Thursday, June 07, 2007

ஓரான் பாமுக் - அப்பாவின் சூட்கேஸ் தமிழில்: ஜி குப்புசாமி




என் அப்பா காலமாவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு, அவரது எழுத்துக்கள், கைப்பிரதிகள், குறிப்பேடுகள் அடங்கிய ஒரு சிறிய சூட்கேஸை என்னிடம் கொடுத்தார். அவரது வழக்கமான கேலியும் கிண்டலும் கலந்த தொனியில், அவர் போய்ச் சேர்ந்த பிறகு, அவற்றை நான் படிக்க வேண்டும் என்றார். அதாவது அவர் இந்த உலகை விட்டுப் போய்ச் சேர்ந்த பிறகு. லேசான சங்கடத்தோடு, ‘‘சும்மா எடுத்துப்பார்" என்றார். ‘‘உள்ளே இருப்பதில் ஏதாவது பிரயோஜனப்படுமா என்று பார். நான் போன பிறகு வேண்டுமானால், அவற்றில் தேர்ந்தெடுத்து வெளியிட்டுக் கொள்".நாங்களிருவரும் புத்தகங்கள் சூழ்ந்திருக்கும் எனது வாசிப்பறையில் இருந்தோம். வலி மிகுந்த சுமையன்றை இறக்கி வைக்க விரும்பும் ஒரு மனிதனைப்போல அப்பா முன்னும் பின்னும் நடந்து, அந்த சூட்கேஸை வைப்பதற்கான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். கடைசியில் அதைக் கண்ணுக்கு உறுத்தாத ஒரு மூளையில் மெதுவாக வைத்தார். நாங்கள் இருவரும் எப்போதும் மறந்திராத ஒரு பாசாங்குத் தருணம் அது. அது கடந்ததும், வாழ்க்கையை லேசாக எடுத்துக் கொள்கிற, கேலியும் கிண்டலுமான எங்கள் ஆளுமைகள் தலையெடுக்க, எங்களது வழக்கமான வேடங்களுக்குத் திரும்பினோம். தினசரி வாழ்க்கையின் அற்பமான விஷயங்களைப் பற்றி, துருக்கியின் முடியவே முடியாத அரசியல் சிக்கல்களைப் பற்றி, பெரும்பாலும் நஷ்டத்தில் முடிகிற என் அப்பாவின் வியாபார முயற்சிகளைப் பற்றி அதிகம் விசனப்படாமல் எப்போதும் போல பேசிக் கொண்டிருந்தோம்.



அப்பா அங்கிருந்து சென்ற பின், அந்த சூட்கேஸைக் கடந்து அப்படியும் இப்படியுமாக பல நாட்கள் சென்று வந்தும், ஒருமுறை கூட அதைத் தொட்டுப் பார்க்கவில்லையென்பதும் என் நினைவுக்கு வருகிறது. இந்தச் சிறிய, கருப்புநிற, தோல் சூட்கேஸ§ம் அதன் பூட்டும், அதன் மழுங்கல் முனைகளும் எனக்கு ஏற்கெனவே பரிச்சயமானதுதான். குறைந்த தூரப் பயணங்களுக்கும், வேலைக்குச் செல்லும்போது பதிவேடுகளை எடுத்துச் செல்வதற்கும் அப்பா அதனை எடுத்துச் செல்வார். என் சிறு வயதில் அப்பா வெளியூர் சென்று திரும்பினால், இந்தச் சின்ன சூட்கேஸைத் திறந்து உள்ளேயிருப்பவற்றை நான் குடாய்ந்ததும், கொலோன் வாசனையில் வெளிநாட்டுச் சரக்குகளை நோண்டியதும் ஞாபகத்தில் வந்தன. இந்த சூட்கேஸ் ஒரு பரிச்சயமான சிநேகிதன். என் பிள்ளைப் பிராயத்தின், என் கடந்த காலத்தின் ஒரு வலுவான நினைவூட்டி. ஆனால், இப்போது என்னால் அதைத் தொடக் கூட முடியாது. ஏன்? அதனுள்ளே பொதிந்திருக்கும் மர்மங்களில்தான் என்பதில் சந்தேகமில்லை.


இந்த கனத்தின் அர்த்தத்தை இப்போது நான் பேசப் போகிறேன். ஒருவன் அறை ஒன்றிற்குள் தன்னை அடைத்துக் கொண்டு, ஒரு மேஜையில் அமர்ந்து, தன் சுயத்தை வெளிப்படுத்தும் ஒரு சிருஷ்டி மூலையை அடைந்து தன்னைப் பதிந்து கொண்டானென்றால், அதுதான் அவன் படைப்பதும் _ இலக்கியத்தின் அர்த்தமும்.


என் அப்பாவின் சூட்கேஸை இறுதியில் நான் தீண்டியபோதுகூட, அதைத் திறந்து பார்க்கும் தைரியம் எனக்கு வரவில்லை. ஆனால் அந்த நோட்டுப் புத்தகங்கள் சிலவற்றில் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரியும். சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த இந்தக் கத்தை கத்தையான விஷயங்களைப் பற்றி நான் கேள்விப்படுவது இதுதான் முதல் முறையுமல்ல. என் அப்பாவிற்கு ஒரு மிகப் பெரிய நூலகம் இருந்தது; அவரது இளமையில், 1940_களின் இறுதியில் அவர் ஒரு இஸ்தான்புல் கவிஞனாக ஆக விரும்பி வாலெரியை துருக்கிய மொழியில் மொழிபெயர்த்திருந்தார். ஆனால், சொற்ப வாசகர்களேயிருக்கும் ஓர் ஏழை தேசத்தில் கவிதை எழுதி வாழ்க்கை நடத்துவதை அவர் விரும்பியிருக்கவில்லை. என் அப்பாவின் அப்பா, என் தாத்தா ஒரு செல்வந்தரான வணிகராக இருந்தவர். என் அப்பா ஒரு வசதியான சௌகரியமான வாழ்க்கையைச் சிறுவயதிலும், இளம் பருவத்திலும் அனுபவித்திருக்கிறார். இலக்கியத்தின் பொருட்டும், எழுதுவதற்காகவும் சிரமஜீவனம் நடத்த அவருக்கு விருப்பமில்லை. வாழ்க்கையை அதன் எல்லா அழகுகளோடும் விரும்பியவர் அவர் _ இதுவரைக்கும் எனக்குப் புரிகிறது.


என் அப்பாவின் சூட்கேஸிற்குள் இருப்பவற்றிலிருந்து என்னை தூர விலக்கி வைத்திருக்கும் முதல் விஷயம், வாசிக்கக் கிடைப்பது எனக்கு விருப்பமில்லாமற் போகலாம் என்ற பயம் தான். ஏனென்றால், இது என் அப்பாவிற்குத் தெரியும் என்பதால்தான் முன்னெச்சரிக்கையாக அவற்றை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர்போல நடித்தார். இருபத்தைந்து வருடங்கள் எழுத்தாளனாகப் பணியாற்றியபின் இதைப் பார்ப்பதற்கு எனக்கு வலியெடுத்தது. ஆனால், என் அப்பா இலக்கியத்தைப் போதியளவுக்கு தீவிரமாக எடுத்துக் கொள்ளாததற்காக, அவர் மீது கோபித்துக் கொள்ளக் கூட நான் விரும்பவில்லை… என் நிஜமான பயம், நான் தெரிந்து கொள்ளவோ, கண்டறிந்து கொள்ளவோ விரும்பாத நெருக்கடியான விஷயம், ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராக என் அப்பா இருக்கக் கூடிய சாத்தியம் தான். இந்த பயத்தினால்தான் என் அப்பாவின் சூட்கேஸை என்னால் திறக்க இயலவில்லை. அதைவிட மோசம் என்னவென்றால், இதை என்னால் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள முடியாதது. என் அப்பாவின் சூட்கேஸிலிருந்து உண்மையானதும், மகத்தானதுமான இலக்கியம் வெளிவருமானால், என் அப்பாவிற்குள் முற்றிலும் வேறுபட்ட ஒரு மனிதர் வாழ்ந்திருப்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டி வரும். இது பீதியேற்படுத்தும் ஒரு சாத்திய கூறு. ஏனெனில் என் இந்த முதிர்ந்த வயதில் கூட என் அப்பாவை என் அப்பாவாக மட்டுமே நினைக்க விரும்பினேன். ஓர் எழுத்தாளனாக அல்ல.


ஓர் எழுத்தாளன் என்பவன் தனக்குள்ளிருக்கும் இரண்டாவது சுயத்தையும், அவனை அவனாக ஆக்கும் உலகையும் கண்டறிய வருடக் கணக்காக பொறுமையோடு தேடிவருபவன்: எழுதுவது என்பதைப் பற்றி நான் பேசும்போது என் மனதிற்கு முதலில் வருவது ஒரு நாவலோ, ஒரு கவிதையோ அல்லது இலக்கியப் பாரம்பரியமோ அல்ல, ஓர் அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டு, ஒரு மேஜையில் அமர்ந்து, தனியாக, தனக்குள்ளாகத் திரும்பி, வார்த்தைகளால் ஒரு புதிய உலகை அதன் நிழல்களுக்கு மத்தியில் கட்டமைக்கும் ஒரு மனிதன்தான். இவன் அல்லது இவள் ஒரு தட்டச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம், கம்ப்யூட்டரின் சௌகரியத்தால் ஆதாயம் பெறலாம், அல்லது நான் முப்பது வருடங்களாகச் செய்து வருவதைப்போல தாளின் மீது பேனாவைப் பதித்து எழுதலாம். எழுதும்போது அவன் தேனீரோ, காபியோ அருந்தலாம், அல்லது சிகரெட் புகைக்கலாம். அவ்வப்போது மேஜையிலிருந்து எழுந்து சன்னலுக்கு வெளியே, தெருவில் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்க்கலாம், அவனுக்கு அதிருஷ்டமிருந்தால் மரங்களும் காட்சிகளும் கூட தெரியலாம், அல்லது ஒரு கருப்புச் சுவரை அவன் வெறிக்கலாம். அவன் கவிதைகள், நாடகங்கள் அல்லது என்னைப் போல நாவல்கள் எழுதலாம். இந்த எல்லா வேறுபாடுகளும் அவன் மேஜையில் அமர்ந்து தனக்குள் பொறுமையாக திரும்பிக் கொள்வதற்குப் பிறகு வருபவை. எழுதுவது என்பது இந்த உள்நோக்கிய பார்வையை வார்த்தைகளாக மாற்றுவது, தனக்குள் அவன் அடங்கும் போது அவன் கடந்து வருகிற உலகைக் கவனித்து ஆய்வது, இதனைப் பொறுமையோடும், பிடிவாதத்தோடும், உவகையோடும் செய்வது. என் மேஜையில் நாட்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக அமர்ந்து வெற்றுத்தாளில் புதிய வார்த்தைகளை மெதுவாகச் சேர்த்துக் கொண்டு வரும்போது, ஒரு புதிய உலகை நான் படைப்பது போல, ஒரு பாலத்தை அல்லது ஒரு கோபுரத்தை ஒவ்வொரு கல்லாகக் கட்டுவதைப் போல எனக்குள்ளிருக்கும் அந்த மற்றொருவனைக் கட்டமைக்கிற மாதிரி உணர்கிறேன். எழுத்தாளர்களான நாங்கள் பயன்படுத்தும் கற்கள், வார்த்தைகள். அவற்றை எங்கள் கைகளில் ஏந்தி ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் இணைந்திருக்கும் வழி வகைகளை உணர்ந்து சில நேரங்களில் அவற்றைத் தூர வைத்துப் பார்த்து, சில வேளைகளில் எங்கள் விரல்களாலும் பேனாக்களின் முனைகளாலும் ஏறக்குறைய தட்டிக் கொடுத்து, சீராட்டி அவற்றை எடைபோட்டு, அங்குமிங்கும் நகர்த்தியமைத்து, வருடவருடமாகப் பொறுமையோடும், நம்பிக்கையோடும் புதிய உலகங்களை உருவாக்குகிறோம்.


எழுத்தாளனின் ரகசியம் அகத்தூண்டுதல் அல்ல. அது எங்கிருந்து வருகிறதென்பது எப்போதுமே தெளிவாகத் தெரிவதில்லை. அது அவனது மனவுறுதி, அவனது பொறுமை. ‘ஊசியை வைத்துக் கொண்டு கிணறு வெட்டுவதைப் போல’ என்ற அழகான துருக்கியப் பழமொழி எழுத்தாளர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் கூறப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. பழங்கதைகளில் எனக்கு ஃபெர்ஹாத்தின் பொறுமை எனக்குப் பிடித்தமானது. காதலுக்காக அவன் மலைகளைக் குடைந்து செல்கிறான், அதை நான் புரிந்து கொள்ளவும் செய்கிறேன். எனது My Name is Red நாவலில் பண்டைக்கால பாரசீக நுண்ணோவியர்கள் பற்பல வருடங்களாக அதே குதிரை ஓவியத்தை, அதே ஆர்வத்தோடு, ஒவ்வொரு தூரிகைக் கீற்றையும் மனப்பாடமாக வரைந்து கொண்டிருப்பதை, அவர்கள் கண்களைக் கட்டிவிட்டால் கூட அந்த அழகிய குதிரையை அதே நுணுக்கத்தோடு அவர்களால் வரைய முடியுமென்பதை நான் எழுதியபோது, நான் கூறிக்கொண்டிருப்பது எழுத்து வேலையை, என் சொந்த வாழ்க்கையைப் பற்றி என்று அறிந்தேன். ஓர் எழுத்தாளன் தன் சொந்தக் கதையை கூற வேண்டுமென்றால் _ அதை மெதுவாக, நிதானமாகக் கூற வேண்டும், அது மற்றவர்களைப் பற்றிய ஒரு கதை என்பதைப்போல, தனக்குள் உருவான கதையின் சக்தி மேலெழும்பி வருவதை உணர வேண்டுமென்றால், ஒரு மேஜையில் அமர்ந்து தன்னை இந்தக் கலைக்கு, இந்தக் கை வினைக்குப் பொறுமையாக ஒப்புவிக்க வேண்டுமென்றால், முதலில் அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை தரப்பட்டிருக்க வேண்டும். அகத்தூண்டல் தேவதை (இது சிலரிடம் அடிக்கடி வந்து ஆசீர்வதிக்கிறது, சிலரிடம் அரிதாகவே செல்கிறது) ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர்களையே ஆதரிக்கிறது. ஓர் எழுத்தாளன் பெரும்பாலும் தனிமையாக உணரும்போது, அவனது முயற்சிகள் அவனது கனவுகள் அவனது எழுத்தின் மதிப்பு ஆகியவற்றைப் பற்றி பெரிதும் ஐயுற்றிருக்கும் போது, அவனது கதையை அவனது கதையென்றே அவன் நினைக்கும் போது, அத்தகைய தருணங்களில் அவனுக்குக் கதைகளையும், பிம்பங்களையும், கனவுகளையும் காட்டி, அவன் கட்டியெழுப்ப விரும்பும் உலகத்தை, அந்தத் தேவதை வரைந்தெடுக்கும். என் வாழ்க்கை முழுக்க அர்ப்பணித்து எழுதி வந்திருக்கும் புத்தகங்களை நான் திரும்ப யோசிக்கும் போது, என்னை மிக உன்னதமான மகிழ்ச்சியில் திளைக்க வைத்த வாக்கியங்கள், கனவுகள், பக்கங்கள் எல்லாமே என் சொந்தக் கற்பனையிலிருந்து வந்தவையல்ல என்றும், வேறேதோ ஒரு சக்தி அவற்றைக் கண்டெடுத்து எனக்குத் தாராளமாக வழங்கியிருக்கிறதென்றும் நான் உணர்ந்த தருணங்களால் பெரிதும் ஆச்சரியமுற்றிருக்கிறேன்.
என் அப்பாவின் சூட்கேஸைத் திறந்து அவரது நோட்டுப்புத்தகங்களை நான் வாசிக்க பயந்ததற்குக் காரணம் நான் பொறுத்துக்கொண்ட சிரமங்களை அவரால் தாங்கமுடியாது என்று நான் அறிந்திருந்தேன். தனிமையையல்ல அவர் நேசித்தது, நண்பர்களோடு கூட்டங்கள், ஓவியக் கண்காட்சிகள், வேடிக்கை, கம்பெனி என்று வாழும் வாழ்க்கையைத்தான். ஆனால் பிற்பாடு என் எண்ணங்கள் வேறு திக்கில் திரும்பின. இத்தகைய எண்ணங்கள், துறவறமும் பொறுமையுமான இத்தகைய கனவுகள் எல்லாமே என் சொந்த வாழ்க்கையிலிருந்தும், எழுத்தாளனாக என் சொந்த அனுபவத்திலிருந்தும் நான் பெற்றிருந்த முன் முடிவுகளே. கூட்டத்திற்கு மத்தியிலும், வீட்டில் குடும்பத்தினரின் சலசலப்பிற்கிடையிலும் எழுதுகிற அற்புதமான எழுத்தாளர்கள் பலர் உண்டு. அது மட்டுமின்றி, நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது, என் அப்பா குடும்ப வாழ்க்கையின் சுவாரஸ்யத்தில் சலிப்புற்று, எங்களையெல்லாம் விட்டுவிட்டு பாரீசுக்குப் போய்விடுவார். பல எழுத்தாளர்களைப் போல அங்கே ஓட்டல் அறையில் அமர்ந்து நோட்டுப் புத்தகங்களை நிரப்பித் தள்ளுவார். அந்த நோட்டுப் புத்தகங்களில் சில இந்த சூட்கேஸில் இருக்கின்றன என்று தெரியும். ஏனென்றால், அதை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு சில வருடங்கள் முந்தி என் அப்பாவே தன் வாழ்க்கையின் அந்தக் காலகட்டத்தைப் பற்றி என்னிடம் பேசத் தொடங்கியிருக்கிறார். அந்த வருடங்களைப் பற்றி நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே அவர் கூறியிருந்தாலும், தனது வடுப்பாடுகளை, எழுத்தாளனாக ஆகவேண்டுமென்ற அவரது கனவுகளை அல்லது அவரது ஓட்டல் அறையில் அவரைப் பீடித்த தன்னடையாளம் குறித்த கேள்விகளை அவர் குறிப்பிட்டதில்லை. பதிலாக, பாரீஸ் நகர நடைபாதைகளில் சார்த்தரை அவர் எப்போதும் பார்ப்பதைப் பற்றி, அவர் படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள் பற்றி, மிக முக்கியமான செய்தியைப் பகிர்ந்துகொள்பவரைப்போல மனமார்ந்த பெருமிதத்தோடு விவரிப்பார். நான் ஒரு எழுத்தாளனாக ஆனதற்கு என் அப்பா பாஷாக்களையும் மாபெரும் மதத்தலைவர்களையும் பற்றிப் பேசுவதைவிட, எழுத்தாளர்களின் உலகைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்ததும் ஓரளவுக்கு காரணம் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. எனவே, என் அப்பாவின் நோட்டுப் புத்தகங்களைப் படிக்கும் போது, இதை மனதில் வைத்துக் கொண்டு அவரது மிகப்பெரிய நூலகத்திற்கு நான் எந்தளவுக்குக் கடன்பட்டிருக்கிறேன் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அப்பா எங்களோடு வசிக்கும்போது, அவர் என்னைப் போலவே புத்தகங்களோடும் சிந்தனைகளோடும் தனியாக இருப்பதையே விரும்பினார் என்பதையும், அவரது எழுத்தின் இலக்கியத்தரத்தைப் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் நான் மனதில் கொள்ள வேண்டும். ஆனால், அப்பா எனக்கு ஆஸ்தியாக விட்டுச் சென்ற சூட்கேஸைப் பார்க்கும்போது, இந்த விஷயத்தை என்னால் செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றியது. அவரது புத்தகங்களுக்கு முன்னால் போடப்பட்டிருக்கும் திவானில் அப்பா சாய்ந்துகொண்டு கையிலிருக்கும் புத்தகமோ, பத்திரிகையோ நழுவியது தெரியாமல் கனவில் மூழ்கி, தன் எண்ணங்களில் நெடுநேரம் தொலைந்து போயிருப்பார். அவர் ஜோக் அடிக்கும்போதும், கிண்டல் செய்யும் போதும், வீட்டுச் சச்சரவுகளின் போதும் இருக்கும் முகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாவத்தில் அவர் முகம் இருப்பதை நான் பார்த்தபோது உள்நோக்கிப் பார்க்கும் பார்வையை நான் முதன் முதலாகத் தரிசித்தது அப்போதுதான். குறிப்பாக, என் பிள்ளைப்பருவத்தில், என் முன் இளம்பருவத்தில், பயத்தோடு கூடிய புரிதலாக அவர் மனநிறைவின்றி இருக்கிறார் என்பதை உணரமுடிந்தது. இப்போது பற்பல வருடங்கள் கழித்து, இந்த மனநிறைவின்மைதான் ஒரு மனிதனை எழுத்தாளனாக்கும் ஆதாரக்கூறு என்று புரிகிறது. எழுத்தாளனாவதற்குப் பொறுமையும், கடும் உழைப்பும் மட்டும் போதாது; கூட்டம், நண்பர்கள், சாதாரண விஷயங்கள், தினசரி வாழ்வு போன்றவற்றிலிருந்து பிய்த்துக் கொண்டு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தை அவன் முதலில் உணர வேண்டும். பின் ஓர் அறைக்குள் புகுந்து தன்னை தாழிட்டுக் கொள்ளவேண்டும். நம் எழுத்துக்களில் ஓர் ஆழமான உலகத்தை உருவாக்குவதற்காக பொறுமையையும் நம்பிக்கையையும் வேண்டி நிற்கிறோம். ஆனால் தன்னை ஓர் அறையில் அடைத்துக் கொள்ளும் இச்சை மட்டுமே நம்மைச் செயலாற்ற செலுத்துகிறது. தன் இதயத்திற்குள் புத்தகங்களைக் கொண்டு சென்று வாசிக்கிற, தன் சுயபிரக்ஞையின் குரலுக்கு மட்டும் செவிசாய்க்கிற, மற்றவர்களின் வார்த்தைகளோடு பூசலிடுகிற, தன் புத்தகங்களுடன் விவாதத்தில் இறங்குவதால் தன் சொந்தச் சிந்தனைகளையும் தன் சொந்த உலகத்தையும் வளர்த்தெடுக்கிற இத்தகைய சுதந்திரமான எழுத்தாளனுக்கு முன்னோடி மிக நிச்சயமாக நவீன இலக்கியத்தின்ஆரம்ப நாட்களில் மான்டெய்ன்தான். என் அப்பா அடிக்கடி எடுத்து வாசித்துக் கொண்டிருந்ததும், எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் மான்டெய்னைத்தான். கிழக்கிலோ அல்லது மேற்கிலோ உலகில் எங்கேயிருந்தாலும் சமூகத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு, தமது அறையில் அவர்களது புத்தகங்களோடு அடைபட்டுக் கொள்ளும் எழுத்தாளர்களின் மரபில் வருபவன்தான் நானும் என்று கூறிக்கொள்வேன். உண்மையான இலக்கியத்தின் துவக்கப்புள்ளி என்பது, அவன் தனது புத்தகங்களோடு அறைக்குள் சென்று அடைத்துக் கொள்வதாகத்தான் இருக்க முடியும்.


நம்மை அறைக்குள் அடைத்துக்கொண்ட பிறகு, நாம் நினைத்தளவுக்கு நாம் தனியாக இல்லையென்பதை சீக்கிரமே கண்டுகொள்வோம். நமக்கு முன் வந்தவர்களின் வார்த்தைகளோடு, மற்ற மனிதர்களின் கதைகளோடு, மற்றவர்களின் புத்தகங்களோடு, மற்றவர்களின் வார்த்தைகளோடு, பாரம்பரியம் என்று நாம் அழைக்கிறோமே, அதனோடு நாம் சேர்ந்திருக்கிறோம். தன்னை அறிந்து கொள்ளும் தேடலில் மனிதகுலம் சேமித்து வைத்த மதிப்புமிக்க களஞ்சியம் இலக்கியம் என நம்புகிறேன். சமுதாயங்களும், குலமரபினரும், மனிதர்களும் தம்முடைய கதாசிரியர்களின் மனசாட்சியை உறுத்தும் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கும்போது அவர்கள் கூடுதல் அறிவும், செல்வமும் பெற்றவர்களாக, மேலும் முன்னேறியவர்களாக வளர்கின்றனர். நூல்களை எரிப்பதும், எழுத்தாளர்களுக்கு கரிபூசி அவமானப்படுத்துவதும், இருண்ட, அக்கறையோ பொறுப்போ அற்ற காலகட்டம் நம்மீது கவிந்திருக்கிறதென்பதற்கு அறிகுறிகள். ஆனால் இலக்கியம் வெறும் தேசிய அக்கறையாக மட்டுமே எப்போதும் இருந்ததில்லை. அறைக்குள் தன்னை அடைத்துக்கொண்டு தனக்குள்ளாகவே முதன்முதலாகப் பயணம் செய்யத் தொடங்கும் எழுத்தாளன் வருடங்கள் செல்லச்செல்ல இலக்கியத்தின் சாசுவதமான விதியைக் கண்டுகொள்வான்; அவனது சொந்தக்கதைகளை, அவை மற்றவர்களுடைய கதைகள் போலவும், மற்றவர்களின் கதைகளைத் தன் சொந்தக் கதைகளைப் போலவும் சொல்வதற்கு அவனிடம் கலைநயம் இருக்க வேண்டும். அதுதான் இலக்கியம் எனப்படுவதும். ஆனால் முதலில் நாம் மற்றவர்களின் கதைகளுக்கும், புத்தகங்களுக்கும் ஊடாகப் பயணம் செய்தாக வேண்டும்.
அப்பாவிடம் ஒரு நல்ல நூலகம் இருந்தது. மொத்தம் 1500 புத்தகங்கள் இருந்தன. ஒரு எழுத்தாளனுக்குத் தேவைப்படுவதைவிட அதிகம். என் இருபத்திரண்டாவது வயதில் அவை அனைத்தையும் நான் படித்திருக்காவிட்டாலும்கூட, ஒவ்வொரு புத்தகத்தோடும் பரிச்சயம் ஏற்பட்டிருந்தது. எந்தெந்த புத்தகங்கள் முக்கியமானவை, எவையெல்லாம் மேலோட்டமாகவும் வாசிக்க எளிதாகவும் இருப்பவை, எவையெல்லாம் கிளாஸிக்குகள், எந்த இலக்கியப் பாடத்திலும் இன்றியமையாத பகுதிகளாக விளங்குபவை எவை, மறந்துபோகக்கூடிய ஆனால் படிக்க சுவாரஸியமான உள்ளூர் சரித்திரங்கள், அப்பா உயர்வாக மதிக்கும் பிரெஞ்சு எழுத்தாளர்கள் யார் யார் என்றெல்லாம் எனக்குத் தெரிந்திருந்தது. சில நேரங்களில் இந்த நூலகத்தை, இதைவிடச் சிறந்த நூலகத்தை, வேறொரு வீட்டில் எனக்கான ஓர் உலகத்தைச் சிருஷ்டித்துக் கொள்வேன் என்று கற்பனை செய்து கொள்வேன். என் அப்பாவின் நூலகத்தைத் தூரத்திலிருந்து பார்க்கையில், அது நிஜ உலகத்தின் ஒரு சிறிய சித்திரமாகத் தோன்றும். ஆனால் இது இஸ்தான்புல் என்கிற எங்கள் சொந்த மூலையிலிருந்து பார்க்கப்பட்ட உலகம். நூலகம் இதற்குச் சாட்சியாக இருந்தது. இந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் அப்பா பெரும்பாலும் பாரீசுக்கும், அமெரிக்காவுக்கும் சென்றிருந்தபோது வாங்கியவை. அவை மட்டுமின்றி, இஸ்தான்புல்லில் 40_களிலும் 50_களிலும் வெளிநாட்டுப் புத்தகங்களை விற்றுவந்த, பின் எனக்கு பரிச்சயமாகிவிட்ட பழைய மற்றும் புதிய புத்தகக் கடைகளிலிருந்து வாங்கியவைகளும் இருந்தன.


என் உலகம் உள்ளூரும் தேசியமும் மேற்குலகும் கலந்த ஒரு கலவை, 70_களில் நானும் ஏதோ ஒருவித லட்சியத்துடன் என் சொந்த நூலகத்தை உருவாக்கத் தொடங்கினேன். எனது இஸ்தான்புல் நூலில் குறிப்பிட்டதைப் போல நான் எழுத்தாளனாக ஆகப்போவதாக அப்போது தீர்மானித்திருக்கவில்லை. நிச்சயமாக ஓர் ஓவியனாக ஆகப் போவதில்லை என்ற நிதர்சனம் வந்திருந்தது. ஆனால் என் வாழ்க்கை எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப்போகிறது என்ற நிச்சயம் ஏதும் உண்டாகியிருக்கவில்லை. வாசிக்கவும் கற்றறிந்து கொள்ளவும் ஒரு தணியாத ஆர்வம், நம்பிக்கை சேர்ந்த அவா எனக்குள் நிறைந்திருந்த அதே நேரத்தில், என் வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் குறைவுபட்டிருப்பதாக மற்றவர்களைப் போல என்னால் வாழ முடியாது என்பதாகத் தோன்றிக் கொண்டிருந்தது.


இந்த உணர்ச்சியின் ஒரு பகுதி, என் அப்பாவின் நூலகத்தை நான் வெறித்துக் கொண்டிருந்தபோது உணர்ந்ததோடு சம்மந்தப்பட்டிருந்தது. அது இஸ்தான்புல்லில் அந்நாட்களில் வசித்திருந்த எங்கள் எல்லோருக்குமே தோன்றிக்கொண்டிருந்த விஷயம்தான். மையப்பகுதியிலிருந்து விலகி வாழ்ந்து வருவதாக, விலக்கப்பட்ட பிரதேசத்தில் வாழ வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்ற வைக்கும் ஓர் உணர்வு. நான் கவலையுணர்வும் ஏதோ பற்றாக்குறையாகவும் உணர்ந்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. கலைஞர்களிடம் அவர்கள் ஓவியர்களோ எழுத்தாளர்களோ_சிறிதளவும் ஆர்வம் காட்டாத, அவர்களுக்குக் கொஞ்சமும் நம்பிக்கையளிக்காத ஒரு தேசத்தில் வாழ்கிறேன் என்று மிக நிச்சயமாக எனக்குத் தெரிந்திருந்தது. 70_களில் அப்பா எனக்குத் தந்த பணத்தை எடுத்துக் கொண்டு மங்கலான, தூசுபடிந்த, அட்டை கிழிந்த புத்தகங்களை இஸ்தான்புல்லின் பழைய புத்தகக் கடைகளில் அடங்காத பேராசையோடு வாங்கும்போது, தெருவோரங்களிலும், மசூதி வெளி முற்றங்களிலும், சிதிலமுற்ற சுவர்களின் மீது கடைபரப்பி வைத்திருக்கும் அந்தப் பழைய புத்தக வியாபாரிகளின் பரிதாபத்திற்குரிய நிலையைக் கண்டு மனம் கலங்கும்.


இலக்கியத்தில் போலவே வாழ்க்கையிலும் எனது இடம் இவ்வுலகின் மத்தியில் இடம் பெற்றிருக்கவில்லை யென்பதே என் ஆதார உணர்வாக இருந்தது. பிரதானமாக விளங்கும் மத்திய உலகில் வாழ்க்கை எங்கள் சொந்த வாழ்க்கையைவிட ஒட்டுமொத்த இஸ்தான்புல், துருக்கியைவிட, செழிப்பானதாகவும், அதிக சுவாரஸியமிக்கதாகவும் இருக்க, நான் அதற்கு வெளியே இருந்தேன். உலகின் பெரும்பாலான மக்களோடு இந்த உணர்வை நான் பகிர்ந்து கொள்வதாக இன்று நினைக்கிறேன். இதே வகையில் உலக இலக்கியம் ஒன்றும் இருந்தது. அதன் மையம் கூட என்னிடமிருந்து வெகு தூரத்திலேயே அமைந்திருந்தது. உண்மையில் என் மனதில் இருந்தது உலக இலக்கியம் அல்ல, மேலை இலக்கியம். துருக்கியர்களாகிய நாங்கள் இதற்கு வெளியே இருந்தோம். இதற்கு என் அப்பாவின் நூலகம் ஆதாரமாக இருந்தது. இஸ்தான்புல்லின் நூல்கள் எங்கள் இலக்கியம், எங்கள் உள்ளூர் உலகம், அதன்நுட்பமான விவரங்களோடு ஒரு மூலையில் இருந்தன. மறுமுனையில் இந்த மற்ற உலகத்தின், மேற்குலகின் நூல்கள் இருந்தன. இவற்றோடு எங்களுக்குச் சொந்தமானவை எந்த விதத்திலும் ஒத்திருக்காமலிருந்தன. இந்த ஒத்திராமையே எங்களுக்கு வலியையும், நம்பிக்கையையும் ஒருசேர வழங்கின. ஒருவரது உலகை விட்டு நீங்கி, மற்ற உலகின் மற்றவைகளில், விநோதங்களில், வியப்புகளில் ஆறுதல் காண்பதுதான் எழுதுவதும் வாசிப்பதும். என் அப்பா தன் வாழ்க்கையிலிருந்து தப்பிக்கவே நாவல்களை வாசித்தார், பிந்தைய காலங்களில் நான் செய்ததைப் போலவே மேலைநாடுகளுக்குத் தப்பியோடிக் கொண்டிருந்தாரென்று நினைக்கிறேன். அக்காலத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்த நூல்களும் நாங்கள் பெரிதும் குறைபாடாகக் கருதும் எங்கள் கலாச்சாரத்திலிருந்து தப்பிக்கவே என்று எனக்குத் தோன்றியது. வாசிப்பால் மட்டும் எங்கள் இஸ்தான்புல்லை விட்டு மேலைநாடுகளுக்கு நாங்கள் செல்லவில்லை. எழுதுவதால் கூட. அந்த நோட்டுப்புத்தகங்களை நிரப்புவதற்காக என் அப்பா பாரீசுக்குச் சென்று, ஓர் அறைக்குள் அடைத்துக்கொண்டு எழுதிவிட்டு, பின் அவற்றை துருக்கிக்கு கடத்திவந்ததுதான். என் அப்பாவின் சூட்கேஸின் மீது என் பார்வை பதியும்போது என்னை அமைதியிழக்கச் செய்கிறது. இருபத்தைந்து வருடங்கள் ஓர் அறையில் அடைபட்டு உழைத்து, துருக்கியில் ஓர் எழுத்தாளனாக காலந்தள்ளிவிட்ட பிறகு, அவரது ஆழமான சிந்தனைகளை இப்படி ஒரு சூட்கேஸிற்குள் ஒளித்து வைத்திருப்பதையும், எழுதுவது என்பதை ஒரு ரகசியமான தொழிலாகச் செய்யவேண்டியதைப் போல, சமுதாயத்தின், அரசாங்கத்தின், மக்களின் கண்களிலிருந்து தப்பிச் சென்று செயல்பட்டதையும் பார்க்க எனக்கு வேதனையாக இருந்தது. என் அப்பா என்னளவுக்கு இலக்கியத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளாததற்காக, அவர் மீது நான் கோபப்பட்டதற்கு ஒரு வேளை இதுதான் பிரதான காரணமாக இருக்கக் கூடும்.


வாஸ்தவத்தில் என் அப்பா மீது நான் கோபம் கொண்டிருந்ததற்குக் காரணம் இருக்கிறது, அவர் என்னைப்போல ஒரு வாழ்க்கையை நடத்தவில்லை, அவருக்கு வாழ்க்கையோடு எப்போதுமே சச்சரவு இருந்ததில்லை. வாழ்நாள் முழுக்க நண்பர்களோடும் அவருக்குப் பிரியமானவர்களோடும் சந்தோஷமாகச் சிரித்து காலம் கழித்துக் கொண்டிருந்ததே போதுமானதாக இருந்தது. ஆனாலும் என்னில் ஒரு பகுதிக்கு நான் ‘பொறாமை’ கொண்டிருந்த அளவுக்கு ‘கோபம்’ கொண்டிருக்கவில்லை என்பது தெரிந்திருந்தது. பொறாமை என்பது அதிகமும் துல்லியமுமான வார்த்தை. இதுவும் என்னை அமைதியிழக்கச் செய்தது. அது எனது வழக்கமான ஏளனமும் கோபமுமான குரலில் என்னையே நான் கேட்டுக்கொள்ளும்போது இருக்கும் விஷயம்: ‘சந்தோஷம் என்பது என்ன? அந்தத் தனியான அறையில் ஒரு பொந்திற்குள் வாழ்வதைப்போல ஒரு வாழ்க்கையை நான் நடத்தியதா சந்தோஷம்? அல்லது சமூகத்தில் ஒரு சௌகரியமான வாழ்க்கையை நடத்திக் கொண்டு, எல்லோரும் நம்பும் விஷயங்களை நாமும் நம்பிக்கொண்டு, செய்து கொண்டிருப்பதா சந்தோஷம்? வெளியுலகத்தோடு முழு இசைவுடன் இருப்பதாக வெளிக்காட்டிக்கொண்டு, ஆனால் ரகசியமாக ஒளிந்து கொண்டு எழுதுகிற வாழ்க்கையை வாழ்வது சந்தோஷகரமானதா, துக்ககரமானதா?’ ஆனால் இவையனைத்துமே மிகையான கோபத்தில் எழும் கேள்விகள். ஒரு நல்ல வாழ்க்கைக்கு அளவீடு என்பது சந்தோஷம்தான் என்ற எண்ணத்தை எங்கிருந்து பெற்றேன்? மக்களும், செய்தித்தாள்களும், அனைவரும் வாழ்க்கையின் மிக முக்கியமான அளவீடு சந்தோஷம்தான் என்று நடந்து கொள்கின்றனர். இது மட்டுமே இதற்கு நேரெதிரானவொன்றுதான் உண்மையாவென கண்டுகொள்ள முயல்வதை நியாயப்படுத்தாதா? எங்கள் வீட்டைவிட்டு என் அப்பா பலமுறை ஓடியிருக்கிறார். அவரை எந்தளவிற்கு நான் அறிந்திருக்கிறேன், அவரது அமைதியின்மையை எந்தளவிற்கு நான் புரிந்து கொண்டிருக்கிறேன்?


எனவே இதுதான் என் அப்பாவின் சூட்கேஸை நான் முதலில் திறப்பதற்கு என்னைச் செலுத்தியது. நான் சற்றும் அறியாத, எழுத்தில் கொட்டி மட்டுமே ஆற்றிக்கொண்ட ஒரு ரகசியம், வாழ்க்கையின் மீதிருக்கும் ஒரு துக்கம் என் அப்பாவுக்கு இருந்ததா? சூட்கேஸைத் திறந்ததுமே அதன் பிரயாண வாசனையையும், பரிச்சயமாகியிருந்த பல நோட்டுப் புத்தகங்களையும் நினைவு கூர்ந்தேன். அந்த நோட்டுப் புத்தகங்களைப் பல வருடங்களுக்கு முன்பே, அவற்றைப் பற்றி அதிகம் விளக்காமல் காட்டியிருக்கிறார். இப்போது நான் கையில் எடுத்த நோட்டுப் புத்தகங்களில் பெரும்பாலானவை அவரது இளம் வயதில் எங்களைவிட்டு பாரீசுக்கு ஓடிப்போன காலங்களில் எழுதியவை. என் அபிமான எழுத்தாளர்கள் பலரைப் போல, அவர்களது சுயசரிதைகளில் படித்திருக்கிறேன். இப்போது நான், நான் இருக்கும் வயதில் என் அப்பா என்ன எழுதியிருப்பார், என்ன சிந்தித்திருப்பார் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். அதைப்போல எதையும் இங்கே காணப்போவதில்லையென்பதை உணர்ந்துகொள்ள எனக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை. என்னை அதிகமும் அமைதியிழக்கச்செய்தது எதுவென்றால், அவரது நோட்டுப்புத்தகங்களில் அங்குமிங்கும் எனக்குக் காணக் கிடைத்த எழுத்தாளத்தன்மை மிக்க ஒரு குரல். இது என் அப்பாவின் குரல் கிடையாது என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்; இது நம்பத்தக்கதாக இல்லை, அல்லது குறைந்த பட்சம் என் அப்பா என்று நான் அறிந்திருந்த மனிதருக்குச் சொந்தமானதில்லை இது. இவற்றை என் அப்பா எழுதியபோது என் அப்பாவாக இல்லாதிருந்திருக்கலாம் என்ற என் பயத்திற்கு அடியில் வேறொரு ஆழமான பயம் இருந்தது; என் அப்பாவின் எழுத்தில் நல்லதாக எதையும் காண எனக்குக் கிடைக்காதபடிக்கு, அடியாழத்தில் நானே நம்பத்தகுந்தவனல்ல என்ற பயம், பிற எழுத்தாளர்களால் என் அப்பா பலமாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை நான் கண்டுபிடித்துவிடும் அபாயத்தையும் இது அதிகரித்து, நான் இளைஞனாக இருந்தபோது என் வாழ்க்கையையும், என் இருப்பையும், எழுதும் என் ஆர்வத்தையும், என் பணியையும் கேள்விக்குள்ளாக்கிய எனக்குப் பழகிப்போன அந்தப் பழைய விரக்தியில் என்னை மூழ்கடித்தது. எழுத்தாளனாக எனது முதல் பத்தாண்டுகளில் இத்தகைய சஞ்சலங்களை மிக ஆழமாக உணர்ந்து, எதிர்த்துப் போராடியிருக்கிறேன். ஒருநாள் நான் துறந்ததைப் போலவே, அமைதியின்மையால் துவண்டு, நாவல் எழுதுவதையும் நிறுத்திவிடுவேன் என்ற பயம்.

என் அப்பாவின் சூட்கேஸை மூடி, நான் தூரவைத்தபோது எனக்குள் எழுந்த இரண்டு ஆதாரமான உணர்ச்சிகளை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்: நாட்டுப்புறப் பகுதியில் தனித்துவிடப்பட்ட உணர்வும், நம்பகத்தன்மை என்னிடம் குறைந்திருக்கிறது என்ற பயமும். இவை உணரப்படுவது இதுதான் முதல் முறை அல்ல. பல வருடங்களாக என் வாசிப்பிலும் எழுத்திலும் இந்த உணர்வுகளை அவற்றின் எல்லா வகை மாதிரிகளையும், திட்டமிடப்படாத விளைவுகளையும், அவற்றின் நரம்பு முனைகளையும், அவற்றின் விசைகளையும், அவற்றின் பற்பல வண்ணங்களையும் ஆய்ந்து கண்டறிந்து, ஆழப்படுத்தி வந்திருக்கிறேன். வாழ்க்கையும் புத்தகங்களும் பெரும்பாலும் நான் இளைஞனாக இருந்த காலத்தில் என் மீது கொடுத்த குழப்பங்களாலும் கூருணர்வுகளாலும் மின்னலாக வெட்டும் வலிகளாலும் என் ஊக்கம் அதிர்வுற்றிருக்கிறது. ஆனால் புத்தகங்கள் எழுதுவதால் மட்டுமே நம்பகத்தன்மையின் பிரச்சனைகளையும் (My name is Red. The Black Book ஆகிய நூல்களில் போல) விளிம்பு நிலை வாழ்க்கையைப் பற்றியும் (Snow, lstanbul ஆகிய நூல்களில் போல) புரிந்து கொள்வதில் ஒரு முழுச் சுற்றுக்கு வந்தேன் எனலாம். நமக்குள் சுமக்கும் ரகசிய காயங்களை, நாமே சரிவர அறிந்திராத படிக்கான ரகசிய ரணங்களை, பொறுமையாக ஆராய்ந்து, அறிந்து, அவற்றின் மேல் ஒளியைப் பாய்ச்சி, இந்த வலிகளையும் காயங்களையும் வரித்து, நம் ஊக்கத்திற்கும் நம் எழுத்திற்கும் ஒரு பிரக்ஞை கொண்ட பகுதியாக அவற்றை ஆக்குவதும் அங்கீகரிப்பதும் தான் எழுத்தாளனாக இருப்பதன் கடமை என்று கருதுகிறேன்.


எல்லோருக்கும் தெரிந்த, ஆனால் தமக்குத் தெரியும் என்று தெரிந்திருக்காத விஷயங்களைப் பற்றி எழுத்தாளன் பேசுகிறான். இந்த அறிவை ஆராய்வதும், அது வளர்வதைக் கவனிப்பதும் பரவசமூட்டும் ஒரு செயல்; ஒரே நேரத்தில் பரிச்சயமாகவும் மர்மமாகவும் இருக்கும் ஓர் உலகிற்குள் வாசகன் நுழைகிறான். எழுத்தாளன் ஓர் அறைக்குள் தன்னை வருடக்கணக்காக அடைத்துக் கொண்டு தன் பணியை_உலகம் ஒன்றை உருவாக்க_செப்பனிட்டுக் கொண்டிருக்கும் போது, அவனது ரகசிய ரணங்களை, அவனது துவக்கப்புள்ளியாகப் பயன்படுத்தினால், அவன் அறிந்தோ அல்லது அறியாமலோ, மனிதத்துவத்தின் மீது பெரும் நம்பிக்கை வைக்கிறான். எல்லா மனிதர்களும் ஒருவரையருவர் ஒத்திருக்கின்றனர் என்ற இந்த குழந்தைத்தனமான, நம்பிக்கையூட்டும் நிச்சயத்தன்மையிலிருந்தே எல்லா உண்மை இலக்கியங்களும் எழுகின்றன. முடிவேயின்றி வருடக்கணக்காக ஓர் எழுத்தாளன் அறை ஒன்றிற்குள் தன்னை அடைத்துக் கொண்டிருந்தால், அதன் மூலம் அவன் ஒரே மனிதத்துவத்தை, மையமற்ற ஓர் உலகத்தை முன் வைக்கத் தொடங்குகிறான்.


ஆனால், என் அப்பாவின் சூட்கேஸையும் எங்கள் இஸ்தான்புல் வாழ்வின் வெளிறிய நிறங்களையும் பார்க்கையில் இந்த உலகத்திற்கு ஒரு மையம் இருக்கிறது, அது எங்களிடமிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது என்று தெரிகிறது. இந்த அடிப்படை உண்மை எவ்வாறு ஒரு செகாவ்தனமான சிற்றூர்தனத்தைத் தூண்டிவிடுகிறது என்பதையும், வேறொரு மார்க்கத்தில் இது என் நம்பகத்தன்மையை கேள்விகேட்பதற்கு இட்டுச் செல்கிறது என்பதையும் கொஞ்சம் விளக்கமாகவே என் நூல்களில் விவரித்திருக்கிறேன். இவ்வுலகில் பெரும்பான்மையினர் இதே உணர்வுகளோடு வாழ்கின்றனர் என்பதை அனுபவத்திலிருந்து அறிவேன். அதேயளவு மனிதர்கள் என்னைவிட அதிகமான போதாமை உணர்வுகளாலும், பத்திரக் குறைவாலும், அவமான உணர்வாலும் அவஸ்தையுற்றிருக்கின்றனர் என்பதையும் அறிவேன். ஆம், மனிதகுலத்தை எதிர்நோக்கியிருக்கும் மகத்தான பிரச்சனைகளாக நிலமின்மையும், வாழ்விடமின்மையும், பசியும்தான் இன்றளவும் இருக்கின்றன…. ஆனால் இத்தகைய அடிப்படை பிரச்சனைகளைப் பற்றி இன்று நமது தொலைக்காட்சிகளும், செய்தித்தாள்களும் இலக்கியத்தைவிட மிக வேகமாக, எளிமையாக நமக்குக் கூறி விடுகின்றன. இன்று இலக்கியம் சொல்லவும், ஆராயவும் வேண்டிய மனிதகுலத்தின் அடிப்படை பயங்கள்; வெளியே தனித்து விடப்படும் பயம், ஒன்றுமில்லாததற்காக தண்டிக்கப்படும் பயம். இத்தகைய பயங்களோடு சேர்ந்துவரும் மதிப்பிழக்கப்பட்ட உணர்வுகள்; கூட்டு அவமானங்கள், வடுப்பாடுகள், புறக்கணிப்புகள், மனத்துயர்கள், உணர்வினைகள், கற்பனை அவமானங்கள், தேசியவாத எக்களிப்புகள், தற்பெருமைகள்… இத்தகைய மிகு உணர்ச்சிகளும், இவை வழக்கமாக வெளிப்படுத்தும் பகுத்தறிவற்ற மிகைக்கூற்றுகளும் என்னைத் தாக்கும் போதெல்லாம் எனக்குள்ளிருக்கும் ஓர் இருண்மையை அவை தீண்டுவதாக அறிகிறேன். மேலை உலகிற்கு வெளியேயிருக்கும் மக்கள், சமுதாயங்கள், தேகங்கள் தமது அவமதிப்பு பயங்களாலும், மிகையுணர்வுகளாலும், தீவிரமாக பாதிப்புற்று, மதிகேடான காரியங்களைப் புரிவதை நாம் அவ்வப்போது பார்க்கிறோம். அவர்களை எளிதாக என்னுடன் சேர்த்து அடையாளம் கண்டுகொள்கிறேன். அதே விதமான எளிமையுடன் நான் அடையாளம் கண்டுகொள்ளும் மேற்குலகிலும் தேசங்களும் மக்களும் தமது செல்வம், மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த பெருமை, அறிவு விளக்கம், நவீனத்துவம் போன்றவை எழுப்பும் பெருமிதத்தால் சுயதிருப்திக்கு ஆளாவதும் அதே விதமான மதிகேடுதான்.


இதற்குப் பொருள், என் அப்பா மட்டுமல்ல நாமெல்லோருமே ஒரு மையம் உடைய உலகத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்கிறோம் என்பது. அறைக்குள் நம்மைப் பூட்டிக் கொண்டு வருடக் கணக்காக முடிவின்றி எழுதுவதற்கு நம்மை வற்புறுத்துவது இதற்கெதிரான ஒரு நம்பிக்கை; உலகெங்குமுள்ள மனிதர்கள் ஒருவரையருவர் ஒத்திருப்பதால் நம் எழுத்துக்கள் ஒரு நாள் படிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்படும் என்ற நம்பிக்கை. ஆனால், என் சொந்த எழுத்திலிருந்தும் என் அப்பாவின் எழுத்திலிருந்தும் நான் அறிந்து கொண்டது என்னவென்றால், விளிம்புகளில் முடக்கப்பட்டதாலும், வெளியே தனித்து விடப்பட்டதாலும் கோபக்கறை படிந்து சிதைக்கப்பட்டிருக்கும் ஒரு நன்னம்பிக்கை இதுவென்பதே. தன் வாழ்க்கை முழுக்க தாஸ்தயேவ்ஸ்க்கிக்கு மேற்கின் மீதிருந்த அன்பும் வெறுப்பும் ஒன்று கலந்த உணர்வை நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஆனால் ஆதாரமான உண்மை ஒன்றை நான் பற்றியிருந்தால், நன்னம்பிக்கைக்கு எனக்கு காரணமிருந்தால், அதற்கு காரணம் இந்த மாபெரும் எழுத்தாளரோடு மேற்கின் மீதிருந்த அவரது அன்பு வெறுப்பு உறவின் வழியாகப் பயணித்து, மறுபக்கத்தில் அவர் கட்டியெழுப்பியிருந்த மற்ற உலகத்தை நான் கைக்கொண்டதேயாகும்.


இப்பணியில் தமது வாழ்வை அர்ப்பணித்திருக்கும் எல்லா எழுத்தாளர்களும் இந்த யதார்த்தத்தை உணர்ந்திருக்கின்றனர்: நமது அசலான நோக்கம் எதுவாயிருப்பினும் வருடக் கணக்காக நம்பிக்கையோடு எழுதி, நாம் படைக்கும் உலகம் இறுதியில் பெரிதும் வேறுபட்ட மற்ற இடங்களுக்குத்தான் போகப்போகிறது. துக்கமும் கோபமுமாக நாம் பணியாற்றிய மேசையிலிருந்து நம்மை வெகு தொலைவிற்கு, வேறோர் உலகத்தின் துக்கமும் கோபமும் கொண்ட மறுபக்கத்திற்கு அது கொண்டு செல்கிறது. அத்தகைய ஓர் உலகத்தை என் அப்பாவால் தனியாகவே அடைந்திருக்க முடியாதா? ஒரு நிலப்பரப்பு மெதுவாக உருக்கொள்வதைப் போல, நீண்டதொரு கடற்பிரயாணத்திற்குப் பின் மூடுபனியிலிருந்து அதன் எல்லா வண்ணங்களோடும் மெதுவாக எழும்புகிற ஒரு தீவைப்போல இந்த மற்ற உலகம் நம்மை மயக்கி வயப்படுத்துகிறது; தெற்கிலிருந்து பயணம் செய்து இஸ்தான்புல்லிற்கு வந்த மேலைநாட்டு யாத்ரீகர்கள் அது மூடுபனியிலிருந்து எழும்பிப் புலப்பட்டதைப் பார்த்துத் திகைப்புற்றதைப் போல. நம்பிக்கையும் ஆர்வமுமாகத் தொடங்கிய ஒரு பயணத்தின் இறுதியில், இதோ அவர்களுக்கு முன்னால் மசூதிகளும், பள்ளிவாசல் ஸ்தூபிகளுமாக விதவிதமான வீடுகளும், தெருக்களும், குன்றுகளும், பாலங்களும், சரிவுகளுமாக ஒரு முழு உலகமே அவர்கள் முன் விரிகின்றது. அதைக் கண்ட பின்பு இந்த உலகிற்குள் நுழைந்து அதற்குள் நம்மைத் தொலைத்துக் கொள்வதைப் போல ஒரு புத்தகத்தையும் அணுகுகிறோம். விலக்கப்பட்டவர்களாக, விளிம்புகளுக்கு ஒதுக்கப்பட்டவர்களாக நம்மை உணர்ந்து கோபத்துடனும், ஆழ்ந்த மனக்கசப்புடனும் ஒரு மேசையில் அமர்ந்தபின்பு இந்த மிகையுணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு முழு உலகத்தை நாம் கண்டடைகிறோம்.


இப்போது நான் உணர்வது, சிறுவனாகவும், இளைஞனாகவும் இருந்த போது உணர்ந்ததற்கு நேரெதிரானது: என்னைப் பொறுத்தவரை உலகத்தின் மையம், இஸ்தான்புல். இது நான் பிறந்ததிலிருந்து அங்கேயே வாழ்ந்து வருவதால் சொல்வதல்ல. கடந்த 33 வருடங்களாக அதன் தெருக்கள், அதன் பாலங்கள், அதன் மனிதர்கள், அதன் நாய்கள், அதன் வீடுகள், அதன் மசூதிகள், அதன் நீரூற்றுகள், அதன் விநோதமான நாயகர்கள், அதன் சரிவுகள், அதன் பிரபலமான பாத்திரங்கள், அதன் இருட்டுப் பகுதிகள், அதன் பகல்கள், அதன் இரவுகளை வர்ணித்து அவற்றை என் பகுதியில் ஒன்றாக்கி, அனைத்தையும் அரவணைத்து வந்திருக்கிறேன். என் கைகளால் உருவாக்கிய இந்த உலகம், என் தலையில் மட்டும் வாழ்ந்து வந்த இந்த உலகம், நான் உண்மையில் வாழ்கின்ற நகரத்தை விட நிஜமானதாக எனக்குத் தோன்ற ஆரம்பித்த ஒரு கட்டமும் வந்தது. என் கற்பனையிலோ, அல்லது புத்தகங்களிலோ மட்டும் வாழ்பவர்களாக இல்லாமல் தமக்காகவே வாழ்வதுபோல இதன் மனிதர்களும், தெருக்களும், பொருட்களும், கட்டிடங்களும் தமக்குள் பேசிக்கொள்ளவும், நான் எதிர்பாரா வகையில் அவை ஊடாடவும் செய்தபோது நடந்தது இது. ஊசியை வைத்துக் கொண்டு ஒரு கிணற்றைத் தோண்டுவது போல நான் உருவாக்கிய உலகம் மற்றனைத்தையும் விட நிஜமாகத் தோன்றியது அப்போதுதான். இந்த வகையான மகிழ்ச்சியை அவர் எழுதிக் கொண்டிருந்த வருடங்களிலும் என் அப்பா கண்டிருக்க வேண்டுமென்று அவர் சூட்கேஸைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது. நான் அவரை முன் தீர்ப்பிடக் கூடாது. என்ன இருந்தாலும் நான் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் எப்போதுமே அதிகார தோரணையில், தடையுத்தரவளித்துக் கொண்டு, ஆதிக்கம் செலுத்திக் கொண்டு, தண்டித்துக் கொண்டிருந்த சாதாரண அப்பாவாக இருந்ததில்லை. எப்போதுமே என்னை சுதந்திரமாக அனுமதித்து எப்போதுமே அதிகபட்ச மதிப்பையும் காட்டுபவராக இருந்தவர். என் கற்பனையிலிருந்து சுதந்திரமாகவோ அல்லது குழந்தைத்தனமாகவோ அவ்வப்போது எதையாவது தீட்டிக்கொண்டிருந்தேனென்றால், அதற்குக் காரணம் சிறு பிராயத்திலும் இளமைப்பருவத்திலும் எனக்கிருந்த பெரும்பாலான நண்பர்களைப் போலில்லாமல், எனக்கு என் அப்பாவைப் பற்றி எந்த அச்சமும் இருந்ததில்லை என்பதை நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். நான் எழுத்தாளனாக ஆனதற்கே, என் அப்பா அவரது இளமையில் எழுத்தாளனாக விரும்பியதுதான் காரணம் என்றும் சில நேரங்களில் நம்புகிறேன். அவரைப் பொறுமையுடன் நான் படித்தாக வேண்டும் _ அந்த ஓட்டல் அறைகளில் அவர் எழுதியவற்றைப் புரிந்துகொள்ள முயலவேண்டும்.


இந்த நம்பிக்கையூட்டும் நினைவுகளோடு என் அப்பா வைத்த இடத்திலேயே இன்னமும் இருக்கிற அந்த சூட்கேஸை நெருங்கினேன். என் மன உறுதி அனைத்தையும் உபயோகித்து சில கைப்பிரதிகளையும் நோட்டுப் புத்தகங்களையும் வாசித்துப் பார்த்தேன். எதைப்பற்றி என் அப்பா எழுதியிருக்கிறார்? பாரீஸ் நகர ஓட்டல்களின் சில ஜன்னல்கள் வழி காட்சிகள், சில கவிதைகள், முரணுரைகள், அலசல்கள்… இவற்றை எழுதும்போது சாலை விபத்தில் சிக்கிய ஒருவனைப்போல, எப்படி நிகழ்ந்தது என்று ஞாபகம் வராமல் தவித்துக் கொண்டு, அதே நேரத்தில் அளவிற்கதிகமாக ஞாபகப்படுத்திக்கொள்கிற அபாயத்திலும் காலெடுத்து வைப்பதுபோல உணர்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சச்சரவு துவங்கப்போவதாக இருந்தால்_அவர்கள் அப்போது அந்தப் பயங்கரமான நிசப்தத்தில் ஆழ்ந்துவிடுவர்_என் அப்பா சட்டென்று ரேடியோவைப் போட்டுவிடுவார். சங்கீதம், சூழலை மாற்றி அதை வேகமாக மறந்துபோக எங்களுக்கு உதவிசெய்யும்.


அந்த சங்கீதத்தைப் போலவே சூழலை மாற்றுவதற்கு சில இனிய வார்த்தைகளைக் கூறலாம் என்று கருதுகிறேன். நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதைப் போல எழுத்தாளர்களான எங்களிடம் அடிக்கடி கேட்கப்படும் அபிமான கேள்வி: ஏன் நீங்கள் எழுதுகிறீர்கள்? எழுதுவதற்கு உள்ளார்ந்த தேவை ஒன்று என்னிடம் இருப்பதால் நான் எழுதுகிறேன்! மற்றவர்களைப்போல என்னால் சாதாரண வேலைகளைச் செய்யமுடியாது என்பதால் எழுதுகிறேன். நான் எழுதுவதைப் போன்ற புத்தகங்களை நான் வாசிக்க விரும்புவதால் எழுதுகிறேன். உங்கள் அனைவரின் மீதும், எல்லோரின் மீதும் நான் கோபமாக இருப்பதால் எழுதுகிறேன். ஒரு தனியறையில் அடைத்துக் கொண்டு நாளெல்லாம் எழுதுவது எனக்கு விருப்பமாக இருப்பதால் எழுதுகிறேன். நிஜவாழ்க்கையை மாற்றுவதன் மூலமே என்னால் அதில் பங்குகொள்ள இயலும் என்பதால் எழுதுகிறேன். இஸ்தான்புல்லில், துருக்கியில், எம்மாதிரியான வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்தோம், தொடர்ந்து வாழ்ந்து வருகிறோம் என்பதை மற்றவர்கள், நம்மெல்லோரும், மொத்த உலகமும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதால் எழுதுகிறேன். பேப்பர், பேனா, மையின் வாசனை எனக்குப் பிடித்தமானவை என்பதால் எழுதுகிறேன். வேறு எதனையும் விட இலக்கியத்தின் மேல், நாவல் என்ற கலைவடிவத்தின் மேல் நம்பிக்கை வைத்திருப்பதால் எழுதுகிறேன். அது ஒரு பழக்கம், ஒருவிதமான இச்சை என்பதால் எழுதுகிறேன். நான் மறக்கப்பட்டு விடுவேனோ என்ற பயத்தால் எழுதுகிறேன். எழுத்து அழைத்து வருகிற புகழையும் ஆர்வத்தையும் நான் விரும்புவதால் எழுதுகிறேன். தனியாக இருப்பதற்காக எழுதுகிறேன். உங்கள் அனைவரின் மீதும் எதற்காக நான் மிக மிகக் கோபமாக இருக்கிறேன், எல்லோர் மீதும் ஏன் மிக மிகக் கோபமாக இருக்கிறேன் என்பதை நான் புரிந்து கொள்வதற்காகக்கூட நான் ஒருவேளை எழுதுவதாக இருக்கலாம். நான் வாசிக்கப்பட வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். ஒரு நாவலை, ஒரு கட்டுரையை ஒரு பக்கத்தை எழுதத் தொடங்கி விட்டேனென்றால், அதை முடிக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். எல்லோரும் நான் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எழுதுகிறேன். நூலகங்களின் சாஸ்வதத்தைப் பற்றியும், அலமாரிகளில் என் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருப்பதிலும் எனக்கு ஒரு குழந்தைத்தனமான நம்பிக்கை இருப்பதால் எழுதுகிறேன். வாழ்க்கையின் எல்லா அழகுகளையும் செல்வங்களையும் எழுத்தாக்குவதில் இருக்கும் கிளர்ச்சியினால் எழுதுகிறேன். ஒரு கதையைச் சொல்வதற்காக அல்ல, ஒரு கதையை இயற்றுவதற்காக எழுதுகிறேன். நான் போகவேண்டிய இடம் ஒன்று இருக்கிறது. ஆனால்_ ஒரு கனவில் வருவதைப்போலவே _ அங்கே என்னால் அடையவே முடியாதிருக்கிறது என்ற துர்சகுணத்திலிருந்து தப்பிக்க விரும்புவதால் எழுதுகிறேன். என்னால் எப்போதுமே சந்தோஷமாக இருக்க முடியாததற்காக எழுதுகிறேன். சந்தோஷமாக இருப்பதற்காக எழுதுகிறேன். அவர் என் அலுவலகத்திற்கு வந்து சூட்கேஸை வைத்துவிட்டுச் சென்ற ஒரு வாரம் கழித்து என் அப்பா மீண்டும் என்னைப் பார்க்க, எப்போதும் போல் ஒரு சாக்லேட் பொட்டலத்தோடு வந்தார். (எனக்கு 48 வயதாகிறது என்பதை மறந்துவிட்டிருக்கிறார்). எப்போதும் போல நாங்கள் வாழ்க்கை, அரசியல், குடும்ப சமாச்சாரங்கள் என்று அரட்டை அடித்து சிரித்துக் கொண்டிருந்தோம். என் அப்பாவின் கண்கள் அவரது சூட்கேஸை வைத்திருந்த மூலைக்குச் சென்ற தருணமும் வந்தது. அதை நகர்த்தி வைத்திருக்கிறேன் என்பதைக் கவனித்து விட்டார். எங்கள் பார்வைகள் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டன. ஒரு நிசப்தம் அங்கே அழுத்தமாகப் பின் தொடர்ந்தது. சூட்கேஸைத் திறந்து, அதில் உள்ளவற்றைப் படிக்க முயற்சி செய்தேன் என்பதை அவரிடம் கூறவில்லை; பதிலாக பார்வையைத் திருப்பிக் கொண்டேன். ஆனால் அவர் புரிந்து கொண்டார். அவர் புரிந்து கொண்டார் என்பதை நான் புரிந்து கொண்டதைப் போல. அவர் புரிந்து கொண்டு விட்டார், என்பதை நான் புரிந்து கொண்டுவிட்டேன் என்பதை அவர் புரிந்து கொண்டதைப் போல. ஆனால், இந்தப் புரிந்து கொள்ளல் எல்லாமே பதினைந்து விநாடிகளுக்குத் தாக்குப் பிடிக்கும் வரை தான் சென்றது. என் அப்பா ஒரு குதூகலமான, எதையும் சுலபமாக எடுத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை மிக்க மனிதர். எப்போதும் போலவே என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். வீட்டை விட்டுக் கிளம்பும்போது அவர் எப்போதுமே என்னிடம் கூறுகிற இனிமையான, ஊக்கமளிக்கும் விஷயங்கள் எல்லாவற்றையும் திரும்பக் கூறினார், ஒரு அன்பான அப்பாவைப் போலவே. எப்போதும் போலவே அவர் கிளம்பிச் செல்வதைப் பார்க்கும் போது அவரது அக்கறையற்ற, எதற்கும் கலங்காத மனோபாவத்தை எண்ணி பொறாமையாக உணர்ந்தேன். ஆனால் அன்றைய தினம் என்னை வெட்கமுறச்செய்த ஒரு சந்தோஷக் கீற்றும் எனக்குள் இருந்தது. ஞாபகமிருக்கிறது. அவருக்கு வாய்த்த அளவுக்கு ஒரு சௌகரியமான வாழ்க்கை, அவருக்கிருந்தளவுக்கு சந்தோஷமான அல்லது சுகவாசியாக ஒரு வாழ்க்கை எனக்கு வாய்த்திருக்கவில்லை, என் வாழ்க்கை மொத்தத்தையும் எழுதுவதற்கு மட்டுமே நான் அர்ப்பணித்திருக்கிறேன் என்ற நினைப்பு_நான் கூற வருவது உங்களுக்குப் புரிந்துவிட்டது இல்லையா… என் அப்பாவை முன் வைத்து இப்படியான விஷயங்களை யோசிப்பது எனக்கு வெட்கமாக இருந்தது. என் வலிகள் எதற்கும் என் அப்பா காரணமாக இருந்ததில்லை. என்னை சுதந்திரமாக அனுமதித்திருக்கிறார். இவையெல்லாமே எழுதுவதும் இலக்கியமும் நம் வாழ்க்கையின் மையத்தில் உள்ள பற்றாக்குறை ஒன்றோடும், சந்தோஷமும் குற்றவுணர்வுமான நம் உணர்வுகளோடும் ஆழமாகப் பிணைந்திருக்கிறது என்று நமக்குக் காட்டுகின்றன. ஆனால் என் கதையிலிருந்த ஒரு சரிச்சீரமைவு அன்றைய தினம் வேறொன்றை நினைவுபடுத்தி அது இன்னமும் அதிகமான குற்றவுணர்ச்சியைக் கொண்டு வந்தது. அவரது சூட்கேஸைத் தந்துவிட்டுச் சென்றதற்கு இருபத்தி மூன்று வருடங்கள் முன்பு, என இருபத்திரெண்டாவது வயதில் மற்ற எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு ஒரு நாவலாசிரியனாக முடிவெடுத்து ஓர் அறைக்குள் என்னை அடைத்துக் கொண்டு எனது முதல் நாவலான Cevdet Bey and sons ஐ முடித்ததற்கு நான்கு வருடங்கள் கழித்து, அப்போது இன்னமும் வெளி வந்திராத நாவலின் தட்டச்சுப் பிரதியை கைகள் நடுங்க என் அப்பாவிடம் கொடுத்து படித்துப் பார்த்து அவர் அபிப்பிராயத்தைக் கூறும்படி கேட்டிருக்கிறேன். அது, அவர் ரசனையின் மீதும், அறிவுக் கூர்மையின் மீதும் நான் வைத்திருந்த நம்பிக்கையால் மட்டுமல்ல, அவரது அபிப்பிராயம் எனக்குப் பெரிதும் முக்கியமானது. என் அம்மாவைப்போல நான் எழுத்தாளனாக விரும்பியதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அந்த நேரத்தில் என் அப்பா எங்களோடு இல்லை, வெகுதூரத்தில் இருந்தார். அவர் திரும்பி வருவதற்காக பொறுமையிழந்து நான் காத்திருந்தேன். இரண்டு வாரங்கள் கழித்து அவர் வந்ததும் கதவைத் திறக்க ஓடினேன். என் அப்பா எதுவும் பேசவில்லை. ஆனால் உடனே கைகளை விரித்து என்னை ஆரத் தழுவிக் கொண்டது அவர் அதை வெகுவாக ரசித்திருக்கிறார் என்பதைக் காட்டியது. மகத்தான உணர்ச்சித் தருணங்களில் உடன் வருவது போன்ற ஒரு சங்கடமான மௌனம் கொஞ்ச நேரத்திற்கு எங்களை மூழ்கடித்தது. பின் அமைதியடைந்து பேசத் தொடங்கினோம். என் அப்பா பெரிதும் உணர்ச்சி வசப்பட்ட, மிகையான பாஷையில், அவர் என் மீதோ அல்லது எனது முதல் நாவல்மீதோ வைத்திருந்த நம்பிக்கையைக் கூறத் தொடங்கினார். இங்கே மகத்தான பெருமிதத்துடன் நான் பெறுவதற்கு வந்திருக்கும் பரிசை ஒருநாள் நான் வென்றெடுப்பேன் என்று அவர் கூறினார். அவரது நல்லபிப்பிராயத்தைச் சொல்லி என்னைத் திருப்திப்படுத்துவதற்காகவோ, அல்லது இந்தப் பரிசை ஒரு லட்சியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவோ அவர் இதைக் கூறவில்லை; அவர் ஒரு துருக்கிய அப்பாவைப்போல, தன் மகனுக்கு ஆதரவளித்து, ‘ஒருநாள் நீ ஒரு பாஷா ஆகப்போகிறாய்!’ என்று விளக்கமளித்து கூறினார். பின் பல வருடங்கள், எப்போது என்னைப் பார்த்தாலும் இதே வார்த்தைகளைத்தான் கூறி எனக்கு விளக்கமளிப்பார்.என் அப்பா டிசம்பர் 2002_ல் காலமானார்.இன்று ஸ்வீடிஷ் அகாதெமிக்கும், இந்த மாபெரும் பரிசை_ இம் மகத்தான மேன்மையை _ எனக்களித்திருக்கும் பெருமைமிக்க உறுப்பினர்களுக்கும் அவர்களின் புகழ்மிக்க விருந்தினர்களுக்கும் முன்னால் நான் நிற்கும் போது, இங்கே நம்மிடையே அவர் இருக்கக் கூடும் என்று உளப்பூர்வமாக நம்புகிறேன்.
(2006 ஆம் வருடத்தின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு துருக்கியைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஓரான் பாமுக்கிற்கு வழங்கப்பட்டபோது, ஸ்வீடிஷ் அகாதெமியில் டிசம்பர் 10,2006 அன்று பாமுக் நிகழ்த்திய உரை)

No comments: