Tuesday, September 11, 2007

அன்பு நண்பரே,

உங்கள் கவிதைகளைப் படித்துவிட்டு அதைப்பற்றி எழுதுவோம் என்று உட்கார்ந்தால் முகஸ்துதியாக மாறிவிடுமோ என்ற பயம் உண்டாகிறது. அது எனக்கு கூச்சத்தை தந்தால், உங்களுக்கு இன்னும் அதிகமாகவல்லவோ உண்டாகும். உங்கள் கவிதைகள் நூலுருவம் பெற்று வரும்போது அது பற்றி எழுதுவேன். அப்போது உங்களுக்கு நேரடியாக எழுதாதபடியால் என் மனதில் தோன்றுவதை தாராளமாக எழுதலாம்.
ஒரு வீட்டைப்பற்றி இவ்வளவு சிந்தனைகளா என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. ஒரு கவிதை வாசித்து முடிந்ததும் ஆஹா சொல்வதையெல்லாம் சொல்லிமுடித்துவிட்டார் என்று அடுத்த பாடலுக்கு போனால் இன்னும் புதிதாக ஒரு சிந்தனை முளைத்து ஆச்சரியப்பட வைக்கிறது.
தரையின் திவலைகள் பனிக்கட்டியாகி விறைக்கையில் இயற்பியல் விதிகள் வந்து சேர்ந்துகொள்கின்றன. 'அடர்த்தியின் அளவை ஒரு பக்கம் கூட்டிக்கொண்டே செல்கிறது' என்று வருகிறது. நீர் கட்டியாகும்போது இது நடக்கும். பனிக்கட்டி தண்ணீரில் மிதக்கும். நீர் மெல்ல மெல்ல கட்டியாவதுபோல நிசப்தம் கூடுகட்டுகிறது என்பதும் மிகவும் பொருத்தமாக உவமை. படித்ததும் அசந்துவிட்டேன்..
வீட்டில் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்று தொடங்கி கிரகிக்க ஏராளமாக உள்ளது, அதன் நிசப்தத்தில் கற்றுக்கொள் என்று முடிகிறது. காலம் காலமாக யோகிகளும், ஞானிகளும் சொன்னது அதுதான்
'ஒரு வீட்டின் மகிழ்ச்சி
கொஞ்ச தூரங்களை எட்டுகிறது
ஒரு வீட்டின் துக்கம்
பல மைல்களை தாண்டிவிடுகிறது.'
என்னால் வாசனையில்லாத ஒரு வீட்டை கற்பனை செய்ய இயலாது. நிறைய தூரம் போனாலும் எவ்வளவு காலம் முடிந்தாலும் வாசனை முடிவதில்லை. அது எப்படிப்பட்ட வாசனையாக இருந்தாலும் - ஒவ்வொரு அறைக்கு ஒவ்வொரு பிரத்தியேக வாசனை இருப்பதுபோல வீடு என்று நினைக்கும்போது ஒரு வாசனை வந்துவிடுகிறது. வாலை இழுத்துக்கொண்டு பயணிக்கும் வால் நட்சத்திரம்போல உங்கள் நினைவுகளை விட்டு அவை என்றுமே தப்பவே முடியாது.
ஒரு நண்பரிடம் கவிதையை கொடுத்து படிக்கச் சொன்னேன். அவருடைய அனுபவம் முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. நான் பார்க்காததை அவர் பார்த்தார்; நான் பார்த்ததை அவர் பார்க்கவே இல்லை. அவருடன் நான் சண்டை பிடிக்கவில்லை. என்ன பயன். இதுதான் பன்முகத்தன்மை என்பது. பலவிதமான அர்த்தங்களுக்கு இசைந்து கொடுப்பது; பல்வேறு உணர்வுத்தளங்களில் இயங்குவது.
கவிதையை படித்துமுடித்த பிறகு எனக்கு என்னவோ நிசப்தமும், வாசனையும்தான் வீடு என்ற எண்னம் வலுப்பட்டுக்கொண்டிருக்கிறது. மனதை வெகுவாக அசைத்துவிட்டது. உள்ளே ஆழத்தில் ஓடும் சுழிபோல என்னவோ உருட்டுகிறது. கவிதை படித்த நேரத்தில் இருந்து இதை எழுதும் கணம்வரை நீர்த்திவலைகள் கட்டியாவதுபோல மௌனம் மெல்ல மெல்ல அழுத்துகிறது. இன்னும் அதிகம் சொல்லக்கூடாது. நேரம் வரும்போது எழுதலாம்.

கவிதையை படித்துமுடித்த பிறகு எனக்கு என்னவோ நிசப்தமும், வாசனையும்தான் வீடு என்ற எண்னம் வலுப்பட்டுக்கொண்டிருக்கிறது. மனதை வெகுவாக அசைத்துவிட்டது. உள்ளே ஆழத்தில் ஓடும் சுழிபோல என்னவோ உருட்டுகிறது. கவிதை படித்த நேரத்தில் இருந்து இதை எழுதும் கணம்வரை நீர்த்திவலைகள் கட்டியாவதுபோல மௌனம் மெல்ல மெல்ல அழுத்துகிறது. இன்னும் அதிகம் சொல்லக்கூடாது. நேரம் வரும்போது எழுதலாம்.
தோழமையுடன்

அ.முத்துலிங்கம்

No comments: