Thursday, June 28, 2007


சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று விரியும் இவரின் படைப்புகள் ஒரு வானத்தின் திடீர் திடீர் வண்ணமாறுதலுக்கு ஒத்து இயங்குபவை. கூடவே இவரின் படைப்புலகம் மரபின் வேர்களிலிருந்து விடுபட்டுவிடாதவை. 1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார்.இலங்கை அரசின் ‘சாகித்ய விருது’ (1998), ‘இலக்கியச் சிந்தனை விருது’, ‘இந்திய ஸ்டேட் வங்கி பரிசு’ என பல விருதுகள் பெற்றவர். இவரின் 75 சிறுகதைகள் அடங்கிய முழுத் தொகுதி ‘அ. முத்துலிங்கம் கதைகள்’ ஒன்றும், ‘அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற முழு கட்டுரைத் தொகுதி ஒன்றையும் ‘தமிழினி’ வெளியிட்டிருக்கிறது. ‘வியத்தலும் இலமே’ என்ற, இவர் எடுத்த உலக எழுத்தாளர்கள் நேர்காணல் நூல் காலச்சுவடு வெளியீடாகவும் வந்திருக்கிறது. ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’’ ‘உயிர்மை’ வெளியிட்டிருக்கும் நூலின் தொகுப்பாசிரியர் இவர்.
தீராநதி: அம்மாவிடமிருந்துதான் தமிழ்ப் புராண விஷயங்களைக் கற்றிருக்கிறீர்கள். இந்தப் புராண, இதிகாசங்களின் கற்றறிவு இன்று உங்களின் படைப்பாளுமைக்கு எவ்விதத்தில் பயனுள்ளதாக இருக்கிறது?
அ. முத்துலிங்கம்: என்னுடைய அம்மா எந்த வேலையாயிருந்தாலும் நான் அவரிடம் போய் கதை கேட்கலாம். அவர் சொல்லிக்கொண்டே தன்னுடைய வேலையைச் செய்வார். அந்த உற்சாகத்தில் அவர் செய்யும் வேலைகூட அவருக்கு சுமையாகத் தெரிந்திராது. அந்தக் காலத்தில் பெண்கள் சமையல் வேலை செய்யும்போது பரபரப்பாகச் செய்வது கிடையாது. நாள் முழுக்க இருப்பதால் சாவதானமாகவே செய்வார்கள். அம்மாவும் கதை சொல்லும்போது ஆதியோடந்தமாகச் சொல்வார். ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் அவர் விவரமாக அறிந்திருந்தபடியால் சுவைபடக் கூறுவார். பின்னர் நான் வளர்ந்ததும் இவற்றை புத்தகங்களில் படித்துத் தெரிந்துகொண்டேன். எங்கள் பழைய புராண இதிகாசங்களில் உள்ள கற்பனைச் செறிவை வேறு எங்குமே காணமுடியாது. நல்லதங்காள் கதையை அம்மா ஒரு நூறு தரமாவது எனக்குச் சொல்லியிருப்பார். நல்லதங்காள் ஏழு வயதில் மணமுடித்து புருசன் வீடு போவாள். அவளுக்குப் பதினாறடி நீளம் கூந்தலாம். அவளுடைய அண்ணியை 'மூளி அலங்காரி, மூதேவி சண்டாளி' என்று அறிமுகப்படுத்தும்போது, ஏதோ அவள் முன்னால் நிற்பது போலத் தோன்றும். மானாமதுரையில் பன்னிரண்டு வருசம் மழை இல்லாத பஞ்சம். 'தாலி பறிகொடுத்த, கணவரைப் பறிகொடுத்த, கைக்குழந்தை விற்ற பஞ்சம்' என்பார் அம்மா. குழந்தைகள் 'பசி பசி' என்று அலற, மூளி அலங்காரி சோத்துப்பானையை ஒளித்துவைக்கும் இடம் வரும்போது, ஒவ்வொரு தடவையும் அம்மாவின் கண்கள் கலங்குவதைப் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்துப் பெண்கள் தங்களில் நல்லதங்காளைப் பார்த்தார்கள் என்றே நினைக்கிறேன். வழி வழியாக வந்த எங்கள் இதிகாசங்களை, புராணங்களை, பழங்கதைகளை சரியாகக் கற்ற ஒருவருக்கு வேறு இடத்தில் படைப்பாளுமை பலம் தேடவேண்டிய அவசியமே இராது. இவற்றை நான் முறையாகக் கற்றுக்கொள்ளவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இன்றுவரை உண்டு. அது அதற்கு ஒரு காலம் என்றிருக்கிறது. இழந்ததை வேறுவகையில்தான் ஈடுகட்டவேண்டும். ஒரு பேராசிரியர் என்னிடம் சொல்வார் 'நீ Don Quixoteஐ படித்தால் போதும், வேறு ஒன்றுமே படிக்கத் தேவை இல்லை' என்று. அது உண்மையாகக்கூட இருக்கலாம்.
தீராநதி: இந்த மரபு இலக்கியத்தின் படிப்பறிவு, நவீன இலக்கியத்திற்கான படைப்பு மனநிலைக்கு எதிராக இருக்கிறது என்ற ஒரு கருத்து இருக்கிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அ. முத்துலிங்கம்: இதற்கு நான் பதில் சொல்வதைவிட பேர்க்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட் சொன்னதைப் பார்ப்போம். ஏனென்றால், அவர் எங்கள் மரபு இலக்கியங்களை முறையாகக் கற்றவர். அவர் சொல்கிறார், பழைய இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்த ஒருவரால் நவீன இலக்கியங்களில் கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லையென்று. இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் செலவிடும் அதே அளவு நேரத்தை பழந்தமிழ் இலக்கியங்களுக்கு ஒதுக்குவார்களாயின், ஹார்ட்டின் அபிப்பிராயத்தில், அவர்களுடைய எழுத்தாற்றல் பலமடங்கு உயரும். அது முற்றிலும் உண்மை என்றே நான் நம்புகிறேன். அமெரிக்க இலக்கியத்தின் ஆரம்பம் மார்க் ட்வெய்ன் என்கிறார்கள். அவரை முழுக்கக் கற்றுத் தேர்ந்தாலே இன்றைய இலக்கியத்துக்குத் தயாராகிவிடலாம். அதுபோல Nikolai Gogolஇன் சட்டைப் பைக்குள் இருந்து ரஷ்ய இலக்கியம் பிறந்தது என்பார்கள். சேக்ஸ்பியர் காலத்தில் அவர் பாவித்த வார்த்தைகள் 24000 தான். இன்று ஆங்கிலத்தில் பத்து லட்சம் வார்த்தைகள் உள்ளன. ஆனால், இத்தனை வார்த்தைகள் இருந்தும் இன்றுவரை யாரும் சேக்ஸ்பியரைத் தாண்டி எழுதியதில்லை.
தீராநதி: இவ்வளவு பெருந்தொகையான வார்த்தைகள் இருந்தும் சேக்ஸ்பியரைத் தாண்ட முடியாததற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?
அ. முத்துலிங்கம்: நான் சொல்ல வந்தது என்ன வென்றால், வார்த்தைகளின் தொகைக்கும் படைப்பின் தரத்துக்கும் சம்பந்தம் இல்லையென்று. மில்டனுடைய ‘இழந்த சொர்க்கம்’ 11,000 வார்த்தைகளைக் கொண்டது; திருக்குறளில் 9000 வார்த்தைகள். யசுனாரி கவபட்டா என்பவர் எழுதிய ‘தூங்கும் அழகிகள் இல்லம்’ (House of the Sleeping Beauties) நாவல் நூற்றிலும் குறைந்த பக்கங்கள் கொண்டது. அதற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கொடுத்தார்கள். இனி வரும் காலங்களில் காவியங்களை ஒருவரும் படைக்கமாட்டார்கள். படைப்பாளிகள் கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் என்று தங்கள் ஆற்றலைக் காட்டவேண்டியதுதான்.
தீராநதி: உங்களுக்கு குறைவான ஆங்கில அறிவு இருந்த காலத்தில் கூட சேக்ஸ்பியரையும், ஆங்கில இலக்கியத்தையும் யாருடைய உதவியும் இன்றி முயன்று முயன்று படித்ததாகவும் ஆனால், உங்களுக்குத் தேவையான தமிழ் மொழியின் கல்வியறிவு இருந்தும் கூட பழந்தமிழ் இலக்கியத்தைப் பயில்வதென்பது கடினமான காரியமாக இருந்தது எனவும், ஒருமுறை பேசியுள்ளீர்கள். இச்சிக்கலைக் களைய ஏதாவது வழி உள்ளதா?
அ. முத்துலிங்கம்: எனக்குப் பெரிய குறை உண்டு. சேக்ஸ்பியரை, இருக்கும் சொற்ப ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு ஓர் அகராதியின் உதவியுடன் படித்து சுவைத்துக் கொள்ளலாம். ஆனால், எங்கள் முதிசமான பழம்பெரும் இலக்கியங்களைப் படிப்பதென்றால், உரையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் படிக்க முடியும். அந்தக் காலத்தில் இதைப் 'பாடம் கேட்பது' என்று சொல்வார்கள். ஒருவர் குருவிடம் அமர்ந்து பாடம் கேட்பது. ஜோர்ஜ் எல் ஹார்ட் கூட அப்படிச் செய்திருக்கிறார். அவர் இந்தியாவுக்குச் சென்று தங்கி, அங்கே திரு. ராமசுப்பிரமணியன் என்பவரிடம் முறையாகக் கற்றவர். உ.வே. சாமிநாதய்யருடைய 'என் சரித்திரம்' நூலைப் படித்தபோது எனக்கு ஓர் இடத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது. உ.வே.சாவுக்கு முதன்முதல் சீவக சிந்தாமணி ஏடுகள் கிடைத்தபோது, அவர் ஏற்கெனவே கும்பகோணத்தில் பேராசிரியராக இருந்தார். பல நூல்களை மீனாட்சிசுந்தரம்பிள்ளை, அவர்களிடம் பாடம் கேட்டிருந்தார். நச்சினார்க்கினியர் எழுதிய உரை இருந்தபோதிலும், சீவகசிந்தாமணியின் பொருளை சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. முதல் செய்யுள், முதல் வார்த்தை 'மூவாமுதலாவுலகம்' என்பதிலேயே ஐயம் வந்துவிட்டது. ஏழு வருடங்களாக அரிய பெரிய ஆராய்ச்சிகள் செய்த பிறகே, அந்த நூலில் தெளிவு காண்கிறார். அவருக்கே இந்தக் கதி என்றால், எங்களைப் போன்றவர்களின் நிலை என்ன?திருக்குறளை எடுத்துக்கொள்ளுங்கள். தமிழுக்குக் கிடைத்த பொக்கிசம். உலகப் பொதுமறை, எங்கள் வாழ்வியல் நூல் என்று அதை அறிஞர்கள் கூறுகிறார்கள். அரிய நெறி நூலைப் படைத்தவர், எதற்காக இரண்டு வரிகளில் சொல்லவேண்டும். நாலு வரிகளில் சொல்வதைத் தெளிவாகச் சொல்லியிருக்கலாமே. புனைவு இலக்கியம் என்றால் பரவாயில்லை, வாழ்வு நெறிமுறைகளைப் பற்றி பேசும் நூலுக்குத் தெளிவு முக்கியமல்லவா? உதாரணம் '‘தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்’ என்று ஒரு குறள். ஒருவர் நடுநிலை உள்ளவர் அல்லது அற்றவர் என்பது அவர் இறந்தபின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் தெரியவரும். எச்சம் என்பதற்கு offspring என்று G.U.Pope எழுதுகிறார். அதாவது சந்ததி. இதன் உண்மையான பொருள் என்ன? மிகவும் முக்கியமான ஒரு குறளில் இப்படி அவர் என்ன சொன்னார் என்பது தெரியாமல் 2000 வருடங்கள் தடுமாறுவதிலே கழிந்துவிட்டது. என் நண்பர் ஒருவருடைய மகன் பரிசோதனைக்கூடத்தில் வேலை பார்க்கிறான். அவனுடைய பணி ரத்தம், மலம், சிறுநீரைப் பரிசோதிப்பது. அவன் சொல்கிறான் ஒரு மனிதருடைய தன்மையை மலப்பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம் என்று. ‘அவரவர் எச்சத்தாற் காணப்படும்’ என்பது அதைத்தான் குறிக்கிறது என்று நகைச்சுவையாகக் கூறுவான். பிரஸ்னேவ் சோவியத் தலைவராக இருந்த காலத்தில் அமெரிக்க உளவுத்துறை அவருடைய மலத்தைக் களவாடி பரிசோதித்துப் பார்த்தது நினைவுக்கு வருகிறது.
தீராநதி: நீங்கள் குறிப்பிடும் ஜோர்ஜ் எல் ஹார்ட்டை பற்றி சிறு அறிமுகம் செய்ய முடியுமா?
அ. முத்துலிங்கம்: ஜோர்ஜ் எல் ஹார்ட் அமெரிக்காவின் பேர்க்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அதற்கு முன்னர் அவர் விஸ்கொன்ஸின் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தார். இவர் லத்தீன், கிரேக்கம், ரஸ்யன், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் என்று பல மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் மாணவனாக இயற்பியல் படிப்பதற்காக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து பாதி வழியில் மனதை மாற்றி சமஸ்கிருதத்தைப் படித்து, அதுவும் போதாமல் தமிழையும் கற்றுக் கொண்டார். இவர் ஏப்ரல் 2000_ம் ஆண்டு பேராசிரியர் மறைமலைக்கு எழுதிய கடிதம் பிரசித்தி பெற்றது. இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக 2004_ம் ஆண்டு அறிவித்ததற்கு இந்தக் கடிதம் பெரிதும் துணை செய்தது. பல நாடுகளிலும் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களிடம் 425,000 டாலர்கள் சேகரித்து, பேர்க்லியில் தமிழ்த் துறை தொடங்கியது இவருடைய இன்னொரு பணி. பல நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய புறநானூறு ஆங்கில மொழிபெயர்ப்பு The Four Hundred Songs of War and Wisdom, 1999ம் ஆண்டு வெளிவந்து தமிழ் இலக்கியத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சென்றது.இவருடைய தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டி கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், வாழ்நாள் இலக்கிய சாதனை விருதை 2006_ல் இவருக்கு வழங்கி கௌரவித்தது.
தீராநதி: இலங்கையில் சாலை வசதிகள் குறைந்த ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த நீங்கள் இன்று சர்வதேச அளவுக்கு உயர்ந்துள்ளீர்கள். பூமிப் பந்தின் பல எல்லைகளைக் கடந்துள்ள உங்களின் இலக்கிய மனம் குறித்து பகிர்ந்து கொள்ள முடியுமா?
அ. முத்துலிங்கம்: ராட்டினம் எவ்வளவுதான் சுற்றினாலும் அதனுடைய நடுக்கம்பு அச்சை விட்டு அகலுவதில்லை. நாங்கள் எங்கேயெங்கே போய் அலைந்தாலும் எங்கள் இதயம் பிறந்த இடத்தை விட்டுப் போவதில்லை. அது அதை நிரந்தரமாகப் பிடித்தபடியே இருக்கிறது. இன்றுகூட என்ன சம்பவம் நடந்தாலும் உடனேயே என் பிறந்த ஊரில் நடந்த சம்பவத்தோடு தொடர்புபடுத்தி யோசிக்காமல் இருக்க முடிவதில்லை. உதாரணமாக இந்தப் புதுவருடத்துக்கு ஒரு நண்பர் வாழ்த்து அனுப்பியிருந்தார். உடனேயே எங்கள் ஊரில் நாங்கள் வருடாவருடம் கொண்டாடுவது நினைவுக்கு வருகிறது. ஐயாவின் கையால் 'கைவியளம்' வாங்குவது அன்றுதான். அந்த வருடம் முழுக்க அது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்று நம்பினோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், மருத்துவமனையில் கிடந்தபோது உடம்பிலே வலி ஏற்படும்போதெல்லாம் கையிலே ஒரு குமிழைத் தந்து அதை அமத்தச் சொன்னார்கள். அதை அமத்தியவுடன் வலி மருந்து உடலுக்குள்ளே செல்லும். உடனேயே வலி மறைந்துவிடும். அந்த சிகிச்சை முறை இல்லாவிட்டால் வலியினால் நான் துடித்துப் போயிருந்திருப்பேன். அங்கே கழித்த அத்தனை நாட்களும் நான் அம்மாவை நினைத்தேன். வலி நிவாரண மருந்துகள் அம்மா வாழ்ந்த காலத்தில் இல்லை. அவர் நோயினால் எவ்வளவு வேதனை அனுபவித்தபடி மரணித்திருப்பார். மேற்கு நாடுகளில் எனக்கு அதிகம் பிடித்தது நூலக வசதிகள்தான். எந்தப் புத்தகத்தைக் கேட்டாலும் எடுத்துத் தருவார்கள். ஆராய்ச்சிக்கு வேண்டிய வசதிகள் செய்து தருவார்கள். கணினி கிடைக்கும்; வேண்டியளவு நகல் எடுத்துக்கொள்ளலாம். ஒரு புத்தகத்துக்காக சைக்கிளில் பல மைல் தூரம் மிதித்துக்கொண்டுபோன ஒருவருக்கு இங்கே கிடைக்கும் வசதிகளை அனுபவிக்கும்போது, குற்ற உணர்வு ஏற்படுவது தவிர்க்கமுடியாததுதான்.
தீராநதி: நீங்கள் விரும்பினாலும் திரும்ப இயலாத ஒரு தேசமாக இலங்கை மாறிக் கொண்டு வருகிறது. இந்த அரசியல் நெருக்கடிகள் உங்களை எந்த அளவிற்குப் பாதித்திருக்கிறது?
அ. முத்துலிங்கம்: மாணவனாயிருக்கும்போதே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு கொழும்பிலிருந்து கப்பல்களில் யாழ்ப்பாணம் போய்த் தப்பியவர்களில் நானும் ஒருவன். என் குடும்பம், உறவினர், சிநேகிதர் என்று எல்லோரும் அந்தக் கப்பலில் இருந்தனர். எனக்கு அப்போதிருந்த ஒரே சொத்து நான் படிக்கும் பாடப் புத்தகங்களும், சேர்த்து வைத்திருந்த இலக்கிய நூல்களும்தான். அவற்றை ஒவ்வொன்றாகத் திரும்பவும் சேர்க்கவேண்டி வந்தது. என்னுடைய சகோதரர் குண்டுவீச்சில் வீட்டை இழந்தார். என்னுடைய சகோதரிகள் சொத்தை இழந்தனர். எனக்கு எல்லாமாயிருந்த அண்ணன் சமீபத்தில் ஊரடங்குச் சட்டத்தின்போது நிராதரவாக மருத்துவமனையில் காலமானார். நான் ஓய்வு பெற்று கனடாவைத் தேர்ந்தெடுத்து இங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும், அடிக்கடி கனடாவின் அதி உயர்ந்த படைப்பாளியான அலிஸ் மன்றோ கூறியதை நினைத்துக்கொள்வேன். ‘நீ புகுந்த நாட்டில் எவ்வளவு வசதிகளோடு வாழ்ந்தாலும் ஒருபோதும் அந்த நாடு உன் சொந்த நாடாக மாறாது. அது நீ இறக்கப்போகும் ஒரு நாடாகவே இருக்கும். உன் பிறந்த நாடுதான் உன் சொந்த நாடு.’
தீராநதி: ஜோர்ஜ் லூயி போர்ஹேவைப் போல அலிஸ் மன்றோ வெறும் சிறுகதைகள் மட்டுமே எழுதிப் புகழடைந்தவர் அல்லவா? அவரைச் சந்திக்கக் கூட நீங்கள் படாதபாடு பட்டதாக எழுதி இருந்தீர்கள். அவரை மறுபடியும் சந்தித்தீர்களா? அவருக்கு ஏன் இன்னும் நோபல் பரிசு கிடைக்கவில்லை?
அ. முத்துலிங்கம்: அந்த நாள் எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. 20 யூன் 2006. Pen Canada அமைப்பு ஒழுங்கு செய்திருந்த கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். எதிர்பாராதவிதமாக அங்கே அலிஸ் மன்றோ பேச வந்திருந்தார். அவருடன் சந்தித்து உரையாடி, அடுத்த வாரமே அவர் செவ்வியையும் பதிவு செய்தேன். அவருடைய செவ்வியும் இன்னும் பலவும் அடங்கிய தொகுதி ‘வியத்தலும் இலமே’ என்ற நான் செவ்விகண்ட ஆங்கில எழுத்தாளர்கள் பலர் நோபல் பரிசைப் பெரிதாக மதிப்பதில்லை. கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால், அதை எதிர்பார்த்து அவர்கள் எழுதுவதில்லை. ‘ஷ்யாம் செல்வதுரை இரண்டாம்தரப் புத்தகத்துக்குத்தான் முதல் பரிசு வழங்கப்படுகிறது’ என்கிறார். மார்கிரட் அட்பூட் உண்மையான தரத்துக்குப் பரிசு கிடைப்பதில்லை என்கிறார். ஜேம்ஸ் ஜோய்சுக்கு நோபல் பரிசு கிடைத்ததில்லை. அதுகூடப் பரவாயில்லை. ஸ்வீடன் நாட்டு நடுவர் ஒருவரிடம் அது பற்றி விசாரித்தபோது, ‘யார் அவர்’ என்று கேட்டாராம். 2006_ம் ஆண்டு சமாதானத்துக்கான பரிசு முகமட் யூனிசுக்குக் கிடைத்தது. ஊடகக்காரர் ஒருவர் இரவு அவரை அழைத்து நீங்கள் வானொலி கேட்கிறீர்களா என்று கேட்க, அவர் இல்லை என்றார். தொலைக்காட்சி பார்க்கிறீர்களா என, அதற்கும் இல்லை என்றார். இன்று நோபல் பரிசு அறிவிக்கிறார்கள், உங்கள் பெயரும் விவாதிக்கப்படுகிறது, அது தெரியுமா என்றார். யூனுஸ் ஆம் என்றாராம்.
தீராநதி: இலங்கையில் சிங்களவர் மட்டுமே நிறைந்திருந்த ஒரு நிறுவனத்தில் தனியான ஒரு தமிழ் மேலதிகாரியாக கடமையாற்றியிருக்கிறீர்கள். அன்று உங்களுள் நடந்த பாதுகாப்பு, அச்ச மன உணர்வுப் போராட்டம் குறித்துப் பேசலாமா?
அ. முத்துலிங்கம்: நான் கொழும்பு பல்கலைக் கழகத்துக்கு நுழைவுத் தேர்வு எழுதி அனுமதி பெற்றபோது, எங்கள் புகுமுக வகுப்பில் 55 சதவீதம் தமிழர்களாகவும் மீதி சிங்களவராகவும் இருந்தார்கள். சிங்களவர் பெரும்பான்மையாக இருந்த ஒரு நாட்டின் பல்கலைக்கழகத்தில் தமிழர் தொகை அதிகமாக இருந்தது. எங்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் படிப்பித்த பேராசிரியர்களும் தமிழர்களாகவே இருந்தார்கள். நாங்கள் வகுப்பில் அகரவரிசைப்படி அமர்வோம். எங்கள் வரிசையில் முனசிங்க என்ற சிங்களவர் இருந்தது ஞாபகம். சிங்களம், தமிழ் என்ற பேதம் எங்கள் மனங்களில் அப்போது இல்லை. விரிவுரைகள் ஆங்கிலத்திலேயே நடக்கும். இயற்பியல் பேராசிரியர் கரும்பலகையில் சிக்கலான விடையைத் தேடும்போது உரத்த குரலில் 'ஏழு எட்டு அம்பத்தாறு', 'நாலு ஆறு இருபத்தி நாலு' என்று பெருக்கல் வாய்பாட்டைச் சொல்லிச் சொல்லி எழுதுவது சர்வ சாதாரணம். இரண்டாவது வருடம் இனப்போர் வெடித்தது. தமிழர்கள் கொலை செய்யப்பட்டு, வீடு வாசல் இழந்து அகதிகள் ஆனார்கள். அமைதி ஏற்பட்ட பின்னர் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பினால், நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. சிங்களம், தமிழ் என்ற பிரிவு ஏற்பட்டதை என் கண்ணால் கண்டேன். அதன் பின்னர் பிளவு கூடியதே ஒழிய ஒன்று சேரவில்லை. நான் வேலையில் சேர்ந்தபோது எனக்கு மேலதிகாரியாக ஒரு வெள்ளைக்காரர் இருந்தார். அவரின் கீழ் நான் நாலைந்து வருடங்கள் வேலை பார்த்தேன். அவர் நாட்டை விட்டுக் கிளம்பியதும் அவர் பார்த்த வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. நான் ஒருவனே அப்போது தமிழன். எனக்கு மேலேயிருந்த இயக்குனர் சேர்மன் ஒரு பிரபலமான சிங்களவர்; ஜனாதிபதியின் சகோதரர். கம்பெனி இருந்தது சிங்களப் பிரதேசத்தில். வெள்ளைக்கார அதிகாரி இருக்கும்வரைக்கும் பிரச்னை இல்லை. ஆனால், ஒரு தமிழ் மேலதிகாரி சிங்கள ஊழியர்களிடம் வேலை வாங்குவது சிரமமானது. நிர்வாகம் கண்டிப்பும் கருணையும் கலந்து இருக்கவேண்டும். ஒரு சின்னத் தகராறு என்றாலும் வேலை நிறுத்தம் என்று ஆரம்பித்துவிடுவார்கள். முட்டை மேலே நடக்கும் வித்தை.ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்ததுதான் தாமதம், திரும்பிப் பாராமல் நாட்டைவிட்டு ஓடிவிட்டேன்.
தீராநதி: நவீனம், பின்நவீனம் என்பது குறித்தெல்லாம் விவாதங்கள் தமிழில் நடத்தப்படும் காலம் இது. உங்களின் படைப்புகளில் இவற்றிற்கான சிறு கூறுகளைக் கூட பார்க்க முடியவில்லை. இக்கோட்பாடுகள் பற்றிய உங்களின் அளவீடு என்ன?
அ. முத்துலிங்கம்: நீங்கள் கேட்ட இதே கேள்வியை நான் அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர், புலிட்ஸர் பரிசு பெற்ற Frank McCourt அவர்களிடம் ஒருமுறை கேட்டேன். அவர் சொன்ன பதிலையே கீழே தருகிறேன். 'நான் ஒரு கதைசொல்லி. கதைதான் எனக்கு முக்கியம். நான் modern, postmodern என்றெல்லாம் நினைப்பதில்லை.' அதையேதான் நானும் சொல்கிறேன். மேலும், இலக்கியம் என்பது உண்மையை நோக்கிய ஒரு பயணம். பின்நவீனத்துவம் உண்மை என்று ஒன்றில்லை. அது மாறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறது. ஆகவே எனக்கு அது எப்படிப் பொருந்தும். ஆதியிலிருந்து மனிதன் கதை சொல்லி வந்திருக்கிறான். எழுத்து பிறப்பதற்கு முன்னரே கதை பிறந்துவிட்டது. ஆப்பிரிக்காவிலே சில இனக் குழுவினர் பேசும் மொழிக்கு எழுத்துரு கிடையாது. காலம் காலமாக வாய்மொழியாக வந்த கதைகளையே சொல்கிறார்கள். எங்கள் இதிகாசங்கள், ஹோமரின் இலியட், ஒடிசி எல்லாம் வாய்மொழியாக வந்து பின்னர் எழுத்துரு பெற்றவை. தொன்று தொட்டு வந்த கதை வடிவம் இது. 2000 வருட காலத்துக்கு இது தாக்குப் பிடித்தால், மேலும் 2000 வருட காலத்துக்கு இந்த முறை நிற்கும். நியூட்டனின் புவி ஈர்ப்பு விதிகளைக் கேட்ட மாணவன் ஆசிரியரிடம் 'எத்தனை வருடங்களுக்கு திருப்பித் திருப்பி அதே விதிகளைக் கட்டி மாரடிப்பது. அலுத்துவிட்டது, எனக்கு புது விதிகள் வேண்டும்' என்று சொன்னது போலத்தான்.மேற்கிலே அவர்கள் பின்நவீனத்துவத்தைக் கைவிட்டு நாளாகிவிட்டது. இங்கே பின்நவீனத்துவம் வேண்டும் என்று சொல்பவர்கள் அதிலே முயற்சிசெய்து பார்க்கலாம்; தவறே இல்லை. எப்படிப் பார்த்தாலும் தமிழுக்கு லாபம்தான்.
தீராநதி: பின் நவீனத்துவம் உண்மை மாறிக் கொண்டே இருக்கிறதென்று சொல்லவில்லையே எதற்கும் ஒற்றை உண்மை என்பதில்லை என்றுதானே சொல்லியுள்ளது. நிதர்சனத்தில் ஒற்றை உண்மை என்பதில்லாததைப் போல் தானே உள்ளது?
அ. முத்துலிங்கம்: சில காலத்துக்கு முன்னர் ஓர் அமெரிக்கப் பேராசிரியர் என்னிடம் பின்நவீனத்துவத்தை விளங்கிக்கொள்வதற்கு John Barth படிக்கச் சொன்னார். இவரும் ஒரு பேராசிரியர்தான். பல நூல்களை எழுதி, அவை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகங்களாக இருக்கின்றன. இவருக்கு பலதரப்பட்ட பரிசுகளும், விருதுகளும் கிடைத்திருக்கின்றன. தரிசு நிலத்தை பழக்கமில்லாத உழவன் உழுவதுபோல நான் அவருடைய நூலைப் படித்து முடித்தேன். ஒன்றுமே புரியவில்லை என்று பேராசிரியரிடம் முறைப்பாடு செய்தேன். அவர் ‘கைவிடவேண்டாம். இன்னொரு முறை படியுங்கள், புரியும்’ என்றார். இன்னொருமுறை படிப்பதற்கு ஓர் இடைவெளிக்காக காத்திருக்கிறேன். பேராசிரியர் ஜோன் பார்த்திடம் ஒரு மாணவன் பின்நவீனத்துவத்தைப் பற்றிக் கேட்டபோது அவர் கொடுத்த பதில்: ‘இது கழுத்துப்பட்டி (tie) கட்டுவதுபோல கட்டிக்கொண்டே கட்டும். முறைபற்றி விளக்கி, அதே சமயம் கழுத்துப்பட்டியின் சரித்திரத்தையும் சொல்லி, இறுதியில் ஓர் அருமையான விண்ட்ஸர் முடிச்சையும் கழுத்தில் போடுவது. என் விசயத்தில் அந்த முடிச்சு தொண்டைக்குழியில் கொஞ்சம் இறுக்கமாக விழுந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.
தீராநதி: ஆப்பிரிக்காவில் இறந்த நூறு வயதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒரு கறுப்பின மூதாதையரின் உடலுறுப்பின் சிறு பிசிறை எடுத்து அம்மக்கள் உண்டதாக முன்பு ஒரு முறை சொல்லி இருந்தீர்கள். இது போல் நீங்கள் சந்தித்த வேறு வினோத நிகழ்ச்சிகளைச் சொல்ல முடியுமா?
அ. முத்துலிங்கம்: உலகத்தின் வெவ்வேறு நாடுகளின் விழுமியங்கள் மாறுபட்டதாக இருப்பது இயல்பு. அந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்ட ஒன்று, இன்னொரு நாட்டு மக்களுக்கு குரூரமானதாகப் படும். நானும் மனைவியும் தாய்லாந்துக்குப் போனபோது அங்கேயிருந்த புத்த விகாருக்குச் சென்றோம். என் மனைவி பகட்டில்லாத, இடை மறைத்த கால் மட்டும் நீண்ட, பருத்தியுடை அணிந்திருந்தார். ஆனால் அவர்கள் பண்பற்ற ஆடை என்று எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. நண்பரின் மனைவியிடம் கடன் வாங்கிய முழங்கால் தெரியும் குட்டை பாவாடை அணிந்ததும் உள்ளே விட்டார்கள். ஆப்பிரிக்காவில் சில இனத்தவர், இறந்துபோன ஒருவரின் உடலின் சிறுகூறை உண்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். அதற்கு அவர்கள் கூறும் பதில் எங்களுக்கு உயிர் தந்தவர்கள் பெற்றோர். அவர்கள் இறந்தபின் அவர்களுடைய உடலின் சிறு கூறை உண்ணும்போது அவர்கள் எங்கள் உடம்போடு ஐக்கியமாகி விடுகிறார்கள். அன்பின் மிகுதியாலே இப்படிச் செய்கிறோம். ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் பிணத்தை எரிப்பதைப் பார்த்ததும் ஆப்பிரிக்கர்கள் கிலி பிடித்து ஓடிவிடுவார்கள். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான பழக்கம் என்று என்னிடமே சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில் ஆங்கில நாளிதழில் நான் படித்த அதே செய்தியை நீங்களும் படித்திருப்பீர்கள். Rolling Stones கித்தார் கலைஞர் தன் தகப்பனாரின் சாம்பலை கொக்கெய்னுடன் கலந்து மூக்கினுள் இழுத்துக்கொண்டாராம். கற்பு பற்றியும் ஆப்பிரிக்கர்களிடம் தீராத கேள்வி இருக்கிறது. ஆப்பிரிக்காவில் மணமுடிக்கும் முன்னரே பிள்ளை பெற்ற பெண்ணுக்கு மதிப்பு அதிகம். அவள் கர்ப்பம் தரிப்பது பிரச்னை இல்லாததால் அவளை மணக்க ஆடவர் போட்டியிடுவர். இந்தியப் படங்களில் ஒரு பெண் கற்பைக் காப்பாற்றப் போராடும் இடங்கள் அவர்களுக்குப் புரிவதேயில்லை. ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, அவர்கள் முகமன் கூறுவது ரசிக்கும்படியாக இருக்கும். உங்கள் உடம்பு எப்படி? உங்கள் மனைவி எப்படி? உங்கள் பிள்ளைகள் எப்படி? என்று நீண்டுகொண்டே போகும். ஆனால், இன்னும் முக்கியமானது ஆப்பிரிக்காவில் வேலிகள், மதில்கள் இல்லாதது. உங்கள் வீட்டில் ஒரு வாழைமரம் குலை தள்ளியிருக்கும். பாதையில் போகும் ஒருவர் அதை வெட்டிக்கொண்டு போகலாம். உங்கள் தோட்டத்து மாங்காயை வேறு ஒருவர் ஆய்ந்து கொள்ளலாம். இதன் தத்துவம், நிலத்திலே விளைவது எல்லோருக்கும் பொதுவானது. அவர்கள் சொல்வார்கள் புல் இருக்கும் இடத்தில் பசு மேயும் என்று. உண்மையான பொதுவுடமை அதுதான். ஆப்பிரிக்க அனுபவங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன. நான் அவற்றைப் பதிவு செய்து வைத்திருக்கிறேன்; விரைவில் புத்தகமாகப் படிப்பீர்கள்
.தீராநதி: புத்தகமாக வாசிப்பதற்கு முன்னால் சுவாரஸ்யத்திற்காக ஒரு சில அனுபவத்தைச் சொல்லலாமே?
அ. முத்துலிங்கம்: நான் சியாரோ லியோனில் வேலை பா£த்தபோது, அங்கே சியாக்கா ஸ்டீவன்ஸ் என்பவர் 1983_ல் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அப்போது எங்கள் வீட்டில் ஒரு வேலைக்காரன் இருந்தான். அவனுடைய பெயர் அகஸ்டி. அவனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஒரு தூரத்து தூரத்து உறவு இருந்தது. அதைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன். தசரதருக்கு மூன்று மனைவிகளும் 350 ஆசை நாயகிகளும் இருந்தார்கள் என்று இதிகாசம் சொல்லும். சியாக்கா ஸ்டீவன்சுக்கும் அப்படியே.அவருடைய 73_வது வயதிலே ஃபுலானி இனத்தவர் தங்கள் சார்பில் ஒரு 16 வயதுப் பெண்ணை அவருக்குப் பரிசாக அளித்தார்கள். அவள் அவருடைய 200_வது ஆசைநாயகி என்று பேசிக்கொண்டார்கள். ‘தாவீது ராஜா விருத்தாப்பியராக இருந்தபோது எவ்வளவு வஸ்திரங்களினால் மூடினாலும் அவருக்கு அனல் உண்டாகவில்லை. அப்போது அவருக்கு பணிவிடை செய்யவும், அனல் உண்டாகும்படி அவர் மடியில் படுத்துக்கொள்ளவும், கன்னியாகிய ஒரு சிறு பெண்ணை அவருடைய ஊழியர்கள் பிடித்துக்கொண்டு வந்தார்கள். அவள் பெயர் அபிஷாக்; இப்படி பைபிளில் சொல்லியிருப்பதுபோல சியாக்கா ஸ்டீவன்சுக்கும் ஓர் அவசியம் இருந்திருக்கலாம்.ஃபுலானி பெண்ணைக் கொடுத்ததில் அதிகம் சந்தோசப்பட்டது எங்கள் வீட்டு வேலைக்காரன் அகஸ்டிதான். இவனுடைய தாய் ஃபுலானி இனத்தைச் சேர்ந்தவள். அவளுடைய கிராமத்தில் இருந்துதான் இந்தப் பெண்ணைப் பிடித்துக்கொண்டு வந்து பரிசாகக் கொடுத்திருந்தார்கள். இவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. தன் ஒன்றுவிட்ட தங்கை அரசமாளிகையில் இருப்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்தான். தான் சிறுவயதில் அவளோடு விளையாடியதையும் அவள் அப்போதே மிக அழகாக இருந்தாள் என்பதையும் விவரித்தான். தங்கள் கிராமத்தில் பால்குத்தாத பெண் அவள் ஒருத்திதான் என்றும், ஒருமுறை அவர்கள் பால்குத்த வந்தபோது இவள் காட்டுக்குள் ஓடிப்போய் ஒரு முழு இரவும், பகலும் ஒளிந்திருந்ததையும் நினைவுகூர்ந்தான். இதற்கு மேலே சொல்லமுடியாது. மீதியைப் புத்தகமாக வந்தபிறகுதான் படித்துக் கொள்ளவேண்டும்.
தீராநதி: வருங்கால தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் ஈழப் படைப்பாளிகளாகவே இருப்பார்கள் என்று முன்பொரு முறை கார்த்திகேசு சிவத்தம்பி பேசி இருந்தார். அதை உறுதிப்படுத்துவது போல இன்று ஷோபா சக்தி, புஷ்பராஜா, நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழ் நவீன இலக்கியத்தை வேறு முனைப்போடு நகர்த்திக் கொண்டு செல்கிறீர்கள். ஒட்டுமொத்தமான ஈழ இலக்கியம் குறித்து உங்களின் மதிப்பீடு என்ன?
அ. முத்துலிங்கம்: ஈழத் தமிழர்கள் தமிழ் இலக்கியத்துக்குப் புது வேகம் கொடுத்து முனைப்போடு நகர்த்திச் செல்கிறார்கள். அது உண்மை. இலங்கையில் நிலவும் போர்ச்சூழல் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது புலம்பெயர்ந்த இடத்தில் ஏற்பட்ட கலாச்சார மாற்றங்களாக இருக்கலாம். ஆனால், நான் எப்படி வருங்கால தமிழ் இலக்கியத்தை ஈழத்துப் படைப்பாளிகளே முன்னெடுத்துச் செல்வார்கள் என்று தீர்க்கமாகச் சொல்லமுடியும்? ஐம்பது வருடத்துக்குப் பிறகு தமிழ் இலக்கிய ஆராய்ச்சி செய்யும் ஒரு மாணவன் அல்லவா அதைக் கண்டுபிடிக்கவேண்டும். தமிழ் சினிமாவுக்கு தமிழில் தலைப்பு வைத்தால், அதற்கு சலுகை என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இப்படி உலகத்தில் வேறு எங்கேயும் நடக்குமா? போர்ச்சுகல்லில் எடுக்கும் ஒரு படத்துக்கு போர்ச்சுகல் தலைப்பு வைக்கவேண்டும் என்று அரசு சொல்லுமா? தமிழிலே தலைப்பு வைத்துவிட்டு உள்ளே முற்றிலும் ஆங்கிலப் பாடலாக இருந்தால் என்ன செய்வது? கொடுத்த சலுகையைப் பிடுங்கிவிடுவார்களா? ‘இலக்கணம்’ என்ற தலைப்பில் ஒரு தமிழ்ப் படம் சமீபத்தில் வந்தது. படம் ஏனோதானோ என்று இருந்தாலும், அதில் வந்த வசனங்களில் ஓர் ஆங்கிலச் சொல்கூட இல்லை. ஓரிடத்திலும் நான் வசனம் புரியாமல் முழிக்கவில்லை. இயற்கையாகவே இருந்தது. இது பாராட்டத்தக்கது. கனடாவுக்கு யாராவது வந்தால் நான் சில புதுமைகளை அவர்களுக்குக் காட்டுவேன். கனடியத் தமிழ்த் தொலைக்காட்சியில் நடக்கும் ஒத்திகை இல்லாத நேரடி ஒளிபரப்பு விவாதங்கள் முற்றுமுழுதாக தமிழ் வார்த்தைகளிலேயே நடக்கின்றன. வானொலியில் செய்திகள் சுத்தமான தமிழில், நல்ல உச்சரிப்புடன் வருகின்றன. சாதாரண உரையாடல்களில் தனித்தமிழ் நுழைந்துவிட்டது. நான் கேட்ட கவியரங்கம் ஒன்றில் இப்படி ஒரு கவிதை. (மன்னிக்கவும், நினைவில் இருந்து சொல்லுகிறேன்). updating என்றால் பொருள் இற்றைப்படுத்துதல்.கணினியை இற்றைப்படுத்தச் சொன்னாய்_ படுத்தினேன். கைப்பேசியை இற்றைப்படுத்தச் சொன்னாய்_படுத்தினேன். காதலைச் சொல்ல மறுக்கிறாய், கைகோர்க்க மறுக்கிறாய், கட்டிப்பிடிக்க மறுக்கிறாய். இருபதாம் நூற்றாண்டில் இன்னமும் இருக்கிறாயே! உன் இருதயத்தை இற்றைப்படுத்து இற்றைப்படுத்து என் இனியவளே. கனடிய அரசாங்கம் தமிழிலே தலைப்பு வைப்பதற்கு, கவிதை எழுதுவதற்கு, செய்தி வாசிப்பதற்கு ஒரு சலுகையும் தருவதில்லை. ஈழத்தமிழர்கள் தாங்களாகவே செய்கிறார்கள். English dictionary, American dictionary என்பதுபோல வருங்காலத்தில் 'ஈழத்தமிழ் அகராதி' என்று ஒன்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்கள் அவ்வளவு வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தீராநதி: எந்த ஆராய்ச்சி மாணவனின் ஆய்வும் இலக்கியத்தின் அடுத்த நகர்வுக்கு உதவியதாகச் சான்றில்லை. அவர்கள் வெறும் பட்டத்திற்காக வேண்டியே தன்ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் க.நா.சு., தொ.மு.சி.ரகுநாதன், கார்த்திகேசு போன்றோரின் ஆய்வுகள் இலக்கிய செழுமைக்கு உதவியுள்ளன. உங்களின் கணிப்பிற்கு இருக்கும் பொருள், ஆய்வு மாணவனின் கணிப்பிற்கு இருக்குமா என்று தெரியவில்லை?
அ. முத்துலிங்கம்: பெரும்பாலும் மாணவர்கள் பட்டத்துக்காகச் செய்யும் ஆய்வுதான் கடைசி ஆய்வு. அதற்குப் பிறகு அவர்கள் ஆய்வு செய்வதோ, கட்டுரை படைப்பதோ இல்லை. இது தமிழில் மட்டுமல்ல, எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அப்படித்தான். விலங்கியல் பேராசிரியர் ஒருவர் ஒருவித ஆய்வும் செய்யாமல் இளைப்பாறியது எனக்குத் தெரியும். அதே சமயம் சில பேராசிரியர்கள் தொடர்ந்து வாழ்நாள் முழுக்க ஆய்வு செய்வதும் உண்டு. இதிலே கல்வித்துறைக்கு வெளியே நின்று ஆய்வு செய்பவர்கள் தன்னார்வத்தினால் செய்வதால் அவர்கள் ஆய்வுகளில் பற்றும், உண்மையும் இருக்கும்.
தீராநதி: கார்த்திகே சிவத்தம்பி தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றை இலக்கிய மதிப்பீட்டிற்குள் வைத்தே பேச வேண்டும் என்றார். ஒரு படைப்பாளியாக சினிமா, தொலைக்காட்சி பற்றியெல்லாம் உங்களின் பார்வை என்ன?
அ. முத்துலிங்கம்: பேராசிரியர் கா.சிவத்தம்பி எங்கே இப்படிப் பேசினார், என்ன பேசினார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் பேசினால் அதற்கு ஓர் அர்த்தம் இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். நாம் படிக்கும் நூல்கள் எல்லாம் இலக்கியமா? கலையம்சம் சேர்ந்த நூல்களையே நாம் இலக்கியம் என்கிறோம். சேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களை எடுப்போம். அவை நாடகமாக நடிப்பதற்கு என்று எழுதப்பட்டவை. ஆனால், நாம் அவற்றைப் படிக்கும்போதே அவற்றின் இலக்கியச் சுவையை உணரக்கூடியதாக இருக்கிறது. அவற்றைக் மோசமாக மேடையேற்றினால்கூட அவற்றில் உள்ள கலையம்சம் அவற்றைக் காப்பாற்றிவிடும். 2400 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்கக் கவி சோபக்கிளிஸ் எழுதிய அன்ரிகன் Antigone நாடகத்தை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. அதை ரொறொன்ரோவில் நாடகமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அனுபவித்த இன்பம் ஒரு படி கூடியதாகவே இருந்தது. சோபக்கிளிஸின் நாடகப் பிரதி அத்தனை பலம் வாய்ந்தது. எப்படி எல்லா நூல்களும் இலக்கியமாக இருப்பதில்லையோ, அதேபோல எல்லா சினிமாவும் கலைத்தரமான படைப்பாக இருக்கமுடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில், அவற்றை இலக்கிய மதிப்பீட்டுக்குள் வைத்துத்தான் பேசவேண்டும். அகிரோ குரோசாவாவின் 'இகுரு' திரைப்படக் கதையைப் படிக்கும்போது நல்ல இலக்கியப் படைப்பை படித்த உணர்வே ஏற்படுகிறது. Bicycle Thieves பிரதியைப் படிக்கும்போதும், வெங்கட் சாமிநாதனின் 'அக்கிரகாரத்தில் கழுதை’யைப் படிக்கும்போதும் அதே உணர்வுதான் கிடைக்கிறது. ஆவணப் படங்களுக்கும் இது பொருந்தும். அவை சினிமாவாக வந்தாலும், தொலைக்காட்சியில் வந்தாலும் அவற்றின் இலக்கியப் பங்களிப்பை நாம் நிராகரிக்க முடியாது.
தீராநதி: உரைநடை இலக்கியத்தில் ஈழப் படைப்புகள் அடைந்திருக்கின்ற மாற்றத்தில் ஓரளவேனும் ஈழக் கவிதைகள் அடைந்துள்ளனவா என்று மதிப்பீடு செய்யும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்தத் தேக்கம் எதனால் உண்டாகிறது என உங்களால் சொல்ல முடியுமா?
அ.முத்துலிங்கம்: ஈழத்துக் கவிதைகள் சில உச்சத்தைத் தொட்டிருக்கின்றனவே. சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், மு.புஸ்பராஜன், செழியன், சோலைக்கிளி, திருமாவளவன், றஷ்மி என்று நிறைய எழுதுகிறார்கள். இன்னும் பல இளம் கவிஞர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். மலைகளின் உயரங்களுக்குச் செல்லவேண்டியிருக்கிறது நண்பர்களைத்தேடி. அவர்களை இழக்கின்றபோது மலைகளையே சுமக்கவேண்டியிருக்கிறது. இது செழியன் எழுதியது. உண்மை என்னவென்றால், ஈழத்துப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை சந்தைப்படுத்த தவறிவிடுகிறார்கள். ஈழத்தில் இன்று நிலவும் போர்ச்சூழலிலும் இலக்கிய ஆர்வம் குன்றாமல் படிக்கிறார்கள், எழுதுகிறார்கள். முந்தி ஒருபோதும் தொடர்பு கொள்ளாத ஒரு படைப்பாளி எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கடிதம் போட்டிருந்தார். தான் தொடர்ந்து
தீராநதி படிப்பதாகவும் ஆனால், தனக்கு ஆறுமாதம் கழித்துத் தான் கிடைக்கிறது என்றும் எழுதினார். இவ்வளவு கஷ்டத்திலும் அவர்கள் அங்கே தொடர்ந்து வாசிக்கிறார்கள்; எழுதி பிரசுரமும் செய்கிறார்கள். ஆனால், இந்த நூல்கள் இந்தியா போய்ச்சேருவதில்லை. ஒருவர் கண்ணிலும் படாமல் அவர்கள் படைத்துக்கொண்டிருப்பதால், அவர்களின் பெருமை அநேகருக்குத் தெரியாது. இந்தக் குறை இப்பொழுது ஓரளவுக்கு நீங்கியிருக்கிறது. இ. பத்மநாப ஐயர், ஈழநாதன், மு.மயூரன், தி.கோபிநாத் போன்றோரின் கடும் உழைப்பில் 400_க்கு மேலான ஈழத்து நூல்கள், கவிதை நூல்கள் உட்பட, இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளன. இணையதளம் http://www.noolaham.net/ பல தன்னார்வத் தொண்டர்களின் உதவியோடு மேலும் மேலும் நூல்களை ஏற்றிய வண்ணமே இருக்கிறார்கள். உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் யார் வேண்டுமானாலும் ஒரு சொடுக்கின் மூலம் இவற்றைப் படிக்க முடியும். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த பழம் பெரும் நூலகம் கொடூரமாக எரிக்கப்பட்டது. அந்தத் தவறு இனிமேலும் நடக்காது. இது நிரந்தரமானது. புத்தகங்கள் தொலைந்து போகாது. தீப்பிடிக்காது. செல்லரிக்காது. கிழியாது. முக்கியமாக ராணுவம் இதை அழிக்கமுடியாது. விரைவில் இந்தத் திட்டத்தின்மூலம் ஈழத்து நூல்கள் அனைத்தும் உலக வாசகர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.
தீராநதி: செவ்வியல் கவி வில்வரத்தினம், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்ற மூத்த தலைமுறையினரை நான் குறிப்பிடவில்லை. சமகால கவிதைகளின் வீச்சைப் பற்றியே கேட்டேன்?
அ. முத்துலிங்கம்: சமகாலத்தில் எழுதுபவர்களில் நான் ஜபார், ஆதவன் போன்றவர்களைப் படித்திருக்கிறேன். இன்னும் நிறையப் பேர் இணையத்தில் எழுதுகிறார்கள். அவர்கள் பெயர்கள் ஞாபகத்தில் இல்லை. நான் ஏற்கெனவே சொன்னதுபோல எங்கள் பிரச்சினை சந்தைப்படுத்துதல், விரைவில் ஈழத்து இளம்கவிகளின் படைப்புகளை நீங்கள் நூலகத் திட்டத்தில் படிப்பீர்கள்.
தீராநதி: அரசியல் தன்மையற்ற ஒரு நபராகவே நீங்கள் இருக்கிறீர்கள். இலங்கை அரசியல் நெருக்கடி குறித்தெல்லாம் ஏதாவது கருத்துகள் உங்களிடம் உள்ளனவா, மறுக்காமல் பேசுங்கள்?
அ. முத்துலிங்கம்: எதைச் சொல்கிறீர்கள்? என் சிறுகதைகள் ஏன் அரசியல் பின்னணி இல்லாமல் இருக்கின்றன என்று கேட்கிறீர்களா? இலங்கைப் பின்னணியில் நேர்த்தியான நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எல்லாம் வந்துகொண்டே இருக்கின்றன. நேரடி அனுபவம் இல்லாததால் நான் ஆழமாகப் பதிவுசெய்ய முடிவதில்லை ஆனால், என்னுடைய எத்தனையோ சிறுகதைகளில் ஈழத்து காட்சிகள் வந்து வந்து போகும். புதுமைப்பித்தன் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி எழுதவில்லை. எமிலி டிக்கின்ஸன் அமெரிக்க உள்நாட்டுப் போர் பற்றி அவர் எழுதிய 1700 கவிதைகளில் ஒன்றில்கூட எழுதவில்லை. அதற்காக அவர்கள் அதுபற்றிக் கவலைப்படவில்லை என்று ஆகிவிடுமா?பல நாடுகளில் சிறுபான்மையினரைப் பாதுகாக்க சட்டம் இயற்றுவார்கள். ஆனால், உலகிலேயே ஒரு பெரும்பான்மையைப் பாதுகாக்க சட்டம் கொண்டுவந்த நாடு இலங்கையாகத்தான் இருக்கும். இங்கே எப்படி ஜனநாயகம் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கலாம். ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது. பெரும்பான்மை வைத்ததுதான் சட்டம் என்று ஆகிவிட்டது. அவர்கள் போனால் போகட்டும் என்று விட்டுக்கொடுப்பதுதானா நீதி? பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டில் ஜனநாயகம் இயங்கவேண்டும் என்றால், சிறுபான்மைக்குப் பாதுகாப்பு அரசியல் சட்டத்திலேயே ஐயத்துக்கு இடமில்லாமல் சொல்லப்பட்டிருக்கவேண்டும். அல்லாவிடில் சிறுபான்மைக்கு விமோசனமே கிடையாது. பேச்சு வார்த்தைகள் நடந்தபோது ‘தீர்வு வந்துவிடும், தீர்வு வந்துவிடும்’ என்று உலகம் எதிர்பார்த்தது. மறுபடியும் போர் என்றால் இழப்பு இரண்டு பக்கமும்தான். உலகிலே எத்தனையோ பாரிய பிரச்சினைகள். ஈராக், பாலஸ்தீனம், சூடான். யார் இலங்கைப் பிரச்சினையை கவனிக்கிறார்கள்; எல்லோருமே கைவிட்டுவிட்டார்கள். தீர்வை அவர்களாகத்தான் தேடவேண்டும்.
தீராநதி: பல ஆண்டுகளாக பெண் என்பவள் இரண்டாம் பாலினமாகவே கருதப்பட்டாள். சேக்ஸ்பியரின் வெளிச்சத்தில் மறைந்து போன பெண் மகாகவி எலிஸபெத் கேரியைப் பற்றி விரிவான ஒரு கட்டுரையை நீங்கள் கூட எழுதியுள்ளீர்கள்.அதில் எலிஸபெத்தின் ‘மரியமின் துயரம்’ ஆங்கிலத்தில் வெளியான முதல் நாடகம் என்று குறிப்பிட்டதோடு, சேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ நாடகத்திற்கும் கேரியின் நாடகத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளதாக நிறுவி இருந்தீர்கள். ஆண்களையே மையம் வைத்து சுழன்ற எழுத்துலகத்தை சீமோன் பூவார் உள்ளிட்டவர்களின் மறுவாசிப்பால் பெண்களுக்கென்று மொழி, கருத்தியல் உருவாகியிருக்கிறது. உங்களின் வாசிப்பில் பெண் சுதந்திரத்தின் காத்திரம் குறித்துச் சொல்ல முடியுமா?
அ. முத்துலிங்கம்: கனடாவில் தமிழ் எழுத்தாளர்கள் கூட்டம் ஒன்றிற்கு ஒரு பெண் தலைமை வகித்தார். அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் 90 சதவீதம் ஆண்கள். தலைமை வகித்த பெண்மணி ஒரு கேள்வியுடன் பேச்சை ஆரம்பித்தார். ‘எங்கே உங்கள் மனைவிகள்? நீங்கள் அவர்களைக் கூட்டி வரமாட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் திரும்பிப் போகும்போது அவர்கள் சுடச்சுட சோறும் கறியும் தயாராக வைத்திருக்கவேண்டும்.’ இதுதான் உண்மையில் நடப்பது. இங்கே வாழும் ஆங்கிலத்தில் எழுதும் பெண் எழுத்தாளர்களிடம் பெண் சுதந்திரம் பற்றிப் பேசியிருக்கிறேன். அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. மாயா அஞ்சலோ என்ற பிரபலமான பெண் கவி ஓர் இடத்தில் சொன்னது எனக்குப் பிடித்துக்கொண்டது. ‘Be fair’ (நியாயமாக இரு) இதுதான் அவர்சொல்வது. ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான விதி. இன்று உலகத்திலே வறுமை மிக்க ஒரு நாடு ரூவாண்டா. அங்கே 49 சதவீதம் பெண்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். உலகத்திலேயே குறைவாக பெண்கள் ஆட்சியில் பங்குபற்றுவது யப்பானில், 7 சதவீதம். ஆனால் யப்பானோ பொருளாதாரத்தில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ள ஒரு நாடு. அங்கே பெண் சுதந்திரம் பெரிதாகப் போற்றப்படுகிறது. ரூவாண்டாவில் பெண்கள் நிலைமை இன்னும் பின்தங்கியே இருக்கிறது. பெண் சுதந்திரத்துக்குப் பெண்களின் சிந்தனையில் முதலில் மாறுதல் வேண்டும். சார்த்தரே பூவாரின் காதல் உலகறிந்தது. இருவரும் காதலிக்கும்போதே அவர்களுக்கு வேறு வேறு காதல்களும் இருந்தன. சுதந்திரம் என்பதுஅதுதான். ஒருமுறை அல்பேர்ட் காம்யூவிடம் சார்த்தரே ‘நீங்கள் வேண்டுமென்றால் பூவாரை படுக்கைக்கு அழைக்கலாம்’ என்று அனுமதி கொடுத்தார். பூவார் எவருடன் படுக்கவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு சார்த்தரே யார்? அங்கே பெண் சுதந்திரம் செத்துவிட்டது.
தீராநதி: ஒரு எழுத்தாளராக உள்ள அதே வேளையில், ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பைக் குறித்து இன்று பரவலான ஒரு விழிப்புணர்வு உண்டாகியுள்ளது. மொழி பெயர்க்கும்போது உண்டாகும் மொழிச்சிக்கலுக்கு ஒரு பொது கருத்தியலை உருவாக்க வேண்டும் என்கிறார்கள். மொழிபெயர்ப்பாளன் என்பவன் இரண்டாம் நிலைதான் எனும் பழைய கருத்தை மாற்றி, படைப்பாளிக்கு நிகரானவன் என்ற அந்தஸ்தும் கேட்கிறார்கள். மொழிபெயர்ப்பில் உங்களின் அனுபவம், சிக்கல், மேற்கூறிய அந்தஸ்து குறித்தெல்லாம் கருத்தென்ன?
அ. முத்துலிங்கம்: மொழிபெயர்ப்பு என்று நினைத்தாலே பயமாயிருக்கிறது. சமீபத்தில் ஒரு கட்டுரையைப் படித்து நான் கதிகலங்கிப் போயிருக்கிறேன். செர்வாண்டிஸ் என்பவர்தான் என்றும் அழியாத Don Quixote நாவலைப் படைத்தவர். அவர் சொன்னார் மொழி பெயர்ப்பைப் படிக்கும்போது உயர்ந்த சித்திரங்கள் எழுதப்பட்ட திரைச் சீலையின் பின்பக்கத்தைப் பார்ப்பதுபோல இருக்கிறதாம். வடிவமும், வண்ணமும் ஒன்றாக இருந்தாலும் பின் பக்கத்துத் திரையில் பார்ப்பது முன் பக்கத்தில் இருப்பது அல்ல என்கிறார். ரஸ்ய இலக்கிய மேதைகள் எல்லோரையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஒரு பெண்மணி, பெயர் கொன்ஸ்ரன்ஸ் கார்னெற். அவர் Tolstoy, Dostoevsky, Turgenev, Gogol. Chekhov என்று எவரையும் விடவில்லை. ஒருமுறை கொன்ஸரன்ஸ் பெண்மணியை டி.எச். லோரன்ஸ் பார்க்கப்போன சம்பவத்தை விவரிக்கிறார். அப்போது அவர் தோட்டத்தில் அமர்ந்து மொழிபெயர்ப்பைச் செய்து கொண்டிருந்தார். சுருள் சுருளாக மொழி பெயர்த்த பக்கங்கள் அவர் காலடியில் குவிந்திருந்தன. அதன் உயரம் முழங்கால் மட்டுக்கும் வந்துவிட்டது. ஒரு பக்கம் முடித்ததும் நிமிர்ந்து பார்க்காமல் அடுத்த பக்கத்தை ஆரம்பித்தார். ஆனால், லொலிற்றா நாவல் எழுதிய விளாடிமிர் நபக்கோவுக்கு இந்த மொழிபெயர்ப்புகள் பிடிக்கவில்லை. அவர் ரஸ்யன், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர். கொன்ஸ்ரன்ஸ் பெண்மணியின் மொழிபெயர்ப்பில் ரோல்ஸ்ரோயுக்கும், டோஸ்டோவஸ்கிக்கும் வித்தியாசமே தெரிவதில்லை என்கிறார். ஒரே மாதிரியான ஆங்கிலம். இப்பொழுது ரஸ்ய இலக்கியங்களை Pevear, Volokhousky என்று இருவர் கூட்டாகச் சேர்ந்து மொழிபெயர்க்கிறார்கள். இவர்கள் மொழிபெயர்த்த அன்னா கரீனினா 200 ஆண்டு வெளிவந்தது. முதலில் 32,000 பிரதிகள் அச்சிட்டு, போதாமல் மீண்டும் 800,000 பிரதிகள் அச்சிட வேண்டியிருந்தது. ரோல்ஸ்ரோய் உயிருடன் இருந்திருந்தால் மூர்ச்சை போட்டு மறுபடியும் இறந்து போயிருப்பார். இந்த இரட்டையர் Brothers Karamazovஐ மொழிபெயர்த்தபோது, என்ன செய்தார்கள் தெரியுமா? அந்த நூல் ரஸ்யாவில் வெளிவந்தது. 1800_ம் ஆண்டு அதை மொழிபெயர்த்தபோது அந்த ஆண்டுக்குப் பிறகு உண்டான ஆங்கிலச் சொற்களை அவர்கள் உபயோகிக்கவில்லை. அவ்வளவு நுணுக்கமாகச் செய்தார்கள். இது தமிழில் நடக்கிற காரியமா? மொழி பெயர்ப்பதையே விட்டுவிட்டேன்.
தீராநதி: டேவிட் ஓவன் என்ற அமெரிக்க எழுத்தாளர் தனக்கு 24 வயது என பொய்ச் சான்றிதழ் கொடுத்து பள்ளியில் கல்வி பயின்று அந்த அனுபவத்தை ஹைஸ்கூல் என்ற நாவல் வடிவத்தில் கொடுத்தார். காலிம் ஆடம்ஸ் என்ற ஆங்கிலத்தில் எழுதும் ஹாலந்து எழுத்தாளர், கடலில் Yachtல் பயணித்து அந்த அனுபவத்தை புத்தகமாக்கினார். இதைப் போல் ஏன் தமிழில் நிகழவில்லை?
அ. முத்துலிங்கம்: அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ படித்தீர்களா? நான் இந்தப் புத்தகத்தைப் பற்றி வெகுநாளாகக் கேள்விப்பட்டிருந்தாலும் சமீபத்தில்தான் படித்தேன். ஏதோ உளவுத்துறை சம்பந்தமான நாவல் என்று தள்ளிப் போட்டிருந்தேன். ஆனால், அது முற்றிலும் புதிய உலகத்தை எனக்குக் காட்டியது, ஜெயமோகனின் ஏழாம் உலகமும் அப்படியானதுதான். இன்னொரு புத்தகம் அழகிய நாயகி அம்மாளின் ‘கவலை’ வ.அ. இராசரத்தினத்தின் ‘இலக்கிய நினைவுகள்’ கூட இந்த வகையில் ஒன்றுதான். இன்னும் பல இருக்கும். நான் படித்ததில்லை.
தீராநதி: இப்போது என்ன படிக்கிறீர்கள்? உங்கள் புத்தகங்களை எப்படித் தெரிவுசெய்கிறீர்கள்?
அ. முத்துலிங்கம்: சமீபத்தில் முழுப்புத்தகத்தையும் படிக்க வைத்த நூல் Dave Eggers â¿Fò A Heartbreaking Work of Staggering Genius தலைப்பே விநோதமானது. இது ஒரு சுயசரிதைத் தன்மையான புத்தகம். இவருடைய பெற்றோர் இருவரும் ஒரு மாத கால இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிடுகிறார்கள். இவருக்கு வயது 22. இவருடைய தம்பிக்கு வயது எட்டு. தம்பியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். தன் தம்பியுடன் விளையாடுவார், சில சமயம் தகப்பன்போல கண்டிப்பாக இருப்பார். சமூக நலக்காரர்கள் வந்து தம்பியை அபகரித்துப் போய்விடுவார்களோ என்ற பயத்தில் அலைச்சல் வாழ்க்கை வாழ்கிறார். ஒவ்வொரு சம்பவத்தையும் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் சொல்ல அவரால் முடிகிறது. அவருடைய பெற்றோர் இறந்த சம்பவத்தைக்கூட சர்வசாதாரணமாக சொல்லிக்கொண்டு போகிறார். ஆனாலும் மனதுக்கு அடியில் நெகிழ்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. நான் படித்த அடுத்த புத்தகம், இன்னும் சுவாரஸ்யமானது. காவ்யா விஸ்வநாதன் என்ற 19 வயதுப் பெண் எழுதிய ஆங்கில நாவல். அதன் பெயர் How Opal Mehta Got Kissed, Got Wild and Got a Life. என்ன நடந்தது என்றால் இந்தப் பெண் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் நுழைவதற்கு நடத்திய தேர்வில் வெற்றி பெற்று அங்கே சேர்ந்துவிட்டார். இரண்டாவது வருடத்தில் இந்தப் புத்தகத்தை எழுதி வெளியிடுகிறார். அவருக்கு முன் பணமாக பெரும்தொகை 500,000 டாலர்கள் கிடைக்கின்றன. ஆனால், புத்தகம் வெளிவந்த சில வாரங்களுக்குள் பல பகுதிகள் களவாடப்பட்டிருக்கின்றன என்பது தெரியவருகிறது. பதிப்பாளர் ஒப்பந்தத்தை முறித்து, விற்பனையை நிறுத்தி, புத்தகத்தை மீளப்பெற்றுவிடுகிறார். ஆகவே, இந்தப் புத்தகம் கடைகளில் கிடைக்காது. பழைய புத்தகக் கடை ஒன்றில் தேடிப்பிடித்து வாங்கினேன். ஒரு பெண் ஹார்வர்ட்டுக்குள் நுழைய எடுக்கும் கஷ்டத்தையும், பெற்றொர்கள் படும் பாட்டையும் விவரிக்கிறது. தேர்வு கண்டவர் புத்தகப் படிப்பு மட்டும் போதாது; வாழ்க்கையையும் அனுபவித்து பார்க்கவேண்டும் என்று அறிவுரை சொல்கிறார். இவர் தன் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைத்து பல அனுபவங்களுக்கு உள்ளாகிறார். அதுதான் கதை. இது தீவிர இலக்கியத்தில் சேராது. இளைஞர்களுக்காக எழுதியது என்றாலும் நல்ல வசன நடையில் இலகுவாக நகர்கிறது.அதிர்ஷ்டவசமாக நான் வாங்கிய புத்தகத்தில் எனக்கு முன் படித்தவர் களவாடிய வசனங்களை அடிக்கோடிட்டு வைத்திருந்தது எனக்கு வசதியாகப் போய்விட்டது. காவ்யா களவு செய்த வசனங்கள் அவர் எழுதிய சொந்த வசனங்களிலும் பார்க்க மோசமானவையாகவே இருந்தன. இந்த வசனத்தையா போய் களவாடினார் என்று ஒரே வியப்பாக இருந்தது. Roots நாவலை எழுதிய Alex Haley என்பவர் மூன்றே மூன்று பொதுவான வார்த்தைகளை தன் புத்தகத்தில் களவாடி எழுதியிருந்தார். அவை pitched rolled and trembled. அவர் விட்ட பிழை அந்த வார்த்தைகளை அதே ஒழுங்கில் உபயோகித்தது. களவு கொடுத்தவர் வழக்குப்போட ஹேலி பல ஆயிரம் டாலர்கள் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்கவேண்டியிருந்தது. இந்தப் பெண்ணோ பாவம், ஒன்றுக்கும் உதவாத வசனங்களை களவாடி தன் எதிர்காலத்தை அழித்துக்கொண்டார். சென்னையில் பிறந்த ஒரு நல்ல தமிழ் இளம் பெண்ணின் படைப்புக்கு இது நேர்ந்துவிட்டது சோகமானதுதான
தீராநதி: எழுதுவதைத் தவிர வேறு ஏதாவது ஈடுபாடுகள் உங்களுக்கு கனடாவில் உள்ளனவா?
அ. முத்துலிங்கம்: தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பு கனடாவில் இருக்கிறது. அதில் நான் இயங்கி வருகிறேன். தன்னார்வலர்களால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், லாபநோக்கற்ற குழுவாக ரொறொன்ரோவில் பதிவுசெய்யப்பட்டது. இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான விருதை வழங்கி கௌரவிக்கிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் தங்கள் நாடுகளில் இலக்கியம் படைப்பவர்களுக்கு கௌரவம் செய்கிறது. ஆனால், இந்த அமைப்பு உலகளாவிய ரீதியில் செயல்படுகிறது. சென்ற வருடம் இந்த விருது பேர்க்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட்டுக்கு வழங்கப்பட்டது. இது நாடு, சமயம், நிறம், சாதி கடந்தது. இதற்கான ஒரு நிதியம் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரொறொன்ரோ ஆர்ட்ஸ் கவுன்சில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்தியிருக்கிறது. இதற்கு நடுவர்கள் 15 பேர் இந்தியா, இலங்கை, மலேசியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் சுற்றுமுறையில் விருதுத் தேர்வுக் குழுவில் பணியாற்றுவார்கள். தமிழ் இலக்கிய சாதனை விருது மட்டுமல்லாமல், மேலும் மூன்று பரிசுகளும் வருடாவருடம் வழங்கப்படுகின்றன. புனைவு இலக்கியம், அபுனைவு இலக்கியம், சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் தமிழ் தகவல் தொழில்நுட்ப சாதனை விருது. தமிழின் எதிர்காலம் தமிழ் தகவல் தொழில்நுட்பத்தில் பெரிதும் தங்கியிருக்கிறது. ஆகவே, இந்த விருது முக்கியத்துவம் பெறுகிறது. மற்ற விருதுகள் போல இதுவும் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் பூட்டிய அறைக்குள் இருந்து தமிழ்ச் சேவை புரியும் தகவல் தொழில்நுட்பக்காரர் ஒருவருக்குப் போய்ச்சேரும்.அடுத்து நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது தமிழ் விக்கிபீடியாவில். இது ஒரு கலைக்களஞ்சியத்துக்குச் சமம். ஆனால் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. தமிழ் விக்கிபீடியாவை இணையம் மூலம் உலகில் எங்கிருந்தும் யாரும் பயன்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவது, இது கல்வியாளர்களால் மாத்திரம் உருவாக்கப்படுவது இல்லை. யாரும் எழுதலாம். எவரும் பங்கு பற்றி திருத்தங்கள் செய்யலாம். ஆகவே, கட்டுரைகளில் ஆசிரியர் பெயர் இராது. ஆங்கிலத்தில் உள்ள விக்கிபீடியாவில் பத்து லட்சம் கட்டுரைகள் இருக்கின்றன. இந்திய மொழிகளில் தெலுங்கில் 26000 கட்டுரைகள், வங்காளியில் 12700 கட்டுரைகள் சேர்ந்துவிட்டன. தமிழ் விக்கிபீடியா இந்த மாதம் 10,000 கட்டுரைகள் இலக்கை தொட்டுவிட்டதாக அறிகிறேன். அதற்கும் கீழே ஹிந்தி, கன்னடம், மலையாளம் என்று வருகிறது. என்னுடைய வேலை எனக்குத் தெரிந்த படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் என்று அணுகி அவர்களிடம் கட்டுரை பெற்று களஞ்சியத்தில் சேர்க்க உதவுவது. தங்கள் பெயர் வராததால் பலர் தயங்குகிறார்கள். உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் தன்னார்வத் தமிழர்கள், இந்தப் பணியில் முழுமூச்சுடன் வேலை செய்கிறார்கள். இந்த வருடம் முடிவதற்கிடையில் கட்டுரைகளின் எண்ணிக்கையை 20,000_க்கும் மேலாக உயர்த்தும் முயற்சியில் இருக்கிறார்கள்.ரொறொன்ரோவில் எனக்குத் தெரிந்த ஓர் இளைஞரின் பெயர் நற்கீரன். பொறியியல் முதுகலை படிக்கிறார். நாளுக்கு இரண்டு மணித்தியாலம் ஒதுக்கி இதற்காக உழைக்கிறார். அவருக்கு இதனால் ஒரு சதம் லாபம் இல்லை. முழுக்க முழுக்க தமிழ்ச் சேவை என்பது இதுதான். உலகம் முழுக்க வாழும் கல்வியாளர்கள், படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மனமுவந்து உதவவேண்டும். கட்டுரைகளை எழுதி 'தமிழ் விக்கிபீடியா' என்று தலைப்பிட்டு யாரும் natkeeran@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

Thursday, June 07, 2007

ஓரான் பாமுக் - அப்பாவின் சூட்கேஸ் தமிழில்: ஜி குப்புசாமி




என் அப்பா காலமாவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு, அவரது எழுத்துக்கள், கைப்பிரதிகள், குறிப்பேடுகள் அடங்கிய ஒரு சிறிய சூட்கேஸை என்னிடம் கொடுத்தார். அவரது வழக்கமான கேலியும் கிண்டலும் கலந்த தொனியில், அவர் போய்ச் சேர்ந்த பிறகு, அவற்றை நான் படிக்க வேண்டும் என்றார். அதாவது அவர் இந்த உலகை விட்டுப் போய்ச் சேர்ந்த பிறகு. லேசான சங்கடத்தோடு, ‘‘சும்மா எடுத்துப்பார்" என்றார். ‘‘உள்ளே இருப்பதில் ஏதாவது பிரயோஜனப்படுமா என்று பார். நான் போன பிறகு வேண்டுமானால், அவற்றில் தேர்ந்தெடுத்து வெளியிட்டுக் கொள்".நாங்களிருவரும் புத்தகங்கள் சூழ்ந்திருக்கும் எனது வாசிப்பறையில் இருந்தோம். வலி மிகுந்த சுமையன்றை இறக்கி வைக்க விரும்பும் ஒரு மனிதனைப்போல அப்பா முன்னும் பின்னும் நடந்து, அந்த சூட்கேஸை வைப்பதற்கான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். கடைசியில் அதைக் கண்ணுக்கு உறுத்தாத ஒரு மூளையில் மெதுவாக வைத்தார். நாங்கள் இருவரும் எப்போதும் மறந்திராத ஒரு பாசாங்குத் தருணம் அது. அது கடந்ததும், வாழ்க்கையை லேசாக எடுத்துக் கொள்கிற, கேலியும் கிண்டலுமான எங்கள் ஆளுமைகள் தலையெடுக்க, எங்களது வழக்கமான வேடங்களுக்குத் திரும்பினோம். தினசரி வாழ்க்கையின் அற்பமான விஷயங்களைப் பற்றி, துருக்கியின் முடியவே முடியாத அரசியல் சிக்கல்களைப் பற்றி, பெரும்பாலும் நஷ்டத்தில் முடிகிற என் அப்பாவின் வியாபார முயற்சிகளைப் பற்றி அதிகம் விசனப்படாமல் எப்போதும் போல பேசிக் கொண்டிருந்தோம்.



அப்பா அங்கிருந்து சென்ற பின், அந்த சூட்கேஸைக் கடந்து அப்படியும் இப்படியுமாக பல நாட்கள் சென்று வந்தும், ஒருமுறை கூட அதைத் தொட்டுப் பார்க்கவில்லையென்பதும் என் நினைவுக்கு வருகிறது. இந்தச் சிறிய, கருப்புநிற, தோல் சூட்கேஸ§ம் அதன் பூட்டும், அதன் மழுங்கல் முனைகளும் எனக்கு ஏற்கெனவே பரிச்சயமானதுதான். குறைந்த தூரப் பயணங்களுக்கும், வேலைக்குச் செல்லும்போது பதிவேடுகளை எடுத்துச் செல்வதற்கும் அப்பா அதனை எடுத்துச் செல்வார். என் சிறு வயதில் அப்பா வெளியூர் சென்று திரும்பினால், இந்தச் சின்ன சூட்கேஸைத் திறந்து உள்ளேயிருப்பவற்றை நான் குடாய்ந்ததும், கொலோன் வாசனையில் வெளிநாட்டுச் சரக்குகளை நோண்டியதும் ஞாபகத்தில் வந்தன. இந்த சூட்கேஸ் ஒரு பரிச்சயமான சிநேகிதன். என் பிள்ளைப் பிராயத்தின், என் கடந்த காலத்தின் ஒரு வலுவான நினைவூட்டி. ஆனால், இப்போது என்னால் அதைத் தொடக் கூட முடியாது. ஏன்? அதனுள்ளே பொதிந்திருக்கும் மர்மங்களில்தான் என்பதில் சந்தேகமில்லை.


இந்த கனத்தின் அர்த்தத்தை இப்போது நான் பேசப் போகிறேன். ஒருவன் அறை ஒன்றிற்குள் தன்னை அடைத்துக் கொண்டு, ஒரு மேஜையில் அமர்ந்து, தன் சுயத்தை வெளிப்படுத்தும் ஒரு சிருஷ்டி மூலையை அடைந்து தன்னைப் பதிந்து கொண்டானென்றால், அதுதான் அவன் படைப்பதும் _ இலக்கியத்தின் அர்த்தமும்.


என் அப்பாவின் சூட்கேஸை இறுதியில் நான் தீண்டியபோதுகூட, அதைத் திறந்து பார்க்கும் தைரியம் எனக்கு வரவில்லை. ஆனால் அந்த நோட்டுப் புத்தகங்கள் சிலவற்றில் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரியும். சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த இந்தக் கத்தை கத்தையான விஷயங்களைப் பற்றி நான் கேள்விப்படுவது இதுதான் முதல் முறையுமல்ல. என் அப்பாவிற்கு ஒரு மிகப் பெரிய நூலகம் இருந்தது; அவரது இளமையில், 1940_களின் இறுதியில் அவர் ஒரு இஸ்தான்புல் கவிஞனாக ஆக விரும்பி வாலெரியை துருக்கிய மொழியில் மொழிபெயர்த்திருந்தார். ஆனால், சொற்ப வாசகர்களேயிருக்கும் ஓர் ஏழை தேசத்தில் கவிதை எழுதி வாழ்க்கை நடத்துவதை அவர் விரும்பியிருக்கவில்லை. என் அப்பாவின் அப்பா, என் தாத்தா ஒரு செல்வந்தரான வணிகராக இருந்தவர். என் அப்பா ஒரு வசதியான சௌகரியமான வாழ்க்கையைச் சிறுவயதிலும், இளம் பருவத்திலும் அனுபவித்திருக்கிறார். இலக்கியத்தின் பொருட்டும், எழுதுவதற்காகவும் சிரமஜீவனம் நடத்த அவருக்கு விருப்பமில்லை. வாழ்க்கையை அதன் எல்லா அழகுகளோடும் விரும்பியவர் அவர் _ இதுவரைக்கும் எனக்குப் புரிகிறது.


என் அப்பாவின் சூட்கேஸிற்குள் இருப்பவற்றிலிருந்து என்னை தூர விலக்கி வைத்திருக்கும் முதல் விஷயம், வாசிக்கக் கிடைப்பது எனக்கு விருப்பமில்லாமற் போகலாம் என்ற பயம் தான். ஏனென்றால், இது என் அப்பாவிற்குத் தெரியும் என்பதால்தான் முன்னெச்சரிக்கையாக அவற்றை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர்போல நடித்தார். இருபத்தைந்து வருடங்கள் எழுத்தாளனாகப் பணியாற்றியபின் இதைப் பார்ப்பதற்கு எனக்கு வலியெடுத்தது. ஆனால், என் அப்பா இலக்கியத்தைப் போதியளவுக்கு தீவிரமாக எடுத்துக் கொள்ளாததற்காக, அவர் மீது கோபித்துக் கொள்ளக் கூட நான் விரும்பவில்லை… என் நிஜமான பயம், நான் தெரிந்து கொள்ளவோ, கண்டறிந்து கொள்ளவோ விரும்பாத நெருக்கடியான விஷயம், ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராக என் அப்பா இருக்கக் கூடிய சாத்தியம் தான். இந்த பயத்தினால்தான் என் அப்பாவின் சூட்கேஸை என்னால் திறக்க இயலவில்லை. அதைவிட மோசம் என்னவென்றால், இதை என்னால் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள முடியாதது. என் அப்பாவின் சூட்கேஸிலிருந்து உண்மையானதும், மகத்தானதுமான இலக்கியம் வெளிவருமானால், என் அப்பாவிற்குள் முற்றிலும் வேறுபட்ட ஒரு மனிதர் வாழ்ந்திருப்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டி வரும். இது பீதியேற்படுத்தும் ஒரு சாத்திய கூறு. ஏனெனில் என் இந்த முதிர்ந்த வயதில் கூட என் அப்பாவை என் அப்பாவாக மட்டுமே நினைக்க விரும்பினேன். ஓர் எழுத்தாளனாக அல்ல.


ஓர் எழுத்தாளன் என்பவன் தனக்குள்ளிருக்கும் இரண்டாவது சுயத்தையும், அவனை அவனாக ஆக்கும் உலகையும் கண்டறிய வருடக் கணக்காக பொறுமையோடு தேடிவருபவன்: எழுதுவது என்பதைப் பற்றி நான் பேசும்போது என் மனதிற்கு முதலில் வருவது ஒரு நாவலோ, ஒரு கவிதையோ அல்லது இலக்கியப் பாரம்பரியமோ அல்ல, ஓர் அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டு, ஒரு மேஜையில் அமர்ந்து, தனியாக, தனக்குள்ளாகத் திரும்பி, வார்த்தைகளால் ஒரு புதிய உலகை அதன் நிழல்களுக்கு மத்தியில் கட்டமைக்கும் ஒரு மனிதன்தான். இவன் அல்லது இவள் ஒரு தட்டச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம், கம்ப்யூட்டரின் சௌகரியத்தால் ஆதாயம் பெறலாம், அல்லது நான் முப்பது வருடங்களாகச் செய்து வருவதைப்போல தாளின் மீது பேனாவைப் பதித்து எழுதலாம். எழுதும்போது அவன் தேனீரோ, காபியோ அருந்தலாம், அல்லது சிகரெட் புகைக்கலாம். அவ்வப்போது மேஜையிலிருந்து எழுந்து சன்னலுக்கு வெளியே, தெருவில் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்க்கலாம், அவனுக்கு அதிருஷ்டமிருந்தால் மரங்களும் காட்சிகளும் கூட தெரியலாம், அல்லது ஒரு கருப்புச் சுவரை அவன் வெறிக்கலாம். அவன் கவிதைகள், நாடகங்கள் அல்லது என்னைப் போல நாவல்கள் எழுதலாம். இந்த எல்லா வேறுபாடுகளும் அவன் மேஜையில் அமர்ந்து தனக்குள் பொறுமையாக திரும்பிக் கொள்வதற்குப் பிறகு வருபவை. எழுதுவது என்பது இந்த உள்நோக்கிய பார்வையை வார்த்தைகளாக மாற்றுவது, தனக்குள் அவன் அடங்கும் போது அவன் கடந்து வருகிற உலகைக் கவனித்து ஆய்வது, இதனைப் பொறுமையோடும், பிடிவாதத்தோடும், உவகையோடும் செய்வது. என் மேஜையில் நாட்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக அமர்ந்து வெற்றுத்தாளில் புதிய வார்த்தைகளை மெதுவாகச் சேர்த்துக் கொண்டு வரும்போது, ஒரு புதிய உலகை நான் படைப்பது போல, ஒரு பாலத்தை அல்லது ஒரு கோபுரத்தை ஒவ்வொரு கல்லாகக் கட்டுவதைப் போல எனக்குள்ளிருக்கும் அந்த மற்றொருவனைக் கட்டமைக்கிற மாதிரி உணர்கிறேன். எழுத்தாளர்களான நாங்கள் பயன்படுத்தும் கற்கள், வார்த்தைகள். அவற்றை எங்கள் கைகளில் ஏந்தி ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் இணைந்திருக்கும் வழி வகைகளை உணர்ந்து சில நேரங்களில் அவற்றைத் தூர வைத்துப் பார்த்து, சில வேளைகளில் எங்கள் விரல்களாலும் பேனாக்களின் முனைகளாலும் ஏறக்குறைய தட்டிக் கொடுத்து, சீராட்டி அவற்றை எடைபோட்டு, அங்குமிங்கும் நகர்த்தியமைத்து, வருடவருடமாகப் பொறுமையோடும், நம்பிக்கையோடும் புதிய உலகங்களை உருவாக்குகிறோம்.


எழுத்தாளனின் ரகசியம் அகத்தூண்டுதல் அல்ல. அது எங்கிருந்து வருகிறதென்பது எப்போதுமே தெளிவாகத் தெரிவதில்லை. அது அவனது மனவுறுதி, அவனது பொறுமை. ‘ஊசியை வைத்துக் கொண்டு கிணறு வெட்டுவதைப் போல’ என்ற அழகான துருக்கியப் பழமொழி எழுத்தாளர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் கூறப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. பழங்கதைகளில் எனக்கு ஃபெர்ஹாத்தின் பொறுமை எனக்குப் பிடித்தமானது. காதலுக்காக அவன் மலைகளைக் குடைந்து செல்கிறான், அதை நான் புரிந்து கொள்ளவும் செய்கிறேன். எனது My Name is Red நாவலில் பண்டைக்கால பாரசீக நுண்ணோவியர்கள் பற்பல வருடங்களாக அதே குதிரை ஓவியத்தை, அதே ஆர்வத்தோடு, ஒவ்வொரு தூரிகைக் கீற்றையும் மனப்பாடமாக வரைந்து கொண்டிருப்பதை, அவர்கள் கண்களைக் கட்டிவிட்டால் கூட அந்த அழகிய குதிரையை அதே நுணுக்கத்தோடு அவர்களால் வரைய முடியுமென்பதை நான் எழுதியபோது, நான் கூறிக்கொண்டிருப்பது எழுத்து வேலையை, என் சொந்த வாழ்க்கையைப் பற்றி என்று அறிந்தேன். ஓர் எழுத்தாளன் தன் சொந்தக் கதையை கூற வேண்டுமென்றால் _ அதை மெதுவாக, நிதானமாகக் கூற வேண்டும், அது மற்றவர்களைப் பற்றிய ஒரு கதை என்பதைப்போல, தனக்குள் உருவான கதையின் சக்தி மேலெழும்பி வருவதை உணர வேண்டுமென்றால், ஒரு மேஜையில் அமர்ந்து தன்னை இந்தக் கலைக்கு, இந்தக் கை வினைக்குப் பொறுமையாக ஒப்புவிக்க வேண்டுமென்றால், முதலில் அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை தரப்பட்டிருக்க வேண்டும். அகத்தூண்டல் தேவதை (இது சிலரிடம் அடிக்கடி வந்து ஆசீர்வதிக்கிறது, சிலரிடம் அரிதாகவே செல்கிறது) ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர்களையே ஆதரிக்கிறது. ஓர் எழுத்தாளன் பெரும்பாலும் தனிமையாக உணரும்போது, அவனது முயற்சிகள் அவனது கனவுகள் அவனது எழுத்தின் மதிப்பு ஆகியவற்றைப் பற்றி பெரிதும் ஐயுற்றிருக்கும் போது, அவனது கதையை அவனது கதையென்றே அவன் நினைக்கும் போது, அத்தகைய தருணங்களில் அவனுக்குக் கதைகளையும், பிம்பங்களையும், கனவுகளையும் காட்டி, அவன் கட்டியெழுப்ப விரும்பும் உலகத்தை, அந்தத் தேவதை வரைந்தெடுக்கும். என் வாழ்க்கை முழுக்க அர்ப்பணித்து எழுதி வந்திருக்கும் புத்தகங்களை நான் திரும்ப யோசிக்கும் போது, என்னை மிக உன்னதமான மகிழ்ச்சியில் திளைக்க வைத்த வாக்கியங்கள், கனவுகள், பக்கங்கள் எல்லாமே என் சொந்தக் கற்பனையிலிருந்து வந்தவையல்ல என்றும், வேறேதோ ஒரு சக்தி அவற்றைக் கண்டெடுத்து எனக்குத் தாராளமாக வழங்கியிருக்கிறதென்றும் நான் உணர்ந்த தருணங்களால் பெரிதும் ஆச்சரியமுற்றிருக்கிறேன்.
என் அப்பாவின் சூட்கேஸைத் திறந்து அவரது நோட்டுப்புத்தகங்களை நான் வாசிக்க பயந்ததற்குக் காரணம் நான் பொறுத்துக்கொண்ட சிரமங்களை அவரால் தாங்கமுடியாது என்று நான் அறிந்திருந்தேன். தனிமையையல்ல அவர் நேசித்தது, நண்பர்களோடு கூட்டங்கள், ஓவியக் கண்காட்சிகள், வேடிக்கை, கம்பெனி என்று வாழும் வாழ்க்கையைத்தான். ஆனால் பிற்பாடு என் எண்ணங்கள் வேறு திக்கில் திரும்பின. இத்தகைய எண்ணங்கள், துறவறமும் பொறுமையுமான இத்தகைய கனவுகள் எல்லாமே என் சொந்த வாழ்க்கையிலிருந்தும், எழுத்தாளனாக என் சொந்த அனுபவத்திலிருந்தும் நான் பெற்றிருந்த முன் முடிவுகளே. கூட்டத்திற்கு மத்தியிலும், வீட்டில் குடும்பத்தினரின் சலசலப்பிற்கிடையிலும் எழுதுகிற அற்புதமான எழுத்தாளர்கள் பலர் உண்டு. அது மட்டுமின்றி, நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது, என் அப்பா குடும்ப வாழ்க்கையின் சுவாரஸ்யத்தில் சலிப்புற்று, எங்களையெல்லாம் விட்டுவிட்டு பாரீசுக்குப் போய்விடுவார். பல எழுத்தாளர்களைப் போல அங்கே ஓட்டல் அறையில் அமர்ந்து நோட்டுப் புத்தகங்களை நிரப்பித் தள்ளுவார். அந்த நோட்டுப் புத்தகங்களில் சில இந்த சூட்கேஸில் இருக்கின்றன என்று தெரியும். ஏனென்றால், அதை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு சில வருடங்கள் முந்தி என் அப்பாவே தன் வாழ்க்கையின் அந்தக் காலகட்டத்தைப் பற்றி என்னிடம் பேசத் தொடங்கியிருக்கிறார். அந்த வருடங்களைப் பற்றி நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே அவர் கூறியிருந்தாலும், தனது வடுப்பாடுகளை, எழுத்தாளனாக ஆகவேண்டுமென்ற அவரது கனவுகளை அல்லது அவரது ஓட்டல் அறையில் அவரைப் பீடித்த தன்னடையாளம் குறித்த கேள்விகளை அவர் குறிப்பிட்டதில்லை. பதிலாக, பாரீஸ் நகர நடைபாதைகளில் சார்த்தரை அவர் எப்போதும் பார்ப்பதைப் பற்றி, அவர் படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள் பற்றி, மிக முக்கியமான செய்தியைப் பகிர்ந்துகொள்பவரைப்போல மனமார்ந்த பெருமிதத்தோடு விவரிப்பார். நான் ஒரு எழுத்தாளனாக ஆனதற்கு என் அப்பா பாஷாக்களையும் மாபெரும் மதத்தலைவர்களையும் பற்றிப் பேசுவதைவிட, எழுத்தாளர்களின் உலகைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்ததும் ஓரளவுக்கு காரணம் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. எனவே, என் அப்பாவின் நோட்டுப் புத்தகங்களைப் படிக்கும் போது, இதை மனதில் வைத்துக் கொண்டு அவரது மிகப்பெரிய நூலகத்திற்கு நான் எந்தளவுக்குக் கடன்பட்டிருக்கிறேன் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அப்பா எங்களோடு வசிக்கும்போது, அவர் என்னைப் போலவே புத்தகங்களோடும் சிந்தனைகளோடும் தனியாக இருப்பதையே விரும்பினார் என்பதையும், அவரது எழுத்தின் இலக்கியத்தரத்தைப் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் நான் மனதில் கொள்ள வேண்டும். ஆனால், அப்பா எனக்கு ஆஸ்தியாக விட்டுச் சென்ற சூட்கேஸைப் பார்க்கும்போது, இந்த விஷயத்தை என்னால் செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றியது. அவரது புத்தகங்களுக்கு முன்னால் போடப்பட்டிருக்கும் திவானில் அப்பா சாய்ந்துகொண்டு கையிலிருக்கும் புத்தகமோ, பத்திரிகையோ நழுவியது தெரியாமல் கனவில் மூழ்கி, தன் எண்ணங்களில் நெடுநேரம் தொலைந்து போயிருப்பார். அவர் ஜோக் அடிக்கும்போதும், கிண்டல் செய்யும் போதும், வீட்டுச் சச்சரவுகளின் போதும் இருக்கும் முகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாவத்தில் அவர் முகம் இருப்பதை நான் பார்த்தபோது உள்நோக்கிப் பார்க்கும் பார்வையை நான் முதன் முதலாகத் தரிசித்தது அப்போதுதான். குறிப்பாக, என் பிள்ளைப்பருவத்தில், என் முன் இளம்பருவத்தில், பயத்தோடு கூடிய புரிதலாக அவர் மனநிறைவின்றி இருக்கிறார் என்பதை உணரமுடிந்தது. இப்போது பற்பல வருடங்கள் கழித்து, இந்த மனநிறைவின்மைதான் ஒரு மனிதனை எழுத்தாளனாக்கும் ஆதாரக்கூறு என்று புரிகிறது. எழுத்தாளனாவதற்குப் பொறுமையும், கடும் உழைப்பும் மட்டும் போதாது; கூட்டம், நண்பர்கள், சாதாரண விஷயங்கள், தினசரி வாழ்வு போன்றவற்றிலிருந்து பிய்த்துக் கொண்டு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தை அவன் முதலில் உணர வேண்டும். பின் ஓர் அறைக்குள் புகுந்து தன்னை தாழிட்டுக் கொள்ளவேண்டும். நம் எழுத்துக்களில் ஓர் ஆழமான உலகத்தை உருவாக்குவதற்காக பொறுமையையும் நம்பிக்கையையும் வேண்டி நிற்கிறோம். ஆனால் தன்னை ஓர் அறையில் அடைத்துக் கொள்ளும் இச்சை மட்டுமே நம்மைச் செயலாற்ற செலுத்துகிறது. தன் இதயத்திற்குள் புத்தகங்களைக் கொண்டு சென்று வாசிக்கிற, தன் சுயபிரக்ஞையின் குரலுக்கு மட்டும் செவிசாய்க்கிற, மற்றவர்களின் வார்த்தைகளோடு பூசலிடுகிற, தன் புத்தகங்களுடன் விவாதத்தில் இறங்குவதால் தன் சொந்தச் சிந்தனைகளையும் தன் சொந்த உலகத்தையும் வளர்த்தெடுக்கிற இத்தகைய சுதந்திரமான எழுத்தாளனுக்கு முன்னோடி மிக நிச்சயமாக நவீன இலக்கியத்தின்ஆரம்ப நாட்களில் மான்டெய்ன்தான். என் அப்பா அடிக்கடி எடுத்து வாசித்துக் கொண்டிருந்ததும், எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் மான்டெய்னைத்தான். கிழக்கிலோ அல்லது மேற்கிலோ உலகில் எங்கேயிருந்தாலும் சமூகத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு, தமது அறையில் அவர்களது புத்தகங்களோடு அடைபட்டுக் கொள்ளும் எழுத்தாளர்களின் மரபில் வருபவன்தான் நானும் என்று கூறிக்கொள்வேன். உண்மையான இலக்கியத்தின் துவக்கப்புள்ளி என்பது, அவன் தனது புத்தகங்களோடு அறைக்குள் சென்று அடைத்துக் கொள்வதாகத்தான் இருக்க முடியும்.


நம்மை அறைக்குள் அடைத்துக்கொண்ட பிறகு, நாம் நினைத்தளவுக்கு நாம் தனியாக இல்லையென்பதை சீக்கிரமே கண்டுகொள்வோம். நமக்கு முன் வந்தவர்களின் வார்த்தைகளோடு, மற்ற மனிதர்களின் கதைகளோடு, மற்றவர்களின் புத்தகங்களோடு, மற்றவர்களின் வார்த்தைகளோடு, பாரம்பரியம் என்று நாம் அழைக்கிறோமே, அதனோடு நாம் சேர்ந்திருக்கிறோம். தன்னை அறிந்து கொள்ளும் தேடலில் மனிதகுலம் சேமித்து வைத்த மதிப்புமிக்க களஞ்சியம் இலக்கியம் என நம்புகிறேன். சமுதாயங்களும், குலமரபினரும், மனிதர்களும் தம்முடைய கதாசிரியர்களின் மனசாட்சியை உறுத்தும் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கும்போது அவர்கள் கூடுதல் அறிவும், செல்வமும் பெற்றவர்களாக, மேலும் முன்னேறியவர்களாக வளர்கின்றனர். நூல்களை எரிப்பதும், எழுத்தாளர்களுக்கு கரிபூசி அவமானப்படுத்துவதும், இருண்ட, அக்கறையோ பொறுப்போ அற்ற காலகட்டம் நம்மீது கவிந்திருக்கிறதென்பதற்கு அறிகுறிகள். ஆனால் இலக்கியம் வெறும் தேசிய அக்கறையாக மட்டுமே எப்போதும் இருந்ததில்லை. அறைக்குள் தன்னை அடைத்துக்கொண்டு தனக்குள்ளாகவே முதன்முதலாகப் பயணம் செய்யத் தொடங்கும் எழுத்தாளன் வருடங்கள் செல்லச்செல்ல இலக்கியத்தின் சாசுவதமான விதியைக் கண்டுகொள்வான்; அவனது சொந்தக்கதைகளை, அவை மற்றவர்களுடைய கதைகள் போலவும், மற்றவர்களின் கதைகளைத் தன் சொந்தக் கதைகளைப் போலவும் சொல்வதற்கு அவனிடம் கலைநயம் இருக்க வேண்டும். அதுதான் இலக்கியம் எனப்படுவதும். ஆனால் முதலில் நாம் மற்றவர்களின் கதைகளுக்கும், புத்தகங்களுக்கும் ஊடாகப் பயணம் செய்தாக வேண்டும்.
அப்பாவிடம் ஒரு நல்ல நூலகம் இருந்தது. மொத்தம் 1500 புத்தகங்கள் இருந்தன. ஒரு எழுத்தாளனுக்குத் தேவைப்படுவதைவிட அதிகம். என் இருபத்திரண்டாவது வயதில் அவை அனைத்தையும் நான் படித்திருக்காவிட்டாலும்கூட, ஒவ்வொரு புத்தகத்தோடும் பரிச்சயம் ஏற்பட்டிருந்தது. எந்தெந்த புத்தகங்கள் முக்கியமானவை, எவையெல்லாம் மேலோட்டமாகவும் வாசிக்க எளிதாகவும் இருப்பவை, எவையெல்லாம் கிளாஸிக்குகள், எந்த இலக்கியப் பாடத்திலும் இன்றியமையாத பகுதிகளாக விளங்குபவை எவை, மறந்துபோகக்கூடிய ஆனால் படிக்க சுவாரஸியமான உள்ளூர் சரித்திரங்கள், அப்பா உயர்வாக மதிக்கும் பிரெஞ்சு எழுத்தாளர்கள் யார் யார் என்றெல்லாம் எனக்குத் தெரிந்திருந்தது. சில நேரங்களில் இந்த நூலகத்தை, இதைவிடச் சிறந்த நூலகத்தை, வேறொரு வீட்டில் எனக்கான ஓர் உலகத்தைச் சிருஷ்டித்துக் கொள்வேன் என்று கற்பனை செய்து கொள்வேன். என் அப்பாவின் நூலகத்தைத் தூரத்திலிருந்து பார்க்கையில், அது நிஜ உலகத்தின் ஒரு சிறிய சித்திரமாகத் தோன்றும். ஆனால் இது இஸ்தான்புல் என்கிற எங்கள் சொந்த மூலையிலிருந்து பார்க்கப்பட்ட உலகம். நூலகம் இதற்குச் சாட்சியாக இருந்தது. இந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் அப்பா பெரும்பாலும் பாரீசுக்கும், அமெரிக்காவுக்கும் சென்றிருந்தபோது வாங்கியவை. அவை மட்டுமின்றி, இஸ்தான்புல்லில் 40_களிலும் 50_களிலும் வெளிநாட்டுப் புத்தகங்களை விற்றுவந்த, பின் எனக்கு பரிச்சயமாகிவிட்ட பழைய மற்றும் புதிய புத்தகக் கடைகளிலிருந்து வாங்கியவைகளும் இருந்தன.


என் உலகம் உள்ளூரும் தேசியமும் மேற்குலகும் கலந்த ஒரு கலவை, 70_களில் நானும் ஏதோ ஒருவித லட்சியத்துடன் என் சொந்த நூலகத்தை உருவாக்கத் தொடங்கினேன். எனது இஸ்தான்புல் நூலில் குறிப்பிட்டதைப் போல நான் எழுத்தாளனாக ஆகப்போவதாக அப்போது தீர்மானித்திருக்கவில்லை. நிச்சயமாக ஓர் ஓவியனாக ஆகப் போவதில்லை என்ற நிதர்சனம் வந்திருந்தது. ஆனால் என் வாழ்க்கை எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப்போகிறது என்ற நிச்சயம் ஏதும் உண்டாகியிருக்கவில்லை. வாசிக்கவும் கற்றறிந்து கொள்ளவும் ஒரு தணியாத ஆர்வம், நம்பிக்கை சேர்ந்த அவா எனக்குள் நிறைந்திருந்த அதே நேரத்தில், என் வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் குறைவுபட்டிருப்பதாக மற்றவர்களைப் போல என்னால் வாழ முடியாது என்பதாகத் தோன்றிக் கொண்டிருந்தது.


இந்த உணர்ச்சியின் ஒரு பகுதி, என் அப்பாவின் நூலகத்தை நான் வெறித்துக் கொண்டிருந்தபோது உணர்ந்ததோடு சம்மந்தப்பட்டிருந்தது. அது இஸ்தான்புல்லில் அந்நாட்களில் வசித்திருந்த எங்கள் எல்லோருக்குமே தோன்றிக்கொண்டிருந்த விஷயம்தான். மையப்பகுதியிலிருந்து விலகி வாழ்ந்து வருவதாக, விலக்கப்பட்ட பிரதேசத்தில் வாழ வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்ற வைக்கும் ஓர் உணர்வு. நான் கவலையுணர்வும் ஏதோ பற்றாக்குறையாகவும் உணர்ந்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. கலைஞர்களிடம் அவர்கள் ஓவியர்களோ எழுத்தாளர்களோ_சிறிதளவும் ஆர்வம் காட்டாத, அவர்களுக்குக் கொஞ்சமும் நம்பிக்கையளிக்காத ஒரு தேசத்தில் வாழ்கிறேன் என்று மிக நிச்சயமாக எனக்குத் தெரிந்திருந்தது. 70_களில் அப்பா எனக்குத் தந்த பணத்தை எடுத்துக் கொண்டு மங்கலான, தூசுபடிந்த, அட்டை கிழிந்த புத்தகங்களை இஸ்தான்புல்லின் பழைய புத்தகக் கடைகளில் அடங்காத பேராசையோடு வாங்கும்போது, தெருவோரங்களிலும், மசூதி வெளி முற்றங்களிலும், சிதிலமுற்ற சுவர்களின் மீது கடைபரப்பி வைத்திருக்கும் அந்தப் பழைய புத்தக வியாபாரிகளின் பரிதாபத்திற்குரிய நிலையைக் கண்டு மனம் கலங்கும்.


இலக்கியத்தில் போலவே வாழ்க்கையிலும் எனது இடம் இவ்வுலகின் மத்தியில் இடம் பெற்றிருக்கவில்லை யென்பதே என் ஆதார உணர்வாக இருந்தது. பிரதானமாக விளங்கும் மத்திய உலகில் வாழ்க்கை எங்கள் சொந்த வாழ்க்கையைவிட ஒட்டுமொத்த இஸ்தான்புல், துருக்கியைவிட, செழிப்பானதாகவும், அதிக சுவாரஸியமிக்கதாகவும் இருக்க, நான் அதற்கு வெளியே இருந்தேன். உலகின் பெரும்பாலான மக்களோடு இந்த உணர்வை நான் பகிர்ந்து கொள்வதாக இன்று நினைக்கிறேன். இதே வகையில் உலக இலக்கியம் ஒன்றும் இருந்தது. அதன் மையம் கூட என்னிடமிருந்து வெகு தூரத்திலேயே அமைந்திருந்தது. உண்மையில் என் மனதில் இருந்தது உலக இலக்கியம் அல்ல, மேலை இலக்கியம். துருக்கியர்களாகிய நாங்கள் இதற்கு வெளியே இருந்தோம். இதற்கு என் அப்பாவின் நூலகம் ஆதாரமாக இருந்தது. இஸ்தான்புல்லின் நூல்கள் எங்கள் இலக்கியம், எங்கள் உள்ளூர் உலகம், அதன்நுட்பமான விவரங்களோடு ஒரு மூலையில் இருந்தன. மறுமுனையில் இந்த மற்ற உலகத்தின், மேற்குலகின் நூல்கள் இருந்தன. இவற்றோடு எங்களுக்குச் சொந்தமானவை எந்த விதத்திலும் ஒத்திருக்காமலிருந்தன. இந்த ஒத்திராமையே எங்களுக்கு வலியையும், நம்பிக்கையையும் ஒருசேர வழங்கின. ஒருவரது உலகை விட்டு நீங்கி, மற்ற உலகின் மற்றவைகளில், விநோதங்களில், வியப்புகளில் ஆறுதல் காண்பதுதான் எழுதுவதும் வாசிப்பதும். என் அப்பா தன் வாழ்க்கையிலிருந்து தப்பிக்கவே நாவல்களை வாசித்தார், பிந்தைய காலங்களில் நான் செய்ததைப் போலவே மேலைநாடுகளுக்குத் தப்பியோடிக் கொண்டிருந்தாரென்று நினைக்கிறேன். அக்காலத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்த நூல்களும் நாங்கள் பெரிதும் குறைபாடாகக் கருதும் எங்கள் கலாச்சாரத்திலிருந்து தப்பிக்கவே என்று எனக்குத் தோன்றியது. வாசிப்பால் மட்டும் எங்கள் இஸ்தான்புல்லை விட்டு மேலைநாடுகளுக்கு நாங்கள் செல்லவில்லை. எழுதுவதால் கூட. அந்த நோட்டுப்புத்தகங்களை நிரப்புவதற்காக என் அப்பா பாரீசுக்குச் சென்று, ஓர் அறைக்குள் அடைத்துக்கொண்டு எழுதிவிட்டு, பின் அவற்றை துருக்கிக்கு கடத்திவந்ததுதான். என் அப்பாவின் சூட்கேஸின் மீது என் பார்வை பதியும்போது என்னை அமைதியிழக்கச் செய்கிறது. இருபத்தைந்து வருடங்கள் ஓர் அறையில் அடைபட்டு உழைத்து, துருக்கியில் ஓர் எழுத்தாளனாக காலந்தள்ளிவிட்ட பிறகு, அவரது ஆழமான சிந்தனைகளை இப்படி ஒரு சூட்கேஸிற்குள் ஒளித்து வைத்திருப்பதையும், எழுதுவது என்பதை ஒரு ரகசியமான தொழிலாகச் செய்யவேண்டியதைப் போல, சமுதாயத்தின், அரசாங்கத்தின், மக்களின் கண்களிலிருந்து தப்பிச் சென்று செயல்பட்டதையும் பார்க்க எனக்கு வேதனையாக இருந்தது. என் அப்பா என்னளவுக்கு இலக்கியத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளாததற்காக, அவர் மீது நான் கோபப்பட்டதற்கு ஒரு வேளை இதுதான் பிரதான காரணமாக இருக்கக் கூடும்.


வாஸ்தவத்தில் என் அப்பா மீது நான் கோபம் கொண்டிருந்ததற்குக் காரணம் இருக்கிறது, அவர் என்னைப்போல ஒரு வாழ்க்கையை நடத்தவில்லை, அவருக்கு வாழ்க்கையோடு எப்போதுமே சச்சரவு இருந்ததில்லை. வாழ்நாள் முழுக்க நண்பர்களோடும் அவருக்குப் பிரியமானவர்களோடும் சந்தோஷமாகச் சிரித்து காலம் கழித்துக் கொண்டிருந்ததே போதுமானதாக இருந்தது. ஆனாலும் என்னில் ஒரு பகுதிக்கு நான் ‘பொறாமை’ கொண்டிருந்த அளவுக்கு ‘கோபம்’ கொண்டிருக்கவில்லை என்பது தெரிந்திருந்தது. பொறாமை என்பது அதிகமும் துல்லியமுமான வார்த்தை. இதுவும் என்னை அமைதியிழக்கச் செய்தது. அது எனது வழக்கமான ஏளனமும் கோபமுமான குரலில் என்னையே நான் கேட்டுக்கொள்ளும்போது இருக்கும் விஷயம்: ‘சந்தோஷம் என்பது என்ன? அந்தத் தனியான அறையில் ஒரு பொந்திற்குள் வாழ்வதைப்போல ஒரு வாழ்க்கையை நான் நடத்தியதா சந்தோஷம்? அல்லது சமூகத்தில் ஒரு சௌகரியமான வாழ்க்கையை நடத்திக் கொண்டு, எல்லோரும் நம்பும் விஷயங்களை நாமும் நம்பிக்கொண்டு, செய்து கொண்டிருப்பதா சந்தோஷம்? வெளியுலகத்தோடு முழு இசைவுடன் இருப்பதாக வெளிக்காட்டிக்கொண்டு, ஆனால் ரகசியமாக ஒளிந்து கொண்டு எழுதுகிற வாழ்க்கையை வாழ்வது சந்தோஷகரமானதா, துக்ககரமானதா?’ ஆனால் இவையனைத்துமே மிகையான கோபத்தில் எழும் கேள்விகள். ஒரு நல்ல வாழ்க்கைக்கு அளவீடு என்பது சந்தோஷம்தான் என்ற எண்ணத்தை எங்கிருந்து பெற்றேன்? மக்களும், செய்தித்தாள்களும், அனைவரும் வாழ்க்கையின் மிக முக்கியமான அளவீடு சந்தோஷம்தான் என்று நடந்து கொள்கின்றனர். இது மட்டுமே இதற்கு நேரெதிரானவொன்றுதான் உண்மையாவென கண்டுகொள்ள முயல்வதை நியாயப்படுத்தாதா? எங்கள் வீட்டைவிட்டு என் அப்பா பலமுறை ஓடியிருக்கிறார். அவரை எந்தளவிற்கு நான் அறிந்திருக்கிறேன், அவரது அமைதியின்மையை எந்தளவிற்கு நான் புரிந்து கொண்டிருக்கிறேன்?


எனவே இதுதான் என் அப்பாவின் சூட்கேஸை நான் முதலில் திறப்பதற்கு என்னைச் செலுத்தியது. நான் சற்றும் அறியாத, எழுத்தில் கொட்டி மட்டுமே ஆற்றிக்கொண்ட ஒரு ரகசியம், வாழ்க்கையின் மீதிருக்கும் ஒரு துக்கம் என் அப்பாவுக்கு இருந்ததா? சூட்கேஸைத் திறந்ததுமே அதன் பிரயாண வாசனையையும், பரிச்சயமாகியிருந்த பல நோட்டுப் புத்தகங்களையும் நினைவு கூர்ந்தேன். அந்த நோட்டுப் புத்தகங்களைப் பல வருடங்களுக்கு முன்பே, அவற்றைப் பற்றி அதிகம் விளக்காமல் காட்டியிருக்கிறார். இப்போது நான் கையில் எடுத்த நோட்டுப் புத்தகங்களில் பெரும்பாலானவை அவரது இளம் வயதில் எங்களைவிட்டு பாரீசுக்கு ஓடிப்போன காலங்களில் எழுதியவை. என் அபிமான எழுத்தாளர்கள் பலரைப் போல, அவர்களது சுயசரிதைகளில் படித்திருக்கிறேன். இப்போது நான், நான் இருக்கும் வயதில் என் அப்பா என்ன எழுதியிருப்பார், என்ன சிந்தித்திருப்பார் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். அதைப்போல எதையும் இங்கே காணப்போவதில்லையென்பதை உணர்ந்துகொள்ள எனக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை. என்னை அதிகமும் அமைதியிழக்கச்செய்தது எதுவென்றால், அவரது நோட்டுப்புத்தகங்களில் அங்குமிங்கும் எனக்குக் காணக் கிடைத்த எழுத்தாளத்தன்மை மிக்க ஒரு குரல். இது என் அப்பாவின் குரல் கிடையாது என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்; இது நம்பத்தக்கதாக இல்லை, அல்லது குறைந்த பட்சம் என் அப்பா என்று நான் அறிந்திருந்த மனிதருக்குச் சொந்தமானதில்லை இது. இவற்றை என் அப்பா எழுதியபோது என் அப்பாவாக இல்லாதிருந்திருக்கலாம் என்ற என் பயத்திற்கு அடியில் வேறொரு ஆழமான பயம் இருந்தது; என் அப்பாவின் எழுத்தில் நல்லதாக எதையும் காண எனக்குக் கிடைக்காதபடிக்கு, அடியாழத்தில் நானே நம்பத்தகுந்தவனல்ல என்ற பயம், பிற எழுத்தாளர்களால் என் அப்பா பலமாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை நான் கண்டுபிடித்துவிடும் அபாயத்தையும் இது அதிகரித்து, நான் இளைஞனாக இருந்தபோது என் வாழ்க்கையையும், என் இருப்பையும், எழுதும் என் ஆர்வத்தையும், என் பணியையும் கேள்விக்குள்ளாக்கிய எனக்குப் பழகிப்போன அந்தப் பழைய விரக்தியில் என்னை மூழ்கடித்தது. எழுத்தாளனாக எனது முதல் பத்தாண்டுகளில் இத்தகைய சஞ்சலங்களை மிக ஆழமாக உணர்ந்து, எதிர்த்துப் போராடியிருக்கிறேன். ஒருநாள் நான் துறந்ததைப் போலவே, அமைதியின்மையால் துவண்டு, நாவல் எழுதுவதையும் நிறுத்திவிடுவேன் என்ற பயம்.

என் அப்பாவின் சூட்கேஸை மூடி, நான் தூரவைத்தபோது எனக்குள் எழுந்த இரண்டு ஆதாரமான உணர்ச்சிகளை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்: நாட்டுப்புறப் பகுதியில் தனித்துவிடப்பட்ட உணர்வும், நம்பகத்தன்மை என்னிடம் குறைந்திருக்கிறது என்ற பயமும். இவை உணரப்படுவது இதுதான் முதல் முறை அல்ல. பல வருடங்களாக என் வாசிப்பிலும் எழுத்திலும் இந்த உணர்வுகளை அவற்றின் எல்லா வகை மாதிரிகளையும், திட்டமிடப்படாத விளைவுகளையும், அவற்றின் நரம்பு முனைகளையும், அவற்றின் விசைகளையும், அவற்றின் பற்பல வண்ணங்களையும் ஆய்ந்து கண்டறிந்து, ஆழப்படுத்தி வந்திருக்கிறேன். வாழ்க்கையும் புத்தகங்களும் பெரும்பாலும் நான் இளைஞனாக இருந்த காலத்தில் என் மீது கொடுத்த குழப்பங்களாலும் கூருணர்வுகளாலும் மின்னலாக வெட்டும் வலிகளாலும் என் ஊக்கம் அதிர்வுற்றிருக்கிறது. ஆனால் புத்தகங்கள் எழுதுவதால் மட்டுமே நம்பகத்தன்மையின் பிரச்சனைகளையும் (My name is Red. The Black Book ஆகிய நூல்களில் போல) விளிம்பு நிலை வாழ்க்கையைப் பற்றியும் (Snow, lstanbul ஆகிய நூல்களில் போல) புரிந்து கொள்வதில் ஒரு முழுச் சுற்றுக்கு வந்தேன் எனலாம். நமக்குள் சுமக்கும் ரகசிய காயங்களை, நாமே சரிவர அறிந்திராத படிக்கான ரகசிய ரணங்களை, பொறுமையாக ஆராய்ந்து, அறிந்து, அவற்றின் மேல் ஒளியைப் பாய்ச்சி, இந்த வலிகளையும் காயங்களையும் வரித்து, நம் ஊக்கத்திற்கும் நம் எழுத்திற்கும் ஒரு பிரக்ஞை கொண்ட பகுதியாக அவற்றை ஆக்குவதும் அங்கீகரிப்பதும் தான் எழுத்தாளனாக இருப்பதன் கடமை என்று கருதுகிறேன்.


எல்லோருக்கும் தெரிந்த, ஆனால் தமக்குத் தெரியும் என்று தெரிந்திருக்காத விஷயங்களைப் பற்றி எழுத்தாளன் பேசுகிறான். இந்த அறிவை ஆராய்வதும், அது வளர்வதைக் கவனிப்பதும் பரவசமூட்டும் ஒரு செயல்; ஒரே நேரத்தில் பரிச்சயமாகவும் மர்மமாகவும் இருக்கும் ஓர் உலகிற்குள் வாசகன் நுழைகிறான். எழுத்தாளன் ஓர் அறைக்குள் தன்னை வருடக்கணக்காக அடைத்துக் கொண்டு தன் பணியை_உலகம் ஒன்றை உருவாக்க_செப்பனிட்டுக் கொண்டிருக்கும் போது, அவனது ரகசிய ரணங்களை, அவனது துவக்கப்புள்ளியாகப் பயன்படுத்தினால், அவன் அறிந்தோ அல்லது அறியாமலோ, மனிதத்துவத்தின் மீது பெரும் நம்பிக்கை வைக்கிறான். எல்லா மனிதர்களும் ஒருவரையருவர் ஒத்திருக்கின்றனர் என்ற இந்த குழந்தைத்தனமான, நம்பிக்கையூட்டும் நிச்சயத்தன்மையிலிருந்தே எல்லா உண்மை இலக்கியங்களும் எழுகின்றன. முடிவேயின்றி வருடக்கணக்காக ஓர் எழுத்தாளன் அறை ஒன்றிற்குள் தன்னை அடைத்துக் கொண்டிருந்தால், அதன் மூலம் அவன் ஒரே மனிதத்துவத்தை, மையமற்ற ஓர் உலகத்தை முன் வைக்கத் தொடங்குகிறான்.


ஆனால், என் அப்பாவின் சூட்கேஸையும் எங்கள் இஸ்தான்புல் வாழ்வின் வெளிறிய நிறங்களையும் பார்க்கையில் இந்த உலகத்திற்கு ஒரு மையம் இருக்கிறது, அது எங்களிடமிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது என்று தெரிகிறது. இந்த அடிப்படை உண்மை எவ்வாறு ஒரு செகாவ்தனமான சிற்றூர்தனத்தைத் தூண்டிவிடுகிறது என்பதையும், வேறொரு மார்க்கத்தில் இது என் நம்பகத்தன்மையை கேள்விகேட்பதற்கு இட்டுச் செல்கிறது என்பதையும் கொஞ்சம் விளக்கமாகவே என் நூல்களில் விவரித்திருக்கிறேன். இவ்வுலகில் பெரும்பான்மையினர் இதே உணர்வுகளோடு வாழ்கின்றனர் என்பதை அனுபவத்திலிருந்து அறிவேன். அதேயளவு மனிதர்கள் என்னைவிட அதிகமான போதாமை உணர்வுகளாலும், பத்திரக் குறைவாலும், அவமான உணர்வாலும் அவஸ்தையுற்றிருக்கின்றனர் என்பதையும் அறிவேன். ஆம், மனிதகுலத்தை எதிர்நோக்கியிருக்கும் மகத்தான பிரச்சனைகளாக நிலமின்மையும், வாழ்விடமின்மையும், பசியும்தான் இன்றளவும் இருக்கின்றன…. ஆனால் இத்தகைய அடிப்படை பிரச்சனைகளைப் பற்றி இன்று நமது தொலைக்காட்சிகளும், செய்தித்தாள்களும் இலக்கியத்தைவிட மிக வேகமாக, எளிமையாக நமக்குக் கூறி விடுகின்றன. இன்று இலக்கியம் சொல்லவும், ஆராயவும் வேண்டிய மனிதகுலத்தின் அடிப்படை பயங்கள்; வெளியே தனித்து விடப்படும் பயம், ஒன்றுமில்லாததற்காக தண்டிக்கப்படும் பயம். இத்தகைய பயங்களோடு சேர்ந்துவரும் மதிப்பிழக்கப்பட்ட உணர்வுகள்; கூட்டு அவமானங்கள், வடுப்பாடுகள், புறக்கணிப்புகள், மனத்துயர்கள், உணர்வினைகள், கற்பனை அவமானங்கள், தேசியவாத எக்களிப்புகள், தற்பெருமைகள்… இத்தகைய மிகு உணர்ச்சிகளும், இவை வழக்கமாக வெளிப்படுத்தும் பகுத்தறிவற்ற மிகைக்கூற்றுகளும் என்னைத் தாக்கும் போதெல்லாம் எனக்குள்ளிருக்கும் ஓர் இருண்மையை அவை தீண்டுவதாக அறிகிறேன். மேலை உலகிற்கு வெளியேயிருக்கும் மக்கள், சமுதாயங்கள், தேகங்கள் தமது அவமதிப்பு பயங்களாலும், மிகையுணர்வுகளாலும், தீவிரமாக பாதிப்புற்று, மதிகேடான காரியங்களைப் புரிவதை நாம் அவ்வப்போது பார்க்கிறோம். அவர்களை எளிதாக என்னுடன் சேர்த்து அடையாளம் கண்டுகொள்கிறேன். அதே விதமான எளிமையுடன் நான் அடையாளம் கண்டுகொள்ளும் மேற்குலகிலும் தேசங்களும் மக்களும் தமது செல்வம், மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த பெருமை, அறிவு விளக்கம், நவீனத்துவம் போன்றவை எழுப்பும் பெருமிதத்தால் சுயதிருப்திக்கு ஆளாவதும் அதே விதமான மதிகேடுதான்.


இதற்குப் பொருள், என் அப்பா மட்டுமல்ல நாமெல்லோருமே ஒரு மையம் உடைய உலகத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்கிறோம் என்பது. அறைக்குள் நம்மைப் பூட்டிக் கொண்டு வருடக் கணக்காக முடிவின்றி எழுதுவதற்கு நம்மை வற்புறுத்துவது இதற்கெதிரான ஒரு நம்பிக்கை; உலகெங்குமுள்ள மனிதர்கள் ஒருவரையருவர் ஒத்திருப்பதால் நம் எழுத்துக்கள் ஒரு நாள் படிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்படும் என்ற நம்பிக்கை. ஆனால், என் சொந்த எழுத்திலிருந்தும் என் அப்பாவின் எழுத்திலிருந்தும் நான் அறிந்து கொண்டது என்னவென்றால், விளிம்புகளில் முடக்கப்பட்டதாலும், வெளியே தனித்து விடப்பட்டதாலும் கோபக்கறை படிந்து சிதைக்கப்பட்டிருக்கும் ஒரு நன்னம்பிக்கை இதுவென்பதே. தன் வாழ்க்கை முழுக்க தாஸ்தயேவ்ஸ்க்கிக்கு மேற்கின் மீதிருந்த அன்பும் வெறுப்பும் ஒன்று கலந்த உணர்வை நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஆனால் ஆதாரமான உண்மை ஒன்றை நான் பற்றியிருந்தால், நன்னம்பிக்கைக்கு எனக்கு காரணமிருந்தால், அதற்கு காரணம் இந்த மாபெரும் எழுத்தாளரோடு மேற்கின் மீதிருந்த அவரது அன்பு வெறுப்பு உறவின் வழியாகப் பயணித்து, மறுபக்கத்தில் அவர் கட்டியெழுப்பியிருந்த மற்ற உலகத்தை நான் கைக்கொண்டதேயாகும்.


இப்பணியில் தமது வாழ்வை அர்ப்பணித்திருக்கும் எல்லா எழுத்தாளர்களும் இந்த யதார்த்தத்தை உணர்ந்திருக்கின்றனர்: நமது அசலான நோக்கம் எதுவாயிருப்பினும் வருடக் கணக்காக நம்பிக்கையோடு எழுதி, நாம் படைக்கும் உலகம் இறுதியில் பெரிதும் வேறுபட்ட மற்ற இடங்களுக்குத்தான் போகப்போகிறது. துக்கமும் கோபமுமாக நாம் பணியாற்றிய மேசையிலிருந்து நம்மை வெகு தொலைவிற்கு, வேறோர் உலகத்தின் துக்கமும் கோபமும் கொண்ட மறுபக்கத்திற்கு அது கொண்டு செல்கிறது. அத்தகைய ஓர் உலகத்தை என் அப்பாவால் தனியாகவே அடைந்திருக்க முடியாதா? ஒரு நிலப்பரப்பு மெதுவாக உருக்கொள்வதைப் போல, நீண்டதொரு கடற்பிரயாணத்திற்குப் பின் மூடுபனியிலிருந்து அதன் எல்லா வண்ணங்களோடும் மெதுவாக எழும்புகிற ஒரு தீவைப்போல இந்த மற்ற உலகம் நம்மை மயக்கி வயப்படுத்துகிறது; தெற்கிலிருந்து பயணம் செய்து இஸ்தான்புல்லிற்கு வந்த மேலைநாட்டு யாத்ரீகர்கள் அது மூடுபனியிலிருந்து எழும்பிப் புலப்பட்டதைப் பார்த்துத் திகைப்புற்றதைப் போல. நம்பிக்கையும் ஆர்வமுமாகத் தொடங்கிய ஒரு பயணத்தின் இறுதியில், இதோ அவர்களுக்கு முன்னால் மசூதிகளும், பள்ளிவாசல் ஸ்தூபிகளுமாக விதவிதமான வீடுகளும், தெருக்களும், குன்றுகளும், பாலங்களும், சரிவுகளுமாக ஒரு முழு உலகமே அவர்கள் முன் விரிகின்றது. அதைக் கண்ட பின்பு இந்த உலகிற்குள் நுழைந்து அதற்குள் நம்மைத் தொலைத்துக் கொள்வதைப் போல ஒரு புத்தகத்தையும் அணுகுகிறோம். விலக்கப்பட்டவர்களாக, விளிம்புகளுக்கு ஒதுக்கப்பட்டவர்களாக நம்மை உணர்ந்து கோபத்துடனும், ஆழ்ந்த மனக்கசப்புடனும் ஒரு மேசையில் அமர்ந்தபின்பு இந்த மிகையுணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு முழு உலகத்தை நாம் கண்டடைகிறோம்.


இப்போது நான் உணர்வது, சிறுவனாகவும், இளைஞனாகவும் இருந்த போது உணர்ந்ததற்கு நேரெதிரானது: என்னைப் பொறுத்தவரை உலகத்தின் மையம், இஸ்தான்புல். இது நான் பிறந்ததிலிருந்து அங்கேயே வாழ்ந்து வருவதால் சொல்வதல்ல. கடந்த 33 வருடங்களாக அதன் தெருக்கள், அதன் பாலங்கள், அதன் மனிதர்கள், அதன் நாய்கள், அதன் வீடுகள், அதன் மசூதிகள், அதன் நீரூற்றுகள், அதன் விநோதமான நாயகர்கள், அதன் சரிவுகள், அதன் பிரபலமான பாத்திரங்கள், அதன் இருட்டுப் பகுதிகள், அதன் பகல்கள், அதன் இரவுகளை வர்ணித்து அவற்றை என் பகுதியில் ஒன்றாக்கி, அனைத்தையும் அரவணைத்து வந்திருக்கிறேன். என் கைகளால் உருவாக்கிய இந்த உலகம், என் தலையில் மட்டும் வாழ்ந்து வந்த இந்த உலகம், நான் உண்மையில் வாழ்கின்ற நகரத்தை விட நிஜமானதாக எனக்குத் தோன்ற ஆரம்பித்த ஒரு கட்டமும் வந்தது. என் கற்பனையிலோ, அல்லது புத்தகங்களிலோ மட்டும் வாழ்பவர்களாக இல்லாமல் தமக்காகவே வாழ்வதுபோல இதன் மனிதர்களும், தெருக்களும், பொருட்களும், கட்டிடங்களும் தமக்குள் பேசிக்கொள்ளவும், நான் எதிர்பாரா வகையில் அவை ஊடாடவும் செய்தபோது நடந்தது இது. ஊசியை வைத்துக் கொண்டு ஒரு கிணற்றைத் தோண்டுவது போல நான் உருவாக்கிய உலகம் மற்றனைத்தையும் விட நிஜமாகத் தோன்றியது அப்போதுதான். இந்த வகையான மகிழ்ச்சியை அவர் எழுதிக் கொண்டிருந்த வருடங்களிலும் என் அப்பா கண்டிருக்க வேண்டுமென்று அவர் சூட்கேஸைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது. நான் அவரை முன் தீர்ப்பிடக் கூடாது. என்ன இருந்தாலும் நான் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் எப்போதுமே அதிகார தோரணையில், தடையுத்தரவளித்துக் கொண்டு, ஆதிக்கம் செலுத்திக் கொண்டு, தண்டித்துக் கொண்டிருந்த சாதாரண அப்பாவாக இருந்ததில்லை. எப்போதுமே என்னை சுதந்திரமாக அனுமதித்து எப்போதுமே அதிகபட்ச மதிப்பையும் காட்டுபவராக இருந்தவர். என் கற்பனையிலிருந்து சுதந்திரமாகவோ அல்லது குழந்தைத்தனமாகவோ அவ்வப்போது எதையாவது தீட்டிக்கொண்டிருந்தேனென்றால், அதற்குக் காரணம் சிறு பிராயத்திலும் இளமைப்பருவத்திலும் எனக்கிருந்த பெரும்பாலான நண்பர்களைப் போலில்லாமல், எனக்கு என் அப்பாவைப் பற்றி எந்த அச்சமும் இருந்ததில்லை என்பதை நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். நான் எழுத்தாளனாக ஆனதற்கே, என் அப்பா அவரது இளமையில் எழுத்தாளனாக விரும்பியதுதான் காரணம் என்றும் சில நேரங்களில் நம்புகிறேன். அவரைப் பொறுமையுடன் நான் படித்தாக வேண்டும் _ அந்த ஓட்டல் அறைகளில் அவர் எழுதியவற்றைப் புரிந்துகொள்ள முயலவேண்டும்.


இந்த நம்பிக்கையூட்டும் நினைவுகளோடு என் அப்பா வைத்த இடத்திலேயே இன்னமும் இருக்கிற அந்த சூட்கேஸை நெருங்கினேன். என் மன உறுதி அனைத்தையும் உபயோகித்து சில கைப்பிரதிகளையும் நோட்டுப் புத்தகங்களையும் வாசித்துப் பார்த்தேன். எதைப்பற்றி என் அப்பா எழுதியிருக்கிறார்? பாரீஸ் நகர ஓட்டல்களின் சில ஜன்னல்கள் வழி காட்சிகள், சில கவிதைகள், முரணுரைகள், அலசல்கள்… இவற்றை எழுதும்போது சாலை விபத்தில் சிக்கிய ஒருவனைப்போல, எப்படி நிகழ்ந்தது என்று ஞாபகம் வராமல் தவித்துக் கொண்டு, அதே நேரத்தில் அளவிற்கதிகமாக ஞாபகப்படுத்திக்கொள்கிற அபாயத்திலும் காலெடுத்து வைப்பதுபோல உணர்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சச்சரவு துவங்கப்போவதாக இருந்தால்_அவர்கள் அப்போது அந்தப் பயங்கரமான நிசப்தத்தில் ஆழ்ந்துவிடுவர்_என் அப்பா சட்டென்று ரேடியோவைப் போட்டுவிடுவார். சங்கீதம், சூழலை மாற்றி அதை வேகமாக மறந்துபோக எங்களுக்கு உதவிசெய்யும்.


அந்த சங்கீதத்தைப் போலவே சூழலை மாற்றுவதற்கு சில இனிய வார்த்தைகளைக் கூறலாம் என்று கருதுகிறேன். நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதைப் போல எழுத்தாளர்களான எங்களிடம் அடிக்கடி கேட்கப்படும் அபிமான கேள்வி: ஏன் நீங்கள் எழுதுகிறீர்கள்? எழுதுவதற்கு உள்ளார்ந்த தேவை ஒன்று என்னிடம் இருப்பதால் நான் எழுதுகிறேன்! மற்றவர்களைப்போல என்னால் சாதாரண வேலைகளைச் செய்யமுடியாது என்பதால் எழுதுகிறேன். நான் எழுதுவதைப் போன்ற புத்தகங்களை நான் வாசிக்க விரும்புவதால் எழுதுகிறேன். உங்கள் அனைவரின் மீதும், எல்லோரின் மீதும் நான் கோபமாக இருப்பதால் எழுதுகிறேன். ஒரு தனியறையில் அடைத்துக் கொண்டு நாளெல்லாம் எழுதுவது எனக்கு விருப்பமாக இருப்பதால் எழுதுகிறேன். நிஜவாழ்க்கையை மாற்றுவதன் மூலமே என்னால் அதில் பங்குகொள்ள இயலும் என்பதால் எழுதுகிறேன். இஸ்தான்புல்லில், துருக்கியில், எம்மாதிரியான வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்தோம், தொடர்ந்து வாழ்ந்து வருகிறோம் என்பதை மற்றவர்கள், நம்மெல்லோரும், மொத்த உலகமும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதால் எழுதுகிறேன். பேப்பர், பேனா, மையின் வாசனை எனக்குப் பிடித்தமானவை என்பதால் எழுதுகிறேன். வேறு எதனையும் விட இலக்கியத்தின் மேல், நாவல் என்ற கலைவடிவத்தின் மேல் நம்பிக்கை வைத்திருப்பதால் எழுதுகிறேன். அது ஒரு பழக்கம், ஒருவிதமான இச்சை என்பதால் எழுதுகிறேன். நான் மறக்கப்பட்டு விடுவேனோ என்ற பயத்தால் எழுதுகிறேன். எழுத்து அழைத்து வருகிற புகழையும் ஆர்வத்தையும் நான் விரும்புவதால் எழுதுகிறேன். தனியாக இருப்பதற்காக எழுதுகிறேன். உங்கள் அனைவரின் மீதும் எதற்காக நான் மிக மிகக் கோபமாக இருக்கிறேன், எல்லோர் மீதும் ஏன் மிக மிகக் கோபமாக இருக்கிறேன் என்பதை நான் புரிந்து கொள்வதற்காகக்கூட நான் ஒருவேளை எழுதுவதாக இருக்கலாம். நான் வாசிக்கப்பட வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். ஒரு நாவலை, ஒரு கட்டுரையை ஒரு பக்கத்தை எழுதத் தொடங்கி விட்டேனென்றால், அதை முடிக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். எல்லோரும் நான் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எழுதுகிறேன். நூலகங்களின் சாஸ்வதத்தைப் பற்றியும், அலமாரிகளில் என் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருப்பதிலும் எனக்கு ஒரு குழந்தைத்தனமான நம்பிக்கை இருப்பதால் எழுதுகிறேன். வாழ்க்கையின் எல்லா அழகுகளையும் செல்வங்களையும் எழுத்தாக்குவதில் இருக்கும் கிளர்ச்சியினால் எழுதுகிறேன். ஒரு கதையைச் சொல்வதற்காக அல்ல, ஒரு கதையை இயற்றுவதற்காக எழுதுகிறேன். நான் போகவேண்டிய இடம் ஒன்று இருக்கிறது. ஆனால்_ ஒரு கனவில் வருவதைப்போலவே _ அங்கே என்னால் அடையவே முடியாதிருக்கிறது என்ற துர்சகுணத்திலிருந்து தப்பிக்க விரும்புவதால் எழுதுகிறேன். என்னால் எப்போதுமே சந்தோஷமாக இருக்க முடியாததற்காக எழுதுகிறேன். சந்தோஷமாக இருப்பதற்காக எழுதுகிறேன். அவர் என் அலுவலகத்திற்கு வந்து சூட்கேஸை வைத்துவிட்டுச் சென்ற ஒரு வாரம் கழித்து என் அப்பா மீண்டும் என்னைப் பார்க்க, எப்போதும் போல் ஒரு சாக்லேட் பொட்டலத்தோடு வந்தார். (எனக்கு 48 வயதாகிறது என்பதை மறந்துவிட்டிருக்கிறார்). எப்போதும் போல நாங்கள் வாழ்க்கை, அரசியல், குடும்ப சமாச்சாரங்கள் என்று அரட்டை அடித்து சிரித்துக் கொண்டிருந்தோம். என் அப்பாவின் கண்கள் அவரது சூட்கேஸை வைத்திருந்த மூலைக்குச் சென்ற தருணமும் வந்தது. அதை நகர்த்தி வைத்திருக்கிறேன் என்பதைக் கவனித்து விட்டார். எங்கள் பார்வைகள் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டன. ஒரு நிசப்தம் அங்கே அழுத்தமாகப் பின் தொடர்ந்தது. சூட்கேஸைத் திறந்து, அதில் உள்ளவற்றைப் படிக்க முயற்சி செய்தேன் என்பதை அவரிடம் கூறவில்லை; பதிலாக பார்வையைத் திருப்பிக் கொண்டேன். ஆனால் அவர் புரிந்து கொண்டார். அவர் புரிந்து கொண்டார் என்பதை நான் புரிந்து கொண்டதைப் போல. அவர் புரிந்து கொண்டு விட்டார், என்பதை நான் புரிந்து கொண்டுவிட்டேன் என்பதை அவர் புரிந்து கொண்டதைப் போல. ஆனால், இந்தப் புரிந்து கொள்ளல் எல்லாமே பதினைந்து விநாடிகளுக்குத் தாக்குப் பிடிக்கும் வரை தான் சென்றது. என் அப்பா ஒரு குதூகலமான, எதையும் சுலபமாக எடுத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை மிக்க மனிதர். எப்போதும் போலவே என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். வீட்டை விட்டுக் கிளம்பும்போது அவர் எப்போதுமே என்னிடம் கூறுகிற இனிமையான, ஊக்கமளிக்கும் விஷயங்கள் எல்லாவற்றையும் திரும்பக் கூறினார், ஒரு அன்பான அப்பாவைப் போலவே. எப்போதும் போலவே அவர் கிளம்பிச் செல்வதைப் பார்க்கும் போது அவரது அக்கறையற்ற, எதற்கும் கலங்காத மனோபாவத்தை எண்ணி பொறாமையாக உணர்ந்தேன். ஆனால் அன்றைய தினம் என்னை வெட்கமுறச்செய்த ஒரு சந்தோஷக் கீற்றும் எனக்குள் இருந்தது. ஞாபகமிருக்கிறது. அவருக்கு வாய்த்த அளவுக்கு ஒரு சௌகரியமான வாழ்க்கை, அவருக்கிருந்தளவுக்கு சந்தோஷமான அல்லது சுகவாசியாக ஒரு வாழ்க்கை எனக்கு வாய்த்திருக்கவில்லை, என் வாழ்க்கை மொத்தத்தையும் எழுதுவதற்கு மட்டுமே நான் அர்ப்பணித்திருக்கிறேன் என்ற நினைப்பு_நான் கூற வருவது உங்களுக்குப் புரிந்துவிட்டது இல்லையா… என் அப்பாவை முன் வைத்து இப்படியான விஷயங்களை யோசிப்பது எனக்கு வெட்கமாக இருந்தது. என் வலிகள் எதற்கும் என் அப்பா காரணமாக இருந்ததில்லை. என்னை சுதந்திரமாக அனுமதித்திருக்கிறார். இவையெல்லாமே எழுதுவதும் இலக்கியமும் நம் வாழ்க்கையின் மையத்தில் உள்ள பற்றாக்குறை ஒன்றோடும், சந்தோஷமும் குற்றவுணர்வுமான நம் உணர்வுகளோடும் ஆழமாகப் பிணைந்திருக்கிறது என்று நமக்குக் காட்டுகின்றன. ஆனால் என் கதையிலிருந்த ஒரு சரிச்சீரமைவு அன்றைய தினம் வேறொன்றை நினைவுபடுத்தி அது இன்னமும் அதிகமான குற்றவுணர்ச்சியைக் கொண்டு வந்தது. அவரது சூட்கேஸைத் தந்துவிட்டுச் சென்றதற்கு இருபத்தி மூன்று வருடங்கள் முன்பு, என இருபத்திரெண்டாவது வயதில் மற்ற எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு ஒரு நாவலாசிரியனாக முடிவெடுத்து ஓர் அறைக்குள் என்னை அடைத்துக் கொண்டு எனது முதல் நாவலான Cevdet Bey and sons ஐ முடித்ததற்கு நான்கு வருடங்கள் கழித்து, அப்போது இன்னமும் வெளி வந்திராத நாவலின் தட்டச்சுப் பிரதியை கைகள் நடுங்க என் அப்பாவிடம் கொடுத்து படித்துப் பார்த்து அவர் அபிப்பிராயத்தைக் கூறும்படி கேட்டிருக்கிறேன். அது, அவர் ரசனையின் மீதும், அறிவுக் கூர்மையின் மீதும் நான் வைத்திருந்த நம்பிக்கையால் மட்டுமல்ல, அவரது அபிப்பிராயம் எனக்குப் பெரிதும் முக்கியமானது. என் அம்மாவைப்போல நான் எழுத்தாளனாக விரும்பியதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அந்த நேரத்தில் என் அப்பா எங்களோடு இல்லை, வெகுதூரத்தில் இருந்தார். அவர் திரும்பி வருவதற்காக பொறுமையிழந்து நான் காத்திருந்தேன். இரண்டு வாரங்கள் கழித்து அவர் வந்ததும் கதவைத் திறக்க ஓடினேன். என் அப்பா எதுவும் பேசவில்லை. ஆனால் உடனே கைகளை விரித்து என்னை ஆரத் தழுவிக் கொண்டது அவர் அதை வெகுவாக ரசித்திருக்கிறார் என்பதைக் காட்டியது. மகத்தான உணர்ச்சித் தருணங்களில் உடன் வருவது போன்ற ஒரு சங்கடமான மௌனம் கொஞ்ச நேரத்திற்கு எங்களை மூழ்கடித்தது. பின் அமைதியடைந்து பேசத் தொடங்கினோம். என் அப்பா பெரிதும் உணர்ச்சி வசப்பட்ட, மிகையான பாஷையில், அவர் என் மீதோ அல்லது எனது முதல் நாவல்மீதோ வைத்திருந்த நம்பிக்கையைக் கூறத் தொடங்கினார். இங்கே மகத்தான பெருமிதத்துடன் நான் பெறுவதற்கு வந்திருக்கும் பரிசை ஒருநாள் நான் வென்றெடுப்பேன் என்று அவர் கூறினார். அவரது நல்லபிப்பிராயத்தைச் சொல்லி என்னைத் திருப்திப்படுத்துவதற்காகவோ, அல்லது இந்தப் பரிசை ஒரு லட்சியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவோ அவர் இதைக் கூறவில்லை; அவர் ஒரு துருக்கிய அப்பாவைப்போல, தன் மகனுக்கு ஆதரவளித்து, ‘ஒருநாள் நீ ஒரு பாஷா ஆகப்போகிறாய்!’ என்று விளக்கமளித்து கூறினார். பின் பல வருடங்கள், எப்போது என்னைப் பார்த்தாலும் இதே வார்த்தைகளைத்தான் கூறி எனக்கு விளக்கமளிப்பார்.என் அப்பா டிசம்பர் 2002_ல் காலமானார்.இன்று ஸ்வீடிஷ் அகாதெமிக்கும், இந்த மாபெரும் பரிசை_ இம் மகத்தான மேன்மையை _ எனக்களித்திருக்கும் பெருமைமிக்க உறுப்பினர்களுக்கும் அவர்களின் புகழ்மிக்க விருந்தினர்களுக்கும் முன்னால் நான் நிற்கும் போது, இங்கே நம்மிடையே அவர் இருக்கக் கூடும் என்று உளப்பூர்வமாக நம்புகிறேன்.
(2006 ஆம் வருடத்தின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு துருக்கியைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஓரான் பாமுக்கிற்கு வழங்கப்பட்டபோது, ஸ்வீடிஷ் அகாதெமியில் டிசம்பர் 10,2006 அன்று பாமுக் நிகழ்த்திய உரை)

Tuesday, June 05, 2007

சக படைப்பாளிகள் ஆபத்தானவர்கள் - சாரு நிவேதிதா




தன் அன்றாட வாழ்வில் நிகழும் அசிங்கங்களை, சந்தோஷங்களை, விமர்சனங்களை படு பச்சையாக, ஈரம் காயாத ஒரு குழந்தையைப் போல் அசல் தன்மையோடு எழுதிச் செல்லும் சாரு நிவேதிதா, தமிழிலக்கியத்தில் மறுக்க முடியாத ஆளுமை. தமிழ் இலக்கிய வகைமைகளை வேறு தளத்திற்கு நகர்த்தியவர். அதி துக்கமான கதையைக் கூட சுவாரஸ்யம் குன்றாமல் அறுநூறு பக்கத்திற்கு எழுதி வாசகனைப் படிக்க வைக்க சாருவால் மட்டுமே முடிந்திருக்கிறது. சமூகத்தின் மீதான தன் எதிர்வினையை ஒப்பீட்டளவில் பேசி யோசிக்கச் செய்யும் கலைத் தன்மையுடன் தீராநதிக்காக நீண்ட நேர்காணல் இது.


தீராநதி: சென்ற மாதம் பிரான்ஸ் போனீர்கள். அதற்கு முன்பாகக் கூடச் சென்றிருக்கிறீர்கள். அடிக்கடி பிரான்ஸ் போகிறீர்களே ஏன் சாரு?

சாருநிவேதிதா: பிரான்ஸ் எப்போதும் என்னை ஈர்த்துக் கொண்டே இருக்கும் ஒரு நாடு. காரணம்_ அங்குள்ள சுதந்திரம்; சுதந்திரம் என்பதை இங்கே ஒரு வார்த்தையாகப் படிக்கிறோம் அவ்வளவுதான். ஆனால் அங்குள்ளவர்களின் சுதந்திரத்தை ஒரு கான்செப்ட்டா விஷ்வலைஸ் பண்ணி ஒரு அனுபவமாக எப்படி இருக்கிறது என்று சொன்னால் உங்களுக்கோ, எனக்கோ புரியாது. நிச்சயமாக இந்தியாவில் மட்டும் இருப்பவர்களுக்கு தெரியாது. அதை அங்கு சென்று ஃபீல் பண்ணும் போதுதான் அதனுடைய உண்மையான அர்த்தம் விளங்கும்.நான் இங்குள்ள இமிகிரேஷன் ஆஃபீஸில் பிரெஞ்ச் விசா கேட்டு அப்ளை பண்ணி இருந்தேன். துணைக்கு நண்பரும் வந்திருந்தார். இமிகிரேஷன் ஆஃபீஸில் இருக்கும் ஓர் அதிகாரி என்னை விடமாட்டேன் என்று சொல்லிவிட்டான். ஒரு மணி நேரம் உட்கார வைத்து சித்திரவதை செய்தான். நாலு மலையாளிகள் மாறி மாறி கேள்விகள் கேட்டுத் தொந்தரவு செய்தார்கள். என்னிடம் பிரான்ஸ் போக விசா இருக்கிறது. இருந்தும் ‘நீங்க எதுக்குப் போறீங்க?’ என்றான். ‘நான் சுத்திப் பார்க்கப் போறேன்’ என்று பதில் சொன்னால் ‘உங்களைப் பார்த்தா திரும்பி வர்றவர் மாதிரி தோணலையே?’ _அது பத்தி உனக்கென்ன?_ கேட்கலை. கேட்டா விடமாட்டான். கோபத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு பொறுமையா ‘நான் ஒரு எழுத்தாளன். பிரெஞ்ச் கலாசாரத்துக்கு எவ்வளவோ வேலை செய்திருக்கேன்.’ ஃபூக்கோ தெரிதா, சார்த்தரோட கலெக்ஷன் எல்லாம் மொழி பெயர்த்திருப்பதை எடுத்துக் காட்டினேன். ‘இல்லை... இல்லை... றிக்ஷீஷீஷீயீ வேணும்’ என்று தட்டிக் கழித்தான். ‘றிக்ஷீஷீஷீயீ தானே வேணும். இந்தா’ என்று என்னுடைய நாலு புத்தகங்களை எடுத்துப் போட்டேன். அவன் மலையாளி என்பதால், இதனுடைய அர்த்தமே அவனுக்குத் தெரியவில்லை.சரி என்று ‘மாத்யமம்’ மலையாளப் பத்திரிகையை எடுத்துப்போட்டேன்_நான் மலையாளத்தில் பெரிய காலமிஸ்ட்! அவனோ இங்க வளர்ந்த மலையாளி. அவனுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. அவன் சென்னையிலேயே பல தலைமுறைகளாய் செட்டிலான மலையாளிபோல. அவனுக்கு அனேகமா மலையாளமே தெரியாது என்றே நினைக்கிறேன். இப்படி ஒரு மணி நேரம் இம்மி இம்மியாக டார்ச்சர் செய்தவன் ‘திரும்பி வர்றீங்களான்னு பார்க்குறேன்’ என்று சபித்துக் கொண்டே செல்ல விட்டான். இதே வேலைக்கு பாரிஸ் ஏர்போர்ட்டில் கண் சிமிட்டும் நேரம்தான் ஆனது. பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்தவன் ‘சரி, நீங்க போகலாம்’ என்று அனுப்பிவிட்டான். ‘நான் இரண்டு முறை பிரான்ஸ் போனபோதும் ஒரு நொடிக்கு மேல் என்னைக் காக்க வைக்கவே இல்லை. இந்தியனோட மனப்பான்மை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? நான் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்குப் போய்விட்டுத் திரும்பி இந்தியாவிற்குள் நுழைந்தவுடன், ஏதோ பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குள் புகுந்துவிட்டது போல இருக்கிறது. உதாரணமாக, இமிகிரேஷன் ஆபீஸ். பதினைந்து மணிநேரம் பயணம் செய்துவிட்டு வந்த ஒரு பயணியை மறுபடியும் இரண்டு மணி நேரம் காக்க வைத்தே அனுப்பினான். பாரிஸிலேயும் இதே மாதிரி ஜனத்தொகைதான். இதே வேலைகள்தான். ஆனால் அவர்களால் எப்படி இவ்வளவு சுலபமாக கையாள முடிகிறது? மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா இந்த ஏரியாவில் எல்லாம் தமிழ் ஆதிக்கம் இருக்கிறது. மலேசிய மொழியில் 25 சதவீதம் தமிழ் கலந்திருக்கிறது. உதாரணமாக தமிழில் ‘கடை’ என்ற சொல்லுக்கு மலாய் மொழியிலேயும் ‘கடை’ தான்.மலேசியாவில் விநாயகர் கோயிலோ, அம்மன் கோயிலோ இல்லாத ஊரே கிடையாது. இவ்வளவுக்கும் அது இஸ்லாமிய நாடு. தாய்லாந்தில் பார்த்தால் அம்மன் கோயில் இருக்கிறது. அங்கே போய் வழிபடுகிறவன் எல்லாம் தமிழன் கிடையாது, தாய்லாந்துக்காரன். அதுதான் முக்கியமான விஷயம். ஒரு விநாயகர் சிலை பெருசா... பிரமாண்டமாய் நடு ரோட்டிலேயே இருக்கிறது. அங்கே உட்கார்ந்து தாய்லாந்துப் பெண்கள் பூஜை செய்துகொண்டிருக்கிறார்கள். பாங்காக்கில் தமிழர்கள் ரொம்ப கம்மி _ ஒரு நூறு பேர் இருப்பார்கள். தாய்லாந்துக்காரிக்கு அந்த விநாயகர் சிலையின் மூலம் எங்கே என்று கூட தெரியாது. நான் ஒரு பெண்ணிடம் அதுபற்றிக் கேட்டபோது ‘கணேசா’ என்று பதில் சொன்னாள். அவர்கள் அப்படி ஒரு சுமுகமான வாழ்முறையை வைத்திருக்கிறார்கள். நிதானமான வாழ்நெறியை வடிவமைத்திருக்கிறார்கள்.ஆனால் நம் ஊரில் எல்லாம் தலைகீழ். மலேசியா போவதற்காக ஏர்போர்ட்டில் விமானத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். ஃபிளைட் வந்து இறங்குகிறது. இறங்கி நின்றதுதான் தாமதம். திபுதிபுவென்று எல்லோரும் ஃபிளைட்டில் ஏதோ டவுன் பஸ்ஸில் ஏறுவதைப் போல ஓடி ஏறுகிறார்கள். ஏன் இப்படி ஓடுகிறார்கள் என்பது எனக்கு முதலில் புரியவில்லை. அப்புறம்தான் விஷயம் புரிந்தது. பெட்டிகளை, சாமான்களை கிடைக்கின்ற இடத்திலெல்லாம் வைத்து ரொப்பி விட்டார்கள். ஒரு பத்துப் பதினைந்து கிலோ கொண்டு செல்லலாம் என்றால், இவர்கள் ஒரு வீட்டையே தூக்கிக் கொண்டு போகிறார்கள்.நாங்கள் ஒரு ‘ஹேண்ட் பேக்’கைக் கூட வைக்க முடியாமல் மடியில் வைத்துக்கொண்டே போனோம். இந்த அளவுக்குக் கேவலப்பட்டு இருக்கிறார்கள் தமிழர்கள். அதைவிட இந்தியன் என்றால் சுத்தமாக மதிப்பே இல்லை. இந்த இந்திய மனப்பான்மையிலிருந்து நான் தப்பித்து, ஒரு நிதானமான தேசத்துக்குப் போக ஆசைப்படுகிறேன். இதுக்கு உதாரணமா இப்ப நடந்த ஒரு சம்பவத்தை எடுத்துக்குவோம். ஆறு, ஏழு வயசுள்ள ஒரு பெண் குழந்தை நேப்பியர் பிரிட்ஜ் மேல் நடந்து போய்க்கொண்டு இருந்தபோது, பாலத்திலிருந்த ஒரு ஓட்டையில் இடறி விழுந்து இறந்துவிட்டாள். இதுமாதிரி ஒரு சம்பவம் பிரான்ஸில் நடந்திருந்தால், பிரான்ஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்திருக்கும். இதுதான் சுதந்திரம். பிரான்ஸ் தேசமே அழிந்திடும். அப்படி அந்த அளவுக்கு மனித உரிமையைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய நாடு அது. எப்படி பாலத்தில் ஒரு குழந்தையை சாகடித்தாய் என்று அரசையே காலி செய்துவிடுவார்கள். அரசை மாற்றுவதெல்லாம் கிடையாது. சுத்தமாக துடைத்தெறிந்துவிடுவது. அந்த அளவுக்கு அம்மக்கள் பதறிவிடுவார்கள். இங்கே அது வெறும் நியூஸ். ஏனென்றால், அடுத்த நாளே அறுபது குழந்தைகள் பலியென்று நியூஸ் வந்துவிடும். நமக்கு இதுவெல்லாம் நியூஸ் மட்டுமே. ஆக, பிரான்ஸ் மனித உரிமையை, சுதந்திரத்தை மதிக்கக் கூடிய நாடு என்பதால், திரும்பத் திரும்ப அங்கே போக நான் ஆசைப்படுகிறேன்.‘ராஸலீலா’ என்ற 700 பக்க நாவலை நான் கொடுத்திருக்கிறேன் என்றால்... ஆறு கோடி ஜனங்களில் அதை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்? அதன் வெளியீட்டு விழா ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நடந்தது. ஒரு அறுபது பேர் வந்திருந்தார்கள். அங்கு கனிமொழி பேசிய பேச்சு ஒரு தலைப்புச் செய்தி. ‘பதினைந்து வருடங்களுக்கு முன்னால் என்னைத் தத்தெடுத்துக் கொண்டவர் சாருநிவேதிதா’ என்றார்.அது எவ்வளவு பெரிய ஸ்டேட்மெண்ட். இது பற்றி யாருக்குமே கவலை கிடையாது. இது பற்றி ஒரு செய்தி கூட வரவில்லை. சரி, விழாவையெல்லாம் விடுங்கள். அந்த விழாவுக்கே இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்தார் நல்லி செட்டியார். ஒரு நாவலை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். அதை வைத்து ஒரு விமர்சனம், பேச்சு எதுவுமே வரவில்லை. இப்போது நான் என்ன நினைக்கிறேன் என்றால், பிரான்ஸில் போய் பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்து அங்கேயாவது நான் ஒரு எழுத்தாளன் என்ற இடத்தைப் பிடிப்போம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என் மொழி பெயர்ப்பாளருக்கு அவ்வளவாக தமிழ் தெரியாது. ராஸலீலாவின் மொழிநடை கொஞ்சம் லகுவாக இருக்கும். ஆனால், ‘ஜீரோ டிகிரி’யைத்தான் அவர் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். அந்தத் தமிழ் கொஞ்சம் கடினமாக இருக்கும். அதனால் மொழிபெயர்ப்பில் ஏÊற்படும் சந்தேகத்தைச் சரி செய்யவும், சரியான அர்த்தத்தோடு மொழி மாற்றம் செய்யவும் நான் அடிக்கடி அங்கே சென்று அவருக்கு உதவிக் கொண்டிருக்கிறேன். இதனோடேயே ஒட்டி இங்குள்ள படித்த ஆட்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒன்றை நான் சொல்ல வேண்டும். நம் அசோகமித்திரன் எழுத்துக்கு இலக்கியச் சிந்தனை, சாகித்ய அகாடமி அவார்டு எல்லாம் சாதாரணம். அவர் நோபல் அவார்டு வாங்கக் கூடிய அளவுக்குத் தகுதியான ஆள். இந்திய அளவில் இப்படி மூன்று பேரைச் சொல்லலாம். மஹாஸ்வேதா தேவி, அசோகமித்திரன், பால் சக்காரியா. இந்த ரேஞ்சில் அசோகமித்திரனை நான் மதிக்கிறேன். படித்தவர், இங்கிலீஷ் தெரிந்தவர், உலக இலக்கியம் அறிந்தவர். அவருக்கு இன்னொரு விதமான ரைட்டிங் ஸ்டைல் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவருடைய கருத்தை பிறர்மேல் திணிக்கக் கூடாது. உதாரணமாக சாருநிவேதிதாவுடைய ரைட்டிங் பிடிக்காமல் இருக்கலாம். அதற்கு எல்லோருக்குமே சுதந்திரம் இருக்கிறது. என்னுடைய எழுத்து எல்லோருக்கும் பிடித்தே ஆக வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்றால், ‘இப்போது எழுதக் கூடிய பாமுக்_அவருக்கு நோபல் அவார்டு கொடுத்திருக்கிறார்கள். அவர் இப்படியெல்லாம் எழுதவில்லை’ என்கிறார். இது சுத்தப் புரட்டல். நான் பத்து, இருபது வருடமாக ஒரு விஷயத்தை கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். என்னை மாதிரி இந்த உலகத்தில் பதினைந்து பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, வில்லியம் பர்ரோஸ். என் கட்டுரைகளில் வில்லியம் பர்ரோஸ் பெயர் வராத இடமே கிடையாது. சாதாரணமாக ‘நமீதா’ பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்டால் கூட வில்லியம் பர்ரோஸை உள்ளே விடுவேன். அந்த அளவுக்கு வில்லியம் பர்ரோஸை கிரகித்து வைத்திருக்கிறேன். அப்புறம் கேத்தி ஆக்கர். இப்படி பெரிய லிஸ்ட்டே என்னிடம் இருக்கிறது. இவர் சொல்வார் வில்லியம் பர்ரோஸ், கேர்த்தி ஆக்கர் எல்லாம் யார் படிக்கிறார்கள் என்று. உலக இலக்கியம் தெரிந்த ஆள்தானே நீங்கள்? அப்புறம் இதை ஏன் மறைக்கிறீர்கள். வேண்டுமென்றே தெரிந்தே என்னைப் பழிவாங்குகிறீர்கள் அல்லது சதி செய்கிறீர்கள் என்று நான் சொல்வேன். ஏனென்றால், ஓரான் பாமுக்குக்கு முந்தின வருடம் நோபல் பரிசு வாங்கினவர் எல்ஃப்ரீட் ஜெலினெக். அவங்க எப்படி எழுதுறாங்க? நான் எழுதுகின்ற செக்ஸ§வாலிட்டியெல்லாம் தூசு. ஒரு பெண்ணுக்கு நாற்பது வயது வரைக்கும் செக்ஸ§வல் எக்ஸ்பீரியன்ஸே இல்லை. அவளுடைய அம்மா அவளை பீத்தோவன் மாதிரி பெரிய இசைக் கலைஞியாக்க ‘அற்ப, லோகாயத விஷயங்களில் எல்லாம் நீ ஈடுபடக் கூடாது’ என்று சொல்லி, ஒரு கலைஞனாக வளர்த்திருக்கிறாள். நம்ம ஊர் சிறு பத்திரிகை இலக்கியவாதிகள் எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டார்கள், குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார்கள். ஊர் ஊரா சுற்றித் திரிவார்கள். உலக இலக்கியம், உலக இலக்கியமென்று பேசித் திரிவார்கள். அப்படி அவர்கள் உலக இலக்கியம் பண்ணினால் பரவாயில்லை. ஆனால் அதுமட்டும் நடக்காது. இதே மாதிரி ஜெலினெக்கின் கதாநாயகிக்கு அவள் அம்மா கல்யாணம் பண்ணி வைக்கவில்லை. ஒரு பாய் ஃபிரெண்ட் கிடையாது. ஒரு டிஸ்கோதெ கிடையாது. பிராக்டிஸ் பிராக்டிஸ் என்று அவள் ஒரு பியானோ டீச்சர் போல ஆகிவிட்டாள். இங்குள்ள இலக்கியவாதி உலக இலக்கியம், உலக இலக்கியம் என்று சொல்லிக் கொண்டு ஒரு மாவட்ட இலக்கியம்தான் படைக்கிறான். எப்படி மாவட்ட இலக்கியம் என்று சொல்கிறேன் என்றால், மாவட்ட அளவில் ஃபுட்பால் விளையாடுகின்றவன் போய் உலக அளவில் விளையாட முடியுமா? அதுபோல் பீத்தோவன் மாதிரி ஆக பயிற்சி கொடுக்கப்பட்டவள் கடைசியில், ஒரு டீச்சர் லெவலுக்கே வர வேண்டியதாகிவிட்டது. அவள் ஒரு முறை புளூ ஃபிலிம் பார்க்கப் போவாள். அங்கே டிஷ்யு பேப்பர் எல்லாம் சிதறிக் கிடக்கும். அந்த டிஷ்யு பேப்பரில் ஆண்கள் சுய மைதுனம் செய்து துடைத்துப் போட்டிருப்பார்கள். அதை எடுத்து அவள் முகர்ந்து பார்ப்பாள். அங்கேயே சிறுநீர் கழிப்பாள். திரையரங்கை விட்டு வெளி வந்து கொண்டிருக்கும் வழியில், காரிலேயே இருவர் சம்போகம் செய்து கொண்டிருப்பார்கள். அதைப் பார்த்தவுடன் அங்கேயே அமர்ந்து மறுபடியும் சிறுநீர் கழிப்பாள். அப்போது காரிலிருந்து இறங்கி அவளை அடிக்க ஓடி வருவான் அவன். இவள் தப்பி ஓடுவாள். இதுதான் அவளுடைய செக்ஸ§வல் எக்ஸ்பீரியன்ஸ். இதையே நினைத்து நினைத்து உடம்பெல்லாம் குண்டூசி எடுத்துக் குத்திக் கொள்வாள். அந்த நேரத்தில் ஒரு ஸ்டூடெண்ட் இவளை லவ் பண்ணுவான். நாம் இருவரும் உறவு கொள்ளலாம் என்பான். இவள் உடனே அவனுக்கு ஒரு லெட்டர் எழுதுவாள். அது என்னவென்றால், உடனே அவளுடன் உறவு கொள்ளக் கூடாதாம். முதலில் உடல் முழுவதும் குண்டூசியால் குத்த வேண்டும். ஒரு இரும்புக் கிடுக்கியை எடுத்து என்னுடைய உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பை ‘டைட்’ பண்ணவேண்டும். இப்படியெல்லாம் இவள் சொன்னவுடன் அவன் மிரண்டு போய் ஓடியே விடுவான். அவனும் ஓடிவிட்டான் என்றவுடன் இவள் இதற்கெல்லாம் நம்முடைய அம்மாதான் காரணம் என்று நினைத்து, அந்தக் காமம் தாளமுடியாமல் தன் அம்மாவையே ‘ரேப்’ செய்துவிடுவாள். அம்மாவை கடித்துக் குதறி விடுவாள். இக்காட்சி நாவலில் துல்லியமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அவள் ஒரு இடத்தில் சொல்வாள் ‘நான் என் அம்மாவின் யோனி ரோமத்தைப் பார்த்தேன்’ என்று. இந்த நாவல் ஒரு படமாக வெளிவந்திருக்கிறது. இந்த சீனை எப்படி விஷ§வல் பண்ணி இருக்கிறார்கள் என்று பார்க்க அந்தப் படத்துக்குப் போனேன். படம் இக்காட்சியில் தோற்றுப் போய் இருந்தது. ஏனென்றால், அவள் வெறும் வசனமாக இதைச் சொல்லுவாள். நாவலில் வரும் 100 சதவீதத்தில் 5 சதவீதம் கூட படத்தில் இல்லை. இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் இப்படி எழுதுகிறாள் ஜெலினெக். அவள் தன் ‘பியானோ டீச்சர்’ நாவலைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறாள் தெரியுமா? இது என்னுடைய ஆட்டோ பயோகிராஃபி என்று சொல்லி இருக்கிறாள். இந்த ரேஞ்சில் உலக இலக்கியம் போய்க் கொண்டிருக்கிறது. அவளுக்கு நோபல் அவார்டு கொடுத்திருக்கிறார்கள். மலையாளத்தில் இன்றைக்கு என்னுடைய கட்டுரைகளைப் படித்துவிட்டு எல்பிரீட் ஜெலினெக்கைவிட சாருவின் எழுத்து நன்றாக இருக்கிறது என்கிறார்கள். நானும் அப்படித்தான் ஃபீல் பண்ணுகிறேன். ஜெலினெக்கை நாம் நன்றாக எழுதிவிட்டோம் என்ற மன திருப்தியில் இருக்கிறேன். என்னையும் என் எழுத்தையும் விடுங்கள். ஜெலினெக் பற்றி இருட்டடிப்பு செய்துவிட்டு ஏன் பாமுக் பற்றி பேசுகிறார் அசோகமித்திரன்? ஏதோ ‘ஷாக் வேல்யு’விற்காக எழுதியதில்லைங்க இது. என்னுடைய லைஃப். நீங்கள் வேண்டும் என்றால் இப்படி சாக்கடையில் கிடக்கிறானே என்று ஒதுங்கிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான்.நொய்டாவில் நாற்பது ஐம்பது குழந்தைகளை ரேப் பண்ணி கொன்று விட்டு மொத்தமாகப் புதைத்துவிட்டார்கள் என்றால், இதுமாதிரி உலகத்தில் எங்கு நடந்திருக்கிறது? இங்கே செக்ஸ§வாலிட்டி என்பது ஒரு பிரச்னை. நான் அதை எக்ஸ்போஸ் பண்ணுகிறேன். இதைப்போய் ஷாக் வேல்யுவுக்காக எழுதுவதென்றால் எனக்கு வேறு வேலை இல்லையா? எனக்கு இதனால் என்ன நல்ல பேர் வந்துவிடப் போகிறது. கெட்ட பேர்தானே வரும். இந்த அதிர்ச்சியினால் எனக்கு என்ன லாபம். நீங்கள் வேண்டுமென்றால் கர்ப்பகிரகத்திற்குள்ளாக உட்காந்து கொண்டு கர்ப்பகிரக இலக்கியம் எழுதிக் கொண்டு இருங்களேன் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.


தீராநதி: பேசிக்கொண்டே திசை மாறிவிட்டோம். பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது?

சாரு: பிரான்ஸில் ஒரு மனிதனின் சராசரி வயது 95. இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். இதற்கு அங்குள்ள குளிரும் ஒரு காரணம். அப்புறம் டென்ஷன் இல்லாது வாழ்வது. ஒருவரின் உயிர் வாழ்வுக்கு அவனுடைய கலாச்சாரமும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். தினமும் நொய்டா கில்லிங் மாதிரி பேப்பரில் படித்துக் கொண்டே இருந்தால், எப்படி உங்களுக்கு ரத்தக் கொதிப்பு வராமல் இருக்கும். அதனால் ஆயுள் விஷயத்தில் இவ்வியல்பான காரணங்கள் கூட சேர்ந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.பாரிஸ் பற்றி நான் எழுதும்போது அங்கே விபத்தே நடப்பதில்லை என்று எழுதி இருந்தேன். உடனே ஷோபா சக்தி மாதிரி ஒரு ஆள் ‘சும்மா இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு ஒன்றும் தெரியாமல் எழுதுகிறார்’ என்றார். விஷயம் என்னவென்றால் இங்கு எத்தனை விபத்து நடக்கிறது. அங்கு வருடத்தில் ஒன்று என்றால் இங்கு தினமும் விபத்து. இதை ஒப்பீடு செய்து பார்த்துதான் நான் எழுதுகிறேன். வருடத்திற்கு ஒன்று நடந்தால் அது விபத்தா? இந்தப் பரிகாசத்தையெல்லாம் கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியாது.அங்கே ரயிலில் ஒரு பெண், இருபது வயது மதிக்கத்தக்கவள். அவளால் கூட்ட நெரிசலில் நிற்கவே முடியவில்லை. குறுகலான இடத்தில் எப்படியோ பேலன்ஸ் செய்துகொண்டே ‘மதாம் பவாரி’ நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறாள். நூறு வருடத்திற்கு முன்னால் எழுதப்பட்ட நாவல் அது. அதனால்தான் அங்கு ஆயுள் அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு கலாச்சாரத்துடனும் இலக்கியத்துடனும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும். வெறும் குப்பையையே தின்று கொண்டிருந்தால் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும்? எந்த உடற்பயிற்சியும் இல்லை. தின்பதும் குப்பை, படிப்பதும் குப்பை, குடிப்பதும் குப்பை. இங்கே எங்குமே நல்ல வகை மதுவை வாங்க முடியாது. எல்லாமே கலப்படம். எல்லாமே குப்பை. எப்படி நீண்ட நாள் வாழ முடியும்? அங்குள்ள தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், பிரெஞ்ச் கலாச்சாரத்தோடு ஊடாடுவதே கிடையாது. அங்கேயும் போய் இந்தியக் குப்பையை இறக்குமதி பண்ணி அந்தக் குப்பையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உதாரணமா, அங்கேயே கிடைக்கின்ற மட்டரகமான விஸ்கியை குடிக்கிறார்கள். பிரெஞ்ச்காரர்கள் வைன் தான் குடிப்பார்கள். தமிழன் வைனே குடிப்பதில்லை. அங்கு வேலை செய்யாமலே, அவ்வரசு அகதிகளுக்கும், வேலையில்லாதவர்களுக்கும் ஆயிரம் யூரோ பணத்தை உதவித் தொகையாகக் கொடுக்கிறது. ஆயிரம் யூரோ என்பது அங்குள்ள ஒரு தபால்காரரின் சம்பளம். ஆக என்ன ஆகிறது? வேலைக்குப் போகாமல் பணம். நிறைய நேரம். குடிதான் ஒரே கதி. ஞிவீணீsஜீஷீக்ஷீணீ என்போமே, புலம் பெயர்ந்து வாழ்கின்ற அந்த வலியோடு குடித்துக் குடித்து ஐம்பது வயதிலேயே இறந்து போகிறான் தமிழன். சராசரி நூறு வயது வரை வாழ்கின்ற ஒரு நாட்டில், நம் ஆட்கள் ஐம்பது வயதில் செத்துப் போகிறார்கள் என்பது மிகப் பயங்கரமாக இருக்கிறது எனக்கு.தமிழர்கள் வீட்டில் பிரெஞ்சுதான் பேசுகிறார்கள். ஆனால், ஒரு பிரெஞ்ச் சினிமா பற்றியோ, அங்குள்ள இலக்கியம் பற்றியோ ஒரு பிரக்ஞையும் இல்லை இவர்களுக்கு. பாரிஸில் பொம்பிதூ நூலகம் என்று ஒரு இடம் இருக்கிறது. அந்தக் கட்டிடத்தை உலக அளவில் கட்டிடக் கலையின் அதிசயம் என்று சொல்வார்கள். வெறும் கண்ணாடியும் ஸ்டீலையும் மட்டுமே பயன்படுத்தி கட்டி இருக்கிறார்கள். அந்த லைப்ரரி, உலக அளவில் புகழ் பெற்றது. அங்கு போகவேண்டும் என்று ஷோபா சக்தியிடம் கேட்டபோது அவர், ‘நம்மையெல்லாம் அங்கே விட மாட்டார்கள்’ என்று பதில் சொன்னார். இருபது வருடமாக பிரான்ஸில் வசிப்பவர் சொன்ன பதில் இது. ஆனால், அங்கே ‘புக்’கை எடுத்துக்கோ எடுத்துக்கோவென்று எடுத்து நீட்டுகிறான். ‘இந்தப் புத்தகம் வேண்டும்’ என்றால் நான் அதன் உறுப்பினராக இருந்தால் நமக்குத் தேவையான புத்தகத்திற்கு உரிய பணம் கட்டி விட்டு பெற்றுக் கொள்ளலாம். அதன் உரிய விலையை விட அரை, கால் பங்கு பணம் மட்டுமே வசூலிக்கிறார்கள். இங்கே நமக்கு ஒரு புத்தகம் வேண்டும் என்று எடுத்து விட்டால், திருடன் என்று சொல்லி ஜெயிலில் வைப்பார்கள். நூறு, ஆயிரம் பக்கம் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ள பல நவீன வசதிகள் அங்கே லைப்ரரியிலேயே இருக்கிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள் அங்கே இருக்கிறது. என்னுடைய புத்தகங்கள் கூட இருக்கிறது. அது ஒரு ஆராய்ச்சிக் கூடம். வாழ்நாள் பூரா உட்கார்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கலாம். எவனும் கேட்கமாட்டான். ஆனால் நம் ஷோபா சக்தி என்ன சொல்கிறார் என்றால், ‘நம்மையெல்லாம் அங்கே உள்ளே விடமாட்டான்’ என்கிறார். அவர் அப்படிச் சொன்னவுடன் நூலகத்தின் வாசலிலேயே சாயுங்காலம் வரை உட்கார்ந்து இருந்துவிட்டு திரும்ப வந்துவிட்டோம். மறுநாள் பிரெஞ்சில் எழுதக்கூடிய என் நண்பர் கலாமோகனோடு அந்த லைப்ரரிக்குப் போனேன்.விஷய ஞானத்தை எடுத்துக் கொண்டால், ஜோதிகா இப்போது முழுகாமல் இருக்கிறார் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். புத்தகக் கடைக்குப் போனால் ரமணி சந்திரன்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. எந்த வீட்டிற்குள் போனாலும் சீரியல் ஃபுல் ஸ்விங்கில் ஓடுகிறது. இங்கே தமிழன் எப்படி இருக்கிறானோ அதே போலவே அங்கேயும் இருக்கிறார்கள். ஒரு தமிழர் வீட்டுக்குப் போனேன். அவர் ஈழத் தமிழர் அல்ல. அவரும் அவருடைய மனைவியும் எப்போதாவது தான் தமிழில் பேசிக் கொள்கிறார்கள். அவருக்கு மூன்று குழந்தைகள். அந்த மூன்று குழந்தைகளுக்குமே ஒரு தமிழ் வார்த்தை கூடத் தெரியாது. ஸோ... குடும்பமே பிரெஞ்ச் குடும்பம் போல இருக்கிறது. பெயர்களை மட்டும் தமிழில் வைத்திருக்கிறார். ராமசாமி, முத்துசாமி என்பதுபோல எல்லாம் தமிழ்ப் பெயர்கள். ஆனால் தமிழ் தெரியாது. அவரிடம் நான் ‘ஒரு வார்த்தைகூட தமிழ் தெரியாமல் பண்ணி விட்டீர்களே’ என்று வருந்திக் கேட்டபோது, அவர் சொன்னார் (இவர்தான் என் நாவலை பிரெஞ்சில் மொழி பெயர்ப்பவர்) ‘தமிழ் தெரிந்து என்ன பண்ணப் போகிறோம். சீரியல் பார்க்கலாம். சீரியலா, அது அவ்வளவும் குப்பை. பள்ளிக் கூடத்தில் கலைவிழா என்று சொல்லிக் கொண்டு ‘கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா’ என்று இடுப்பை அசைத்து அசைத்து டான்ஸ் ஆடலாம். இது எதுக்கு’ என்றார். மேலும், தமிழ் வீடுகளில் ஐந்து வயதுக் குழந்தை அம்மாவைப் பார்த்து ‘வாடி என் கப்பக்கிழங்கே’ என்ற பாட்டை பாடுகிறதாம். அம்மா என்ன சொல்கிறாள் ‘எப்படி பாடுகிறது பாருங்க என் குழந்தை’ என்று புளகாங்கிதம் அடைகிறாளாம். ‘இந்தத் தமிழ் எனக்கு வேண்டாம். குப்பைக் கலாச்சாரத்தைச் சொல்லிக் கொடுக்கும் இந்த மொழி வேண்டாம் என்று விட்டுவிட்டேன்’ என்றார்.பிரான்ஸ் எப்படிப்பட்ட தேசம் தெரியுமா? ‘ரேப்’ என்பதே இல்லாத தேசம். இது எனக்கு ஒரு விடுதலை உணர்வைக் கொடுக்கிறது.


தீராநதி: நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், தமிழ்நாட்டுத் தமிழனும் பிரான்ஸ் தமிழனும் ஒன்று போலவே இருக்கிறார்கள் என்பது புரிகிறது. உலக அளவில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழனும் ஒன்றுபோலவே சிந்திக்கிறானே! அது எப்படி சாரு?


சாரு: அது கண்டுபிடிக்க வேண்டிய ஒரு விஷயம். பாரிஸில் ‘சோர்போன் யுனிவர்சிடி’ இருக்கிறது. அங்கே சேர்ந்து படிக்கலாம். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடியை விட நல்ல யுனிவர்சிடி அது. அங்கே ஃபூக்கோ போன்ற மேதைகள் பாடம் நடத்தி இருக்கிறார்கள். அந்த யுனிவர்சிடிக்கு போய்ப் பார்த்தேன்.சுதந்திரம் என்று சொல்வோமே, அந்த சுதந்திரத்திற்கே தாய் பூமி பிரான்ஸ்தான் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அங்கே நம் ஆட்கள் என்ன செய்கிறார்கள் என்றால், இப்போது இறந்து போனாரே எல்.டி.டி.ஈ.யுடைய பிரதிநிதி ஆன்டன் பாலசிங்கம், அவரின் இரங்கல் செய்தியைச் சொல்லும் ஒரு போஸ்டரை ஒரு கடையில் ஒட்டினபோது அக்கடைக்காரர் ‘இங்கே ஒட்டாதேப்பா. இது பல அரசியல் கொள்கைகள் உடையவர்கள் வந்து போகின்ற இடம். அதனால் வேண்டாம்’ என்று தடுத்திருக்கிறார். அன்று இரவே அவரை அடித்து துவம்சம் செய்துவிட்டார்கள்.
தீராநதி: யார் தமிழர்களா?
சாரு: வேறு யார் அடிப்பான். அங்கு போலீஸ்காரன் அடித்தால் நான் முன்பே சொன்னேனே, தேசமே பற்றி எரியும் என்று. இது ஏதோ தமிழனுடைய பழக்கம் மட்டுமல்ல; இது ஒரு இந்திய மனப்பான்மை. உலகம் பூராவும் டீயில் பால் கலக்காமல்தான் டீ குடிக்கிறார்கள். இந்தியாவில் மட்டும்தான் பால் கலந்த டீயை உங்களால் குடிக்க முடியும். பால் கலக்காத டீயைக் குடித்தால் இருதயத்திற்கு நல்லது. பால் கலந்த டீ அந்த நல்ல தன்மையை எடுத்து விடும். இப்படி எல்லாவற்றையுமே நச்சாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள் இந்தியர்கள். கேட்டால், பெரிய ஆன்மிக பூமி என்கிறான். இதைக் கிண்டல் செய்தால் ‘உனக்கு தேசப்பற்றே இல்லை’ என்கிறான்.


தீராநதி: எந்த எழுத்தாளனுக்கும் இல்லாத அளவு வாசகர் மத்தியில் உங்களைப் பற்றி மட்டும் பல கதைகள் உலவுகின்றன. நீங்கள் ஒரு ஸ்திரீலோலன், ஆண்மோகி (ரீணீஹ்). அரவாணி, குடிகாரன், நரமாமிசம் தின்பவன் இப்படி ஏகப்பட்ட புனைவுகள். இந்தக் கதைகளுக்கெல்லாம் உங்களின் எழுத்தே ஒரு காரணமாக இருக்குமா?


சாரு: ஆமாம். என்னுடைய எழுத்துதான் காரணம். பொதுவாக நான் ஒரு குழந்தை மாதிரி. என் மனதில் தோன்றுவதை ஒளிவு மறைவு இல்லாமல் எழுதுகிறேன். எனக்கு எதைப் பற்றியும் பயம் கிடையாது. நீங்கள் ‘ராஸலீலா’வைப் படித்தாலே அது புரியும். பயம் இருந்தால் இதை எழுத முடியாது. சமூகத்தினுடைய மதிப்பீடுகள் பற்றி அல்லது புகழ் பற்றி எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. இப்படி இவ்விஷயங்களில் ஆர்வம் இல்லாத ஒரு ஆள் அதை வெளிப்படையாகப் பேசும்போது சிக்கல் வருகிறது. அநேகமாக எழுத்தாளர்களிலேயே கம்மியாக குடிப்பவன் நானாகத்தான் இருப்பேன். இந்த விஷயத்தில் ஒரு ராணுவ ஒழுங்கை நான் கடைப்பிடிக்கிறேன். தொட்டுக் கொள்ள ஆலிவ்காய் இல்லை என்றால், அந்த இடத்தில் குடிக்கவே மாட்டேன். நண்பர்கள் எல்லோரும் குடித்தால் கூட வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். பிறகு கலப்படம் இல்லாத உயர்ந்த வகை மது இருந்தால் மட்டுமே குடிப்பேன். பாரிஸிலிருந்து திரும்பிய கொஞ்ச நாட்கள் திடீரென்று குடிக்கவே இல்லை. ஏனென்றால், அச்சமயம் நான் பல மியூசிக் காசட்டுகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இதுவே ஒரு போதையைப்போல இருக்கிறதென்று குடிக்கவே இல்லை. இதுபோல் வெளிப்படையாக நான் பேசுவதால் வருகின்ற பிரச்னைகள் இது. ஒரு நாள் ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது _ அந்த ஆட்டோ டிரைவர் என்னுடைய போட்டோவை எங்கோ பார்த்திருப்பான் போல. ஆனால் என் எழுத்தில் ஒரு வார்த்தை படித்தது இல்லை _ ‘உங்ககிட்ட ஒண்ணு கேட்கட்டுமா சார்’ என்று தயங்கிக் கொண்டே ஆரம்பித்தான். என்ன விஷயம் என்றதும் ‘நீங்க கண்ணதாசன் மாதிரி குடிச்சிட்டே இருப்பீங்களாமே?’ என்றான். ஆமாம் என்றதும், ‘ஒரு நாளைக்கு எவ்வளவு குடிப்பீங்க’ என்றான். காலையில் பல் துலக்கிவிட்டு ஒரு குவார்ட்டர் அடிப்பேன். பிறகு எழுத ஆரம்பிப்பேன். மதியம் ஒரு குவார்ட்டர், நைட் தனியா இருந்தால் ஒரு குவார்ட்டர், நண்பர்களுடன் இருந்தால் ஒரு ஆஃப் அடிப்பேன் என்றேன். எதைச் சொல்லியும் அவனுக்குப் புரியப் போவதில்லை. நான் குடிக்க மாட்டேன் என்றால், அவன் நம்பப் போவதில்லை. அப்புறம் எதற்கு நீட்டிக்கொண்டு?இதேமாதிரி செக்ஸ் விஷயத்தில். ஸ்திரீ லோலன் _அது என்ன வார்த்தை என்றே எனக்குப் புரியவில்லை. ஸ்திரீகள் மேல் எல்லோருக்குமே ப்ரியம் இருக்கிறது. கவர்ச்சி இருக்கிறது. அதை நூற்றுக்கு 99 சதவீதம் ஆண்கள் மறைக்கிறார்கள். நான் மறைப்பதில்லை. ஸ்திரீலோலன் என்றால் போகின்ற வருகின்ற பெண்களை எல்லாம் பிடித்து ‘ரேப்’ பண்ணுகின்றவன் கிடையாது. எல்லோரும் மனசுக்குள்ளாகவே அமுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் வெளியே சொல்லிவிடுகிறேன். இதுதான் வித்தியாசம். ரீணீஹ்என்பதை அல்லது லெஸ்பியன் என்பதை ரொம்பத் தீவிரமாக நான் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன். ஒருவன் எப்படி வாழ்வது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவன் ஒருவனைச் சார்ந்தது. உங்களை அவன் ஒன்றும் பண்ணுவதில்லை. அவன் திருடவில்லை, கொள்ளையடிக்கவில்லை. இன்னொரு பெண்ணை ஈவ்டீஸிங் செய்யவில்லை. ஆணோடுதான் வாழ்வேன் என்று அவன் சொல்கிறான். அது அவனுடைய சுதந்திரம். ஜனநாயக நாட்டில் அதற்கு இடம் தராமல் சட்டம் போட்டு வைத்தால் அது தப்பு. இதை நான் தட்டிக் கேட்டால், ‘நீ என்ன ரீணீஹ்யா?’ என்கிறான்.இது பொம்பளைங்களே இல்லாத நாடு. எழுத்தாளன் என்றால் எந்தப் பொம்பளை நம்மை பார்ப்பாள்_ பார்ப்பாங்க என்று திருத்திப் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு பெண்ணியவாதிகள் எல்லாம் ‘அவள், இவள்’ என்று சொல்லிவிட்டார் என்று குதிப்பார்கள். எழுத்தாளன் என்பவனுக்கு இங்கு வேல்யுவே கிடையாது. நான் என்ன நடிகனா? நானும் நடிகர் பார்த்திபனும் நின்று கொண்டிருந்தால் எல்லோரும் ஓடி பார்த்திபனிடம்தான் ஆட்டோகிராஃப் வாங்குவார்கள். வெளிநாடுகளில் வாழும் ஆண்களுக்கு பெண்களோடு வாழ்ந்து வாழ்ந்து அலுத்துவிட்டது. அதனால் அவன் வேறு ஒன்றைத் தேடுகிறான். இங்கே ஒரு இளைஞனும் அவனுடைய காதலியும் செக்ஸ் வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தால் கல்யாணம்தான் செய்துகொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் போலீஸ் பிடித்துவிடும். ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் கூட போய் தங்க முடியாது. உடனே ரெய்டு செய்து விபச்சார வழக்கில் உள்ளே தள்ளி விடுவார்கள்.திருமணச் சான்றிதழ் வைத்திருக்கிறீர்களா என்று கேட்பார்கள். இதை பிராக்டிக்கலா நானே பல இடங்களில் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரியான இறுக்கமான ஒரு சமூகத்திற்குள் நாம் ஆசைப்படுவது எதுவும் கிடைப்பதில்லை. தடைசெய்யப்படுகிறது. கட்டுப்படுத்தப்படுகிறது. ஆக, இச்சமூகம் என்னை ஸ்திரீலோலனாகத்தான் இருக்க வைக்கிறது. அப்புறம், நாம் எப்போதுமே வாழ்க்கையின் சௌகர்யமான இலக்கியத்தை மட்டுமே பேசிக்கொண்டு, சௌகர்யமான இலக்கியத்தை மட்டுமே படைத்துக் கொண்டிÊருக்கிறோம். நான், பிரேதக் கிடங்கில் இருக்கக்கூடிய ஒருவன் எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறான் அவனுடைய வாழ்க்கை என்ன என்று ஆராய்ச்சி பண்ண நினைக்கிறேன். அதை வைத்து ஒரு கதை எழுதினால் உடனே இவன் பிரேதத்தைப் புணருகிறவன் என்றும்; இவனுக்கு நெக்ரோஃபீலியா என்றும் பேசுகிறார்கள். அதற்கு நான் என்ன செய்யமுடியும்?


தீராநதி: வழக்கமான வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு நீங்கள் வாழ்வின் வேறு பக்கங்களைப் பற்றி அதிகம் எழுதுகிறீர்கள். நீங்கள் ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டா?


சாரு: போஸ்ட் மாடர்னிஸ்ட் என்று தன்னை ஒருவர் பிரகடனப்படுத்திக் கொள்கிறார் என்றால் அதைப்பற்றி நான் கொஞ்சம் சந்தேகப்படுகிறேன். ஏனென்றால் இந்தப் பிரகடனங்கள் இலக்கியத்தை உருவாக்காது. கோஸின்ஸ்கி, இடாலோ கால்வினோ, உமபர்தோ எக்கோ போன்றவர்களெல்லாம் இலக்கியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உமபர்தோ எக்கோ ஒருவர்தான் தியரிடீஷ்யன். அவர்தான் போஸ்ட்மாடர்னிசம் பற்றிப் பேசுகிறாரே தவிர, மார்க்கேஸ் இருக்கிறாரே அவர் என்ன போஸ்ட் மாடர்னிஸ்ட்டா? அதெல்லாம் கிடையாது. அவர் தன் போக்கில் இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறார். போஸ்ட் மாடர்னிஸம் என்பது விஷயங்களை இன்னும் தெளிவாக இன்னும் ஜனநாயக ரீதியாகப் புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி. அவ்வளவுதான். நீங்கள் மாஜிக்கல் ரியலிஸ்ட்டா என்று கேட்டால் மகாபாரதமே மாஜிக்கல் ரியலிஸம்தானே. அதிலும் போஸ்ட் மாடர்னிஸத்திற்கான கூறுகளை நாம் பார்க்கலாம். தெரிதாவின் பல கோட்பாடுகளை கிருஷ்ணனுடைய கதைகளோடு நாம் பொருத்திப் பார்க்க முடியும். போஸ்ட் மாடர்னிஸ்ட், மாஜிக்கல் ரியலிஸ்ட் என்பதெல்லாம் எனக்குப் பொருந்தாது. நான் ஒரு படைப்பாளி அவ்வளவுதான்.


தீராநதி: பின் நவீனத்துவ கோட்பாடுகளை அறிமுகம் செய்வது, அது சம்பந்தமான பிரதிகளை உருவாக்குவது, இதையெல்லாம் நீங்கள் செய்யும்போது, ஏன் ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக அடையாளப்படத் தயங்குகிறீர்கள்?


சாரு: இங்கே போஸ்ட் மாடர்னிஸத்தை உள்வாங்கிக் கொண்டு எழுதியவர்களே ரொம்பவும் கம்மி. இதில் இன்னொரு பெரிய வேடிக்கை என்னவென்றால் இங்கு யார் முதலில் போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக எழுதினார்கள் என்று பார்த்தால், தமிழவன் என்ற ஒருவர் எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதியதில் உயிரே கிடையாது. பிறகு எம்.ஜி.சுரேஷ் தன்னை ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக பிரகடனப்படுத்திக் கொண்டு எழுதுகிறார்.அவரை தமிழவனின் வாரிசு என்றுகூடச் சொல்லலாம். இப்படி உயிரில்லாத சவத்தை உருவாக்குவதால் அவரை வாரிசென்று சொல்கிறேன். முதலில் இலக்கியம் என்றால் அது போஸ்ட் மாடர்னிஸமோ அல்லது வேறு எந்த இஸமோ, அதில் உயிர் இருக்கவேண்டும். உயிர் இல்லாத ஒன்றை எழுத்தென்றே ஒத்துக்கொள்ளமுடியாது. வெறும் லேபிள் ஒட்டி விற்கப்படும் பொருட்களைப் போன்றதுதான் அது. இன்னும் சில பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெயரைச் சொல்வதற்கே பயமாக இருக்கிறது. அப்புறம் மூன்று தலை உருளும் என்பார்கள். இவர்கள் எல்லாம் உயிர் இல்லாத எழுத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் பிரச்சினை. நீட்ஷே, ஃபூக்கோ பற்றி எவ்வளவு காலமாக நிறப்பிரிகையில், படிகளில் எம்.டி.எம், தமிழவன், ரவிக்குமார், அ. மார்க்ஸ், நான் எல்லோரும் சேர்ந்து விவாதித்தோம். அதைப்பற்றிய மொழி பெயர்ப்புகள் செய்தோம். இதெல்லாம் என்னுடைய ஃபிக்ஷன் மேக்கிங்கிற்கு எவ்வளவு தூரம் உதவும்... அதற்கு மட்டுமே இவை. இந்த உலகத்தை எவ்வாறு பார்ப்பது, என்னுடைய கான்செப்ட், விஷன் இவற்றிக்கு இவை மாற்றுப் பார்வையை கொடுத்திருக்கின்றன. அவ்வளவுதான் இவற்றின் முக்கியத்துவம். நான் என்ன போஸ்ட் மாடர்னிஸத்தின் தியரிடீஷ்யனா? இங்கே மொத்தம் படிப்பவர்களே ஆயிரம் பேர்தான். இங்கே அதற்கெல்லாம் ‘ஸ்கோப்’பே கிடையாது. நான் போஸ்ட் மாடர்னிஸ்ட் என்று சொன்னால் ஓ.கே. இருக்கலாம். நான் அதற்கான லிட்ரேச்சரை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கு முன்னால் நிறையப்பேர் இருக்கிறார்கள். அசோகமித்திரன், எம்.வி.வெங்கட்ராமன், கரிச்சான் குஞ்சு, கு.பா.ரா., ப.சிங்காரம் இப்படி பலபேர்... கடல் மாதிரியான ஆட்கள் இருக்கிறார்கள். அசோகமித்திரனுக்கு போஸ்ட் மாடர்னிஸம் என்றால் என்னவென்று தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அதைப் பற்றி எங்கேயும் எந்தக் கருத்தும் சொன்னதில்லை.இங்கே போஸ்ட் மாடர்னிஸ்ட் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு வருபவர்கள் முன்னவர்களைவிட ரொம்ப ரொம்ப ‘வீக்’ என்பதுகூட சரியாகாது; செத்துப்போன ஒரு tமீஜ்t டை உருவாக்குகிறார்கள். இவர்கள் மீது எனக்கு மரியாதை கிடையாது. நான் போஸ்ட் மாடர்னிஸத்தை ஒரு tஷீஷீறீஆக, இந்த உலகத்தைப் பார்க்கும் ஒரு அணுகுமுறையாக எடுத்துக்கொள்கிறேன்.

தீராநதி: ஒரு tஷீஷீறீஆக போஸ்ட் மாடர்னிஸத்தைப் பயன்படுத்துகிறேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் சிலர் ‘உங்களுக்கு போஸ்ட் மாடர்னிஸமே தெரியாது. சாரு படிக்காமல் உளறுகிறார்’ என்று சொல்கிறார்களே?


சாரு: நான் புத்தகங்களைப் படிப்பதில்லை என்று சொன்னால் பிறவி மேதை என்று ஆகிவிடும். போஸ்ட் மாடர்னிஸத்தைப் பற்றி ‘மாத்ரு பூமி’யில் ஒரு தொடர் கட்டுரை கேட்டிருக்கிறார்கள். அந்தத் தொடர் கட்டுரை பின்னால் புத்தகமாக வெளிவரும். இந்த மாதிரியான புத்தகங்கள் எழுதுவது ரொம்பவும் சுலபம். பின் நவீனத்துவத்தைப் பற்றி ஒரு 400 பக்க புத்தகம் எழுதுவது_இதைவிட சுலபமான வேலை வேறு எதுவும் கிடையாது.ஆனால், இந்த 400 பக்கத்திற்குப் பின் நவீனத்துவக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ஒரு நாவல் எழுதுவதற்கு உங்களின் வாழ்க்கையையே நீங்கள் விலையாகக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கப்பட்டதுதான் ‘ராஸலீலா’. சொரணையுள்ள ஒரு சமூகத்தில் எழுதி வெளி வந்திருந்தால், என்னை உள்ளே தூக்கிப் போட்டிருப்பார்கள். அதன் வெளியீட்டாளர் மனுஷ்ய புத்திரனிடம் ‘இது வெளிவந்தால் நீங்களும், நானும் சேர்ந்து ஜெயிலுக்குப் போக வேண்டி வரும். தயாரா?’ என்று கேட்டேன். அவரும் ‘நான் தயார். ஆனால், கக்கூஸ் போவது மட்டும்தான் பிரச்னையாக இருக்கும்’ என்றார். அதற்குப் பிறகுதான் நான் அவரிடம் அந்த நாவலைக் கொடுத்தேன். இவ்வளவு சீரியஸாக இருக்கிறோம் நாங்கள். ஏன் தெரியுமா? 400 பக்கத்தில் பின்நவீனத்துவம் பற்றி ஒரு தியரி புத்தகம் எழுதுவது சுலபம் என்றேன். நாங்கள் ஃபூக்கோவைப் பற்றி இருபது முப்பது வருடமாக இங்கே ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறோம். ராஸலீலாவில் தண்டனை என்ற ஒரு வார்த்தை வருகிறதென்றால், உடனே ஃபூக்கோ தண்டனை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று மேற்கோள் காட்டி எழுதி இருப்பேன். ‘ஐ பியர்’ என்பதுதான் ஃபூக்கோவின் முதல் புத்தகம். 100 வருடங்களுக்கு முன்னால் பியர் என்பவன் பத்துப் பதினைந்து கொலைகள் செய்திருப்பான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கும்போது ‘ஐ பியர்’ என்று ஆரம்பித்து நீதிமன்றத்தில் அவனுடைய வாக்குமூலத்தைச் சொல்கிறான். அது அப்படியே கருவூலத்தில் ஆவணமாக இருக்கிறது. அந்த ஆவணத்திற்கு ஃபூக்கோ எடுத்துப் போட்டு அறுபது, எழுபது பக்கத்திற்கு முன்னுரை கொடுத்தார். இதுதான் அவரின் முதல் புத்தகம். இப்படி 50 புத்தகம், 100 புத்தகத்தைப் படித்துவிட்டு அப்படியே எடுத்து எடுத்து எடுத்து 400, 500 பக்கத்திற்கு பின் நவீனத்துவத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுவது என்பது ரொம்பவும் சுலபம். அது ஒரு அகாடமி ஒர்க். ஆனால், நான் ‘ஐ பியரை’ படித்துதான், குற்றம் என்றால் என்ன? ஒரு குற்றவாளியை எப்படி அணுகுவது? சமூகத்தில் குற்றம் எப்படி ஏற்படுகிறது? எப்படி தண்டனை என்பது உருவாகுகிறது? என்பதையெல்லாம் புரிந்து கொண்டேன். நீங்கள் என்ன சொல்லுவீர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பீர்கள். மாதா, பிதா, என்பதையே தண்டனை சிஸ்டத்திற்குள் வைத்து ஃபூக்கோவைப் பார்க்கிறேன். ஏனென்றால், மாதாதான் உங்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறாள். உதாரணத்துக்கு சாதி உணர்வை எடுத்துக் கொள்வோம். இதை உருவாக்குவது அன்னைதான். இதையெல்லாம் நான் தெரிந்து கொண்டது ‘ஃபூக்கோ’வைப் படித்து. எங்களுக்கு எங்கள் அம்மா கொடுக்கின்ற தாய்ப் பாலோடு சாதிய உணர்வு என்பது கலந்து இருக்கிறது. இதைவிட்டு நீ வெளியே வரவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தவன் ‘ஃபூக்கோ’. நான் ஃபூக்கோவைப் படிக்கவில்லை என்று சொன்னால், அப்போது என்ன அர்த்தம்? நானே ஒரு ஃபூக்கோ. நன்றாகத்தான் இருக்கிறது.


தீராநதி: உங்களின் ‘ராஸலீலா’ நாவல் கோணல் பக்கத்தின் தொடர்ச்சியாகவே தென்படுகிறது. வழக்கமான நாவல் வடிவத் தன்மையில்லாமல் அது வெளியாகி இருக்கிறது. இந்தக் கருத்து சரியா?


சாரு: இது ஒரு நல்ல அப்சர்வேஷன் என்றுதான் சொல்லவேண்டும். நான் ஒரு கட்டத்தில் மலையாளத்தில் மூன்று பத்திரிகைகளில் தொடர் எழுதிக் கொண்டிருந்தேன். ‘மாத்ரு பூமி’யில் இசை குறித்தான கட்டுரை. ‘ராஸலீலா’ ‘கலா கௌமுதியில்’. ‘மாத்யமம்’ என்ற இதழில் பொதுவான விஷயங்களைப் பற்றியும் அரபி இலக்கியம் பற்றியும் எழுதினேன். அந்த நேரத்தில் ஒரு கட்டுரையை எழுதி இதை ‘ராஸலீலா’வில் சேர்க்கலாமா? இல்லை மியூசிக் கட்டுரையில் சேர்க்கலாமா? என்பதை பிறகுதான் முடிவு செய்வேன். அப்போது அப்படி அப்படி இன்ன இன்னதில் தூக்கி கோர்ப்பேன். நான் எழுதுவதென்னவோ ஒரே விஷயம்தான். அதனால் இதில் ஒரு சௌகர்யம் கிடைத்தது.மியூசிக் பற்றிய கட்டுரையில் பெரிய பிலாஸஃபர் ஒருவர் ‘பீ’’யைப் பற்றியும் மூத்திரத்தைப் பற்றியும் ஆராய்ச்சி செய்திருப்பதைப் பற்றி எழுதி இருந்தேன். இது ஒரு சமூகவியல் ஆய்வுக் கட்டுரை. சென்ற மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால், ஆங்கில இலக்கியத்தில் பலப்பல விஷயங்களை எடுத்துக்கொண்டு அந்த பிலாஸஃபர் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.அந்தக் காலத்தில் ராணிகள், அரசிளங்குமரிகள் எல்லாம் உப்பரிகையிலிருந்து நிலவைப் பார்த்து ரசித்ததைப்போல நிகழ்வுகள் வரும். விக்டோரியா காலத்தைச் சேர்ந்தவர்களின் உடைகளைப் பார்த்தால் கீழே அகண்டு இருக்கும். உள்ளாடை இறுக்கமாக ஓர் உறை போல இருக்கும். பெரிய பெரிய விருந்துகள் எல்லாம் நடக்கும் போது _ குறைந்தது ஒரு விருந்து நிகழ்ச்சி ஐந்து, ஆறு மணி நேரத்திற்கு மேலாக நடக்கும். அவர்கள் இயற்கை உபாதைகளை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். அந்தப் பெரிய பெரிய உடைகளை கழற்றுவதற்கே குறைந்தது அரை மணி நேரம் பிடிக்கும். இது ஒரு பெரிய காரியம். உடனே ஆடைகளைக் களைந்துவிட்டு மலஜலம் கழிப்பதென்பது அந்த உடையில் சாத்தியமில்லை. அதனால்தான் அவர்கள் உப்பரிகையில் நின்று கொண்டு ஒன்றுக்கு அடித்திருக்கிறார்கள். நிலவையெல்லாம் ரசிக்கவில்லை என்று அவ்வாராய்ச்சியாளர் கண்டறிந்திருக்கிறார். இதை எப்படி அவர் கண்டுபிடித்தார்? வெறும் ஊகத்தினால் அல்ல; அந்தக் காலகட்டத்தில் வெளியான பத்திரிகை விளம்பரம் ஒன்றை வைத்து இதைக் கண்டுபிடித்து நிரூபித்திருக்கிறார். அந்தப் பத்திரிகை விளம்பரம் என்ன சொல்கிறதென்றால், ஆடைக்குள்ளாகவே ஒரு டியூப்பை பொறுத்தி அதன் மூலம் நீங்கள் சிறுநீர் கழிக்கலாம் என்கிறது.அந்த வசதிகளுடன் ஒரு புதிய ஸ்கர்ட் விற்பனைக்கு வந்திருக்கிறது என விளம்பரம் சொல்கிறது. உடனே அந்த ஆராய்ச்சியாளன் என்ன நினைக்கிறான்? அப்படியானால் அதற்கு முன் என்ன செய்திருப்பார்கள் என்று யோசிக்கிறான். இப்படி விரியும் கட்டுரை அது. நான் இதைப் படிப்பதற்கு முன்னாலேயே இந்தியாவிலுள்ள முக்கால்வாசி அரண்மனைகளுக்கும் கோட்டைகளுக்கும் சென்று இருக்கிறேன். அங்கு பல் துலக்கும் இடம், உப்பரிகை, நீச்சல் குளம், குளியலறை எல்லாம் இருக்கும். ஆக்ரா கோட்டையில் மீன்காரன் ஒருவன் அரண்மனைக்குள்ளாகவே யமுனை நதியோடு மீன் கொண்டுவர ஒரு இடம் இருக்கிறது. ஓடிப்பிடித்து விளையாட, இசைக் கச்சேரிகள் நடத்த இப்படி பல இடங்கள் இருக்கிறது. ஆனால், எங்கும் கக்கூஸ் மட்டும் இல்லை. அரண்மனைக்குள் எவ்வளவு பெரிய ஜனக்கூட்டம். அவர்கள் எப்படி கக்கூஸ் போய் இருப்பார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கிறது. இப்படி நான் எழுதும் விஷயங்கள் எல்லாமே ஒன்றுதான். எழுதி முடித்த பிறகுதான் இதை நாவலில் சேர்க்கலாம், இதை கட்டுரையாகக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்கிறேன்.
தீராநதி: போர்னோகிராஃபி வகையறா எழுத்துகளுக்கும் உங்களின் எழுத்திற்கும் என்ன வித்தியாசம்?
சாரு: அது உங்களுக்கே தெரியுமே?!

தீராநதி: வாசகனுக்கு விளக்கச் சொல்கிறேன்.

சாரு: ஃபோர்னோகிராஃபியில் இரண்டு வகைகள் இருக்கிறது. ஒன்று _ கமர்ஷியல் ஃபோர்னோ. அதைத்தான் இங்கு செக்ஸ் புத்தகங்கள் என்று சொல்லி போலீஸ் பறிமுதல் செய்து கொண்டிருக்கிறது. அதில் வெறும் வல்காரிட்டி மட்டுமே இருக்கும். எந்த ஃபோர்னோ கலாபூர்வமான அனுபவத்தைக் கொடுக்கிறதோ, அது கிரியேடிவ் ஃபோர்னோகிராஃபி. நான் எழுதுவது கிரியேடிவ் ஃபோர்னோ கிராஃபி கூட கிடையாது. அலினா ரேயிஸ் என்று ஒரு பிரெஞ்ச் எழுத்தாளர் இருக்கிறார். கேத்தி ஆக்கரையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் கேத்தியின் ஃபோர்னோவில் ஆன்மீகமும் உண்டு. அதனால் கேத்தியை முழுக்க முழுக்க போர்னோ எழுத்தில் அடைக்க முடியாது ‘புஸ்ஸி’ என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறார் கேத்தி. அது போர்னோ வகையைச் சேர்ந்தது. அலினா ரேயிஸ் எழுத்து ஃபோர்னோ வகையைச் சார்ந்தது. இது எல்லாமே ஆர்ட்டிஸ்டிக் ஃபோர்னோவைச் சார்ந்தது. நான் எழுதுவது ஃபோர்னோ வகையையே சார்ந்தது. இல்லை என்று ஏன் சொல்கிறேன் என்றால், என் 700 பக்க நாவலில் 50 பக்கம் மட்டுமே போர்னோ கிராஃபி இருக்கும். ஒரு 1000 சதுர அடி வீட்டில் 100 சதுர அடி அளவுக்கு பெட்ரூம் இருப்பதுபோல்தான் அது. சொல்லப்போனால் ஃபோர்னோவுக்குள் நான் இன்னும் போகவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.


தீராநதி: ‘செக்ஸைப் பற்றிய பொதுவான மதிப்பீடுகளைத் தாண்டி ஆழ்மன ஏக்கம் என்ற ஒன்றிற்குள் சென்று பிணாத்திக் கொண்டிருக்கிறார் சாரு.’ _ இப்படி ஷோபாசக்தி ஒருமுறை குறிப்பிட்டார். இது ஆழ்மன நிம்மதியின்மையால் எழுகின்ற பிரச்னையா சாரு?


சாரு: பெரிய செக்ஸ§வல் சர்வே ஒன்றை எடுத்தால்தான் இதற்கு பதில் தெரியும். அப்புறம் ஒருவனின் செக்ஸ் அனுபவம் என்பது இன்னொருவனுக்கு பொய்யாகவும், புனைவாகவும்தான் தெரியும். தன்னுடைய செக்ஸ§வல் பார்ட்னர், அதாவது மனைவியின் முழு நிர்வாணத்தைப் பார்த்த இந்தியர்களே இங்கு கம்மி. பெர்லினில் ஒரு இடம் இருக்கிறது. பத்து இருபது பெண்கள் எப்போதும் நிர்வாணமாக அங்கே இருப்பார்கள். அங்கு ஒரு நீச்சல் குளம். நீங்கள் விரும்பினால் அப்பெண்களுடன் குளத்தில் ஜலக்கிரீடை செய்யலாம். இதை நான் எழுதினால் ‘இது மாதிரியெல்லாம் எங்கேயுமே இல்லை’ என்பார்கள். அப்படிச் சொன்னால் ‘போடா பொக்கா’ என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதான். என்னிடமே ஒருமுறை ஷோபா சக்தி நேரிலேயே சொன்னார். ‘ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலியல் உறவு என்பது நீங்கள் சொல்வது போலெல்லாம் இருக்காது’ என்றார்.என் நண்பர் மனுஷ்ய புத்திரன் அடிக்கடி கூறுவார்; ‘எவனொருவன் ஒரு கலைப் படைப்பை அணுகும்போது அது உண்மையா, பொய்யா?’ என்று கேள்வி கேட்கிறானோ அவனோடு எனக்கு எந்த சம்பாஷணையும் சாத்தியமில்லை’ என்று. நான் ஒரு கலைஞன். நான் பொய்யை எழுதுவேன்; உண்மையை எழுதுவேன். எதை வேண்டுமானாலும் எழுதுவேன். கலைஞன் என்பவன் உலக மக்களின் சுபிட்சத்திற்காக தன் சட்டைப் பையில் பல உண்மைகளை வைத்து விநியோகித்துக் கொண்டிருப்பவன் அல்ல, உண்மையைச் சொல்வது என் வேலை அல்ல. அதற்குப் பல தீர்க்கதரிசிகளும் உபதேசிகளும் இருக்கிறார்கள்.மேலும் செக்ஸ் என்பது கடலைப் போன்றது. இந்தப் பூமியில் எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான செக்ஸ் இருக்கிறது. ‘‘நான் எழுதுவது போன்ற செக்ஸ் இல்லை; அது ஃபாண்டஸி’’ என்று கூறுவது மிகவும் பத்தாம்பசலித்தனமானது. ஃப்ரான்ஸில் வசித்தாலும் பத்தாம் பசலிகளுக்கு விடிவே இல்லை என்பதையே ஷோபா சக்தியின் கூற்று நிரூபிக்கிறது. இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், இந்தியாவில் தீவிர இடது சாரியாக உள்ளவரும் மதவாதிகளின் மொழியிலேயே பேசுவதும் சிந்திப்பதும்தான். ஷோபா சக்தியின் மேற்கண்ட கூற்று இங்கே இந்துத்துவவாதிகள் செக்ஸ் பற்றி கொண்டுள்ள அதே பழைய கருத்தையே பிரதிபலிக்கிறது.சரி, ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். ஷோபா சக்தியின் ‘ம்’ நாவலில் ஒரு அப்பனுக்கும் மகளுக்கும் இடையிலான பாலுறவு மிக விஸ்தாரமாகக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இம்மாதிரி வீஸீநீமீst உறவுகள் சரீர வேட்கையின் காரணமாகவே நடப்பவை. ஆனால் ‘ம்’ மில் அது ஒரு ‘காதலாக’ சொல்லப்படுகிறது. ஆக, உலகத்தில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறதா? இதன் மூலம் திருவாளர் ஷோபா சக்தி கூறும் ‘உண்மை’ என்ன?மேலும் ஒன்று, நான் ஒரு கீஷீனீணீஸீவீsமீக்ஷீ என்ற வகையில் எனக்கு பெண்களைப் பற்றியும், காமத்தைப் பற்றியும், போகத்தைப் பற்றியும் சற்றே அதிகம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ‘உள்ளே’ போகப் போகத்தான் ‘கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு’ என்பது தெரிய வருகிறது. எனவே ஷோபா சக்தி போன்றவர்கள் இவ்விஷயத்தில் அடக்கம் காட்டுவது நல்லது.


தீராநதி: உங்களின் ‘நேநோ’ சிறுகதைத் தொகுதி தமிழ் நான்_லீனியர் ரைட்டிங் ஸ்டைலுக்குக் கிடைத்த நல்ல தொகுதி. ஏன் நீங்கள் சிறுகதைப் பரப்பில் தொடர்ந்து இயங்கவில்லை?

சாரு: அது ஒரு காலகட்டம். அவ்வளவுதான். ‘நேநோ’வில் வராத சில கதைகள் என்னிடம் இருக்கிறது. ‘கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்’ என்ற கதை ரொம்பவும் முக்கியமான சிறுகதை. இந்தக் கதையை வெளியிடுவதற்குக் கூட வழி கிடையாது. அது எந்தப் பத்திரிகையிலும் வெளிவரவேயில்லை. எனக்காக நாகார்ஜுனனே போய் டைப் பண்ணி, புத்தகமாகத்தான் வெளிவந்தது. அதேபோல் நாடகம்...‘ரெண்டாம் ஆட்டம்’ என்று மதுரையில் ஒரு நாடகம் போட்டோம். நான்தான் அதை கன்சீவ் பண்ணேன். நம் நண்பர்கள் எல்லாம் நடித்தார்கள். நானும் நடித்தேன். எல்லோரையும் அடித்து தூக்கிப் போட்டு மிதித்தவர்கள் எல்லாம் பொதுமக்கள் கிடையாது. நாடகத்தில் பிஹெச்டி வாங்கியவர்கள், சக நாடகக் கலைஞர்கள். சண்டையை விலக்கியவர் மு. ராமசாமி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், சண்டையை மிகத் தீவிரமாக மூட்டிவிட்டவர் அ. மங்கைதான். ‘அடிங்கடா அவனை’ என்ற வார்த்தைகள் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இந்த நாடகம் சம்பந்தமாக நான் 500 பக்கம் உள்ள புத்தகத்தை அகஸ்தோ போவாலைப் பற்றி ‘ஃபாரம் தியேட்டர்’ என்று ‘வெளி’ பத்திரிகையில் மொழி பெயர்த்திருக்கிறேன். இப்படி அடித்தவுடன் அதற்குப் பிறகு நாடகத்தையே விட்டு விட்டோம். தொடர்ந்து நீங்கள் செயல் வீரனாக இருக்க வேண்டுமென்றால் அடிவாங்க வேண்டும். நீங்கள் பெரிய ‘கொரில்லா’ மாதிரி இருக்க வேண்டும். அந்த அளவுக்கெல்லாம் சமூகத்தில் நமக்கு இடமே கிடையாது.தீராநதி: பொது மக்களைவிட எழுத்தாளனுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவர்கள் சக படைப்பாளிகளாக இருக்கிறார்கள் என்கிறீர்களா?சாரு: ஆமாம். நிச்சயமாக கோடிட்டு உறுதியாகச் சொல்கிறேன். பொதுமக்கள் எப்போதும் பாதுகாப்பான ஆட்கள். பொது மக்களிடம் சென்று நீங்கள் நாடகம் போடலாம். அவர்களிடம் நமக்கு எந்தப் பிரச்னையும் வராது. சக படைப்பாளிகள்தான் ஜனநாயக உணர்வே இல்லாத ஆட்களாக இருக்கிறார்கள். நம்முடைய காம்ரேட் என்று சொல்லிக்கொள்பவர்கள்தான் ஆபத்தானவர்கள்.
தீராநதி: ஜனநாயகத்தைக் கோரியும், மனித உரிமைகளின் அடி ஆழம் வரை சென்றும் விவாதிக்கும் படைப்பாளிகள் பொதுமக்களைவிட வன்முறையாகச் செயல்படுகிறார்களே, ஏன்?
சாரு: அது எனக்குத் தெரியவில்லை. யார் அதிகமாக ஜனநாயகத்தைப் பற்றி படிக்கிறானோ, அவனே பாசிஸ்ட்டாகி விடுகிறான். ‘ஒருவிதமான ‘ஐரனி’ தான் இது. அல்லது விதி. கம்யூனிஸம் என்பது மிகப்பெரிய ஜனநாயகக் கோட்பாடு. எல்லா மனிதனும் சமமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் உயரிய சித்தாந்தம். ஆனால் அது எப்படி பாசிஸமாக மாறியது? உதாரணம்; மாவோ. இது ஏதோ கம்யூனிஸத்தில் மட்டும் நடக்கவில்லை. ஆன்மிகத்திலும் நடக்கிறது. ஆன்மிகவாதி என்ன சொல்கிறான். ‘நான் சொல்வது மக்களுக்காக. நான் சொல்வது ரொம்ப ரொம்ப நிஜம்’ என்று அவன் நினைப்பதனாலேயே அதை மற்றவர் மீது திணிக்கப் பார்க்கிறான். இப்படி அதீத ஜனநாயகம் பேசுபவன் சர்வாதிகாரியாகவும், அதீத ஆன்மிகம் பேசுபவன் பாசிஸ்ட்டாகவும் ஆவதெல்லாம் இந்த உள் முரண்களால்தான். இதற்கு நேர்வாழ்க்கையில் உங்களுக்குத் தெரிந்த பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். ஆனால், அது அநாவசியம், வேண்டாம்.


தீராநதி: இளையராஜாவின் இசையை விமர்சித்து கோணல்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீர்கள்?’ உங்களின் இசை ரசனை பற்றி விளக்கமுடியுமா?


சாரு: ‘ஆல் இண்டியா ரேடியோவின் சங்கீத்’ சம்மேளன் மூலமாக ரவிசங்கரின் இசைக் கச்சேரிகளைக் கேட்க ஆரம்பித்ததிலிருந்து என் இசைத் தேடல் தொடங்கிவிட்டது. அதற்கு முன்னாலேயே எங்கள் ஊர் பள்ளி வாசல்களில் கேட்கும் ‘நகரா’ இசை மூலம் என் இசை ரசனையைப் பெருக்கிக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால், இலக்கியத்தைவிட எனக்கு இசையின் மேலும் சினிமாவின் மேலும்தான் ஆர்வம் அதிகம். சினிமா சம்பந்தமாக நான் நிறைய எழுதி இருப்பதால் அச்சந்தேகம் யாருக்கும் எழவில்லை. இசை பற்றி நான் அதிகம் எழுதாதது கூட அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். 25 வருடங்களுக்கு முன்னால் ‘மீட்சி’ இதழில் ‘சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்’ என்ற எஸ்.ராமநாதன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து கர்நாடக இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் உள்ள இணைத்தன்மைகள் பற்றி ஒரு ஒப்பீட்டுக் கட்டுரை எழுதி இருக்கிறேன். ‘ஷங்கர்லால் இசைவிழா’ என்று கணையாழியில் ஒரு கதை எழுதி இருக்கிறேன். அதைப் பாராட்டி அப்போது அசோகமித்திரன் கூட ஒரு கடிதம் போட்டார். நான் டில்லியில் இருந்தபோது பல இசைக் கலைஞர்களின் கச்சேரியை நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இசை என்றால் அவர்களின் வரம்பிற்குள் கர்நாடக இசையும் இந்துஸ்தானியும்தான் இருக்கிறது. இசை என்பது உலகம் பூராகவும் இருக்கின்ற ஒன்று. இவற்றையெல்லாம் இசையென்று நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய செவியும் அறிவும் உணர்வும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த ரசனை இல்லாதவர்களெல்லாம் இசை ரசனையே இல்லாதவர்கள் என்றுதான் சொல்வேன்.இளையராஜாவை விட யுவன் ஷங்கர்ராஜா பல மடங்கு இசை ரசனையுள்ளவர். ‘புதுப்பேட்டை’யில் அவர் கொடுத்திருக்கும் இசை பெரிய சிம்பொனி மாதிரி இருக்கிறது. மேற்கத்திய இசையில் ரொம்பவும் ஆழமான ரசனை உள்ளவனால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதே போல ஏ.ஆர்.ரஹ்மான் ‘குரு’ படத்திற்குப் போட்டிருப்பதும் உயர்தரமான இசை என்று சொல்ல முடியும். நான் எழுதிய இசைக் கட்டுரைகள் ‘கலகம் காதல் இசை’ என்று தொகுக்கப்பட்டு சமீபத்தில் ஒரு புத்தகமாக வந்திருக்கிறது. இதுதான் எனக்கும் இசைக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் சான்று. இளையராஜா பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கும் மேலாகச் சென்று இசையில் சாதனை செய்தவர்கள் சுமாராக பதினைந்து பேரையும் மறந்துவிட்டு, மறுத்துவிட்டு இவர் இருப்பது நன்றி கெட்டதனம். ஒருவன் தன்னை இசைஞானி என்று கூப்பிட்டால், எனக்கு முன்னால் பதினைந்து ஞானிகள் இருந்திருக்கிறார்கள் என்று தன்னடக்கத்துடன் அவர் சொல்லியிருக்க வேண்டும்.இளையராஜா கொடுக்கின்ற பேட்டிகளில் எல்லாம் தனக்குத் தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைத்து உளறிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் நான் அவரை விமர்சிக்க வேண்டி இருக்கிறது. ‘பாப் மார்லி’யை குப்பை என்கிறார். கத்தாரை குப்பை என்கிறார். ஆந்திராவில் சென்று கத்தாரை குப்பையென்று சொல்லிப் பாருங்கள். அப்புறம் என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

தீராநதி: யுவன் ஷங்கர் ராஜாவின் இசை குறித்து பேசியதால் கேட்கிறேன். இளையராஜாவின் இசையைக் கேட்கும்போது அதில் ஒரு மன அமைதியின்மை நிலவுகிறது. அதே யுவன் ஷங்கர்ராஜாவின் இசையைக் கேட்டால் ஒரு விளிம்பு நிலை கலாச்சாரத் தன்மையுடன் கூடிய ஒரு கொண்டாட்டம் பீறிடுகிறது. இது சரியான ஒப்பீடா?


சாரு: யுவனைப் பொறுத்த அளவில் நீங்கள் சொல்வதை நானும் உணர்ந்திருக்கிறேன். ஆனால், இளையராஜாவின் இசையில் நீங்கள் சொல்வது போன்ற ஒரு குணாம்சம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதை நான் உணர்ந்திருந்தால் அவரைக் கொண்டாடி இருப்பேன். எனக்கு அவரிடம் அப்படி ஒரு குணாம்சமே இருப்பதாகத் தோன்றவில்லை. ஒருவேளை அதற்குக் காரணம் _ என் எரிச்சல் சார்ந்ததாகக்கூட இருக்கலாம். அவர் செய்கின்ற பல ‘லந்து’களால் என் புலனுணர்வுக்கு அது எட்டாமலேகூட போய் இருக்கலாம். ஒருவேளை உங்களுடைய அனுமானம் சரியாக இருந்தால், அதற்கு அவரின் ஆன்மிகத் தேடல் ஒரு காரணமாக இருக்கலாம். ஆன்மிகத் தேடல் இருந்தாலே அது ஒருவித அமைதியையும், அமைதியின்மையையும் ஒருங்கே ஏற்படுத்திவிடும்.


தீராநதி: உங்களுடைய எழுத்துகளில் சொல்லத்தகுந்த அறமாய் ஒரு மெலிதான திராவிட அரசியல் தன்மை இழையிடுவதாகத் தெரிகிறது. அந்தக் குரல் ஒலித்துக் கொண்டேயும் இருக்கிறது. திராவிட அரசியலின் தொடர்ச்சியில் வரும் ஒரு எழுத்தாளனாக உங்களை நீங்கள் உணருகிறீர்களா?


சாரு: இதற்கு முன்னால் அப்படி இருந்த ஒரு எழுத்தாளரை உங்களால் சொல்ல முடியுமா?


தீராநதி: நிறைய இருக்கிறார்கள். குறிப்பாக பிரமிள்?


சாரு: இவ்வளவு அப்ஜெக்டிவ்வாக நான் இதுவரை யோசித்ததில்லை. ஆனால், எனக்கும் திராவிட அரசியலுக்குமான ஒரு தொடர்பு முப்பது வருடமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது. இல்லை என்றால் கருணாநிதிக்கு ஒரு கடிதம் என்னால் எழுதியிருக்க முடியாது. திராவிட இயக்கத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் வைத்தே ஒரு நாவல் எழுதும் எண்ணம் எனக்கிருக்கிறது. அதை ஏன் யாரும் செய்யவில்லை என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது. உலக அளவில் இப்படி எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட ஓர் இயக்கமாக சீலேவில் பெரோன் மூமெண்ட்டை மட்டுமே சொல்லலாம். அதற்கடுத்தது திராவிட இயக்கம்.வேறு எங்கேயும் இப்படிப்பட்ட தீவிரமான ஒரு வளர்ச்சி குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே ஒரு வீழ்ச்சி இவ்வளவு டிராமாடிக்காக நடந்ததில்லை. சிவாஜி கணேசனும் கருணாநிதியும் ஒரே மேடையில் கட்டித் தழுவிக் கொண்ட காட்சியை உங்களால் மறக்கமுடியுமா? எப்படிப்பட்ட நாடகத் தன்மை கொண்ட காட்சி அது! இவற்றையெல்லாம் தொடர்ந்து மனதில் நான் பதிவு செய்து கொண்டே இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் அத்தன்மை என்னிடமும் இருக்கத்தான் செய்யும்.