Saturday, June 02, 2007

நிஜத்தில் உள்ளதை அப்படியே சொல்லக்கூடாது - அமீர்




அமீரின் சினிமா மொழி யதார்த்தமானது. அதைப் போன்றே தனது பேச்சு மொழியையும், கருத்தியலையும் இலகுவாக்கி வைத்திருக்கிறார். எந்த ஒரு கேள்விக்கும் பிரயத்தனப் படாமல் தட்டையாக பேசுவதைப்போல் பேசுகிறார். அவர் பேசிக் குவித்த வார்த்தைகளை திரும்பப் பொறுக்கிச் சேர்க்கையில் அதன் கனம் கூடிவிடுகிறது. தீராநதிக்காக ஒரு மாலை வேளையில் இரு தரப்பிற்குள்ளும் சாதுர்யம் காட்டாமல் நீண்ட பேச்சின் பதிவு இது.


தீராநதி: ‘பருத்திவீரன்’ தமிழ் ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இவ்வெற்றி ஏற்கெனவே நீங்கள் தீர்மானித்த ஒன்றா?



அமீர்: இந்தக் கதையைத் தேர்வு செய்து இயக்க ஆரம்பித்ததிலிருந்தே இதன் வெற்றிக்காக ஃபிரேம் பை பிரேம் கடுமையாக எல்லோரும் சேர்ந்து உழைத்திருக்கிறோம். ஒரு இடத்தில் கூட சமரசம் செய்து கொள்ளாமல் படம் நினைத்த மாதிரி வர வேண்டும் என்பதில் ஒரு தெளிவு எங்களுக்குள் இருந்தது. ஆகையால் இந்தப் படத்தைப் பொறுத்த அளவிற்கு கதை ரீதியாக, காட்சி ரீதியாக நிச்சயம் வெற்றியடையும் என்பதில் எனக்கு எந்தவித சங்தேகமும் இருந்ததில்லை. ஆனால், பொருளாதார ரீதியாக இப்படம் இவ்வளவு பெரிய வெற்றியைச் சம்பாதித்துத் தரும் என்று நானும் சரி, தயாரிப்பாளரும் சரி உள்ளபடியே கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. இப்படத்தைப் பொறுத்தளவில் வியாபார ரீதியான வெற்றி என்பது எங்களைப் பொறுத்த அளவுக்கு ஆச்சர்யமான ஒன்றுதான்.



தீராநதி: இந்தப் படத்தில் குறிப்பாக சொல்லத் தகுந்த விஷயம் தமிழ் சினிமாவில் இதுவரை இருந்து வந்த ஹீரோ இஸத்தின் இமேஜை உடைத்திருப்பது. இதைப் பற்றி சொல்லுங்களேன்?



அமீர்: இதற்கு முன்பாகவே இதற்கான பாதை தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறது. ஆனால், அதில் வண்டியை ஓட்டிக்கொண்டு போகிறவர்கள் எப்போதாவதுதான் போகிறார்கள். பாரதிராஜாவாகட்டும், மகேந்திரனாகட்டும், பாலு மகேந்திராவாகட்டும் இப்படி எல்லோரும் தங்களால் முடிந்த தூரம் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அங்கங்கே ஏதாவது ஒரு விதையை ஊன்றியும் இருக்கிறார்கள். ஆக, முன்னால் நிறையப் பேர் இருந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் இல்லை. அவ்வளவுதான், இப்போதுள்ள பிரச்னை. இவர்கள் எல்லாம் போன தூரத்திலிருந்து ஒரு படி தாண்டிப் போயிருக்கிறேன். ஆனால் இவ்வளவு தூரம் தாண்டிப் போக முடியும் என்று சொன்னவர்கள் அவர்கள்தான். இதில் தனியாக நின்று நெஞ்சை நிமர்த்திக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமே கிடையாது.



தீராநதி: தமிழ் மண்ணிற்கே உரித்தான நையாண்டி மேளம், பறை, நாயணம், ஜிஞ்ஜா, உறுமி போன்ற கிராமிய கருவிகளின் முழு ஆக்ரமிப்பு, கரகாட்டம், ஒயிலாட்டம் என்று கிராமிய கலை நடனங்கள் என்று படம் முழுக்க பின்னப்பட்டு இருக்கிறது. இந்த மரபான இசையால் படம் தமிழ் வாசத்தோடு நகர்கிறது. இந்த இசை வடிவங்கள் ஏற்கெனவே தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டிருந்த போதிலும் கூட அச்சு அசல் தன்மை என்று சொல்லும் அளவிற்கு உங்களின் நட்டுப்புற இசைத் தேர்வு இருக்கிறது. இதைப் பயன்படுத்தினால் பொருளாதார ரீதியாக ஏதேனும் பாதிப்பு வருமா என்றில்லாமல் தைரியமாகச் செயல்பட்டிருக்கிறீர்கள். இது எப்படிச் சாத்தியமானது?



அமீர்: நான் சினிமாவுக்கு வந்த காலத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், என் தேவைகள் ரொம்பவே கம்மி என்பதுதான். கார், பங்களா கனவுகள் எல்லாம் எனக்குக் கிடையாது. என் கண்ணுக்கு முன்னால் நான் செய்யக்கூடிய வேலைதான் எனக்கு முக்கியம். அந்த வேலை சிறப்பான வேலையாக மக்களிடம் போய்ச் சேர்கிறதா என்பதுதான் என்னுடைய இலக்கு. அந்த தைரியம்தான் என்னை இந்த அளவுக்குச் செயல்பட வைக்கிறது. ஐயய்யோ அது செய்தால் இப்படி ஆகிடுமோ இது செய்தால் அப்படி ஆகிடுமோ என்று நான் கொஞ்சம்கூட யோசித்ததில்லை. என்னுடைய குறிக்கோள் அச்சு அசலாக என்னுடைய முகத்தை, என் தமிழ் மக்களுடைய முகத்தை அப்படியே பதியச் செய்வது. நினைத்தேன். எடுத்தேன். வந்தது, வெற்றி பெற்றது அவ்வளவுதான்.



தீராநதி: ஒரு கிராமத்து மண்வாசனைப் படம் என்றால் இசைஞானி இளையராஜா மாதிரி ஒரு இசையமைப்பாளரிடம் எல்லா வேலைகளையும் அப்படியே ஒப்படைத்துவிடுவது ரொம்பச் சுலபம். ஆனால் இந்த நாட்டுப்புற நிஜக் கலைஞர்களைத் தேடிப்பிடிப்பது என்பது கொஞ்சம் மெனக்கெடலான காரியம். இதற்காக நீங்கள் மெனக்கெட்டிருப்பது எவ்வளவு தூரம்?



அமீர்: படத்தின் வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே போய் இது சம்பந்தமான காசெட்டுகளை தேடித் தேடி வாங்கினேன். அப்புறம் ஒவ்வொன்றாக போட்டுக் கேட்டேன். அதில் நமக்குத் தேவையான குரல் எது? நமக்குத் தேவையான கலைஞர்கள் யார்? என்று முடிவு செய்தேன். ‘இது’ சரியாக இருக்கு என்று முடிவு செய்த பிற்பாடு அவர்களைத் தேடிப் போய் நேரில் சந்தித்தேன். ‘காரியாபட்டி லட்சுமி’ மாதிரியான நிறைய கலைஞர்களைச் சந்தித்தேன். அதில் லட்சுமி குழுவினரைத் தேர்வு செய்து ஒருமுறை மதுரையில் வைத்து பாடலைப் பதிவு செய்து அதை அப்படியே எடுத்துக் கொண்டு வந்து மறுபடியும் இங்கு அவர்களை வரச்சொல்லி ரீ_ரிக்கார்டிங் செய்தோம். இப்படி அதற்கான பிராசஸ் நிறைய நடந்திருக்கிறது.



தீராநதி: இந்த இசைத் தேர்வைப் பொறுத்தளவில் முழுக்க முழுக்க உங்களின் தேர்வில் வந்ததா அல்லது யுவன் ஷங்கர் ராஜா எடுத்துக் கொடுத்தாரா?



அமீர்: இல்லை. நான் எடுத்துக் கொண்டு போய் அந்த காசெட்டுகளை யுவனிடம் கொடுத்தேன். இவர்களை எல்லாம் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னேன். அவரும் சம்மதித்தார். ஏதோ ஒன்றைச் செய்கிறோம் என்றில்லாமல் ரசித்துச் செய்தேன். நாம் ஒன்றைச் செய்யும்போது தவறாக வந்துவிடக் கூடாதே என்ற பொறுப்புணர்வோடு அவர்களைப் பயன்படுத்தினேன். இன்று அந்த இசைக் குழுவினர் சொந்த மண்ணில் பெரிய அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த வெற்றி தமிழ் மண்ணிற்கும், தமிழ் அடையாளத்திற்கும் தமிழ் நாட்டுப்புற இசைக்கும் கிடைத்த வெற்றி.



தீராநதி : கிராமிய இசையைப் போலவே கிராமிய விளையாட்டுகளும் அதிநுட்பமாக படத்தில் கையாளப்பட்டிருக்கிறது. உங்களின் சிறு பிராயத்து நிஜ வாழ்க்கைப் பதிவாக இதை எடுத்துக் கொள்ளலாமா?




அமீர்: நீங்கள் இந்தப் படத்திலுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் இப்படிக் கேட்டுக் கொண்டே இருக்க முடியும். ஏனென்றால், அந்தப் படத்திலுள்ள பதிவுகள் அப்படி. நீங்கள் நினைப்பதைப் போல நான் கிராமத்தில் பிறந்தவன் கிடையாது. சுத்தமான மதுரை டவுனில் பிறந்து வளர்ந்தவன். நான் இஸ்லாமிய சமூகத்தில் மிகவும் ஒரு கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்தவன். வீட்டின் ‘கேட்’டை விட்டுக் கீழே இறங்க முடியாது. என்னுடைய அப்பா தொலைத்து விடுவார். அவ்வளவு கோபக்காரர். அவர் என் இளம் வயதிலேயே இறந்து விட்டார். அதற்கு அப்புறம் வீட்டில் கொஞ்சம் கட்டுப்பாடு சகஜமானது. நானும் கல்லூரிக்கு படிக்கப் போனேன். அங்குள்ள என்னுடைய நண்பர்கள் எல்லாம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடன் சேர்ந்து கிராமத்திற்குப் போவேன். அவர்களின் பழக்க வழக்கங்கள், சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாவற்றையும் கூர்ந்து பார்ப்பேன். அதுவெல்லாம் அப்போதே என் மனதில் பதிந்து போனது. ஒரு கிராமிய படம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததற்கு அப்புறம் இதையெல்லாம் மறுபடியும் ஞாபகப்படுத்தி ‘ஹோம் ஒர்க்’ பண்ணினேன். நேரடியாக அந்தக் கதை நடக்கும் கிராமத்திற்குப் போய் பிள்ளைகள் ஆடும் ஆட்டத்தையெல்லாம் மறுபடியும் பார்த்தேன். சரி, இன்று இப்படி இருக்கிறது. இன்னும் இருபத்தைந்து வருடத்திற்கு முன்னால் எப்படி இருந்திருப்பார்கள். இந்த பின்தங்கிய கிராமத்தில் அன்று என்ன தொழில் செய்திருப்பார்கள். இதையெல்லாம் தேடித்தேடி எடுத்து படத்தின் காட்சிகளில் சேர்த்தேன். நான் தேர்ந்தெடுத்த பல விளையாட்டுகளில் எனக்கும் கதைக்கும் ஒத்து வருகின்ற விளையாட்டுகளை மட்டும் காட்சியாக்கினேன். இப்படி இதனுடைய பிராஸஸ் என்பது ஒரு லாங் பிராஸ் என்றே சொல்ல வேண்டும். இந்த வேலைகள் முடிந்த பிறகு கதாபாத்திரங்களுக்குத் தேவையான பட்டப் பெயர்களைச் சேகரிப்பதில் இறங்கினேன்.தீராநதி: இந்தக் கேள்வியினுடைய நோக்கமே இன்றைக்கு மண் சார்ந்த கலாசாரம், மண் சார்ந்த விளையாட்டுகள் எல்லாமே அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பதுதான். ‘பீஸா’வும் கிரிக்கெட்டும்தான் இன்றைய இளசுகளின் உலகமாக இருக்கிறது. இந்தத் தருணத்தில், தமிழ் சினிமாவில் நம் மரபான விளையாட்டு முறைகள் எந்த மாதிரி பதியப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?அமீர்: நம்முடைய அடையாளம், நம்முடைய மூதாதையர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்தது, நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை. இவற்றையெல்லாம் தமிழ் சினிமா உள்வாங்கிக் கொண்டு பரிணமிக்க வேண்டும். நம்முடைய ஒரிஜினல் அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழ் சினிமா செய்ய வேண்டும். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் என்னுடைய கிராமத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். என்னுடைய மண்ணை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பதுதான் என்னைப் பொறுத்த அளவில் என்னுடைய வெற்றி என்று நினைக்கிறேன். ஹீரோ, ஹீரோயின் சக்ஸஸ் ஆனார்கள். படம் இத்தனை கோடி பணம் சம்பாதித்திருக்கிறது என்பதெல்லாம் அப்புறம்தான். இன்றைக்கு சென்னையில் இருக்கும் 22 வயசுப் பையனுÊக்கு கிராமம் என்றாலே என்னவென்று தெரியாது. ஆனால் இன்று அவன் என்படத்தை ஏற்றுக் கொண்டான். ஆஹா இதுதான் நம்முடைய மண்ணுடா என்று ஏற்றுக் கொண்டான். என்னுடைய தாத்தா, பாட்டி, அப்பா அம்மா, மாமன், மச்சான் எல்லாம் இங்கிருந்துதான் வந்திருக்கிறார்கள் என்று யோசிக்கத் தொடங்கி இருக்கிறான். தொலைந்துபோன கிராமங்களையும், தொலைந்து போன தமிழர்களின் முகங்களையும்,தொலைந்து போன கலாசாரங்களையும் மீட்டெடுத்துக் கொண்டு வந்ததுதான் ‘பருத்தி வீரன்.’தீராநதி: தமிழில் ‘மாற்று’ சினிமா குறித்தெல்லாம் இங்கு நிறைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அது பற்றி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா? ‘மாற்று சினிமா’ வை உண்டாக்கப் போகிறோம் என்று வாய்கிழிய பேசி சினிமாவிற்குள்ளாகப் போனவர்கள் பலர் ‘மொக்கையான’ படத்தைத்தான் தந்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் இதுமாதிரியான விவாத வட்டத்திற்குள் இருந்தவராக, பரிட்சயம் பெற்றவராகத் தெரியவில்லையே?அமீர்: இதற்கு முன்னாலும் சரி, இப்போதும் சரி ‘மாற்று’ சினிமா என்று பேசுகிற, விவாதிக்கிறவர்களோடு எனக்கு எந்தத் தொடர்பும் இருந்தது கிடையாது. அதுமாதிரியான நண்பர்கள் வட்டமும் எனக்கில்லை. ஆனால் ரொம்பக் காலமாக ஒரு விஷயம் எனக்குள் ஊறிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு மொழிப் படங்களிலும் தங்களுடைய வாழ்க்கையின் அடையாளம் இருக்கிறது. சீன மொழியாகட்டும், ரஷ்ய மொழியாகட்டும் ஆங்கில மொழியாகட்டும், ஸ்பானிஷ் மொழியாகட்டும், ஈரானாகட்டும், ஜெர்மனாகட்டும் எந்தப் படமாக இருக்கட்டும் அதில் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது. ஆனால் நம் இந்தியப் படங்களில் மட்டும்தான் தங்களின் வாழ்க்கை அடையாளங்களைத் தொலைத்து விட்டு வேறு எதையோ சினிமாவாக காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஏன்? என்ற ஒரு கேள்வி என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. என்னுடைய முதல் இரண்டு படங்களைக் கூட கிட்டத்தட்ட அதற்குப் பக்கத்தில்தான் வைத்திருப்பேன். கிட்டத்தட்ட என்று கூடச் சொல்ல முடியாது. ‘ராம்’மில் அப்படியேதான் இருக்கும். ‘மௌனம் பேசியதே’ படத்தில் நகரத்தினுடைய சூழலைக் காட்டி இருப்பேன். அது என்னுடைய முதல் முயற்சி என்பதால், சூழல் எந்த அளவுக்கு அனுமதித்ததோ அந்த அளவுக்குச் செய்திருப்பேன். ஆனால் பருத்தி வீரனில் ஒருவன் எலும்பும் சதையுமாக நின்றால் எப்படி இருக்குமோ அதை அப்படியே காண்பித்து இருக்கிறேன். இது ஒரு கிராமத்தைப் பதிவு செய்யும்போது தானாக வரும். இதுதான் வர வேண்டும். இன்னும் இதுமாதிரி காண்பிக்க வேண்டிய முகங்கள் நிறைய இருக்கிறது. சென்னை நகரத்தில் இருக்கிறது. அப்பார்ட்மெண்ட்டுகளில் இருக்கிறது. நம் அலுவலகங்களில் இருக்கிறது. வாய்ப்புக் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக அவற்றைக் காட்டுவேன்.



தீராநதி: ‘மாற்று’ சினிமா பற்றிய பரிட்சயம் இல்லை என்று சொன்னீர்கள். அதுமாதிரியான ‘ஐடியாலேஜ்’ உங்களுக்குத் தேவை இல்லை என்று நினைக்கிறீர்களா?


அமீர்: ஒரு இயக்குநருக்கு அது மாதிரியான இடங்களில் இருந்தால்தான் நல்ல படம் எடுக்க வரும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அந்த இடத்தில் இருந்தால்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆனால் என்னால் உணர முடியும். பார்த்த விஷயங்களை, கேட்ட விஷயங்களை வைத்தே நம்மால் கிரகித்துக்கொள்ள முடியும். அப்படி பார்த்து, கேட்ட விஷயங்களைத்தான் கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். அடிப்படையில் நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும்கூட, ஒரு இந்துவினுடைய கலாசாரத்தைக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். இந்துவாகப் பிறந்திருந்தால்தான் என்னால் சொல்லி இருக்க முடியும். அந்த தேவர் சமுதாயத்தில் பிறந்திருந்தால்தான் அவ்வாழ்வியலைச் சொல்லி இருக்க முடியும் என்பதில்லை. இந்தத் திறமைகள் ஒரு கலைஞனுக்கே உரியது. இந்தத் திறமைகள் ஒரு கலைஞனுக்குள் இருக்கிறது என்பதில் எந்தப் பெரிய ஆச்சர்யமும் இருப்பதாக நான் கருதவில்லை. இது ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் இருக்க வேண்டும். அவன்தான் கலைஞன். எல்லாவற்றையும் அனுபவித்து அனுபவித்துதான் செய்ய வேண்டும் என்றால், அவன் ஒரு சராசரி மனிதன்தானே அப்புறம் எப்படி கலைஞன் என்ற பட்டியலில் ஏற முடியும். ஏறவே முடியாது.


தீராநதி : இந்துவாக வாழ்ந்தால்தான் அவர்களின் வாழ்க்கையைச் சொல்ல வேண்டும் என்பதில்லை. ஒரு இஸ்லாமியனான என்னால் கூட அவர்களின் வாழ்க்கையைச் சொல்ல முடியும் என்கிறீர்கள். இதில் ஒரு வகுப்புவாத நல்லிணக்கக் குரல் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. மதங்கள் பற்றி உங்களின் கருத்து என்ன?


அமீர் : இங்குள்ள மக்களிடத்தில் ஒரே ஒரு பிரச்னைதான். எல்லோரும் விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். இங்குள்ள மேல்தட்டு, கீழ்த்தட்டு கடைக்கோடி மனிதன் யாராக இருக்கட்டும் அவனிடம் ‘உலகத்தில் முதல் மனிதன் யார்’ என்றால் ஆதாம் ஏவாள் என்கிறான். முதல் மனிதன் ஆதாம், ஏவாள்தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா என்றால் இல்லை. அப்போது ஆதாம் ஏவாளின் வழித் தோன்றல்கள் தானே நாம். ஆதாமின் ஏவாளின் வழித் தோன்றலாக நாம் இருக்கும் போது, நீங்கள் எப்படி செட்டியாராக முடியும்? நான் எப்படி நாடாராக முடியும்? அப்போது ஆதாம் என்ன முதலியாரா? செட்டியாரா? கிறிஸ்துவரா? முஸ்லிமா? அய்யரா? அய்யங்காரா? சைவப் பிள்ளைமாரா? தேவரா? பிரமலைக் கள்ளரா? குறவரா? யார் அவர் ஆதாம்? அவருடைய பிள்ளை, அவருடைய பிள்ளைக்குப் பிள்ளை அவருடைய பிள்ளைக்கு பிள்ளைக்குப் பிள்ளை என்று வழித் தோன்றல்கள் தானே நாம்?! ஆக, மனிதன் தோன்றியதில் யாருக்கும் பிரச்னைகள் இல்லை? மனிதர்கள் பிரிந்து கூட்டங் கூட்டமாகும் போது பிரச்னை வந்தது. அதை தான் எல்லா வேதங்களும் ‘உங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக கோத்திரங்களாகவும், சமூகமாகவும் பிரித்தோம்’ என்று சொல்கிறது. ஆனால் இதையே நாளடைவில் பல்வேறு நூற்றாண்டுகளுக்கு அப்புறம் மதங்களாகப் பிரிந்து கொண்டார்கள். ஆக, எல்லோருடைய அடிப்படை என்பது ஒன்றேதான்.
தீராநதி : ‘வெப்பன் சப்ளையர்’ போன்ற போலீஸ் லாங்வேஜ், அவர்களின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் மிக யதார்த்தமாக ஒரிஜினாலிட்டியோடு படத்தில் காட்டி இருக்கிறீர்கள். காவல் துறையோடு நேரடி அனுபவம் பெற்ற ஒருவரால் பதிவு செய்யப்பட்ட காட்சியாகப் பல இடங்களில் காட்சிகள் இருக்கிறது?
அமீர் : நீங்கள் ஜெயிலுக்குப் போய் இருக்கிறீர்களா என்று நேரடியாகவே கேட்கலாம்!




.தீராநதி : ஜெயிலுக்குப் போன அனுபவம் உண்டா?



அமீர் : கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் போய் இருக்கிறேன். தண்ணி அடித்துவிட்டு நடு ரோட்டில் கலாட்டா பண்ணுவது, பஸ் கண்ணாடியை உடைப்பது என்று பல நிகழ்ச்சிகள் உண்டு. அப்போது பார்த்த காவல்துறையின் அணுகுமுறைகளையே இன்று அப்படியே பயன்படுத்தி இருக்கிறேன்.




தீராநதி : ஒரு கலைப் பொருளை சேகரிப்பவனைப் போல நீங்கள் இவ்வார்த்தைகளைச் சேகரித்திருக்கிறீர்களா?




அமீர்: தேடிச் சேகரிக்கவில்லை. அதுவாகவே ஆழ் மனதில் பதிந்து போய் இருந்தது. அப்படித்தான் என்னால் உணர முடிகிறது.




தீராநதி : ஹோர்ஹே ஸான் ஹீனஸ் என்ற இயக்குநர் மலைவாழ் மக்களின் வாழ்வை அவர்களின் மொழியிலேயே படமாக்கியதைப் போல நீங்கள் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் மண் பரப்பை அப்படியே உறிஞ்சி எடுத்துத் தந்திருக்கிறீர்கள். நான் குறிப்பிடும் ஹீனஸின் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? உலக சினிமாவோடு உங்களின் தொடர்பு குறித்துப் பேசுவோமா?




அமீர் : உலக சினிமாவோட எனக்கு இது வரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே சொல்லுவேன். இனிமேல் அந்தத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆசைப் படுகிறேன். உலக சினிமாக்கள் என்ன என்ன மாதிரியாக வருகிறது என்பதை ‘ராம்’ படம் ‘சைப்ரஸ் பட விழா’வில் கலந்து கொண்ட போதுதான் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதையெல்லாம் பார்த்த பிறகு நம்மால் உலகளாவிய ஒரு தமிழ்ப் படத்தை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட ஹோர்ஹே ஸான் ஹீனஸ் படத்தை நான் பார்க்கவில்லை.




தீராநதி : சினிமா கனவுகளோடு சென்னைக்கு வரும் எந்த உதவி இயக்குநரும் தன் கையில் உலக அளவில் பா£க்க வேண்டிய 100 படத்தின் பட்டியலை வைத்துக் கொண்டு இருப்பான். நீங்கள் எப்படி இதில் எல்லாம் சிக்காமல் தைரியமாக இருந்தீர்கள்? ஒரு கட்டத்திற்கு மேல் தாழ்வு மனப்பான்மையில் மாட்டிக் கொள்ள வேண்டி இருக்குமே?




அமீர்: ஒரு வேளை அந்த மாதிரியான உலக சினிமாக்களை எல்லாம் பார்க்காததுதான் என்னுடைய பலமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் என்னுடைய மூன்று படங்களிலுமே எவ்விதக் கலப்படமும் இல்லை. நான் என்ன நினைக்கிறேன் என்றால் நீங்கள் குறிப்பிடும் உலக சினிமா அனுபவம் எல்லாம் ஒரு தூண்டுகோலுக்கான விஷயமாக அமையுமே ஒழிய, அதுவே முடிவாகி விடாது.




தீராநதி: உலக சினிமா அனுபவம் பெறுவதனால் நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயத்தை இன்னும் செழுமையாகச் சொல்ல அது உதவிகரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்?




அமீர்: நிச்சயமாக நீங்கள் குறிப்பிடுவதைப் போலான விஷயங்களுக்கு அது உதவியாக மட்டுமல்ல பேருதவியாகவே இருக்கும். கற்றுக்கொள்ளக் கூடாது என்பதில்லை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு கமல் என்னை அழைத்துப் பாராட்டினார். எல்லோரும் பின்னி விட்டீர்கள், அசத்தி விட்டீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்தில், ‘இதோடு ஓய்ந்து விடாதீர்கள். இன்னும் வெகுதூரம் நீங்கள் ஓட வேண்டியது இருக்கிறது’ என்றார். அவரிடம் பிடித்த விஷயமே அதுதான். இந்த வயதிலும் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் பாருங்கள். ‘வெளி நாட்டிற்குச் சென்று சினிமாவைப் பற்றி நிறைய படியுங்கள்’ என்றார். நான் அவரிடம் ‘எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது’ என்றேன். ‘அதனால் என்ன ரஷ்யாவுக்குப் போய் படியுங்கள் அங்கு யாருக்கும் ஆங்கிலம் தெரியாது’ என்றார். எது ஒன்றும் தெரியவில்லை என்று முடங்கி விட வேண்டாம். எது எங்கு கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தி முன்னேறுங்கள் என்ற அவரின் அணுகு முறை என்னைக் கவர்ந்தது. ஆக என்ன சொல்ல வருகிறேன் என்றால் இனி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ளப் போகிறேன் என்பதுதான்.





தீராநதி: நல்ல படங்களாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படும் ‘சேது’வில் ‘விக்ரம்’ லூசாகி திரிவதும், ‘காதல்’ படத்தில் ‘பரத்’ பைத்தியமாகிவிடுவதும் பருத்தி வீரனில் ‘கார்த்தி’ கொலைசெய்யப்பட்டு, ப்ரியாமணி கற்பழிக்கப்படுவதும் என்று எல்லாமே ஆன்டி க்ளைமேக்ஸ் தனமாகவே இருக்கிறது. நல்ல படம் என்றால் இந்த இலக்கணத்தோடுதான் முடிய வேண்டுமா?




அமீர்: அது ஒரு பதிவு. ஏன் அந்தப் பதிவு தேவைப்படுகிறது என்று கேட்பீர்கள் என்றால், இன்றைக்கு வரைக்கும் காதல் காவியங்களாகச் சொல்லப்படுவதில் சேர்ந்து வாழ்ந்ததாக ஒரு ஜோடி யாரையாவது நீங்கள் காட்டுங்கள் பார்ப்போம். வாழ்ந்து விட்டால் அது சராசரி விஷயமாகிவிடும். அதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது. எத்தனையோ பேர் வருகிறார்கள். வாழ்கிறார்கள், போய்விடுகிறார்கள். இதில் ஒருத்தன்தான் போராடி ஒரு இலக்கை அடைந்தவனாகிறான். அது பிறகு வரலாறாகிறது. அதுபோல பருத்தி வீரனும் முத்தழகும் தங்களின் இளமைப் பருவத்திலிருந்து சேர்ந்து காதலிக்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை நினைத்ததைப் போல நடக்கவில்லை. ஏன் நடக்கவில்லை. பருத்தி வீரனின் முன் ஜென்ம சாபத்தால் அப்படி நடந்ததா என்றெல்லாம் தெரியவில்லை. ஆக, பல கேள்விகளோடு அவர்களின் காதல் காவியமாக்கப்படுகிறது.




தீராநதி: இதில் சின்ன இடைஞ்சல் இருக்கிறது. நீங்கள் முன்பே சொன்னது போல மக்களுடைய வாழ்க்கையை அப்படியே அச்சு அசலாகச் சொல்கிறேன் என்கிறீர்கள். காவியம் என்பது மக்களின் வாழ்க்கையை அப்படியே கொண்டு வந்து வைக்கும் விஷயமில்லையே?




அமீர்: ஒரு படைப்புதான் காவியமாகிறதே ஒழிய காவியத்தை யாரும் படைப்பதில்லை. நான் ஒரு காவியம் படைக்கப் போகிறேன் என்று யாரும் போக முடியாது. நான் என்னுடைய படைப்பைத்தான் எடுத்து வைத்தேன். பின்னால் அது காவியமாகிறது. அதனால்தான் நான் யோசிக்காத விஷயத்தையெல்லாம் யோசித்து உங்களைப் போன்ற இலக்கிய வட்டாரத்தினர் ஆராய்ந்து கேட்கிறீர்கள். இதுதான் அதன் வெற்றியாகிறது.



தீராநதி: கிளாசிக்கல் மியூசிக் என்பது மனதோடு தொடர்புடையது. ஆனால் நாட்டுப்புற கிராமிய இசை என்பது மனிதனின் நாடி நரம்புகளில் புகுந்து உடல்இசையைத் தூண்டச் செய்வது. இந்த மண்ணிற்கே உரித்தான உடல் இசைதான் நம்முடைய படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என்று திட்டமிட்டே தேர்ந்தெடுத்தீர்களா அல்லது கிராமியப் படம் என்பதால் இந்த இசையை வைப்போம் என்று வைத்தீர்களா?




அமீர்: கிராமிய இசை வடிவம் என்பது கண்டிப்பாக உடல் இசையைத் தூண்டும் இசை என்பதைப் புரிந்து கொண்டுதான் வைத்தேன். ஏனென்றால் அந்த இசை நம் ரத்தத்தில் இருக்கிறது. இசையைப் பொறுத்த அளவில் மொழி கிடையாது. ஆனால் கலாசாரம் அதில் இருக்கிறது. கலாசாரத்தோடு ஒன்றிப் போகக்கூடிய இந்த இசை தான் என்னுடைய பார்வையாளனுக்கு நான் தர வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருந்தேன். அதனால்தான் அவற்றை தேடிப்பிடித்து பயன்படுத்தினேன். எந்த இசையை பயன்படுத்துகிறோம் என்பதை விட யாருக்கு இந்த இசையைக் கொடுக்கப் போகிறோம் என்று புரிந்து கொண்டதனால்தான் இவற்றை எல்லாம் சரிவர எடுத்துக் கையாண்டிருக்கிறேன்.




தீராநதி: விளிம்பு நிலை மக்களான அரவாணிகளை ஒரு இசைக் கலைஞர்களாகவே காட்டி இருக்கிறீர்கள். அது வரைக்கும் அது பெருமிதம் கொள்ளத் தக்கது. ஆனால் நீங்களும் அதில் சில இடங்களில் ‘சின்னத் தனமான’ வார்த்தைகளை எழுதி இருக்கிறீர்களே ஏன்?




அமீர்: அது மாதிரி ஏன் வைத்தேன் என்றால், அவர்கள் நிஜத்தில் அப்படித்தான் பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள். அதனால் அதை வைத்தேன். அதை வைத்து காசு பண்ண வேண்டும் என்பதற்காக அதை நான் செய்திருந்தால் அது தவறு. நான் அப்படிச் செய்யவில்லை.




தீராநதி: சரி, நிஜத்தில் இருக்கிறதைச் சொல்லி இருக்கிறேன் என்கிறீர்கள். ஆனால் பொதுவாக நிஜத்தில் அப்படி இருந்தாலும் பொதுத் தளத்திற்கு அது வரும் போது ‘எடிட்’ பண்ணித்தான் சொல்ல வேண்டும் என்ற ஒரு மனோபாவம் இங்கு இருக்கிறது. அப்போது நிஜத்தில் இருப்பதை ‘எடிட்’ செய்யாமல் அப்படியே காட்டலாம் என்கிறீர்களா?




அமீர்: நீங்கள் கேட்ட கேள்வி நியாயமான கேள்வி. சமூகத்தில் அப்படி இருக்கிறது என்பதற்காக பட்டவர்த்தனமாக ஒரு விஷயத்தை அப்படியே சொல்லிவிட முடியாது. சொல்லவும் கூடாது. ஒரு படைப்பாளியின் முக்கியமான பொறுப்பு அது. படைப்பாளி என்பவன் பொது மக்களின் பிரதிநிதியாகி விடுகிறான். அப்படி பிரதிநிதியாகிவிடும்போது, அவன் மக்களுக்குச் சொல்லக் கூடிய விஷயம் நல்ல விஷயமாகத்தான் இருக்க வேண்டும். நான் பட்டவர்த்தனமாகச் சொல்லவே இல்லை. நான் அப்படி பட்டவர்த்தனமாகச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் நான் அதில் கொஞ்சம் ‘எடிட்’ செய்துதான் சொல்லி இருக்கிறேன்.




தீராநதி: லாரி டிரைவர்களின் பாலியல் பழக்க வழக்கம் பரதனின் மலையாளப் படமான ‘பரங்கி மலா’வைத் தழுவி சொல்லப்பட்டிருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இது உண்மையா? அதேபோல லாரி டிரைவர் என்றால் பாலியல் வெறிபிடித்த லோலாய் கேஸ§கள் என்பது போல ஒரு பொது புத்தி, உங்களிடம் இருக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?




அமீர்: எல்லா டிரைவர்களும் அப்படிப்பட்டவர்கள் என்று எந்த இடத்திலும் நான் சொல்லவில்லை. ஆனால் இதைத் தவறு என்று தெரியாமலே செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அதனால் அவர்கள் இதைப் பார்த்தாவது உணரட்டும் என்பதற்காகச் சொல்லி இருக்கிறேன். அவர்கள் செய்யும் தப்பை நியாயப்படுத்துகிறார்கள். பத்துப் பதினைந்து நாட்கள் நாங்கள் வெளியே போகிறோம் என்கிறார்கள். அப்போது ராணுவத்தில் வருடக் கணக்கில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும். அப்படியா இருக்கிறார்கள். அவர்களிடத்தில் ஒரு ஒழுங்கு இருக்கிறதல்லவா. அது ஏன் இவர்களிடத்தில் இல்லை என்பதுதான் என் கேள்வி. ஆண் என்றால் எத்தனை பெண்ணிடமும் போகலாம் பெண் மட்டும் ஒருவனோடே கடைசி வரை வாழ வேண்டும் என்று சொல்கிறார்கள். கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமா? ஆணுக்கும் அவசியமில்லையா? எத்தனையோ அப்பாவி லாரி டிரைவர்களின் மனைவிகளுக்கு எய்ட்ஸ் வந்து பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருகிறார்கள். நான் அவர்களிடம் நேரில் பேசி இருக்கிறேன். அந்தப் பெண் இவனைத் திருமணம் செய்து கொண்ட பாவத்தைவிட என்ன தப்பு செய்தாள். அவனின் குழந்தை என்ன தப்பைச் செய்தது. இதைக் காட்டினாலாவது திருந்தமாட்டார்களா என்றுதான் காட்டினேன்.




தீராநதி: அப்படிப் பார்த்தால் நீங்கள் கூட முத்தழகுவை கடைசி வரை கற்பை காப்பாற்றி பருத்தி வீரனுக்குக் கொடுப்பவளாகத்தானே காட்டி இருக்கிறீர்கள். ஆக, பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு என்பது போலத்தானே ஆகிறது?




அமீர்: நூறு சதவீதம் நீங்கள் கேட்டது உண்மை தான். நம்முடைய மக்களிடத்தில் சமூகத்தில் இந்த மாதிரியான மனப்போக்கு இருக்கிறது என்பதைத்தான் நான் சொல்லி இருக்கிறேன். இதை நான் சரி என்று வாதாடவில்லையே? கதையைத் தாண்டி உணர்ந்து பார்த்தால் ஆணுக்கும் கற்பு இருக்கிறது என்பதை நான் சொல்லி இருப்பது புரியும்.




சந்திப்பு: கடற்கரய்

படங்கள் : சித்ரம் மத்தியாஸ்

No comments: