் நமது ‘கேரியர்’ _ பாழாகிவிடக்கூடாது என்று மனதிற்குள்ளாகவே போட்டு அப்படியே அமுக்கிவிட்டேன். இதற்கிடையில் இன்னொன்றை நான் சொல்லவேண்டும். எமர்ஜென்ஸி காலகட்டத்தில் பல ரகசிய செய்திகள் என் மூலமாகவும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.குறிப்பாக எனக்கு ஞாபகமுள்ள தகவல்கள்: ஜெயபிரகாஷ் நாராயணனின் பேச்சு அடங்கிய ஒலிப்பேழையை நான் விநியோகம் செய்தது, இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் பேச்சுகள் அடங்கிய ஒலிப்பேழையை நான் எடுத்துச் சென்றது. தி.மு.க.வின் ஆட்சி கலைக்கப்பட்டபோது, கைதானது எத்தனை பேர்? கைது செய்யப்பட்டவர்களில் எத்தனை பேர் சிறைக்குள்ளாகவே கொலை செய்யப்பட்டார்கள் என்ற செய்திகள் என் மூலமாகவும் ரகசியமாகப் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இதற்கெல்லாம் நான் ஒரு ‘கூரியராக’ இருந்திருக்கிறேன்.அப்போது தலைமறைவாக இருந்த ஜார்ஜ்ஃபெர்னாண்டஸ் சென்னை வந்தபோது அவரை ரகசியமாக சந்தித்துப் பேசியவர்களில் நானும் ஒருவன். ஒரு சிக்கலான காலகட்டத்தில் ஆச்சர்யமான காரியங்களைச் செய்யக்கூடிய மனநிலை எனக்கு இருந்திருக்கிறது. அப்போதிலிருந்து பல இடதுசாரித் தலைவர்களை நேரடியாக நான் சந்தித்துப் பேசியிருக்கிறேன். எனக்கு மார்க்ஸியத்தின்மீது ஒரு பயமும், ஒரு ஈடுபாடும் சேர்ந்தே இருந்தது. என் குடும்பச் சூழ்நிலையை எடுத்துக்கொண்டால் மார்க்ஸிய தத்துவப் புத்தகங்களைப் படிப்பது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்றாக இருந்தது. அதை நான் மீறினேன். அந்தப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தேன். பல காரியங்களில் படு தீவிரமாகச் செயல்பட்டேன். நான் அப்படிச் செய்த சில விஷயங்களுக்காக 1976_இன் கடைசியில் என் வீட்டிற்கு என்னைத் தேடி போலீஸ் வந்தது. வந்தவர்கள் போலீஸ் என்பதைக்கூட அனுமானிக்க முடியாத நிர்மலமான மனோநிலையில் எனது குடும்பத்தினர் இருந்தார்கள். நம் பிள்ளையையெல்லாம் போலீஸ் தேடாது என்று நம்பிக்கையோடு அவர்கள் வாழ்ந்தார்கள். இப்படி ஒரு காலகட்டம் முடிந்து, 1978_இல் இன்னொரு பருவமாக ஆன்மிகத்தின் மீதான தேடலால் ஆட்பட்டேன். அப்போது மார்க்ஸியத்திற்குள்ளாகப் போகலாமா? வேண்டாமா? என்ற பெரிய கொந்தளிப்பு எனக்குள் நடந்தது. அதை என்னால் சமாளிக்க முடியாமல் தவித்தேன். படித்தே இதற்கு ஒரு தீர்வைக் காணமுடியும் என்று நம்பினேன். அனுபவத்தின் மூலமாக இதற்கு தீர்வைக் கண்டுபிடிக்க முடியாது என்பது எனக்குப் புரிந்துவிட்டது. ஏனென்றால், அனுபவம் பயத்தைக் கொடுக்கக்கூடியதாக இருந்தது. இன்றைக்கு இவற்றையெல்லாம் படிப்பவர்கள் பலர் இதைப் பெரிய அசட்டு நம்பிக்கை என்றுகூட சொல்லலாம். அதில் நியாயம் இருக்கிறது. படிப்பதன் மூலம், விவாதிப்பதன் மூலம், நண்பர்களைச் சந்திப்பதன் மூலம், இதைக் கடந்து செல்ல நான் முயற்சித்தேன். இதே காலத்தில் என்னுடைய கல்விப் பருவம் முடிந்தது. உடன் வேலை கிடைத்து பம்பாய் நகருக்குச் சென்றுவிட்டேன். இந்தப் பிரச்னைகளை நான் நேரடியாக நின்று சந்திக்கவில்லை. இதை நேரடியாக நின்று சமாளிக்கும் எவ்வித பின்புலமும் இதற்கு முன் நான் புழங்கிய வட்டங்களில் இருக்கவில்லை. ஆகையால் பம்பாய்க்குச் செல்வதுதான் சரியென்று முடிவெடுத்தேன். ஆக, அங்கு சென்றதும் அந்தச் சமூகத்திற்குள் நான் தனியனானேன். ஒரு நவீன வாழ்க்கையை தனி மனிதனாக எதிர்கொண்டேன். என்னுடைய குடும்பம், வர்க்கச் சாய்விலிருந்து முற்றிலுமாக மீண்டும் விலகினேன். அங்கிருந்த இரண்டாண்டுகளில் தொழிற்சங்கவாதிகள், நாடகப் பிரியர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், வெறும் பொறுக்கிகள் என்று பெரிய வட்டம் எனக்கு நண்பர்களாக அமைந்தது. என்னுடன் இருந்தவர்களில் பலர் நக்ஸல்பாரி இயக்கத்துடன் செயல்பட்டு, காவல்துறையின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வங்காளத்திலிருந்து தப்பித்து வந்து தலைமறைவாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பின்புலத்தோடு என்னுடன் அறிமுகமானார்கள். இவர்களைச் சந்தித்த பின்புதான் தமிழ்நாட்டிலிருந்தும், குடும்பப் பின்புலத்திலிருந்தும் வெட்டி வாழ்வது என்பது எவ்வளவு அவசியமானதாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். இந்த அணுகுமுறையை என் வாழ்நாளில் திரும்பத் திரும்ப பயிற்சி செய்து பார்த்திருக்கிறேன். எப்போதெல்லாம் பெரிய மன நெருக்கடிக்கு ஆளாகிறேனோ அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிட்டிருக்கிறேன். இப்போதும் கூட அப்படித்தான். இன்று இதைத் திரும்பிப் பார்க்கும்போது என்னால் இதைக் கணித்து உணரமுடிகிறது.இதே காலத்தில் பல புத்தகங்களை நான் வாசித்தேன். இதில் முக்கியமாக படித்தது எக்ஸிடென்ஷியலிஸமும், ஸ்ட்ரக்சுரலிஸமும்தான். இவை இரண்டையும் நான் பிரித்துப் பார்க்கவில்லை. சிந்தனையளவில் ஏற்படுகின்ற உயரிய மட்டத்தில் இவை இரண்டும் வெவ்வேறானதல்ல; ஒன்றேதான்.மார்க்ஸியம் என்பது ஒரு Utopiaவை நமக்குக் காட்டுகிறது. அதேபோலத்தான் இவையும் ஒரு Utopiaவைக் காட்டுவதில் மட்டுமின்றி அதை அலசுவதில் ஒன்றாகின்றன. மார்க்ஸியத்திலிருந்து கடந்து வந்த சிந்தனைகள்தான் இவை. மார்க்ஸியத்தின் சாய்வுகள் இவற்றில் உண்டு. நானும் மார்க்ஸியத்தின் சாய்வு கொண்டவன்தான். அதில் எந்தவிதச் சந்தேகங்களும் இல்லை. மார்க்ஸியவாதிகளின் தியாகங்கள் என்றைக்கும் ஒப்பற்றவை. உலகத்தில் ஜாதி, மத, இன அடையாளங்களைக் கடந்து நாம் எல்லோரும் ஓரிடத்திற்குச் செல்லமுடியும் என்றால் அவ்விடம் கார்ல் மார்க்ஸின் கல்லறை ஒன்றாகத்தான் இருக்கமுடியும். நான் லண்டன் மாநகரத்தில் வாழ்ந்து அதை இன்று நேரடியாகக் காண முடிகிறது. இது வேறு எந்த சிந்தனையாளருக்கும் கிடைக்காத மிகப் பெரிய பேறு. கார்ல் மார்க்ஸிற்கு கிடைத்திருக்கிறது. மார்க்ஸிய சித்தாந்தத்தின் மீதான பல சிக்கல்கள் இன்றைக்கு இருக்கின்றன. அந்தச் சிக்கல்களைக் கூர்ந்து பார்க்கக்கூடிய இடத்தில்தான் இந்த எக்ஸிடென்ஷியலிஸமும் ஸ்ட்க்சுரலிஸமும் போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிஸமும் சேர்கின்றன. மார்க்ஸிய சிக்கல்களைப் பார்க்கும் முறை, அணுகும் முறை எப்படி என்று இவை நமக்கு சொல்லிக் கொடுக்கின்றன. அந்த இடத்தில் இவை ஒன்றாகச் சேர்கின்றன. அப்படிச் சேரும் இடத்தை நான் அடைந்தேன். இங்குதான் நான் ஏற்கெனவே குறிப்பிட்டேன் இல்லையா? படித்தே இதைக் கண்டடைவது என்ற என் கருத்தியல் தோற்றது. அதனால் நான் பதற்றத்திற்கு ஆளானேன்.இப்பதற்றத்தோடு எக்ஸிடென்ஷியலிஸத்திலிருந்து நான் நகர்ந்து ஸ்ட்ரக்சுரலிஸத்திற்கு சென்றேன். அப்படி நான் நகர்ந்து சென்றபோது எஸ்.வி.ஆர். போன்றவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஏனென்றால் அவர்கள் ஸ்ட்ரக்சுரலிஸத்தை ஓர் நிர்ணயவாதமாகப் பார்த்தார்கள். நான் அவ்வாறு அணுகவில்லை. எப்போதும் எது ஒன்றைப் புதிதாக அணுகினாலும் அதை நான் குழப்ப மனநிலையோடுதான் அணுகியிருக்கிறேன். எக்ஸிடென்ஷியலிஸத்திகும் போஸ்ட் ஸ்ட்க்சுரலிஸத்திற்கும் உள்ள இணக்கப்பாடுகளை, முரண்பாடுகளை நான் படைப்பு ரீதியாகவே பார்த்தேன். இந்த மாதிரியான முழுமையான ஒரு செயல்பாட்டுச் சூழலில் நான் எழுத வந்தேன். 1981_இல் என்னுடைய முதல் போர் எதிர்ப்பு சினிமா கட்டுரை ஒன்று ரமேஷ் என்ற என் சொந்தப் பெயரில் கணையாழியில் பிரசுரம் கண்டது. தமிழ் வாத்தியார்களின் நச்சரிப்பிலிருந்து தப்பித்து ஓடிய நான் மீண்டும் இளைஞனாகத் தமிழில் எழுத வந்தது இப்படித்தான்.


தீராநதி: தமிழ்நாட்டில் அறிவு ஜீவிகளாக இயங்கிக் கொண்டிருந்த ஆல்பர்ட், தமிழவன், அ.மார்க்ஸ், எஸ்.வி. ராஜதுரை, கோவைஞானி, எம்.டி.முத்துக்குமாரசாமி போன்றவர்களுடன் உங்களுக்கு எப்படி தொடர்பு உண்டானது?


நாகார்ஜுனன்: அன்றைக்கு நான் வேலை செய்த நிறுவனம் இன்றைய நாளில் மிகப் பெரிய மல்டி’நேஷனல் கம்பெனிக்கான அடையாளத்தோடு வளர்ந்திருக்கிறது. என்னுடைய வாழ்க்கையைப் போலவே என்னுடைய பணியும் பெரிய முரண்பாடுகளைக் கொண்டிருந்தது. இந்திய அணுசக்தித் துறைக்காக அணு உலைகளைக் கட்டுவதற்கான வேலைகளை வடிவமைப்பதற்கான ஓர் குழுவில் நான் வேலை செய்தேன். என்னுடைய பௌதீக, கணிதவியல் அறிவை இதற்குப் பயன்படுத்திக் கொள்வது என்று அந்நிறுவனம் முடிவெடுத்தது. அப்போது அணுசக்தியின் வரலாறு பற்றிய நிறைய புத்தகங்களை நான் படித்தேன். 1974_இல் முதல் அணுகுண்டு சோதனையை இந்திய அரசு நடத்தியது. அந்த சமயத்தில் பிரச்னையை கையிலெடுத்து ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் ‘புத்தா ஹாஸ் ஸ்மைல்ட்’ (Buddha has smiled) என்ற கட்டுரையை எழுதினார். அதை நான் வாசித்தேன். அதையட்டி ஹிரோஷிமா, நாகசாகி பற்றியும், பசிபிக் தீவுகளில் பிகினிஸ் அட்டாலில் நடந்த பிரெஞ்சு சோதனைகளைப் பற்றியும் அவ்வப்போது நிறைய படித்தேன். அப்படி படிக்கும்போது நிறைய கேள்விகள் எனக்குள் எழுந்தன. அணு விஞ்ஞானிகள் ராபர்ட் ஓப்பன்ஹைமர், நீல்ஸ் போஹர் அல்லது அவர்கள் சந்தித்த தத்துவார்த்த பிரச்னைகள் பற்றி ஏற்கெனவே அரைகுறையாகத் தெரிந்த விஷயத்திலிருந்து ஆழமாகப் படிக்கத் தீர்மானித்தேன். இந்தப் படிப்பறிவோடு என்னுடைய வேலையும் இரண்டாண்டு கடந்தது. அப்போதே இதிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் துளிர்விட ஆரம்பித்துவிட்டது. இந்த மாதிரியான படிப்பறிவின் மூலம் இந்திய அணுசக்தி திட்டம் என்பதன் விளக்கம் அணுமின் உற்பத்திக்கான திட்டம் மட்டுமே அல்ல; அது அணு ஆயுத உற்பத்திக்கான திட்டமாகவே வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டேன். அப்படிப் புரிந்து கொள்வதற்கான நியாயமான தரவுகள், சான்றுகள் என்னிடம் இருந்தன என்று கூட சொல்லலாம். ஆக, இவ்வளவு கேடுகளை விளைவிக்கக் கூடிய ஒரு செயல் திட்டத்திற்குள்ளாக நானும் ஒரு பகுதியாகப் பணிபுரிகிறேன் என்று நினைக்கும்போது பெரிய அதிர்ச்சி என்னைப் பற்றிக் கொண்டது. அப்போது நாம் படித்த அறம், நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட அறம் எல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டும்தானா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அப்போது நக்ஸல்பாரிகள் சொல்வதுதான் உண்மைபோல, அவர்கள் குறிப்பிடுவதைப் போல, இந்திய அரசாங்கம் மிகக் கொடூர சக்தியாக இருக்கிறது என்பது புரிய வந்தது. இதில் இவ்வளவு கோடி புழங்குகிறது என்றால் எதற்கு? இந்தியா ஒரு வல்லரசாக மாறுவதற்கு என்பது புலனானது. இதற்கு ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான தொகை கல்வி மேம்பாட்டிற்காக ஏன் ஒதுக்கப்படவில்லை? சுகாதார மேம்பாட்டிற்காக ஏன் ஒதுக்கப்படவில்லை? சிறார், பெண்கள், தொழிலாளர் மேம்பாட்டிற்காக ஏன் ஒதுக்கப்படவில்லை? இதைக் கேள்வி கேட்காமல் வெறும் அரசியல்வாதிகளையே குறை கூறிக் கொண்டு திரிகிறார்களே எதற்கு? இதுவல்லவோ பிரச்னை என்று சக ஊழியர்களிடம் நான் கேள்வி எழுப்பியபோது, இதற்கான பதில் அவர்களிடம், ஏன் யாரிடமும் இல்லை.எனக்குத் தெரிந்த வழக்கமான கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் யாரிடமும் இதற்கு பதில் இல்லை. அப்போது இந்திய அரசுக்கும் அறிவியலுக்குமான உறவு பற்றிய என்னுடைய கேள்விகளை அவர்கள் எதிர்கொள்ள மறுத்தார்கள். எதிர்கொள்ளாமல் போனாலும் பரவாயில்லை இப்படி கேட்பதையே அவர்கள் விரும்பவில்லை. என்னுடைய அறிவிற்கும், படிப்பிற்கும், அனுபவத்திற்கும் உட்பட்ட அளவிற்கு கிடைக்கின்ற புத்தகங்களில் எல்லாம் பதிலைத் தேடினேன். அந்தத் தேடலின் மூலம் என்னைப் போலவே பலரும் இதற்கு பதில் தேடிக் கொண்டு அலைகிறார்கள் என்பது புரிந்தது. இந்தக் கேள்விகளை எழுப்புவதற்கான தார்மீக நியாய உணர்வு அன்றைய காந்திய சிந்தனைவாதிகளிடமும், தீவிர இடதுசாரிகளிடமும், விஞ்ஞானம் படித்தவர்களிடமும் இருப்பதை நான் கண்டேன்.ஆனால் இவர்களில் காந்தியவாதிகள், விஞ்ஞானிகள் போன்றோர் கடுமையான தேசியவாதிகளாக இருந்தார்கள். ஆனால் என்னிடமோ தேசியவாதம் என்பது துளியும் இல்லை. எமர்ஜென்ஸிக்குப் பிறகு தீவிர இடதுசாரிகள் மீதான ஈர்ப்பு எனக்குள் உண்டான பிற்பாடு என்னிடமிருந்த தேசியவாதம் காணாமல் போய்விட்டது.இந்த மாதிரியான கேள்விகளை எழுப்பியதாலேயே என்னுடைய வேலை ஒரு கட்டத்திற்குமேல் போய் விட்டது. இந்தச் செயல் திட்டத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன். என்னுடைய வேலை போனது என்பது தற்செயலான விஷயமல்ல; நான் வெளியேறியாக வேண்டிய ஓர் அழுத்தத்தை அவர்கள் பல தரப்புகளிலிருந்து கொடுத்தார்கள். பிறகுதான் நான் ராஜினாமா செய்தேன். சரி, வேறு எங்காவது வேலைக்குப் போகலாம் என்று முடிவெடுத்த போதே இதே துறை சார்ந்து எங்கு நான் பணிபுரிந்தாலும் இந்த நெருக்கடி தொடரும் என்று மறைமுகமாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இனி இது வேலைக்காகாது என்ற கட்டத்தில் சென்னையிலுள்ள என்னுடைய பேராசிரிய நண்பர்களைப் பிடித்து தத்துவத்தில் பிஹெச்டி படிப்பதற்காக மீண்டும் பம்பாய் சென்றேன். அங்குள்ள பேராசிரியர்களிடம் அறிவியலுக்கும் அதிகாரத்துக்குமான உறவைப் பற்றி விவாதித்தேன். இப்பிரச்னைகளை ஆராய அவர்களால் ஒரு போதும் உதவமுடியாது என்பது ஒரு கட்டத்தில் எனக்குப் புரிந்துபோனது. அதற்குத் தகுந்தாற்போல அவர்களும் ‘இப்பிரச்னைகள் குறித்து விவாதிப்பது, எழுதுவது எல்லாம் இன்றைய நாளில் சாத்தியமில்லை அதற்கான சூழல் இப்போது இந்தியாவில் இல்லை’ என்று விளக்கினார்கள். ‘ஏதாவது நமது சக்திக்கு உட்பட்டு தத்துவம் குறித்து பேசி விவாதித்துக் கொண்டிரு, அதுவே நல்லது’ என அறிவுறுத்தினார்கள். இந்தக் கேள்விகளை எழுப்பினால் நம்மை வெளியில் அனுப்பாத ஒரு துறை இருக்கிறதா என யோசித்தேன். அதற்கு சரியான துறை ஆங்கிலப் பத்திரிகைத் துறைதான் என்று கருதி ‘சண்டே அப்சர்வர்’ பத்திரிகையில் சில கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின் ‘டெக்கான் ஹெரால்ட்’ பத்திரிகையில் வேலை கிடைத்து என் 25_வது வயதில் நிருபராக பெங்களூருக்கு வந்துசேர்ந்தேன். இதே சமயத்தில்தான் எக்ஸிடென்ஷியலிஸத்தைப் பற்றியும் ஸ்ட்ரக்சுரலிஸத்தைப் பற்றியும் நிறைய கட்டுரைகள் ‘படிகள்’ இதழில் வெளி வந்தன. என் வாழ்க்கைக்குள் நடந்த பல பிரச்னைகளை ஒரு தத்துவார்த்த ரீதியில் தமிழில் அன்றைக்கு அணுகிய பத்திரிகைகள் படிகள், பரிமாணம், இலக்கிய வெளிவட்டம் போன்ற பத்திரிகைகள்தான் என்பதை அடித்துச் சொல்வேன். இப்பிரச்னைகள் குறித்த விவாதங்கள் தமிழில் அணுகப்பட்டது, நிகழ்த்தப்பட்டது எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. நானும் தமிழில் அப்போது எழுதிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் நான் எழுதிக் கொண்டிருந்த கணையாழி இப்பிரச்சனைகளை அணுகவோ கண்டுகொள்ளவோ இல்லை. நான் முன்பே சொன்னது போல இடதுசாரித் தன்மையான பத்திரிகைகள்தான் இவற்றை அணுகின. அதுவும் வெறும் உணர்ச்சி ரீதியிலான அணுகல் அல்ல அது; அறிவுரீதியான அணுகல்.அன்றைக்கு இப்பிரச்னையை அணுகிய பத்திரிகைகளுக்குள் எந்த தேசியவாதமும் இல்லை. ஆனால் இன்றைக்கு இருக்கிறது. தமிழ்த் தேசியவாதம் உள்ளிருக்கிறது.ஆக, ஒரு உயர்ஜாதி பின்புலத்திலிருந்து வந்து, பெரிய அலைக்கழிப்புகளுக்கு ஆளாகி, ஒரு சிதறுண்ட மனநிலையில் வாழ்ந்த என்னை இப்பத்திரிகைகள் ஈர்த்தன. இப்பத்திரிகைகளின் சொல்லாடல்கள், வார்த்தைகள், களன்கள், கருத்துக்கள், பின்புலங்கள் எல்லாவற்றையும் என்னுடையதாக நான் உணரத்தொடங்கி இவற்றுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தேன். நான் செயல்படத் தொடங்கிய காலகட்டத்தில் தான் மேற்சொன்ன நபர்களுடனான உறவுகள் எனக்கு கிடைத்தன. இந்த உறவுகள் இன்றுவரை தொடர்கின்றன. என் பின்புலத்தை மீறி வாழ இவையே உதவியிருக்கின்றன. தவிர, ஆங்கிலப்பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இருபதாண்டுக்கால அனுபவம், பல புதிய சமூகக் கதவுகளைத் தானாகத் திறந்தது. இதில் எஸ்.வி. ராஜதுரையுடன் எனக்குண்டான நட்பு ரொம்ப சுவாரஸ்யமானது.தீராநதி: எஸ்.வி.ராஜதுரையுடன் உங்களுக்கு எப்படி நட்பு ஏற்பட்டது?நாகார்ஜுனன்: 1970களிலேயே ஒரு தேர்ந்த அறிவு ஜீவியாக அவர் அடையாளம் காணப்பட்டார். மேலை நாட்டு புதிய கோட்பாடுகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் காரியத்தை அவர் அப்போதே செய்ய ஆரம்பித்திருந்தார். நான் குறிப்பிடும் இவ்வாண்டுகளிலேயே அவரது எக்ஸிடென்ஷியலிஸம் பற்றிய அறிமுக நூல் வெளியானது, கூடவே அந்நியமாதல் பற்றியும் அவர் ஒரு நூலை எழுதி வெளியிட்டார். நெருக்கடி நிலை பிரகடன காலகட்டத்துக்குப் பிறகான சமயத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றிய பல கூட்டங்களில் பங்கு பெற்றிருக்கிறேன். அதுமட்டுமல்லாது ‘மக்கள் சீனம்’ பற்றி நடந்த பல கூட்டங்களில் அவருடன் இருந்திருக்கிறேன். அன்றைக்கு மாம்பலம் ரயில்நிலையம் அருகில் உள்ள மங்கேஷ் தெருவில் இதற்கென்றே ஒரு தனி அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவர்கள் இப்பிரச்னைகள் தொடர்பான சில துண்டறிக்கைகளை வெளியிட்டார்கள். கூட்டங்களை, விவாதங்களை ஒருங்கிணைத்தார்கள். அதிலெல்லாம் நான் பங்கு பெற்றிருக்கிறேன். அப்போது பிற்காலத்தில் இவர் நமக்கு நெருங்கிய நண்பராவார் என்ற எந்த நினைப்பும் எனக்கு இருக்கவில்லை. கார்லோஸ§க்கோ (தமிழவன்), எஸ்.வி.ராஜதுரைக்கோ பல ஆண்டுகள் அரசியல், தத்துவ பின்புலன்கள் இருந்தன. அப்போது நானோ ஒரு சின்னப் பையன். ஆனால் நான் அவர்களிடம் எழுப்பிய அதிகாரத்துக்கும் அறிவியலுக்குமான உறவு என்ன? சமூக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியா போன்ற ஒரு சமுதாயத்தில் ஏன் கம்யூனிஸம் திரும்பத் திரும்ப தோல்வியை அடைகிறது? என்ற பல்வேறு கேள்விகளை, அக்கேள்விகளுக்குள் உள்ள உக்கிரத்தைப் பார்த்து அவர்கள் என்னை மதித்தார்கள். சமமாக பாவித்தார்கள். இந்த அணுகுமுறை என்னை வியப்புக் கொள்ளச் செய்தது. நானும் இவர்களும் எப்படிச் சமமாகிறோம். இவர்கள் என்னை எப்படிச் சமமாக பாவிக்கிறார்கள் என்று யோசித்தபோது ஆச்சர்யத்திற்குள் தள்ளப்பட்டேன். இந்த உறவே பிற்காலத்தில் என்னை நண்பனாக்கியது.
தீராநதி: இந்தக் கால கட்டத்தில்தான் நீங்கள் இந்திய அரசு விண்ணில் ஏவிய ‘அக்னி’ ஏவுகணையைக் குறித்து கட்டுடைப்புச் செய்து ஒரு கட்டுரையை எழுதி இருந்தீர்கள் அல்லவா?
நாகார்ஜுனன்: இந்தக் கேள்வியின் மூலம் நீங்கள் அந்தச் சரடை சரியாகப் பிடித்துவிட்டீர்கள். அது எனக்கு மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. அப்துல் கலாம் வரும் காலங்களில் பெரிய அளவில் ஓர் அரசியல் சக்தியாக வளர்ந்து வருவார் என்பதை சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் அக்கட்டுரையின் மூலம் சொல்லி இருக்கிறேன். அப்படி என்னால் சொல்ல முடிந்திருக்கிறது. ஏனென்றால் நானும் அதில் ஒருவனாக, ஒரு பகுதியாக செயல்பட்டிருக்கிறேன். அப்போதே இது எப்படி வளர்ந்து அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்பதை அனுமானிக்க என்னால் முடிந்திருக்கிறது. அந்தக் கட்டுரை ‘புறப்பாடு’ இதழில் 1989_ஆம் ஆண்டு வெளியானது’. கலாம் ஒரு குறியீடாக வளர்வார் என்கிற அனுமானம் அந்தக் கட்டுரையில் உண்டு.


தீராநதி: இன்றைக்கு அந்தக் குறியீட்டை நிஜ வடிவத்தில் பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?


நாகார்ஜுனன்: ஒரு கோணத்தில் யோசித்தால், இதையெல்லாம் நாம் எப்போதோ பார்த்துவிட்டோம், சொல்லிவிட்டோம் என்பதில் ஆச்சர்யம் உண்டாகிறது. அதையும் தாண்டி இதைச் சொல்லக்கூடிய வாய்ப்பு அன்றைக்கு எனக்கிருந்திருக்கிறது. அதனால் இவற்றைச் சொல்ல முடிந்திருக்கிறது என்றும் தோன்றுகிறது. ஒரு விதத்தில் சொல்லப்போனால் ஒரு மாணவனின் தீர்க்க தரிசனம்தான் அது என்பதாகவும் படுகிறது.தீராநதி: கடந்த ஐந்தாண்டுகளில் அப்துல் கலாம் என்பவர் சமூக மதிப்பீடுகளுக்குள் மிகப் பெரிய Icon னாக கட்டமைக்கப்பட்டு, ஆட்சி செய்திருக்கிறார். இதை வைத்து இன்றைக்கு நம் சமூகத்திற்குள் ‘அறிவியலின் அதிகாரம்’ என்பது என்னவாகச் செயல்படுகிறது எனச் சொல்ல முடியுமா?நாகார்ஜுனன்: கடந்த ஐந்தாண்டுகளில் இல்லை. அவர் 1998_இலேயே ICON _ஆகி விட்டார்.தீராநதி: ஆமாம். ஆனால் சமூக அரசியலுக்குள் இந்தக் குறிப்பிட்ட ஐந்தாண்டுகளில்தான் ஆளுமை செலுத்தி இருக்கிறார். இதை வைத்து சமூகத்திற்குள் ‘அறிவியலின் அதிகாரம்’ என்னவாகச் செயல்படுகிறது என்று விளக்கச் சொல்கிறேன்?நாகார்ஜுனன்: சொல்லப்போனால் அறிவியலின் ஒரு பக்கம்தான் இன்றைக்கு வெளியில் வந்திருக்கிறது. இதைத் தாண்டி பல்வேறு அறிவியல் துறைகள் இந்தியாவிற்குள் இருக்கின்றன. என்னுடைய துணைவி கூட ஒரு வகை சார்ந்த அறிவியலைப் பற்றித்தான் ஆய்வு செய்து வருகிறார். இந்தியா அரசியல் சுதந்திரமடைந்ததற்குப் பின்பு அறிவியலுக்குப் பல வழிகள் திறந்திருந்தன. உதாரணமாக, Larry Baker _இன் மக்களுக்கான Architecture அல்லது ஆதிவாசி சமூகங்கள் பாவிக்கும் மூலிகை மருத்துவம். ஆனால் இவற்றுக்கெல்லாம் வேண்டிய முக்கியத்துவம் தரப்படவில்லை. அதே சமயம் வெறும் அணு இயற்பியலை வைத்து அணுகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டே போவதும் அறிவியல்தான். இப்படி பல அறிவியல் துறைகள் இருக்கின்றன. இவையெல்லாம் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடுகள் கொண்டவை. இவற்றையெல்லாம் ஒன்றுபோல காட்டுகின்ற ஒரு தன்மை இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. அது மிகப் பெரிய பொய். விவசாயத்தை அடிமைப்படுத்தியே செயல்படுத்தி இருக்கின்றன. ‘பசுமைப் புரட்சி’ தான் சரியென்று வாதாடிய எம்.எஸ். சுவாமிநாதன் இன்றைக்கு மூலிகைகளையெல்லாம் சேர்த்துக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மாற்றிச் சொல்லக் கூடியவராக மாறி இருக்கிறார். இது மாதிரி பெரிய புரட்டுகள் எல்லாம் சமூகத்தில் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்றன. செய்திப் பொய்களும், காலப்பொய்களும் உண்மையைப் போல் சமூகத்திற்கு முன் எடுத்து வைக்கப்படுகின்றன. இப்படி அறிவின் முறையும், அறிவின் களன்களும் பலதரப்பட்டதாக இருக்கின்றன. இதில் சிலவற்றிற்கு அரசியல் வர்க்கச் சாய்வு இருப்பதால் சிலவற்றிற்கு பொதுக் களத்தில் அதிக அங்கீகாரமும், அதிக இடமும் இந்தியாவைப் பொறுத்தவரையில் எப்போதும் உண்டு. இந்தியா போன்ற நாட்டில் இரண்டு வகையாக அறிவியலுக்கு முக்கியமான இடம் கொடுக்கப்படுகிறது. ஒன்று _ விண்வெளித்துறை. இரண்டு _ அணுசக்தி. (நான் இவற்றினால் வாழ்க்கை ரீதியான பாதிப்புக்குள்ளானதால் எல்லோரையும் போல விஞ்ஞானியாக இல்லாமல் மொழிக்குள் செயல்படுகின்ற விஞ்ஞானியாக எப்போதோ மாறிவிட்டேன்). ஆக, அரசுக்கும் விஞ்ஞானத்திற்குமான உறவு என்பது இந்தியாவில் தெளிவாக இருக்கிறது. தேச, தேசிய, ராணுவ நலன்கள் சார்ந்தவை அவை. தனியார் நிறுவனங்களின் நலன் சார்ந்தவை என்பதில் சந்தேகமே தேவையில்லை. இதற்கு சமீபத்திய சான்று: தமிழகத்தில் டாடா நிறுவனம் செயல்படுத்தப் போகின்ற டைட்டானியம் ஆக்ஸைடு ஆலை. இந்தச் செயல்திட்டத்தின் மூலமாக தென் தமிழகம் இந்தியாவின் வல்லரசு முஸ்தீபுகளின் களமாக மாறியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்திய அணுசக்தித் துறையோடு காலம் காலமாக டாடா நிறுவனம் என்பது பின்னிப் பிணைந்தது என்பதை நீங்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். ஸ்ட்ரக்சுரலிஸத்தின் அடிப்படையிலான ஓர் ஆய்வை நாம் செய்தோம் என்றால் இதனுடைய ‘லேயர்’கள் நமக்குப் புலப்படும். அதன் மறுபக்கங்கள் என்ன என்பது வெளிவரும். நான் முன்பு கூடங்குளத்தில் செய்ய முற்பட்டது அது போன்ற ஆய்வுதான். நாங்கள் கூடங்குளத்தில் வெளிக்கொண்டு வந்தது அதன் விளைவுகளைத்தான். அதன் விளைவுகளை மக்களிடத்தில் படிப்படியாக வெளியே எடுத்து வந்தோம் என்றால், அணுசக்தியின் மைய அரசியல் என்ன என்பது வெளிவர ஆரம்பித்துவிடும். வெறும் எதிர்ப்பைப் பற்றி மட்டுமே எடுத்துச் சொன்னால் அந்த எதிர்ப்புகளை விட பெரிய எதிர்ப்புகள் வருகின்றபோது முந்தைய எதிர்ப்பு காணாமல் போய்விடும். ஆகையால் வெறும் எதிர்ப்பை மட்டுமே மக்களுக்குப் புரிய வைக்காமல், அதன் மைய அரசியல் சர்வதேச அளவில் எந்த எந்தச் சரடுகளோடு பின்னிப் பிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எடுத்து விளக்கினால் அதன் அபாயம் என்ன என்பது வெளிச்சமாகும். அதுதான் நமக்குத் தேவை. ஆனால், கூடங்குளம் பிரச்சனையில் செய்ததை இன்று மீண்டும் செய்துகாட்ட வேண்டியிருக்கிறது. இல்லையேல் இந்த எதிர்ப்பு சர்வதேச அரசியலை நோக்கிக் குவியாமல் போய்விடும்.


தீராநதி: கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவ அரசு செயல்பட்ட போது அதை எதிர்த்து நிறைய கட்டுரைகளை நீங்கள் எழுதினீர்கள். அதையும் தாண்டி ஓர் இயக்கமாக மாறி களத்தில் நின்று பேசினீர்கள். அச்சமயத்தில் உங்களின் ஆக்ரோஷமான பேச்சுக்கு மக்களிடம் ஆதரவு இருந்ததா? ஏனென்றால், நீங்கள் போராடிக் கொண்டிருக்கின்ற அதே வேளையில் தான் ரஷ்யா அத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்தது? அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?


நாகார்ஜுனன்: மக்கள் மத்தியில் ஆதரவு ஒருபுறம் இருந்தது, ஒருபுறம் இல்லை என்று இரண்டையும் சேர்த்துத்தான் சொல்ல வேண்டும். நானோ அல்லது எங்களுடைய அமைப்போ இந்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்க முடியும் என்ற எந்த எண்ணமும் எனக்கு இருக்கவில்லை. இந்த எதிர்ப்பியக்கத்திற்கு அரசியல் கட்சிகளோ, அறிவுஜீவிகளோ தலைமை தாங்கக் கூடாது என்பதில் நான் ரொம்பத் தெளிவாக இருந்தேன். இந்தப் பார்வை எனக்கு மட்டுமல்ல; என்னுடன் அன்று பணிபுரிந்த எல்லோருக்குமே இருந்தது. அதே கவனத்தோடு அரசியல் தலைவர்களிடம் இந்த எதிர்ப்பியக்கத்தின் தலைமை போகாமல் நாங்கள் பார்த்துக் கொண்டோம். சில நேரங்களில் எங்களையும் மீறி அது அரசியல் தலைவர்களிடம் சென்றது. ஆனால் நாங்கள் அதை வெட்டினோம். அது, அங்குள்ள மக்கள் எதிர்ப்பு இயக்கமாகவே இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் ரொம்பவே தெளிவாக இருந்தோம். என்னுடைய ஆக்ரோஷமான பேச்சுகள் அந்த இலக்கைக் குறித்துத்தான் அமைந்தன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு ஷிtணீtவீst செயல்திட்டத்தை மக்களே எதிர்த்தது என்பது முதன்முதலில் கூடங்குளத்தில்தான் நடந்தது. அதன் தீவிரம் பிறகு பல்வேறு இடங்களுக்குப் பரவியது. பல்வேறு நாடுகளில் அணுசக்தி பற்றி அறிவார்ந்த தளத்தில் நடத்தப்பட்ட தரவுகளை, செய்திகளை மக்களிடத்தில் வெகு சீக்கிரமாக எடுத்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாங்கள் இருந்தோம். அதை நாங்கள் ரொம்ப வேகமாகச் செய்தோம் என்றுதான் நினைக்கிறேன். அதற்காக நீங்கள் குறிப்பிட்டதைப் போல ஆக்ரோஷத்தோடு செயல்பட்டோம். நான் பல சமயங்களில் ஆக்ரோஷம் இல்லாதவனாகவே இருந்திருக்கிறேன். ஆனால் இவ்விஷயத்தில் அறிவின் இடைவெளியை நிரப்புவதற்காக அந்த ஆக்ரோஷம் தேவையாக இருந்தது என்பேன். ‘‘நீங்கள் ஒரு கேட்டலிஸ்ட்டாக இருக்கலாம். ஆனால் நீங்கள் இயக்கம் கட்ட முடியாது. மக்கள்தான் இயக்கத்தை கட்ட வேண்டும். அப்படி இயக்கம் உருவாகும் போது நீங்களும் பங்கேற்கலாம். ஆனால் கேட்டலிஸ்ட்டாக இருப்பது உங்களது பங்கு’’ என்ற மிஷேல் ஃபூக்கோவின் கோட்பாட்டை இந்தப் பிரச்னையில் நான் நடைமுறைப்படுத்திப் பார்த்திருக்கிறேன். ஆனால் அன்று இதை யாரிடமும் நான் சொல்லவில்லை. எனக்குள் ரகசியமாக வைத்துக் கொண்டேன்.அப்போது நாங்கள் கூடங்குளம் பற்றி ஒரு வீடியோ படம் எடுத்தோம். அதற்கு பலர் பொருளாதார ரீதியில் உதவினார்கள். சினிமாத் துறையைச் சார்ந்தவர்கள் உதவினார்கள். இதுவெல்லாம் ஆச்சர்யமான விஷயம். அப்படி நாங்கள் எடுத்த படத்தை மக்களுக்கு அடக்க விலையில் விநியோகித்தோம். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இதுபோல விஷயங்களுக்கு யாரும் உதவ மாட்டார்கள் என்ற பொதுக் கருத்து அப்போது பொய்யானது என்பதற்காகத்தான். ஆக, பத்து ஆண்டுகள் அத்திட்டம் செயல் வடிவம் பெறாமல் காலம் கடத்தப்பட்டதற்கான காரணங்களில் ஒரு காரணமாக எங்களின் அமைப்பு, வீடியோ படம் இருந்தது. இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் ‘இந்து’ பத்திரிகை என்பது இந்திய அணுசக்திக் கொள்கை’யை முழு விருப்பத்துடன் ஆதரிக்கின்ற ஒரு பத்திரிகை. எந்தக் காலகட்டத்திலும் அணுசக்தியினால் பெரிய ஆபத்து இருக்கிறது என்பதை ஏற்காத பத்திரிகை. இதை பத்திரிகை மட்டத்தில் அல்லாமல் ஒரு ‘தேசிய சேவையாக’ அவர்கள் செய்கிறார்கள். ஆனால் அதே பத்திரிகையில் எங்களுடைய கூடங்குளத்திட்ட எதிர்ப்புச் செய்திகளை முதன் முதலாக கொண்டு வந்தோம். அப்படிச் செய்வது அன்று மிகப்பெரிய சவாலாக இருந்தது எங்களுக்கு. இதை மிகப் பெரிய வெற்றியாகத்தான் கருதுகிறேன். ஆக, அன்றைக்கிருந்த ‘இந்து’வின் பத்திரிகை பலத்தை உடைத்தோம். அதில் என் நண்பர் ஏ.எஸ். பன்னீர் செல்வத்திற்குப் பெரிய பங்கிருந்தது.உதாரணமாக கூடங்குளம் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் ராஜீவ் காந்தியுடன் கோர்பச்சேவ் கையெழுத்துப் போட வந்த கட்டத்தில் சரியாக நாங்கள் எங்களின் கேள்விகளை டெல்லியில் வைத்து எழுப்பினோம். அச் செய்தி எல்லா தேசிய பத்திரிகைகளிலும் வெளியாகியது. இந்து பத்திரிகையும் வேறு வழியின்றி அதை வெளியிட்டது.


தீராநதி: இடதுசாரி அரசியலை, இயக்கவாதிகளை நீங்கள் நற்தன்மையோடு பேசுவதால் இந்தக் கேள்வியை எழுப்புகிறேன். பிரான்ஸில் சார்த்தர் அல்ஜீரிய விடுதலைப் போருக்கு ஆதரவாகச் செயல்பட்டபோது அங்கு ஆளும் வர்க்கமான வலதுசாரிகளால் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கப்பட்டார். அதே சார்த்தரை இடதுசாரிகளும் ஒரு கட்டத்தில் தீவிரமாக எதிர்த்தார்கள். ஆல்பர் காம்யு, மரியாக், சார்த்தர் எல்லோரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று எழுதி இடதுசாரிகள் கொச்சைப்படுத்தினார்கள். இந்தியாவில் கூட அருந்ததி ராய் தீவிர இடது சாரிகளான நக்ஸல்பாரிகளை ஆதரித்து அவர்களின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் எனப் பேசிவிட்டு, அவர்கள் அதிகாரத்திற்கு வரும் நாளில் அவர்களால் கொல்லப்படும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன் என்கிறார். இப்படியான ஓர் அணுகுமுறையில் இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா?


நாகார்ஜுனன்: நீங்கள் எழுப்பி இருப்பது ஒரு பெரிய கலாச்சாரக் கேள்வி! இடதுசாரிகள் இந்தியாவிலும் சரி, பிற நாடுகளிலும் சரி வேகமாக நிறுவனமயமாகிவிட்டார்கள். நான் ஏன் மார்க்ஸிய வாதியாக என்னை அறிவித்துக் கொள்ளவில்லை? மார்க்ஸ், போன்றவர்களின் சிந்தனைகளைப் பின்பற்றவில்லை என்றால் என்னைப் போன்ற யாருமே இன்று இல்லை. அதே சமயத்தில் கலாச்சார தளத்தில் ஒப்பீட்டளவில் சுதந்திரத்தன்மை இடதுசாரி நிறுவனங்களிடம் பொதுவாக இருப்பதில்லை. மேலும் பிரான்ஸை வைத்து இக்கேள்வியை நீங்கள் எழுப்புகிறீர்கள். 1968 மாணவர் புரட்சி பிரான்ஸில் நடந்த போது இடதுசாரி கட்சிகள் அப்புரட்சியை எதிர்க்கக் கூடிய ஒரு நிலையில் உட்கார்ந்திருந்தார்கள். கடைசியாக அவர்கள் ஆதரிக்கும் ஒரு நிலை உருவான போது ஏறக்குறைய புரட்சி முடியும் தருணத்தில் இருந்தது. அந்தக் களத்தினுடைய முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிய வருவதற்கு முன்னால் அந்தக் கணம் அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து நழுவிப் போனது. ஆனால் சார்த்தர் அப்புரட்சியின் ஒரு மையமாக இருந்தார். ‘கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது புரட்சியாகும்’. புரட்சி பற்றி மார்க்ஸ் சொன்ன அசாதாரணமான வாக்கியம் இது. வரலாற்றில் திரும்பத் திரும்ப இதேதான் நடக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் புதியதாக நடக்கிறது. புரட்சி எப்படி நடக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியாமல் இருக்கிறது. அதுதான் புரட்சியின் ஆச்சர்யமும்கூட. ரஷ்யாவில் நடந்ததும் இப்படித்தான். இடது சாரிகளின் ஒப்பற்ற தியாகங்களுக்கு முன்னால் நானெல்லாம் ஒன்றுமே இல்லை. ஆனாலும் இவர்களின் அறத்தன்மையில் எங்கேயோ பிழை இருக்கிறது. இன்றைய அரசியலுக்குத் தலைமையேற்கும் போதெல்லாம் நிறுவனமாகி விடுகிறார்கள். என் தூரத்து உறவினர்களில் இரண்டு நபர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளில் முக்கியப் பங்கு வகித்தவர்கள். அவர்கள் இருவரும் பெரும் ஆளுமையாகச் செயல்பட்டிருக்கிறார்கள். ஒருவர் _ என்.கே. கிருஷ்ணன் (தோழியர் பார்வதி கிருஷ்ணனின் கணவர்). இன்னொருவர் கேரளத்துக்காரர். என் துணைவியின் உறவினர். அவர் இப்போது உயிருடன் இல்லை. அவரது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று நினைக்கிறேன். ஹிரேன் முகர்ஜி போன்ற பல தலைவர்களிடம் மணிக்கணக்காக தனியாக அமர்ந்து பேசியிருக்கிறேன். அவர்கள் என் கருத்தைக் காது கொடுத்துக் கேட்டார்கள். தங்களது கட்சி நிறுவனமாகிவிட்டது என்பதை ஒப்புக் கொண்டார்கள். அதனால் சார்த்தரைப் போன்று மாற்றுக் கருத்தை முன் வைப்பவர்கள் தங்களது நிறுவனத் தன்மைக்கு எதிரானவர்கள் என்ற பயத்தோடுதான் பார்த்தார்கள். இன்னும் பார்க்கிறார்கள். கட்டுண்ட அளவில் இப்பிரச்சினைகளை அணுகலாம் என நினைக்கிறார்கள். உதாரணமாக சிறிவிமை எடுத்துக் கொண்டால் ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும். மேல்மட்டத்தில் அவர்களால் வெளியிடப்படும் ‘ஜர்னல் ஆஃப் ஆர்ட்ஸ் _அண்ட் ஐடியாஸ்’ இதழை எடுத்துக் கொண்டால் அதில் எதைப் பற்றியும் கட்டுரைகள் வெளியாகும். ஹோமோஸெக்ஷ§வாலிடி பற்றி அலசல் இருக்கும். ஆனால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்படும் இதழில் என்ன கட்டுரைகள் வருகின்றன? கட்சி நிலைப்பாடு உள்ள கட்டுரைகள் தான் பெரும்பாலும் வரும். தமிழ்ச்செல்வன் செயலாளராக இருந்தாலும் கூட அதுதான் நிலை. ஆக, மேல்மட்டத்தில் பரிசோதனைகள் அனுமதிக்கப்படும். கீழே வரவர இறுகிக் கொள்கிறது.
தீராநதி: சார்த்தர் போன்றோரின் புதிய சிந்தனையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்கள், புதிய புதிய கோட்பாடுகளை தமிழுக்குள் கொண்டு வந்து பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டவர்கள், ஒரு கட்டத்தில் அந்த சித்தாந்தங்களுக்குள்ளாகவே நின்று நிறுவனமயப்பட்டு விடுகிறார்களே ஏன்? மீண்டும் இவர்களும் ஒரு மிநீஷீஸீ னை உருவாக்குவதிலேயே தன் முழுபலத்தையும் செலவிடுகிறார்களே, ஏன்?
நாகார்ஜுனன்: பெரும்பாலும் அறிவுஜீவி என்பவர் ஒரு blind spotஇல், குருட்டு இடத்திற்குள் வாழ்கிறார். நாம் ஒரு சித்தாந்தத்தை, அணுகல் முறையை ஏற்றுக் கொண்டோம். அது மார்க்ஸியமாக இருக்கலாம், அல்லது வேறு ஒன்றாக இருக்கலாம். அப்படி நாம் ஏற்றுக் கொண்ட அந்தத் தத்துவம் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, அல்லது தப்பாக அவ்விஷயத்தைப் பார்க்கிறது, அது பார்க்கும் பார்வையில் ஓர் அறத்தன்மை இல்லை, சமத்துவத் தன்மை இல்லை, பரஸ்பரத் தன்மை இல்லை, இதில் பல குழப்பங்கள் உண்டு என்கிற போது, அதை தைரியமாக சந்திப்பதற்கு அந்த அறிவுஜீவிக்குள் ஓர் அற உணர்வு இல்லை, அறிவு நாணயம் இல்லை என்கிற போது அவர், இதே மாதிரியான தீறீவீஸீபீ, sஜீஷீt க்குள்போகிறார். அப்படி ஓர் அறிவு ஜீவி செய்யும் போது அவர் சார்ந்திருக்கும் சமுதாயம் பெரிய இழப்பைச் சந்திக்கிறது. அந்த அறிவுஜீவி அறம் சார்ந்த தற்கொலை செய்து கொள்கிறார், நீதிசார்ந்த தற்கொலை செய்து கொள்கிறார் என்பேன். வேறு என்னதான் சொல்ல முடியும்?சார்த்தர், தெரிதா, ஃபூக்கோ, மாதிரியானவர்களின் வாழ்க்கை அதீதமான திறந்த வாழ்க்கையாக இருக்கிறது. ஆனாலும் அதற்குள்ளும் சொல்லத்தக்க சில ரகசியங்கள் உண்டு. அப்படி அந்த ரகசியங்கள் வெளியே தெரிய வரும் போது அவர்கள் அப்பிரச்சினையை உயர்ந்த அறத்தன்மையோடு அணுகுகிறார்கள். அதேபோல் என்னிடமும் பல ரகசியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நான் பலருக்கு துரோகங்கள் செய்திருக்கிறேன். அவற்றை நான் மறைக்கவும் பார்த்திருக்கிறேன். அப்படி நீங்கள் சொல்வதைப் போல் நானும் முரட்டுத்தனமாக பல விஷயங்களை இன்னும் மறைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் அவை வெளியில் தெரிய வரும்போது ஏற்றுக் கொண்டு அனுகுவதில் ஒரு அறத்தன்மையை கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன். வெறும் அற உணர்வோடு மட்டும் இப்பிரச்னையை நாம் அனுகினால் ஒரு கிறிஸ்துவ மத கட்டமைப்பிற்குள் நாம் தள்ளப்படும் அபாயம் உண்டு. மண்டியிட்டு பாவமன்னிப்பு கேட்பது போலாகி விடும் அது. ஆகையால் அற உணர்வோடு கூடிய அழகியல் தன்மையில் அதனை நாம் அணுக வேண்டும்.இந்தத் தன்மையை காந்தியிடம் நீங்கள் பார்க்கலாம். சில சமயம் ஐன்ஸ்டீனிடம் நீங்கள் பார்க்கலாம். தாஸ்தாயெவ்ஸ்கி, செக்காவிடம் நீங்கள் பார்க்கலாம். அண்மையில் நெல்சன் மண்டேலாவிடம் இதைப் பார்க்க முடிந்தது. மண்டேலா காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் மீது ஸ்த்ரீலோலன் என்ற குற்றச்சாட்டு எழுந்த போது அவர் உயர்ந்த அறவியல் மட்டத்தில் அதை அணுகினார். இப்படிப் பலரைக் குறிப்பிடலாம். நமது எல்லா அறிவு ஜீவிகளும் இந்த அற_அழகியல் தன்மைக்காக ஒரு முறை தனக்குள்ளாக தற்கொலை செய்து கொள்ள வேண்டும்; வேண்டியிருக்கிறது.


தீராநதி: எந்த ஒரு வரலாற்றை நாம் வாசிக்கும்போதும் அதனுள் வன்மம் என்பதும் கோபம் என்பதும் ஓர் இழையாக ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு கண்ணோட்டத்தில் வரலாறு என்பதை கோபத்தின் வழியாக நாம் அளவிடுகிறோம். வரலாற்றை வெறும் கோபம் என்ற அளவீட்டோடு மட்டுமே பார்ப்பது சரியா? அதன் அடி ஆழத்தில் இருக்கின்ற ஆன்மிக தரிசனத்தையும், விடுதலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டாமா?


நாகார்ஜுனன்: நீங்கள் சொல்லும் கருத்தை நான் இவ்வாறு பார்க்கிறேன். வரலாறு என்பதை நாம் புறம் சார்ந்து மட்டுமே பார்க்கிறோம். ஆனால் வரலாறு வெறும் புறம் சார்ந்தது மட்டுமே அல்ல. மிகப் பெரிய அகப் பாய்ச்சல் என்பது வரலாற்றில் நடக்கும். பெரும் மக்கள் கூட்டமே எது சரி, எது தவறு என்பதில் சில மாற்றங்களை உருவாக்கிக் கொள்ளும். அதற்கு சில சிந்தனையாளர்கள் காரணமாக இருப்பார்கள். அது சிவவாக்கியராக இருக்கலாம். வால்டேராக இருக்கலாம். பெரியாராக இருக்கலாம். அம்பேத்கராக இருக்கலாம். புத்தராக இருக்கலாம். அந்தத் தலைவர்கள் கூட அந்தச் சமயத்தில், தாம் என்ன செய்கிறோம் என்பதை அவ்வளவு தீவிரமாக நினைக்கமாட்டார்கள். ஆனால் ஒரு வரலாற்று ஆய்வாளரின் நிலை அப்படியல்ல; அவருக்குக் கொஞ்சம் இடைவெளி கிடைக்கிறது. வரலாற்றில் நடந்திருக்கும் அகப் பாய்ச்சலையும் புறப் பாய்ச்சலையும் பார்க்கக் கூடிய ஓர் இடம் கிடைக்கிறது. அதைத் தான் நமக்கு மார்க்ஸ் கொடுத்தார். மார்க்ஸ், நீட்ஷே எல்லாம் நம்மிடம் என்ன கொடுத்திருக்கிறார்கள் என்றால் வரலாற்றிற்குள் அகப் பாய்ச்சல், புறப் பாய்ச்சல் என்பது எப்படி நடக்கிறது என்பதைப் பார்க்கும் அளவீடுகளை கொடுத்திருக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு மனித மனங்களில் நடந்த பெரும் சிந்தனைப் பாய்ச்சல் _ அறிவொளிக்குப் பிறகு காண்ட், ஹெகல், ஷோப்பன்ஹீர், Êரூசோ, இப்படி பலர், இவர்களில் ஒருவர்தான் மார்க்ஸ். இவர்கள் எல்லாம் இல்லை என்றால் நமக்கு மார்க்ஸ் இல்லை. இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் வரலாற்றை எப்படிப் பார்ப்பது என்பதற்கான புதிய அறிவுக் களனை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கப்புறம் அது முழுமையடையவில்லை. வரலாற்றில் அகப்புறப் பாய்ச்சல் நடப்பதற்கான சாத்தியப்பாடுகள், காரணங்கள் யாவை என்ற முக்கியமான கேள்வி மீண்டும் மீண்டும் எழுகிறது. இதை ஆராயும் போது அந்த அகப்புறப் பாய்ச்சலுக்குள் சமன்பாடுகள் ஏற்படுகின்றன. உயர்ந்த ஒரு நிலையில் அந்த சமன்பாட்டை நீங்கள் அணுகும்போது, அகம் என்பது ஒரு முழுமையான (முழுமை என்பதை மோசமான அர்த்தத்தில் நான் சொல்லவில்லை) வலிமையாக இருக்கும்போது உங்களுடைய அறம் என்பது பலப்படும். உங்களின் நோக்கமும் அறவழி வந்து சேரும். அகம் என்பது பலவீனப்படும் போது வழிமுறைகளும், நோக்கங்களும் ஒன்றுக்கு ஒன்று எதிராகும். அப்போது அந்தத் தத்துவம் தோற்கும். இது மார்க்ஸியத்திற்கு நடந்திருக்கிறது. உலகத்தில் உயர்ந்த தத்துவம் என்றால் அது மார்க்ஸியம்தான். ஆனால் அது தோற்று இருக்கிறது. அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. எந்த ஒரு உயர்ந்த தத்துவமும் தோற்கும். தோற்கவில்லை என்றால் அது உயர்ந்த தத்துவமில்லை. ஒரு தத்துவம் தோற்றால்தான் அதிலுள்ள உயர்ந்த விஷயங்கள் புலனாகும். தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருந்தால் அது மோசமான தத்துவம்தான். முதலாளித்துவம் ஜெயித்துக் கொண்டே இருக்கிறது, அது சரியா? இல்லை.ஆக, இதையெல்லாம் நுட்பமாக கண்டடைகின்ற, அதாவது வரலாற்றின் விநோதங்களை விநோதங்களாகக் கண்டடைகின்ற டிஸ்கவரி மற்றும் க்யூரியாஸிட்டி மரபு என்பது பற்றிய வலியுறுத்தல் பொதுவாக இந்திய மரபுச் சிந்தனையில் இருப்பதில்லை. ஏற்கெனவே இருக்கின்ற ஒன்றை விளக்குவது என்பது இந்திய மரபில் இருக்கிறது. இந்திய தரிசனங்கள் என்று சொல்லும் ஏழு மரபுகளை நீங்கள் கண்டாலும் அது ஏற்கெனவே இங்கு இருக்க கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. வரலாறு போன்ற ஒரு புதிய அறிவுக்களனை புதிதாக விளையாடி ‘டிஸ்கவர்’ செய்வது என்பது பெரும்பாலும் நடக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அதில் வலியுறுத்தல்கள் இல்லை. இந்திய சமுதாயத்தில் புது விஷயங்களைத் தேடிக் கண்டடைகின்றவனிடம் அது இருக்கிறது. ஆனால் மரபான சிந்தனையாளர்களிடம் அது இல்லை. மிகப்பெரிய பிரச்னை இது. பொருள் முதல்வாதமற்ற சிந்தனை மரபை மட்டுமே எடுத்துக் கொண்டு இதை நான் சொல்கிறேன். நமது மரபில் தரிசனம் என்பதில் வலியுறுத்தல் இருக்கின்றதே ஒழிய தரிசனத்திற்குள்ளாக ஒரு விளையாட்டு இருக்கிறது, அதில் வலியுறுத்தல் இல்லை என்கிறேன். மேற்கத்திய தத்துவங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. ஆனால் கம்மியாக இருக்கிறது. இதுதான் தெரிதாவின் புதிய கண்டுபிடிப்பு.தீராநதி: நீங்கள் வலியுறுத்தும் டிஸ்கவரி, விளையாட்டுடன் கூடிய வலியுறுத்தல் ஜே. கிருஷ்ணமூர்த்தியிடம் நடந்திருக்கிறதல்லவா?நாகார்ஜுனன்: எதிர்மறையாக நடந்திருக்கிறது. 1977லிருந்து 81 வரை பல கட்டங்களாக அவரது பேச்சை நான் கேட்டிருக்கிறேன். எல்லோரும் கிருஷ்ணமூர்த்தியை ஒரு படிக்கல்லாக கடந்ததைப் போல நானும் கடந்தேன். அந்தச் சமூக மட்டத்திற்குள் நான் வாழ்ந்ததால் கடந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் கம்யூனிஸ்ட் கட்சியை விட ஜே.கே.வின் அமைப்பு இறுகிய நிறுவனமாக மாறிவிட்டது. இந்திய மத்திய அரசுடன் ரொம்ப நெருங்கிய நிறுவனமாக அது இருந்தது. அதேசமயம், அவர் இங்கு சுதந்திரத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். என்னால் இந்த முரண்பாட்டை ஜீரணிக்க முடியவில்லை. புப்புல் ஜெயக்கர் தான் அவருடைய நெருங்கிய சீடர். அவர் இந்திரா காந்தியினுடைய உதவியாளர். எதிர் சுதந்திரம் என்ற நிலையில் அரசை ஆதரித்து ஒரு பெரும் கூட்டம் இங்கு வாழ்ந்தது_ அதை எப்படி இவர் சுதந்திரம் என்ற பேச்சின் மூலம் ஆகர்ஷித்தார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் குறிப்பிடுவது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல; ஏனென்றால் நெருக்கடிநிலை காலகட்டத்தில் நாம் இழந்தது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல. பலர் வாழ்வியல் சுதந்திரத்தை இழந்தார்கள். அதை ஜே. கிருஷ்ணமூர்த்தி கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அரசோடு நல்ல உறவுடன் இருந்தார். என்னுடைய சமூக மட்டத்திலுள்ள பலர் ஈர்க்கப்பட்டு அவர் பின்னால் போனார்கள். ஆனால் நான் அதிலிருந்து விலகினேன். மார்க்ஸியத்தின் பாலும் இலக்கியவாதிகளின் பாலும் நான் ஈர்க்கப்பட்டேன். காண்ட், ஃபூக்கோ போன்றவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் தத்துவவாதிகள் வரலாற்றை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். ஜே.கிருஷ்ணமூர்த்தி வரலாற்றை அரூபமாக எதிர்கொண்டார். கட்டுமானமாக வரலாற்றை எதிர்கொள்ளவில்லை. அதுதான் பிரச்னை. எப்படி வரலாற்றை கட்டுமானமாக எதிர்கொள்ள வேண்டுமென்றால், வெறும் நிகழ்வுகளின் மூலமாக மட்டுமல்ல; சிந்தனையோட்டத்தின் மூலமாகவும் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இவர் நிகழ்வுகளை மட்டுமே வைத்துப் பேசுகிறார். உணர்வுகளை மட்டுமே வைத்துப் பேசுகிறார். அதற்கு சில மதிப்புகள் உண்டு. அவற்றை நான் மறுக்கவில்லை. அதனால் தான் அவரது சுதந்திரம் என்ற கருத்தாக்கத்தை நான் இன்று வரை நிராகரிக்கவில்லை. ஆனால் அவரது நிறுவனத்தை என்றோ நிராகரித்து விட்டேன். இங்குதான் என்னுடைய ஒட்டுமொத்த சிந்தனையும் எல்லாமே பிரெஞ்சுப் புரட்சியை நோக்கிப் போகிறது. வேதாந்தத்தை நோக்கிப் போகவில்லை?!


தீராநதி: அப்போது ஒரு காலத்தில் உங்களை நீங்கள் வேதாந்தியாக அறிவித்துக் கொண்டீர்களே, அதற்கு என்ன அர்த்தம்?நாகார்ஜுனன்: அன்றைக்கு எனக்கிருந்த ஒரே வழி என்பது நவீன வேதாந்தம்தான். என்னுடைய பெயரை நான் தேர்ந்தெடுத்ததிலேயே அதற்கான சான்றுகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.


நாகார்ஜுனன் என்ற பெயரை நான் சூட்டிக் கொண்டபோதே எனக்கு இது தெரிந்தது. இந்திய மரபில் நாகார்ஜுனனுக்கு அடுத்த கட்டம் என்ன வருகிறது_ வேதாந்தம். எதிர்மறையான ஒரு இடத்திலிருந்து இப்பெயரை நான் தேர்ந்தெடுத்துத் தான் சூட்டிக் கொண்டேன். என் வாழ்வில் வேதாந்தத்திற்குள் செல்வதற்கான நிறைய அழுத்தங்கள் இருந்தன. ஆனால் நான் போகவில்லை. நவீன வேதாந்தம் என்கின்ற ஒரு பாலத்தை நான் கடந்தேன். அவ்வளவுதான். என்னைப் பொறுத்தளவில் பிரெஞ்சுப் புரட்சி என்பது மீண்டும் மீண்டும் சமுதாயம் கடக்கும் வரலாற்றுக் கட்டம்; அதில் இணையும் மொழி_விஞ்ஞானி நான்; திரும்பத் திரும்ப அதன் மையத்திற்கு நாம் வந்து நின்று கொண்டுதான் இருப்போம்.


தீராநதி: உங்களின் சமூகரீதியான, அதாவது பிராமண அடையாளத்திலிருந்து நான் வேறானவன் என்பதைக் காட்டுவதற்காக நீங்கள் வலிந்து இவற்றை மறுக்கிறீர்களா?


நாகார்ஜுனன்: நான் என்றைக்கோ தன்_அடையாள அரசியலிலிருந்து விலகிவிட்டேன். தன்_அடையாள அரசியல் என்பது ஒரு முட்டுச்சந்து, சிந்தனை ரீதியாக அது முட்டுச்சந்து. அரசியல் ரீதியாக ஆட்களைத் திரட்டுவதற்காக அதை நீங்கள் பயன்படுத்தலாம். அதற்கான சில நியாயங்கள், கட்டாயங்கள் சில காலகட்டங்களில் ஏற்படும். தன்_ அடையாள அரசியல் மனிதர்களை உருவாக்கப் போவதாக வாக்குறுதி கொடுக்கிறது. வாக்குறுதி மட்டுமே கொடுக்கிறது. ஆனால் அது போதாது. மனிதர்கள் என்ற நிலையிலிருந்து உயர்ந்து அவர்களை கலைஞர்களாக்க வேண்டுமே? அதி மனித நேயர்களாக மாற்ற வேண்டுமே? இதை நாம் எப்போது செய்யப்போகிறோம்?! இதுதான் என் கேள்வி. விடுதலை என்பது அடையாளங்களின் ஊடாக அன்றி அடையாளங்களை மீறிச்சென்று கலாரீதியான புரட்சியில் கலப்பதில்தான் பெருகும்.


தீராநதி: நமது பேச்சை உங்களின் படைப்புகளுக்குள் திருப்புவோம். நீங்கள், எம்.டி.எம். போன்றவர் ஒருகாலத்தில் நிறைய வேலை செய்திருக்கிறீர்கள். ஆனால் அவற்றை ஒருபுத்தகமாகத் தொகுத்து அடுத்த தலைமுறையினருக்குக் கொடுப்பதில் ஆர்வமோ, முனைப்போ இருந்ததாகத் தெரியவில்லை. உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் தொடர்ந்து ஒருநிலையில் இல்லாமல் விமீtணீ மனப்பான்மையில் கடந்து கொண்டே இருந்ததால் இவற்றையெல்லாம் தொகுத்துக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடாமல் விட்டுவிட்டீர்களா?


நாகார்ஜுனன்: தொகுக்காமல் இருப்பதை நான் பெரிய பிரச்னையாக நினைக்கவில்லை. 1980களிலிருந்து 1996வரை இடைவெளியே இல்லாமல் கிட்டத்தட்ட 17 வருடங்கள் நான் தொடர்ந்து எழுதி இருக்கிறேன். 1996 லிருந்து இன்றைக்கு வரை கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பெரிய இடைவெளியை விட்டு இருக்கிறேன். ஆனால் இந்தப் பத்து வருடங்களிலும் நான் நிறைய மொழிபெயர்த்திருக்கிறேன், எழுதி இருக்கிறேன். ஆனால் வெளியிடவில்லை. அதுதான் பிரச்னை. 1991_ல் என்னுடைய மொத்த கட்டுரைகளின் தொகுப்பு: கலாச்சாரம், அ_கலாச்சாரம், எதிர்_கலாச்சாரம் புத்தகமாக, வெளிவந்தது. 1992_இல் ஐஸன்ஸ்டைன் சினிமா கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு வெளியானது. 1995_இல் கல்குதிரை சார்பாக வெளிவந்த மார்க்வெஸ் சிறப்பிதழில் என்னுடைய பங்களிப்பு இருந்திருக்கிறது. அது தொடர்பாக பல எதிர்வினை இருக்கிறது. அவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். 1994_95_இல் ‘வித்யாசம்’ பத்திரிகையைக் கூட்டாகக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று இவற்றை நான் திரும்பி எப்படிப் பார்க்கிறேன் என்றால் 1996_லிருந்து திரும்ப நான் மாணவ நிலைக்குத் திரும்பிவிட்டேன். ஒரு புதுமொழியைப் பயில ஆரம்பித்தேன். ஆக, எழுதாமல் இருப்பது, தொகுக்காமல் இருப்பது, வெளியிடாமல் இருப்பது என்ற இம்மூன்றுக்கும் ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. ஆனால் இம்மூன்றையும் நான் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் இருந்தது உங்களின் பொதுவான போக்கில் பார்த்தால் தவறுதான்.தீராநதி: உங்களின் தொடர்நகர்வு தான் இதற்கான காரணமா என்று கேட்கிறேன்?நாகார்ஜுனன்: எதிலிருந்தும் நான் முற்றாக நகரவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நகர்ந்திருக்கிறது. அந்த நகர்வு என்ன என்பதைச் சொல்கிறேன். குருநாதர் என்ற எதிர்பார்ப்பு மனநிலையிலிருந்து நான் விலகி ஒரு மாணவ மனநிலையை எய்திவிட்டேன். நான் மாணவ மனநிலைக்கு மாறியதற்கான காரணம் என்னவென்றால், நம் சூழலில் புற நிலைமைகளும் அக நிலைமைகளும் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை முன்னதாகவே உணர்ந்து கொண்டேன்.இந்தக் காலகட்டத்திற்கு முன்னால் ‘வித்யாசம்’ இதழில் ‘நகல்களின் பரப்பில் கலையின் எதிர்விதி’ என்ற ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அந்தக் கட்டுரையில் ஒரு காலகட்டம் முடியப் போவதை முன்கூட்டியே நான் உணர்ந்திருக்கிறேன். அந்தக் காலகட்டம் 1995இல் முடிவடைகிறது. இந்தக் கட்டத்தில்தான் எங்களைப் போன்றவர்களின் செயல்பாடுகள்_இயக்கங்கள் ஒரு முடிவுக்கு வந்து சேர்கிறது. சில வருடங்கள் கழித்து எஸ்.ராமகிருஷ்ணன் ‘பாபா’ படத்திற்கு கதை வசனம் எழுதப் போகிறார். இதில் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் ஏற்கெனவே திரைப்படங்களுக்கெல்லாம் வசனம் எழுதிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் காலியாகிறார்கள். அந்த இடத்தை நிரப்ப ராமகிருஷ்ணன் தேவைப்படுகிறார். இதைத்தான் ஹெகல் சொல்வார் ‘‘வரலாற்றில் எப்போதும் ஒரு குரங்குத்தன்மை இருக்கிறது’’ என்று. அவர் சொல்வதைப் போல் வரலாற்றிலுள்ள ஒரு குரங்குத் தனம், கோணல் புத்தி என்பது அறியாமலே சில இடங்களில் நம்மைக் கொண்டுபோய் செலுத்தும். ஆனால் இவற்றை ரொம்பக் கூர்மையான சிந்தனையாளன் என்பவன் ஏதோ ஒரு வடிவத்தில் கண்டுபிடித்து விடுவான். இதிலிருந்து தப்பியவர்கள் யாரென்றால் கோணங்கி, எம்.டி.முத்துக்குமாரசாமி, நான், இதையே எதிர்கொண்டு தப்பிய இன்னொருவர் தமிழவன் _ ஜே.கே. மர்மநாவல் என்ற ஒன்றை எழுதி இதிலிருந்து அவர் தப்பினார்.இந்தக் காலகட்டத்தில் என்ன நேர்கிறதென்றால் எல்லோரும் கார்ட்டூன்களாக மாறக்கூடிய அபாயம் ஏற்படுகிறது. பெரிய ஆளுமையாக இருக்கின்றவர் சட்டென்று ஒரு கேலிச் சித்திரமாக மாறுகிறார். இந்த சமயத்தில் ஜெயமோகன் தம்மை ஜெயகாந்தனின் வாரிசாக அறிவிக்கிறார். ஜெயகாந்தன் ஜெயமோகனின் புத்தகங்களைத் தம்மால் படிக்க முடியவில்லை என்று சொல்லிக் கொண்டே அவற்றை மேடையில் வெளியிடுகிறார். ஒருவர் நான் சொல்லுவது தான் நாவல் என்று அறிவிக்கிறார். இதுபோல நிறைய சொல்லலாம்! ஆக இந்த முழு சூழலையும் ஏதோ ஒரு பைத்திய நிலை, பித்த நிலை கவ்வி இருக்கிறதென்று நான் நினைத்தேன்.ஆக, 1996_லிருந்து இதுவரையுள்ள காலகட்டத்தை ஒரு பித்தத்தின் முகம் என்று கூடச் சொல்லலாம். அதன் உச்சகட்ட முடிவு என்பது கனிமொழியின் தற்கால அரசியல் பிரவேசம். அன்றைக்கு கனிமொழியின் முதல் கவிதைத் தொகுப்பான ‘கருவறை வாசனை’ வெளியீட்டு விழாவில் கருணாநிதி ‘‘என்னுடைய கவிதைகளை என் மகள் ஏற்றுக் கொள்ளவில்லை’’ என்று வருத்தப்பட்டுப் பேசுகிறார். அன்றைக்கு கருணாநிதியின் கவிதைகளை ஏற்றுக் கொள்ளாத கனிமொழி இன்று அவரது அரசியலை மட்டுமின்றி எல்லாவற்றையுமே முதலீடாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். நான் முன்பு குறிப்பிட்ட பித்தத்தின் ஓர் உச்சகட்ட முடிவு இதுதான். நகுலன் இந்தப் பித்தத்தினால் சிதைவுக்குள்ளாகி பைத்தியமானவர். அவர் இன்று இறந்து போய் இருக்கிறார். நாங்கள் எல்லாம் இந்தப் பித்தத்தினால் வெறுத்துப் பேசாமல் போனவர்கள். இன்று நாங்கள் எல்லாம் மறுபடியும் பேசத் தொடங்கி இருப்பதும் எதைக் காட்டுகிறது என்றால் ஏதோ ஒரு வகையில் இந்தப் பித்த காலகட்டம் முடிவடைவதைக் காட்டுகிறது. மார்க்வெஸ்ஸின் ஒரு நூற்றாண்டுத் தனிமை மாதிரி எனது பத்தாண்டுத் தனிமை வாசம் இது.


தீராநதி: தத்துவ உறவு என்பது எப்போதும் ஒரு சங்கிலியின் கண்ணி போன்று இலக்கியத்திற்குள் தொடர்ந்து இருக்கிறது. சிலர் இலக்கியத்திற்கு தத்துவம் அவசியமற்ற ஒன்று என்கிறார்கள். இலக்கியத்திற்கு தத்துவத்தின் துணை தேவையற்ற ஒன்றா?


நாகார்ஜுனன்: தத்துவவாதிகளை இலக்கியமும் இலக்கியத்தைத் தத்துவமும் ஆகர்ஷித்த கதை என்பது இந்தியாவில் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. ராமானுஜர் ஆண்டாளின் பரம ரசிகர். Interpretr. வைணவ மரபிலுள்ள பாஷ்யக்காரர்கள் யாரிடம் போய் நீங்கள் கேட்டாலும் இதை அவர்கள் சொல்வார்கள். நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு உரை எழுதுவது, அதை தத்துவப்படுத்துவதும்தான் என் வேலையே என்று அவர் சொல்கிறார். அவருடைய தத்துவம் பொய்யானதல்ல; சமூக இயக்கம் கொண்டது என்பதை வைணவம் குறித்த தொ. பரமசிவத்தினுடைய புத்தகத்திலிருந்தோ சுவிரா ஜெய்ஸ்வால் புத்தகத்திலிருந்தோ இன்றைக்கு நாம் தெரிந்து கொள்கிறோம். வைணவத்தில் இப்படி ஒரு சுவாரஸ்யமான சீர்த்திருத்தப் பரிசளிப்பு தென்னாட்டிலிருந்து அது புறப்பட்டுப் போகிறது. இந்திய வரலாற்றில் அதை நாம் பார்க்க முடிகிறது. இஸ்லாமிய கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டால், சூஃபிக்கள் பல பேர் கவிஞர்கள், இசைக் கலைஞர்கள், தத்துவவாதிகளாக இருந்திருக்கிறார்கள். பல மதங்களுக்குள் அவர்கள் ஓர் இணைப்பை ஏற்படுத்துகிறார்கள். பௌத்தத்தின் ‘மிலிந்த பன்ஹ’ புத்தகம் இலக்கியமா, தத்துவமா என்று போர்ஹெ இன்று சிலாகித்து எழுதுகிறார்

Thursday, November 29, 2007

திராவிடம்தான் எங்கள் கலாச்சாரம் - மமி யமதா (ஜப்பான்)

சமீபத்தில் சாகித்ய அகாடமி நடத்திய எழுத்தாளர் சந்திப்புக்காக சென்னை வந்திருந்தார் ஜப்பானிய எழுத்தாளர் மமியமதா. உற்சாகமான அதிகாலை பொழுதில் சன்னமான சிலிர் காற்று நம்மை வருட நுங்கம்பாக்கம் கௌதம் மெனார் ஹோட்டலில் தங்கி இருந்த அவரை சந்தித்தோம்.
47 வயதை தாண்டிவிட்ட மமியமதா ஜப்பானியருக்கே செல்லுபடியாகக் கூடிய சுறுசுறுப்புடன் பேசினார்.

‘‘இரண்டாம் உலகப் போர் நிகழ்வதற்கு முன்னால் எங்களின் சமூக அமைப்பிற்குள் பிரமிடு வடிவிலான சாதிய ஏற்றத் தாழ்வுகள் நிலவின. மேல் நிலையில் சாமுராய் வகுப்பினர் இருந்தார்கள். அதற்கடுத்த நிலையில் விவசாயிகள், அதற்குக் கீழாக வணிகர்கள், அதற்கும் அடிமட்டத்தில் இரண்டு சாதிப்பிரிவினர்கள் வாழ்ந்தார்கள்.
எவ்வளவுதான் செல்வந்தர்களாக கீழ் படி நிலையில் உள்ளவர்கள் இருந்தாலும் அவர்கள் யாரும் சாமுராய் ஆக முடியாது. நாட்டிற்காக பணியாற்றும் இராணுவத்தில்கூட சேர முடியாது. நாட்டின் கௌரவமான பதவிகளுக்கு எல்லாம் சாமுராய் வகுப்பினர்கள்தான் செல்ல முடியும் என்ற ஒரு நிலையும் வழக்கமும் இருந்தது. சாமுராய் என்று சொல்லிக் கொள்ளும் சமூகத்தினர் எவ்வளவு பரம ஏழையாகக்கூட இருக்கலாம். ஆனாலும் அவர்தான் சமூகத்தில் உசத்தியாகக் கருதப்படுவார். இந்த மாதிரியான படிநிலைகள் இரண்டாம் உலகப் போருக்கு _ அதாவது 1946_க்குப் பின்பு முற்றிலுமாக உடைந்தன.
ஒருவிதத்தில் பார்க்கப் போனால் எங்கள் நாட்டின் மீது நடந்த போர் எங்களுக்கு வேறு மாதிரியான சமூக விடுதலையை வழங்கி இருக்கிறது’’ என்றவர் தொடர்ந்தார்.
‘‘எல்லோரும் நினைப்பது போல சீன எழுத்தும், எங்களின் எழுத்தும் ஒன்றானவை அல்ல. வாக்கிய அமைப்பிலிருந்து உச்சரிப்பு முறை, இலக்கண அமைப்பு எல்லாமே வேறு வேறானது.
திராவிட மொழியின் வாக்கிய அமைப்பும் எங்களின் வாக்கிய அமைப்பும் ஒன்றானவை. எங்களின் கலாசாரத்திற்கும் திராவிடக் கலா சாரத்திற்கும் பல்வேறு மட்டங்களில் ஒற்றுமை இருக்கிறது. திராவிடக் கலாசாரத்தின் நீட்சியாக வந்ததுதான் ஜப்பானிய கலாசாரம் என்று உறுதியாக நம்புபவள் நான்’’ என்றார்.
‘உங்களின் நாட்டில் ரஜினி நடித்த ‘முத்து’ படம் சக்கைப் போடு போட்டதாமே?’ என்றோம்.
‘‘ஒரே மாதிரியான படங்களையே பார்த்துப் பார்த்து சலித்துப் போன எங்கள் மக்களுக்கு அப்படம் முற்றிலும் மசாலாத்தனமான படமாகத் தெரிந்தபோது ஏதோ புதுவிதமாக இருக்கிறதே என்று ஆச்சர்யப்பட்டுப் போய் பார்த்தார்கள். ரஜினியின் ஒரு படம் மட்டும்தானே எங்கள் நாட்டில் சக்கைப்போடு போட்டது. பிறகு வந்த படங்கள் ஓடவில்லையே? அது சரி, உங்களால் எப்படி ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு இரண்டு மணி நேரம் சினிமா பார்க்க முடிகிறது? நிச்சயமாக எங்களால் இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் சும்மா உட்காரவே முடியாது. டி.வி.டி. வாங்கிக் கொண்டுபோய் வீட்டில் போட்டுப் பார்த்துக் கொண்டே அன்றைய வேலைகளைச் செய்து கொண்டே இருப்போம்’’ என்கிறார் மமி யமதா. மமி என்றால் அழகு என்று பொருளாம்..

நன்றி: குமுதம்