Thursday, June 28, 2007


சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று விரியும் இவரின் படைப்புகள் ஒரு வானத்தின் திடீர் திடீர் வண்ணமாறுதலுக்கு ஒத்து இயங்குபவை. கூடவே இவரின் படைப்புலகம் மரபின் வேர்களிலிருந்து விடுபட்டுவிடாதவை. 1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார்.இலங்கை அரசின் ‘சாகித்ய விருது’ (1998), ‘இலக்கியச் சிந்தனை விருது’, ‘இந்திய ஸ்டேட் வங்கி பரிசு’ என பல விருதுகள் பெற்றவர். இவரின் 75 சிறுகதைகள் அடங்கிய முழுத் தொகுதி ‘அ. முத்துலிங்கம் கதைகள்’ ஒன்றும், ‘அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற முழு கட்டுரைத் தொகுதி ஒன்றையும் ‘தமிழினி’ வெளியிட்டிருக்கிறது. ‘வியத்தலும் இலமே’ என்ற, இவர் எடுத்த உலக எழுத்தாளர்கள் நேர்காணல் நூல் காலச்சுவடு வெளியீடாகவும் வந்திருக்கிறது. ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’’ ‘உயிர்மை’ வெளியிட்டிருக்கும் நூலின் தொகுப்பாசிரியர் இவர்.
தீராநதி: அம்மாவிடமிருந்துதான் தமிழ்ப் புராண விஷயங்களைக் கற்றிருக்கிறீர்கள். இந்தப் புராண, இதிகாசங்களின் கற்றறிவு இன்று உங்களின் படைப்பாளுமைக்கு எவ்விதத்தில் பயனுள்ளதாக இருக்கிறது?
அ. முத்துலிங்கம்: என்னுடைய அம்மா எந்த வேலையாயிருந்தாலும் நான் அவரிடம் போய் கதை கேட்கலாம். அவர் சொல்லிக்கொண்டே தன்னுடைய வேலையைச் செய்வார். அந்த உற்சாகத்தில் அவர் செய்யும் வேலைகூட அவருக்கு சுமையாகத் தெரிந்திராது. அந்தக் காலத்தில் பெண்கள் சமையல் வேலை செய்யும்போது பரபரப்பாகச் செய்வது கிடையாது. நாள் முழுக்க இருப்பதால் சாவதானமாகவே செய்வார்கள். அம்மாவும் கதை சொல்லும்போது ஆதியோடந்தமாகச் சொல்வார். ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் அவர் விவரமாக அறிந்திருந்தபடியால் சுவைபடக் கூறுவார். பின்னர் நான் வளர்ந்ததும் இவற்றை புத்தகங்களில் படித்துத் தெரிந்துகொண்டேன். எங்கள் பழைய புராண இதிகாசங்களில் உள்ள கற்பனைச் செறிவை வேறு எங்குமே காணமுடியாது. நல்லதங்காள் கதையை அம்மா ஒரு நூறு தரமாவது எனக்குச் சொல்லியிருப்பார். நல்லதங்காள் ஏழு வயதில் மணமுடித்து புருசன் வீடு போவாள். அவளுக்குப் பதினாறடி நீளம் கூந்தலாம். அவளுடைய அண்ணியை 'மூளி அலங்காரி, மூதேவி சண்டாளி' என்று அறிமுகப்படுத்தும்போது, ஏதோ அவள் முன்னால் நிற்பது போலத் தோன்றும். மானாமதுரையில் பன்னிரண்டு வருசம் மழை இல்லாத பஞ்சம். 'தாலி பறிகொடுத்த, கணவரைப் பறிகொடுத்த, கைக்குழந்தை விற்ற பஞ்சம்' என்பார் அம்மா. குழந்தைகள் 'பசி பசி' என்று அலற, மூளி அலங்காரி சோத்துப்பானையை ஒளித்துவைக்கும் இடம் வரும்போது, ஒவ்வொரு தடவையும் அம்மாவின் கண்கள் கலங்குவதைப் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்துப் பெண்கள் தங்களில் நல்லதங்காளைப் பார்த்தார்கள் என்றே நினைக்கிறேன். வழி வழியாக வந்த எங்கள் இதிகாசங்களை, புராணங்களை, பழங்கதைகளை சரியாகக் கற்ற ஒருவருக்கு வேறு இடத்தில் படைப்பாளுமை பலம் தேடவேண்டிய அவசியமே இராது. இவற்றை நான் முறையாகக் கற்றுக்கொள்ளவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இன்றுவரை உண்டு. அது அதற்கு ஒரு காலம் என்றிருக்கிறது. இழந்ததை வேறுவகையில்தான் ஈடுகட்டவேண்டும். ஒரு பேராசிரியர் என்னிடம் சொல்வார் 'நீ Don Quixoteஐ படித்தால் போதும், வேறு ஒன்றுமே படிக்கத் தேவை இல்லை' என்று. அது உண்மையாகக்கூட இருக்கலாம்.
தீராநதி: இந்த மரபு இலக்கியத்தின் படிப்பறிவு, நவீன இலக்கியத்திற்கான படைப்பு மனநிலைக்கு எதிராக இருக்கிறது என்ற ஒரு கருத்து இருக்கிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அ. முத்துலிங்கம்: இதற்கு நான் பதில் சொல்வதைவிட பேர்க்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட் சொன்னதைப் பார்ப்போம். ஏனென்றால், அவர் எங்கள் மரபு இலக்கியங்களை முறையாகக் கற்றவர். அவர் சொல்கிறார், பழைய இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்த ஒருவரால் நவீன இலக்கியங்களில் கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லையென்று. இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் செலவிடும் அதே அளவு நேரத்தை பழந்தமிழ் இலக்கியங்களுக்கு ஒதுக்குவார்களாயின், ஹார்ட்டின் அபிப்பிராயத்தில், அவர்களுடைய எழுத்தாற்றல் பலமடங்கு உயரும். அது முற்றிலும் உண்மை என்றே நான் நம்புகிறேன். அமெரிக்க இலக்கியத்தின் ஆரம்பம் மார்க் ட்வெய்ன் என்கிறார்கள். அவரை முழுக்கக் கற்றுத் தேர்ந்தாலே இன்றைய இலக்கியத்துக்குத் தயாராகிவிடலாம். அதுபோல Nikolai Gogolஇன் சட்டைப் பைக்குள் இருந்து ரஷ்ய இலக்கியம் பிறந்தது என்பார்கள். சேக்ஸ்பியர் காலத்தில் அவர் பாவித்த வார்த்தைகள் 24000 தான். இன்று ஆங்கிலத்தில் பத்து லட்சம் வார்த்தைகள் உள்ளன. ஆனால், இத்தனை வார்த்தைகள் இருந்தும் இன்றுவரை யாரும் சேக்ஸ்பியரைத் தாண்டி எழுதியதில்லை.
தீராநதி: இவ்வளவு பெருந்தொகையான வார்த்தைகள் இருந்தும் சேக்ஸ்பியரைத் தாண்ட முடியாததற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?
அ. முத்துலிங்கம்: நான் சொல்ல வந்தது என்ன வென்றால், வார்த்தைகளின் தொகைக்கும் படைப்பின் தரத்துக்கும் சம்பந்தம் இல்லையென்று. மில்டனுடைய ‘இழந்த சொர்க்கம்’ 11,000 வார்த்தைகளைக் கொண்டது; திருக்குறளில் 9000 வார்த்தைகள். யசுனாரி கவபட்டா என்பவர் எழுதிய ‘தூங்கும் அழகிகள் இல்லம்’ (House of the Sleeping Beauties) நாவல் நூற்றிலும் குறைந்த பக்கங்கள் கொண்டது. அதற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கொடுத்தார்கள். இனி வரும் காலங்களில் காவியங்களை ஒருவரும் படைக்கமாட்டார்கள். படைப்பாளிகள் கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் என்று தங்கள் ஆற்றலைக் காட்டவேண்டியதுதான்.
தீராநதி: உங்களுக்கு குறைவான ஆங்கில அறிவு இருந்த காலத்தில் கூட சேக்ஸ்பியரையும், ஆங்கில இலக்கியத்தையும் யாருடைய உதவியும் இன்றி முயன்று முயன்று படித்ததாகவும் ஆனால், உங்களுக்குத் தேவையான தமிழ் மொழியின் கல்வியறிவு இருந்தும் கூட பழந்தமிழ் இலக்கியத்தைப் பயில்வதென்பது கடினமான காரியமாக இருந்தது எனவும், ஒருமுறை பேசியுள்ளீர்கள். இச்சிக்கலைக் களைய ஏதாவது வழி உள்ளதா?
அ. முத்துலிங்கம்: எனக்குப் பெரிய குறை உண்டு. சேக்ஸ்பியரை, இருக்கும் சொற்ப ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு ஓர் அகராதியின் உதவியுடன் படித்து சுவைத்துக் கொள்ளலாம். ஆனால், எங்கள் முதிசமான பழம்பெரும் இலக்கியங்களைப் படிப்பதென்றால், உரையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் படிக்க முடியும். அந்தக் காலத்தில் இதைப் 'பாடம் கேட்பது' என்று சொல்வார்கள். ஒருவர் குருவிடம் அமர்ந்து பாடம் கேட்பது. ஜோர்ஜ் எல் ஹார்ட் கூட அப்படிச் செய்திருக்கிறார். அவர் இந்தியாவுக்குச் சென்று தங்கி, அங்கே திரு. ராமசுப்பிரமணியன் என்பவரிடம் முறையாகக் கற்றவர். உ.வே. சாமிநாதய்யருடைய 'என் சரித்திரம்' நூலைப் படித்தபோது எனக்கு ஓர் இடத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது. உ.வே.சாவுக்கு முதன்முதல் சீவக சிந்தாமணி ஏடுகள் கிடைத்தபோது, அவர் ஏற்கெனவே கும்பகோணத்தில் பேராசிரியராக இருந்தார். பல நூல்களை மீனாட்சிசுந்தரம்பிள்ளை, அவர்களிடம் பாடம் கேட்டிருந்தார். நச்சினார்க்கினியர் எழுதிய உரை இருந்தபோதிலும், சீவகசிந்தாமணியின் பொருளை சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. முதல் செய்யுள், முதல் வார்த்தை 'மூவாமுதலாவுலகம்' என்பதிலேயே ஐயம் வந்துவிட்டது. ஏழு வருடங்களாக அரிய பெரிய ஆராய்ச்சிகள் செய்த பிறகே, அந்த நூலில் தெளிவு காண்கிறார். அவருக்கே இந்தக் கதி என்றால், எங்களைப் போன்றவர்களின் நிலை என்ன?திருக்குறளை எடுத்துக்கொள்ளுங்கள். தமிழுக்குக் கிடைத்த பொக்கிசம். உலகப் பொதுமறை, எங்கள் வாழ்வியல் நூல் என்று அதை அறிஞர்கள் கூறுகிறார்கள். அரிய நெறி நூலைப் படைத்தவர், எதற்காக இரண்டு வரிகளில் சொல்லவேண்டும். நாலு வரிகளில் சொல்வதைத் தெளிவாகச் சொல்லியிருக்கலாமே. புனைவு இலக்கியம் என்றால் பரவாயில்லை, வாழ்வு நெறிமுறைகளைப் பற்றி பேசும் நூலுக்குத் தெளிவு முக்கியமல்லவா? உதாரணம் '‘தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்’ என்று ஒரு குறள். ஒருவர் நடுநிலை உள்ளவர் அல்லது அற்றவர் என்பது அவர் இறந்தபின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் தெரியவரும். எச்சம் என்பதற்கு offspring என்று G.U.Pope எழுதுகிறார். அதாவது சந்ததி. இதன் உண்மையான பொருள் என்ன? மிகவும் முக்கியமான ஒரு குறளில் இப்படி அவர் என்ன சொன்னார் என்பது தெரியாமல் 2000 வருடங்கள் தடுமாறுவதிலே கழிந்துவிட்டது. என் நண்பர் ஒருவருடைய மகன் பரிசோதனைக்கூடத்தில் வேலை பார்க்கிறான். அவனுடைய பணி ரத்தம், மலம், சிறுநீரைப் பரிசோதிப்பது. அவன் சொல்கிறான் ஒரு மனிதருடைய தன்மையை மலப்பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம் என்று. ‘அவரவர் எச்சத்தாற் காணப்படும்’ என்பது அதைத்தான் குறிக்கிறது என்று நகைச்சுவையாகக் கூறுவான். பிரஸ்னேவ் சோவியத் தலைவராக இருந்த காலத்தில் அமெரிக்க உளவுத்துறை அவருடைய மலத்தைக் களவாடி பரிசோதித்துப் பார்த்தது நினைவுக்கு வருகிறது.
தீராநதி: நீங்கள் குறிப்பிடும் ஜோர்ஜ் எல் ஹார்ட்டை பற்றி சிறு அறிமுகம் செய்ய முடியுமா?
அ. முத்துலிங்கம்: ஜோர்ஜ் எல் ஹார்ட் அமெரிக்காவின் பேர்க்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அதற்கு முன்னர் அவர் விஸ்கொன்ஸின் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தார். இவர் லத்தீன், கிரேக்கம், ரஸ்யன், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் என்று பல மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் மாணவனாக இயற்பியல் படிப்பதற்காக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து பாதி வழியில் மனதை மாற்றி சமஸ்கிருதத்தைப் படித்து, அதுவும் போதாமல் தமிழையும் கற்றுக் கொண்டார். இவர் ஏப்ரல் 2000_ம் ஆண்டு பேராசிரியர் மறைமலைக்கு எழுதிய கடிதம் பிரசித்தி பெற்றது. இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக 2004_ம் ஆண்டு அறிவித்ததற்கு இந்தக் கடிதம் பெரிதும் துணை செய்தது. பல நாடுகளிலும் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களிடம் 425,000 டாலர்கள் சேகரித்து, பேர்க்லியில் தமிழ்த் துறை தொடங்கியது இவருடைய இன்னொரு பணி. பல நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய புறநானூறு ஆங்கில மொழிபெயர்ப்பு The Four Hundred Songs of War and Wisdom, 1999ம் ஆண்டு வெளிவந்து தமிழ் இலக்கியத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சென்றது.இவருடைய தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டி கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், வாழ்நாள் இலக்கிய சாதனை விருதை 2006_ல் இவருக்கு வழங்கி கௌரவித்தது.
தீராநதி: இலங்கையில் சாலை வசதிகள் குறைந்த ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த நீங்கள் இன்று சர்வதேச அளவுக்கு உயர்ந்துள்ளீர்கள். பூமிப் பந்தின் பல எல்லைகளைக் கடந்துள்ள உங்களின் இலக்கிய மனம் குறித்து பகிர்ந்து கொள்ள முடியுமா?
அ. முத்துலிங்கம்: ராட்டினம் எவ்வளவுதான் சுற்றினாலும் அதனுடைய நடுக்கம்பு அச்சை விட்டு அகலுவதில்லை. நாங்கள் எங்கேயெங்கே போய் அலைந்தாலும் எங்கள் இதயம் பிறந்த இடத்தை விட்டுப் போவதில்லை. அது அதை நிரந்தரமாகப் பிடித்தபடியே இருக்கிறது. இன்றுகூட என்ன சம்பவம் நடந்தாலும் உடனேயே என் பிறந்த ஊரில் நடந்த சம்பவத்தோடு தொடர்புபடுத்தி யோசிக்காமல் இருக்க முடிவதில்லை. உதாரணமாக இந்தப் புதுவருடத்துக்கு ஒரு நண்பர் வாழ்த்து அனுப்பியிருந்தார். உடனேயே எங்கள் ஊரில் நாங்கள் வருடாவருடம் கொண்டாடுவது நினைவுக்கு வருகிறது. ஐயாவின் கையால் 'கைவியளம்' வாங்குவது அன்றுதான். அந்த வருடம் முழுக்க அது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்று நம்பினோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், மருத்துவமனையில் கிடந்தபோது உடம்பிலே வலி ஏற்படும்போதெல்லாம் கையிலே ஒரு குமிழைத் தந்து அதை அமத்தச் சொன்னார்கள். அதை அமத்தியவுடன் வலி மருந்து உடலுக்குள்ளே செல்லும். உடனேயே வலி மறைந்துவிடும். அந்த சிகிச்சை முறை இல்லாவிட்டால் வலியினால் நான் துடித்துப் போயிருந்திருப்பேன். அங்கே கழித்த அத்தனை நாட்களும் நான் அம்மாவை நினைத்தேன். வலி நிவாரண மருந்துகள் அம்மா வாழ்ந்த காலத்தில் இல்லை. அவர் நோயினால் எவ்வளவு வேதனை அனுபவித்தபடி மரணித்திருப்பார். மேற்கு நாடுகளில் எனக்கு அதிகம் பிடித்தது நூலக வசதிகள்தான். எந்தப் புத்தகத்தைக் கேட்டாலும் எடுத்துத் தருவார்கள். ஆராய்ச்சிக்கு வேண்டிய வசதிகள் செய்து தருவார்கள். கணினி கிடைக்கும்; வேண்டியளவு நகல் எடுத்துக்கொள்ளலாம். ஒரு புத்தகத்துக்காக சைக்கிளில் பல மைல் தூரம் மிதித்துக்கொண்டுபோன ஒருவருக்கு இங்கே கிடைக்கும் வசதிகளை அனுபவிக்கும்போது, குற்ற உணர்வு ஏற்படுவது தவிர்க்கமுடியாததுதான்.
தீராநதி: நீங்கள் விரும்பினாலும் திரும்ப இயலாத ஒரு தேசமாக இலங்கை மாறிக் கொண்டு வருகிறது. இந்த அரசியல் நெருக்கடிகள் உங்களை எந்த அளவிற்குப் பாதித்திருக்கிறது?
அ. முத்துலிங்கம்: மாணவனாயிருக்கும்போதே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு கொழும்பிலிருந்து கப்பல்களில் யாழ்ப்பாணம் போய்த் தப்பியவர்களில் நானும் ஒருவன். என் குடும்பம், உறவினர், சிநேகிதர் என்று எல்லோரும் அந்தக் கப்பலில் இருந்தனர். எனக்கு அப்போதிருந்த ஒரே சொத்து நான் படிக்கும் பாடப் புத்தகங்களும், சேர்த்து வைத்திருந்த இலக்கிய நூல்களும்தான். அவற்றை ஒவ்வொன்றாகத் திரும்பவும் சேர்க்கவேண்டி வந்தது. என்னுடைய சகோதரர் குண்டுவீச்சில் வீட்டை இழந்தார். என்னுடைய சகோதரிகள் சொத்தை இழந்தனர். எனக்கு எல்லாமாயிருந்த அண்ணன் சமீபத்தில் ஊரடங்குச் சட்டத்தின்போது நிராதரவாக மருத்துவமனையில் காலமானார். நான் ஓய்வு பெற்று கனடாவைத் தேர்ந்தெடுத்து இங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும், அடிக்கடி கனடாவின் அதி உயர்ந்த படைப்பாளியான அலிஸ் மன்றோ கூறியதை நினைத்துக்கொள்வேன். ‘நீ புகுந்த நாட்டில் எவ்வளவு வசதிகளோடு வாழ்ந்தாலும் ஒருபோதும் அந்த நாடு உன் சொந்த நாடாக மாறாது. அது நீ இறக்கப்போகும் ஒரு நாடாகவே இருக்கும். உன் பிறந்த நாடுதான் உன் சொந்த நாடு.’
தீராநதி: ஜோர்ஜ் லூயி போர்ஹேவைப் போல அலிஸ் மன்றோ வெறும் சிறுகதைகள் மட்டுமே எழுதிப் புகழடைந்தவர் அல்லவா? அவரைச் சந்திக்கக் கூட நீங்கள் படாதபாடு பட்டதாக எழுதி இருந்தீர்கள். அவரை மறுபடியும் சந்தித்தீர்களா? அவருக்கு ஏன் இன்னும் நோபல் பரிசு கிடைக்கவில்லை?
அ. முத்துலிங்கம்: அந்த நாள் எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. 20 யூன் 2006. Pen Canada அமைப்பு ஒழுங்கு செய்திருந்த கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். எதிர்பாராதவிதமாக அங்கே அலிஸ் மன்றோ பேச வந்திருந்தார். அவருடன் சந்தித்து உரையாடி, அடுத்த வாரமே அவர் செவ்வியையும் பதிவு செய்தேன். அவருடைய செவ்வியும் இன்னும் பலவும் அடங்கிய தொகுதி ‘வியத்தலும் இலமே’ என்ற நான் செவ்விகண்ட ஆங்கில எழுத்தாளர்கள் பலர் நோபல் பரிசைப் பெரிதாக மதிப்பதில்லை. கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால், அதை எதிர்பார்த்து அவர்கள் எழுதுவதில்லை. ‘ஷ்யாம் செல்வதுரை இரண்டாம்தரப் புத்தகத்துக்குத்தான் முதல் பரிசு வழங்கப்படுகிறது’ என்கிறார். மார்கிரட் அட்பூட் உண்மையான தரத்துக்குப் பரிசு கிடைப்பதில்லை என்கிறார். ஜேம்ஸ் ஜோய்சுக்கு நோபல் பரிசு கிடைத்ததில்லை. அதுகூடப் பரவாயில்லை. ஸ்வீடன் நாட்டு நடுவர் ஒருவரிடம் அது பற்றி விசாரித்தபோது, ‘யார் அவர்’ என்று கேட்டாராம். 2006_ம் ஆண்டு சமாதானத்துக்கான பரிசு முகமட் யூனிசுக்குக் கிடைத்தது. ஊடகக்காரர் ஒருவர் இரவு அவரை அழைத்து நீங்கள் வானொலி கேட்கிறீர்களா என்று கேட்க, அவர் இல்லை என்றார். தொலைக்காட்சி பார்க்கிறீர்களா என, அதற்கும் இல்லை என்றார். இன்று நோபல் பரிசு அறிவிக்கிறார்கள், உங்கள் பெயரும் விவாதிக்கப்படுகிறது, அது தெரியுமா என்றார். யூனுஸ் ஆம் என்றாராம்.
தீராநதி: இலங்கையில் சிங்களவர் மட்டுமே நிறைந்திருந்த ஒரு நிறுவனத்தில் தனியான ஒரு தமிழ் மேலதிகாரியாக கடமையாற்றியிருக்கிறீர்கள். அன்று உங்களுள் நடந்த பாதுகாப்பு, அச்ச மன உணர்வுப் போராட்டம் குறித்துப் பேசலாமா?
அ. முத்துலிங்கம்: நான் கொழும்பு பல்கலைக் கழகத்துக்கு நுழைவுத் தேர்வு எழுதி அனுமதி பெற்றபோது, எங்கள் புகுமுக வகுப்பில் 55 சதவீதம் தமிழர்களாகவும் மீதி சிங்களவராகவும் இருந்தார்கள். சிங்களவர் பெரும்பான்மையாக இருந்த ஒரு நாட்டின் பல்கலைக்கழகத்தில் தமிழர் தொகை அதிகமாக இருந்தது. எங்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் படிப்பித்த பேராசிரியர்களும் தமிழர்களாகவே இருந்தார்கள். நாங்கள் வகுப்பில் அகரவரிசைப்படி அமர்வோம். எங்கள் வரிசையில் முனசிங்க என்ற சிங்களவர் இருந்தது ஞாபகம். சிங்களம், தமிழ் என்ற பேதம் எங்கள் மனங்களில் அப்போது இல்லை. விரிவுரைகள் ஆங்கிலத்திலேயே நடக்கும். இயற்பியல் பேராசிரியர் கரும்பலகையில் சிக்கலான விடையைத் தேடும்போது உரத்த குரலில் 'ஏழு எட்டு அம்பத்தாறு', 'நாலு ஆறு இருபத்தி நாலு' என்று பெருக்கல் வாய்பாட்டைச் சொல்லிச் சொல்லி எழுதுவது சர்வ சாதாரணம். இரண்டாவது வருடம் இனப்போர் வெடித்தது. தமிழர்கள் கொலை செய்யப்பட்டு, வீடு வாசல் இழந்து அகதிகள் ஆனார்கள். அமைதி ஏற்பட்ட பின்னர் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பினால், நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. சிங்களம், தமிழ் என்ற பிரிவு ஏற்பட்டதை என் கண்ணால் கண்டேன். அதன் பின்னர் பிளவு கூடியதே ஒழிய ஒன்று சேரவில்லை. நான் வேலையில் சேர்ந்தபோது எனக்கு மேலதிகாரியாக ஒரு வெள்ளைக்காரர் இருந்தார். அவரின் கீழ் நான் நாலைந்து வருடங்கள் வேலை பார்த்தேன். அவர் நாட்டை விட்டுக் கிளம்பியதும் அவர் பார்த்த வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. நான் ஒருவனே அப்போது தமிழன். எனக்கு மேலேயிருந்த இயக்குனர் சேர்மன் ஒரு பிரபலமான சிங்களவர்; ஜனாதிபதியின் சகோதரர். கம்பெனி இருந்தது சிங்களப் பிரதேசத்தில். வெள்ளைக்கார அதிகாரி இருக்கும்வரைக்கும் பிரச்னை இல்லை. ஆனால், ஒரு தமிழ் மேலதிகாரி சிங்கள ஊழியர்களிடம் வேலை வாங்குவது சிரமமானது. நிர்வாகம் கண்டிப்பும் கருணையும் கலந்து இருக்கவேண்டும். ஒரு சின்னத் தகராறு என்றாலும் வேலை நிறுத்தம் என்று ஆரம்பித்துவிடுவார்கள். முட்டை மேலே நடக்கும் வித்தை.ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்ததுதான் தாமதம், திரும்பிப் பாராமல் நாட்டைவிட்டு ஓடிவிட்டேன்.
தீராநதி: நவீனம், பின்நவீனம் என்பது குறித்தெல்லாம் விவாதங்கள் தமிழில் நடத்தப்படும் காலம் இது. உங்களின் படைப்புகளில் இவற்றிற்கான சிறு கூறுகளைக் கூட பார்க்க முடியவில்லை. இக்கோட்பாடுகள் பற்றிய உங்களின் அளவீடு என்ன?
அ. முத்துலிங்கம்: நீங்கள் கேட்ட இதே கேள்வியை நான் அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர், புலிட்ஸர் பரிசு பெற்ற Frank McCourt அவர்களிடம் ஒருமுறை கேட்டேன். அவர் சொன்ன பதிலையே கீழே தருகிறேன். 'நான் ஒரு கதைசொல்லி. கதைதான் எனக்கு முக்கியம். நான் modern, postmodern என்றெல்லாம் நினைப்பதில்லை.' அதையேதான் நானும் சொல்கிறேன். மேலும், இலக்கியம் என்பது உண்மையை நோக்கிய ஒரு பயணம். பின்நவீனத்துவம் உண்மை என்று ஒன்றில்லை. அது மாறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறது. ஆகவே எனக்கு அது எப்படிப் பொருந்தும். ஆதியிலிருந்து மனிதன் கதை சொல்லி வந்திருக்கிறான். எழுத்து பிறப்பதற்கு முன்னரே கதை பிறந்துவிட்டது. ஆப்பிரிக்காவிலே சில இனக் குழுவினர் பேசும் மொழிக்கு எழுத்துரு கிடையாது. காலம் காலமாக வாய்மொழியாக வந்த கதைகளையே சொல்கிறார்கள். எங்கள் இதிகாசங்கள், ஹோமரின் இலியட், ஒடிசி எல்லாம் வாய்மொழியாக வந்து பின்னர் எழுத்துரு பெற்றவை. தொன்று தொட்டு வந்த கதை வடிவம் இது. 2000 வருட காலத்துக்கு இது தாக்குப் பிடித்தால், மேலும் 2000 வருட காலத்துக்கு இந்த முறை நிற்கும். நியூட்டனின் புவி ஈர்ப்பு விதிகளைக் கேட்ட மாணவன் ஆசிரியரிடம் 'எத்தனை வருடங்களுக்கு திருப்பித் திருப்பி அதே விதிகளைக் கட்டி மாரடிப்பது. அலுத்துவிட்டது, எனக்கு புது விதிகள் வேண்டும்' என்று சொன்னது போலத்தான்.மேற்கிலே அவர்கள் பின்நவீனத்துவத்தைக் கைவிட்டு நாளாகிவிட்டது. இங்கே பின்நவீனத்துவம் வேண்டும் என்று சொல்பவர்கள் அதிலே முயற்சிசெய்து பார்க்கலாம்; தவறே இல்லை. எப்படிப் பார்த்தாலும் தமிழுக்கு லாபம்தான்.
தீராநதி: பின் நவீனத்துவம் உண்மை மாறிக் கொண்டே இருக்கிறதென்று சொல்லவில்லையே எதற்கும் ஒற்றை உண்மை என்பதில்லை என்றுதானே சொல்லியுள்ளது. நிதர்சனத்தில் ஒற்றை உண்மை என்பதில்லாததைப் போல் தானே உள்ளது?
அ. முத்துலிங்கம்: சில காலத்துக்கு முன்னர் ஓர் அமெரிக்கப் பேராசிரியர் என்னிடம் பின்நவீனத்துவத்தை விளங்கிக்கொள்வதற்கு John Barth படிக்கச் சொன்னார். இவரும் ஒரு பேராசிரியர்தான். பல நூல்களை எழுதி, அவை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகங்களாக இருக்கின்றன. இவருக்கு பலதரப்பட்ட பரிசுகளும், விருதுகளும் கிடைத்திருக்கின்றன. தரிசு நிலத்தை பழக்கமில்லாத உழவன் உழுவதுபோல நான் அவருடைய நூலைப் படித்து முடித்தேன். ஒன்றுமே புரியவில்லை என்று பேராசிரியரிடம் முறைப்பாடு செய்தேன். அவர் ‘கைவிடவேண்டாம். இன்னொரு முறை படியுங்கள், புரியும்’ என்றார். இன்னொருமுறை படிப்பதற்கு ஓர் இடைவெளிக்காக காத்திருக்கிறேன். பேராசிரியர் ஜோன் பார்த்திடம் ஒரு மாணவன் பின்நவீனத்துவத்தைப் பற்றிக் கேட்டபோது அவர் கொடுத்த பதில்: ‘இது கழுத்துப்பட்டி (tie) கட்டுவதுபோல கட்டிக்கொண்டே கட்டும். முறைபற்றி விளக்கி, அதே சமயம் கழுத்துப்பட்டியின் சரித்திரத்தையும் சொல்லி, இறுதியில் ஓர் அருமையான விண்ட்ஸர் முடிச்சையும் கழுத்தில் போடுவது. என் விசயத்தில் அந்த முடிச்சு தொண்டைக்குழியில் கொஞ்சம் இறுக்கமாக விழுந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.
தீராநதி: ஆப்பிரிக்காவில் இறந்த நூறு வயதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒரு கறுப்பின மூதாதையரின் உடலுறுப்பின் சிறு பிசிறை எடுத்து அம்மக்கள் உண்டதாக முன்பு ஒரு முறை சொல்லி இருந்தீர்கள். இது போல் நீங்கள் சந்தித்த வேறு வினோத நிகழ்ச்சிகளைச் சொல்ல முடியுமா?
அ. முத்துலிங்கம்: உலகத்தின் வெவ்வேறு நாடுகளின் விழுமியங்கள் மாறுபட்டதாக இருப்பது இயல்பு. அந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்ட ஒன்று, இன்னொரு நாட்டு மக்களுக்கு குரூரமானதாகப் படும். நானும் மனைவியும் தாய்லாந்துக்குப் போனபோது அங்கேயிருந்த புத்த விகாருக்குச் சென்றோம். என் மனைவி பகட்டில்லாத, இடை மறைத்த கால் மட்டும் நீண்ட, பருத்தியுடை அணிந்திருந்தார். ஆனால் அவர்கள் பண்பற்ற ஆடை என்று எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. நண்பரின் மனைவியிடம் கடன் வாங்கிய முழங்கால் தெரியும் குட்டை பாவாடை அணிந்ததும் உள்ளே விட்டார்கள். ஆப்பிரிக்காவில் சில இனத்தவர், இறந்துபோன ஒருவரின் உடலின் சிறுகூறை உண்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். அதற்கு அவர்கள் கூறும் பதில் எங்களுக்கு உயிர் தந்தவர்கள் பெற்றோர். அவர்கள் இறந்தபின் அவர்களுடைய உடலின் சிறு கூறை உண்ணும்போது அவர்கள் எங்கள் உடம்போடு ஐக்கியமாகி விடுகிறார்கள். அன்பின் மிகுதியாலே இப்படிச் செய்கிறோம். ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் பிணத்தை எரிப்பதைப் பார்த்ததும் ஆப்பிரிக்கர்கள் கிலி பிடித்து ஓடிவிடுவார்கள். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான பழக்கம் என்று என்னிடமே சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில் ஆங்கில நாளிதழில் நான் படித்த அதே செய்தியை நீங்களும் படித்திருப்பீர்கள். Rolling Stones கித்தார் கலைஞர் தன் தகப்பனாரின் சாம்பலை கொக்கெய்னுடன் கலந்து மூக்கினுள் இழுத்துக்கொண்டாராம். கற்பு பற்றியும் ஆப்பிரிக்கர்களிடம் தீராத கேள்வி இருக்கிறது. ஆப்பிரிக்காவில் மணமுடிக்கும் முன்னரே பிள்ளை பெற்ற பெண்ணுக்கு மதிப்பு அதிகம். அவள் கர்ப்பம் தரிப்பது பிரச்னை இல்லாததால் அவளை மணக்க ஆடவர் போட்டியிடுவர். இந்தியப் படங்களில் ஒரு பெண் கற்பைக் காப்பாற்றப் போராடும் இடங்கள் அவர்களுக்குப் புரிவதேயில்லை. ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, அவர்கள் முகமன் கூறுவது ரசிக்கும்படியாக இருக்கும். உங்கள் உடம்பு எப்படி? உங்கள் மனைவி எப்படி? உங்கள் பிள்ளைகள் எப்படி? என்று நீண்டுகொண்டே போகும். ஆனால், இன்னும் முக்கியமானது ஆப்பிரிக்காவில் வேலிகள், மதில்கள் இல்லாதது. உங்கள் வீட்டில் ஒரு வாழைமரம் குலை தள்ளியிருக்கும். பாதையில் போகும் ஒருவர் அதை வெட்டிக்கொண்டு போகலாம். உங்கள் தோட்டத்து மாங்காயை வேறு ஒருவர் ஆய்ந்து கொள்ளலாம். இதன் தத்துவம், நிலத்திலே விளைவது எல்லோருக்கும் பொதுவானது. அவர்கள் சொல்வார்கள் புல் இருக்கும் இடத்தில் பசு மேயும் என்று. உண்மையான பொதுவுடமை அதுதான். ஆப்பிரிக்க அனுபவங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன. நான் அவற்றைப் பதிவு செய்து வைத்திருக்கிறேன்; விரைவில் புத்தகமாகப் படிப்பீர்கள்
.தீராநதி: புத்தகமாக வாசிப்பதற்கு முன்னால் சுவாரஸ்யத்திற்காக ஒரு சில அனுபவத்தைச் சொல்லலாமே?
அ. முத்துலிங்கம்: நான் சியாரோ லியோனில் வேலை பா£த்தபோது, அங்கே சியாக்கா ஸ்டீவன்ஸ் என்பவர் 1983_ல் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அப்போது எங்கள் வீட்டில் ஒரு வேலைக்காரன் இருந்தான். அவனுடைய பெயர் அகஸ்டி. அவனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஒரு தூரத்து தூரத்து உறவு இருந்தது. அதைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன். தசரதருக்கு மூன்று மனைவிகளும் 350 ஆசை நாயகிகளும் இருந்தார்கள் என்று இதிகாசம் சொல்லும். சியாக்கா ஸ்டீவன்சுக்கும் அப்படியே.அவருடைய 73_வது வயதிலே ஃபுலானி இனத்தவர் தங்கள் சார்பில் ஒரு 16 வயதுப் பெண்ணை அவருக்குப் பரிசாக அளித்தார்கள். அவள் அவருடைய 200_வது ஆசைநாயகி என்று பேசிக்கொண்டார்கள். ‘தாவீது ராஜா விருத்தாப்பியராக இருந்தபோது எவ்வளவு வஸ்திரங்களினால் மூடினாலும் அவருக்கு அனல் உண்டாகவில்லை. அப்போது அவருக்கு பணிவிடை செய்யவும், அனல் உண்டாகும்படி அவர் மடியில் படுத்துக்கொள்ளவும், கன்னியாகிய ஒரு சிறு பெண்ணை அவருடைய ஊழியர்கள் பிடித்துக்கொண்டு வந்தார்கள். அவள் பெயர் அபிஷாக்; இப்படி பைபிளில் சொல்லியிருப்பதுபோல சியாக்கா ஸ்டீவன்சுக்கும் ஓர் அவசியம் இருந்திருக்கலாம்.ஃபுலானி பெண்ணைக் கொடுத்ததில் அதிகம் சந்தோசப்பட்டது எங்கள் வீட்டு வேலைக்காரன் அகஸ்டிதான். இவனுடைய தாய் ஃபுலானி இனத்தைச் சேர்ந்தவள். அவளுடைய கிராமத்தில் இருந்துதான் இந்தப் பெண்ணைப் பிடித்துக்கொண்டு வந்து பரிசாகக் கொடுத்திருந்தார்கள். இவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. தன் ஒன்றுவிட்ட தங்கை அரசமாளிகையில் இருப்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்தான். தான் சிறுவயதில் அவளோடு விளையாடியதையும் அவள் அப்போதே மிக அழகாக இருந்தாள் என்பதையும் விவரித்தான். தங்கள் கிராமத்தில் பால்குத்தாத பெண் அவள் ஒருத்திதான் என்றும், ஒருமுறை அவர்கள் பால்குத்த வந்தபோது இவள் காட்டுக்குள் ஓடிப்போய் ஒரு முழு இரவும், பகலும் ஒளிந்திருந்ததையும் நினைவுகூர்ந்தான். இதற்கு மேலே சொல்லமுடியாது. மீதியைப் புத்தகமாக வந்தபிறகுதான் படித்துக் கொள்ளவேண்டும்.
தீராநதி: வருங்கால தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் ஈழப் படைப்பாளிகளாகவே இருப்பார்கள் என்று முன்பொரு முறை கார்த்திகேசு சிவத்தம்பி பேசி இருந்தார். அதை உறுதிப்படுத்துவது போல இன்று ஷோபா சக்தி, புஷ்பராஜா, நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழ் நவீன இலக்கியத்தை வேறு முனைப்போடு நகர்த்திக் கொண்டு செல்கிறீர்கள். ஒட்டுமொத்தமான ஈழ இலக்கியம் குறித்து உங்களின் மதிப்பீடு என்ன?
அ. முத்துலிங்கம்: ஈழத் தமிழர்கள் தமிழ் இலக்கியத்துக்குப் புது வேகம் கொடுத்து முனைப்போடு நகர்த்திச் செல்கிறார்கள். அது உண்மை. இலங்கையில் நிலவும் போர்ச்சூழல் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது புலம்பெயர்ந்த இடத்தில் ஏற்பட்ட கலாச்சார மாற்றங்களாக இருக்கலாம். ஆனால், நான் எப்படி வருங்கால தமிழ் இலக்கியத்தை ஈழத்துப் படைப்பாளிகளே முன்னெடுத்துச் செல்வார்கள் என்று தீர்க்கமாகச் சொல்லமுடியும்? ஐம்பது வருடத்துக்குப் பிறகு தமிழ் இலக்கிய ஆராய்ச்சி செய்யும் ஒரு மாணவன் அல்லவா அதைக் கண்டுபிடிக்கவேண்டும். தமிழ் சினிமாவுக்கு தமிழில் தலைப்பு வைத்தால், அதற்கு சலுகை என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இப்படி உலகத்தில் வேறு எங்கேயும் நடக்குமா? போர்ச்சுகல்லில் எடுக்கும் ஒரு படத்துக்கு போர்ச்சுகல் தலைப்பு வைக்கவேண்டும் என்று அரசு சொல்லுமா? தமிழிலே தலைப்பு வைத்துவிட்டு உள்ளே முற்றிலும் ஆங்கிலப் பாடலாக இருந்தால் என்ன செய்வது? கொடுத்த சலுகையைப் பிடுங்கிவிடுவார்களா? ‘இலக்கணம்’ என்ற தலைப்பில் ஒரு தமிழ்ப் படம் சமீபத்தில் வந்தது. படம் ஏனோதானோ என்று இருந்தாலும், அதில் வந்த வசனங்களில் ஓர் ஆங்கிலச் சொல்கூட இல்லை. ஓரிடத்திலும் நான் வசனம் புரியாமல் முழிக்கவில்லை. இயற்கையாகவே இருந்தது. இது பாராட்டத்தக்கது. கனடாவுக்கு யாராவது வந்தால் நான் சில புதுமைகளை அவர்களுக்குக் காட்டுவேன். கனடியத் தமிழ்த் தொலைக்காட்சியில் நடக்கும் ஒத்திகை இல்லாத நேரடி ஒளிபரப்பு விவாதங்கள் முற்றுமுழுதாக தமிழ் வார்த்தைகளிலேயே நடக்கின்றன. வானொலியில் செய்திகள் சுத்தமான தமிழில், நல்ல உச்சரிப்புடன் வருகின்றன. சாதாரண உரையாடல்களில் தனித்தமிழ் நுழைந்துவிட்டது. நான் கேட்ட கவியரங்கம் ஒன்றில் இப்படி ஒரு கவிதை. (மன்னிக்கவும், நினைவில் இருந்து சொல்லுகிறேன்). updating என்றால் பொருள் இற்றைப்படுத்துதல்.கணினியை இற்றைப்படுத்தச் சொன்னாய்_ படுத்தினேன். கைப்பேசியை இற்றைப்படுத்தச் சொன்னாய்_படுத்தினேன். காதலைச் சொல்ல மறுக்கிறாய், கைகோர்க்க மறுக்கிறாய், கட்டிப்பிடிக்க மறுக்கிறாய். இருபதாம் நூற்றாண்டில் இன்னமும் இருக்கிறாயே! உன் இருதயத்தை இற்றைப்படுத்து இற்றைப்படுத்து என் இனியவளே. கனடிய அரசாங்கம் தமிழிலே தலைப்பு வைப்பதற்கு, கவிதை எழுதுவதற்கு, செய்தி வாசிப்பதற்கு ஒரு சலுகையும் தருவதில்லை. ஈழத்தமிழர்கள் தாங்களாகவே செய்கிறார்கள். English dictionary, American dictionary என்பதுபோல வருங்காலத்தில் 'ஈழத்தமிழ் அகராதி' என்று ஒன்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்கள் அவ்வளவு வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தீராநதி: எந்த ஆராய்ச்சி மாணவனின் ஆய்வும் இலக்கியத்தின் அடுத்த நகர்வுக்கு உதவியதாகச் சான்றில்லை. அவர்கள் வெறும் பட்டத்திற்காக வேண்டியே தன்ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் க.நா.சு., தொ.மு.சி.ரகுநாதன், கார்த்திகேசு போன்றோரின் ஆய்வுகள் இலக்கிய செழுமைக்கு உதவியுள்ளன. உங்களின் கணிப்பிற்கு இருக்கும் பொருள், ஆய்வு மாணவனின் கணிப்பிற்கு இருக்குமா என்று தெரியவில்லை?
அ. முத்துலிங்கம்: பெரும்பாலும் மாணவர்கள் பட்டத்துக்காகச் செய்யும் ஆய்வுதான் கடைசி ஆய்வு. அதற்குப் பிறகு அவர்கள் ஆய்வு செய்வதோ, கட்டுரை படைப்பதோ இல்லை. இது தமிழில் மட்டுமல்ல, எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அப்படித்தான். விலங்கியல் பேராசிரியர் ஒருவர் ஒருவித ஆய்வும் செய்யாமல் இளைப்பாறியது எனக்குத் தெரியும். அதே சமயம் சில பேராசிரியர்கள் தொடர்ந்து வாழ்நாள் முழுக்க ஆய்வு செய்வதும் உண்டு. இதிலே கல்வித்துறைக்கு வெளியே நின்று ஆய்வு செய்பவர்கள் தன்னார்வத்தினால் செய்வதால் அவர்கள் ஆய்வுகளில் பற்றும், உண்மையும் இருக்கும்.
தீராநதி: கார்த்திகே சிவத்தம்பி தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றை இலக்கிய மதிப்பீட்டிற்குள் வைத்தே பேச வேண்டும் என்றார். ஒரு படைப்பாளியாக சினிமா, தொலைக்காட்சி பற்றியெல்லாம் உங்களின் பார்வை என்ன?
அ. முத்துலிங்கம்: பேராசிரியர் கா.சிவத்தம்பி எங்கே இப்படிப் பேசினார், என்ன பேசினார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் பேசினால் அதற்கு ஓர் அர்த்தம் இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். நாம் படிக்கும் நூல்கள் எல்லாம் இலக்கியமா? கலையம்சம் சேர்ந்த நூல்களையே நாம் இலக்கியம் என்கிறோம். சேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களை எடுப்போம். அவை நாடகமாக நடிப்பதற்கு என்று எழுதப்பட்டவை. ஆனால், நாம் அவற்றைப் படிக்கும்போதே அவற்றின் இலக்கியச் சுவையை உணரக்கூடியதாக இருக்கிறது. அவற்றைக் மோசமாக மேடையேற்றினால்கூட அவற்றில் உள்ள கலையம்சம் அவற்றைக் காப்பாற்றிவிடும். 2400 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்கக் கவி சோபக்கிளிஸ் எழுதிய அன்ரிகன் Antigone நாடகத்தை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. அதை ரொறொன்ரோவில் நாடகமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அனுபவித்த இன்பம் ஒரு படி கூடியதாகவே இருந்தது. சோபக்கிளிஸின் நாடகப் பிரதி அத்தனை பலம் வாய்ந்தது. எப்படி எல்லா நூல்களும் இலக்கியமாக இருப்பதில்லையோ, அதேபோல எல்லா சினிமாவும் கலைத்தரமான படைப்பாக இருக்கமுடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில், அவற்றை இலக்கிய மதிப்பீட்டுக்குள் வைத்துத்தான் பேசவேண்டும். அகிரோ குரோசாவாவின் 'இகுரு' திரைப்படக் கதையைப் படிக்கும்போது நல்ல இலக்கியப் படைப்பை படித்த உணர்வே ஏற்படுகிறது. Bicycle Thieves பிரதியைப் படிக்கும்போதும், வெங்கட் சாமிநாதனின் 'அக்கிரகாரத்தில் கழுதை’யைப் படிக்கும்போதும் அதே உணர்வுதான் கிடைக்கிறது. ஆவணப் படங்களுக்கும் இது பொருந்தும். அவை சினிமாவாக வந்தாலும், தொலைக்காட்சியில் வந்தாலும் அவற்றின் இலக்கியப் பங்களிப்பை நாம் நிராகரிக்க முடியாது.
தீராநதி: உரைநடை இலக்கியத்தில் ஈழப் படைப்புகள் அடைந்திருக்கின்ற மாற்றத்தில் ஓரளவேனும் ஈழக் கவிதைகள் அடைந்துள்ளனவா என்று மதிப்பீடு செய்யும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்தத் தேக்கம் எதனால் உண்டாகிறது என உங்களால் சொல்ல முடியுமா?
அ.முத்துலிங்கம்: ஈழத்துக் கவிதைகள் சில உச்சத்தைத் தொட்டிருக்கின்றனவே. சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், மு.புஸ்பராஜன், செழியன், சோலைக்கிளி, திருமாவளவன், றஷ்மி என்று நிறைய எழுதுகிறார்கள். இன்னும் பல இளம் கவிஞர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். மலைகளின் உயரங்களுக்குச் செல்லவேண்டியிருக்கிறது நண்பர்களைத்தேடி. அவர்களை இழக்கின்றபோது மலைகளையே சுமக்கவேண்டியிருக்கிறது. இது செழியன் எழுதியது. உண்மை என்னவென்றால், ஈழத்துப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை சந்தைப்படுத்த தவறிவிடுகிறார்கள். ஈழத்தில் இன்று நிலவும் போர்ச்சூழலிலும் இலக்கிய ஆர்வம் குன்றாமல் படிக்கிறார்கள், எழுதுகிறார்கள். முந்தி ஒருபோதும் தொடர்பு கொள்ளாத ஒரு படைப்பாளி எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கடிதம் போட்டிருந்தார். தான் தொடர்ந்து
தீராநதி படிப்பதாகவும் ஆனால், தனக்கு ஆறுமாதம் கழித்துத் தான் கிடைக்கிறது என்றும் எழுதினார். இவ்வளவு கஷ்டத்திலும் அவர்கள் அங்கே தொடர்ந்து வாசிக்கிறார்கள்; எழுதி பிரசுரமும் செய்கிறார்கள். ஆனால், இந்த நூல்கள் இந்தியா போய்ச்சேருவதில்லை. ஒருவர் கண்ணிலும் படாமல் அவர்கள் படைத்துக்கொண்டிருப்பதால், அவர்களின் பெருமை அநேகருக்குத் தெரியாது. இந்தக் குறை இப்பொழுது ஓரளவுக்கு நீங்கியிருக்கிறது. இ. பத்மநாப ஐயர், ஈழநாதன், மு.மயூரன், தி.கோபிநாத் போன்றோரின் கடும் உழைப்பில் 400_க்கு மேலான ஈழத்து நூல்கள், கவிதை நூல்கள் உட்பட, இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளன. இணையதளம் http://www.noolaham.net/ பல தன்னார்வத் தொண்டர்களின் உதவியோடு மேலும் மேலும் நூல்களை ஏற்றிய வண்ணமே இருக்கிறார்கள். உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் யார் வேண்டுமானாலும் ஒரு சொடுக்கின் மூலம் இவற்றைப் படிக்க முடியும். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த பழம் பெரும் நூலகம் கொடூரமாக எரிக்கப்பட்டது. அந்தத் தவறு இனிமேலும் நடக்காது. இது நிரந்தரமானது. புத்தகங்கள் தொலைந்து போகாது. தீப்பிடிக்காது. செல்லரிக்காது. கிழியாது. முக்கியமாக ராணுவம் இதை அழிக்கமுடியாது. விரைவில் இந்தத் திட்டத்தின்மூலம் ஈழத்து நூல்கள் அனைத்தும் உலக வாசகர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.
தீராநதி: செவ்வியல் கவி வில்வரத்தினம், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்ற மூத்த தலைமுறையினரை நான் குறிப்பிடவில்லை. சமகால கவிதைகளின் வீச்சைப் பற்றியே கேட்டேன்?
அ. முத்துலிங்கம்: சமகாலத்தில் எழுதுபவர்களில் நான் ஜபார், ஆதவன் போன்றவர்களைப் படித்திருக்கிறேன். இன்னும் நிறையப் பேர் இணையத்தில் எழுதுகிறார்கள். அவர்கள் பெயர்கள் ஞாபகத்தில் இல்லை. நான் ஏற்கெனவே சொன்னதுபோல எங்கள் பிரச்சினை சந்தைப்படுத்துதல், விரைவில் ஈழத்து இளம்கவிகளின் படைப்புகளை நீங்கள் நூலகத் திட்டத்தில் படிப்பீர்கள்.
தீராநதி: அரசியல் தன்மையற்ற ஒரு நபராகவே நீங்கள் இருக்கிறீர்கள். இலங்கை அரசியல் நெருக்கடி குறித்தெல்லாம் ஏதாவது கருத்துகள் உங்களிடம் உள்ளனவா, மறுக்காமல் பேசுங்கள்?
அ. முத்துலிங்கம்: எதைச் சொல்கிறீர்கள்? என் சிறுகதைகள் ஏன் அரசியல் பின்னணி இல்லாமல் இருக்கின்றன என்று கேட்கிறீர்களா? இலங்கைப் பின்னணியில் நேர்த்தியான நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எல்லாம் வந்துகொண்டே இருக்கின்றன. நேரடி அனுபவம் இல்லாததால் நான் ஆழமாகப் பதிவுசெய்ய முடிவதில்லை ஆனால், என்னுடைய எத்தனையோ சிறுகதைகளில் ஈழத்து காட்சிகள் வந்து வந்து போகும். புதுமைப்பித்தன் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி எழுதவில்லை. எமிலி டிக்கின்ஸன் அமெரிக்க உள்நாட்டுப் போர் பற்றி அவர் எழுதிய 1700 கவிதைகளில் ஒன்றில்கூட எழுதவில்லை. அதற்காக அவர்கள் அதுபற்றிக் கவலைப்படவில்லை என்று ஆகிவிடுமா?பல நாடுகளில் சிறுபான்மையினரைப் பாதுகாக்க சட்டம் இயற்றுவார்கள். ஆனால், உலகிலேயே ஒரு பெரும்பான்மையைப் பாதுகாக்க சட்டம் கொண்டுவந்த நாடு இலங்கையாகத்தான் இருக்கும். இங்கே எப்படி ஜனநாயகம் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கலாம். ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது. பெரும்பான்மை வைத்ததுதான் சட்டம் என்று ஆகிவிட்டது. அவர்கள் போனால் போகட்டும் என்று விட்டுக்கொடுப்பதுதானா நீதி? பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டில் ஜனநாயகம் இயங்கவேண்டும் என்றால், சிறுபான்மைக்குப் பாதுகாப்பு அரசியல் சட்டத்திலேயே ஐயத்துக்கு இடமில்லாமல் சொல்லப்பட்டிருக்கவேண்டும். அல்லாவிடில் சிறுபான்மைக்கு விமோசனமே கிடையாது. பேச்சு வார்த்தைகள் நடந்தபோது ‘தீர்வு வந்துவிடும், தீர்வு வந்துவிடும்’ என்று உலகம் எதிர்பார்த்தது. மறுபடியும் போர் என்றால் இழப்பு இரண்டு பக்கமும்தான். உலகிலே எத்தனையோ பாரிய பிரச்சினைகள். ஈராக், பாலஸ்தீனம், சூடான். யார் இலங்கைப் பிரச்சினையை கவனிக்கிறார்கள்; எல்லோருமே கைவிட்டுவிட்டார்கள். தீர்வை அவர்களாகத்தான் தேடவேண்டும்.
தீராநதி: பல ஆண்டுகளாக பெண் என்பவள் இரண்டாம் பாலினமாகவே கருதப்பட்டாள். சேக்ஸ்பியரின் வெளிச்சத்தில் மறைந்து போன பெண் மகாகவி எலிஸபெத் கேரியைப் பற்றி விரிவான ஒரு கட்டுரையை நீங்கள் கூட எழுதியுள்ளீர்கள்.அதில் எலிஸபெத்தின் ‘மரியமின் துயரம்’ ஆங்கிலத்தில் வெளியான முதல் நாடகம் என்று குறிப்பிட்டதோடு, சேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ நாடகத்திற்கும் கேரியின் நாடகத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளதாக நிறுவி இருந்தீர்கள். ஆண்களையே மையம் வைத்து சுழன்ற எழுத்துலகத்தை சீமோன் பூவார் உள்ளிட்டவர்களின் மறுவாசிப்பால் பெண்களுக்கென்று மொழி, கருத்தியல் உருவாகியிருக்கிறது. உங்களின் வாசிப்பில் பெண் சுதந்திரத்தின் காத்திரம் குறித்துச் சொல்ல முடியுமா?
அ. முத்துலிங்கம்: கனடாவில் தமிழ் எழுத்தாளர்கள் கூட்டம் ஒன்றிற்கு ஒரு பெண் தலைமை வகித்தார். அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் 90 சதவீதம் ஆண்கள். தலைமை வகித்த பெண்மணி ஒரு கேள்வியுடன் பேச்சை ஆரம்பித்தார். ‘எங்கே உங்கள் மனைவிகள்? நீங்கள் அவர்களைக் கூட்டி வரமாட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் திரும்பிப் போகும்போது அவர்கள் சுடச்சுட சோறும் கறியும் தயாராக வைத்திருக்கவேண்டும்.’ இதுதான் உண்மையில் நடப்பது. இங்கே வாழும் ஆங்கிலத்தில் எழுதும் பெண் எழுத்தாளர்களிடம் பெண் சுதந்திரம் பற்றிப் பேசியிருக்கிறேன். அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. மாயா அஞ்சலோ என்ற பிரபலமான பெண் கவி ஓர் இடத்தில் சொன்னது எனக்குப் பிடித்துக்கொண்டது. ‘Be fair’ (நியாயமாக இரு) இதுதான் அவர்சொல்வது. ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான விதி. இன்று உலகத்திலே வறுமை மிக்க ஒரு நாடு ரூவாண்டா. அங்கே 49 சதவீதம் பெண்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். உலகத்திலேயே குறைவாக பெண்கள் ஆட்சியில் பங்குபற்றுவது யப்பானில், 7 சதவீதம். ஆனால் யப்பானோ பொருளாதாரத்தில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ள ஒரு நாடு. அங்கே பெண் சுதந்திரம் பெரிதாகப் போற்றப்படுகிறது. ரூவாண்டாவில் பெண்கள் நிலைமை இன்னும் பின்தங்கியே இருக்கிறது. பெண் சுதந்திரத்துக்குப் பெண்களின் சிந்தனையில் முதலில் மாறுதல் வேண்டும். சார்த்தரே பூவாரின் காதல் உலகறிந்தது. இருவரும் காதலிக்கும்போதே அவர்களுக்கு வேறு வேறு காதல்களும் இருந்தன. சுதந்திரம் என்பதுஅதுதான். ஒருமுறை அல்பேர்ட் காம்யூவிடம் சார்த்தரே ‘நீங்கள் வேண்டுமென்றால் பூவாரை படுக்கைக்கு அழைக்கலாம்’ என்று அனுமதி கொடுத்தார். பூவார் எவருடன் படுக்கவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு சார்த்தரே யார்? அங்கே பெண் சுதந்திரம் செத்துவிட்டது.
தீராநதி: ஒரு எழுத்தாளராக உள்ள அதே வேளையில், ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பைக் குறித்து இன்று பரவலான ஒரு விழிப்புணர்வு உண்டாகியுள்ளது. மொழி பெயர்க்கும்போது உண்டாகும் மொழிச்சிக்கலுக்கு ஒரு பொது கருத்தியலை உருவாக்க வேண்டும் என்கிறார்கள். மொழிபெயர்ப்பாளன் என்பவன் இரண்டாம் நிலைதான் எனும் பழைய கருத்தை மாற்றி, படைப்பாளிக்கு நிகரானவன் என்ற அந்தஸ்தும் கேட்கிறார்கள். மொழிபெயர்ப்பில் உங்களின் அனுபவம், சிக்கல், மேற்கூறிய அந்தஸ்து குறித்தெல்லாம் கருத்தென்ன?
அ. முத்துலிங்கம்: மொழிபெயர்ப்பு என்று நினைத்தாலே பயமாயிருக்கிறது. சமீபத்தில் ஒரு கட்டுரையைப் படித்து நான் கதிகலங்கிப் போயிருக்கிறேன். செர்வாண்டிஸ் என்பவர்தான் என்றும் அழியாத Don Quixote நாவலைப் படைத்தவர். அவர் சொன்னார் மொழி பெயர்ப்பைப் படிக்கும்போது உயர்ந்த சித்திரங்கள் எழுதப்பட்ட திரைச் சீலையின் பின்பக்கத்தைப் பார்ப்பதுபோல இருக்கிறதாம். வடிவமும், வண்ணமும் ஒன்றாக இருந்தாலும் பின் பக்கத்துத் திரையில் பார்ப்பது முன் பக்கத்தில் இருப்பது அல்ல என்கிறார். ரஸ்ய இலக்கிய மேதைகள் எல்லோரையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஒரு பெண்மணி, பெயர் கொன்ஸ்ரன்ஸ் கார்னெற். அவர் Tolstoy, Dostoevsky, Turgenev, Gogol. Chekhov என்று எவரையும் விடவில்லை. ஒருமுறை கொன்ஸரன்ஸ் பெண்மணியை டி.எச். லோரன்ஸ் பார்க்கப்போன சம்பவத்தை விவரிக்கிறார். அப்போது அவர் தோட்டத்தில் அமர்ந்து மொழிபெயர்ப்பைச் செய்து கொண்டிருந்தார். சுருள் சுருளாக மொழி பெயர்த்த பக்கங்கள் அவர் காலடியில் குவிந்திருந்தன. அதன் உயரம் முழங்கால் மட்டுக்கும் வந்துவிட்டது. ஒரு பக்கம் முடித்ததும் நிமிர்ந்து பார்க்காமல் அடுத்த பக்கத்தை ஆரம்பித்தார். ஆனால், லொலிற்றா நாவல் எழுதிய விளாடிமிர் நபக்கோவுக்கு இந்த மொழிபெயர்ப்புகள் பிடிக்கவில்லை. அவர் ரஸ்யன், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர். கொன்ஸ்ரன்ஸ் பெண்மணியின் மொழிபெயர்ப்பில் ரோல்ஸ்ரோயுக்கும், டோஸ்டோவஸ்கிக்கும் வித்தியாசமே தெரிவதில்லை என்கிறார். ஒரே மாதிரியான ஆங்கிலம். இப்பொழுது ரஸ்ய இலக்கியங்களை Pevear, Volokhousky என்று இருவர் கூட்டாகச் சேர்ந்து மொழிபெயர்க்கிறார்கள். இவர்கள் மொழிபெயர்த்த அன்னா கரீனினா 200 ஆண்டு வெளிவந்தது. முதலில் 32,000 பிரதிகள் அச்சிட்டு, போதாமல் மீண்டும் 800,000 பிரதிகள் அச்சிட வேண்டியிருந்தது. ரோல்ஸ்ரோய் உயிருடன் இருந்திருந்தால் மூர்ச்சை போட்டு மறுபடியும் இறந்து போயிருப்பார். இந்த இரட்டையர் Brothers Karamazovஐ மொழிபெயர்த்தபோது, என்ன செய்தார்கள் தெரியுமா? அந்த நூல் ரஸ்யாவில் வெளிவந்தது. 1800_ம் ஆண்டு அதை மொழிபெயர்த்தபோது அந்த ஆண்டுக்குப் பிறகு உண்டான ஆங்கிலச் சொற்களை அவர்கள் உபயோகிக்கவில்லை. அவ்வளவு நுணுக்கமாகச் செய்தார்கள். இது தமிழில் நடக்கிற காரியமா? மொழி பெயர்ப்பதையே விட்டுவிட்டேன்.
தீராநதி: டேவிட் ஓவன் என்ற அமெரிக்க எழுத்தாளர் தனக்கு 24 வயது என பொய்ச் சான்றிதழ் கொடுத்து பள்ளியில் கல்வி பயின்று அந்த அனுபவத்தை ஹைஸ்கூல் என்ற நாவல் வடிவத்தில் கொடுத்தார். காலிம் ஆடம்ஸ் என்ற ஆங்கிலத்தில் எழுதும் ஹாலந்து எழுத்தாளர், கடலில் Yachtல் பயணித்து அந்த அனுபவத்தை புத்தகமாக்கினார். இதைப் போல் ஏன் தமிழில் நிகழவில்லை?
அ. முத்துலிங்கம்: அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ படித்தீர்களா? நான் இந்தப் புத்தகத்தைப் பற்றி வெகுநாளாகக் கேள்விப்பட்டிருந்தாலும் சமீபத்தில்தான் படித்தேன். ஏதோ உளவுத்துறை சம்பந்தமான நாவல் என்று தள்ளிப் போட்டிருந்தேன். ஆனால், அது முற்றிலும் புதிய உலகத்தை எனக்குக் காட்டியது, ஜெயமோகனின் ஏழாம் உலகமும் அப்படியானதுதான். இன்னொரு புத்தகம் அழகிய நாயகி அம்மாளின் ‘கவலை’ வ.அ. இராசரத்தினத்தின் ‘இலக்கிய நினைவுகள்’ கூட இந்த வகையில் ஒன்றுதான். இன்னும் பல இருக்கும். நான் படித்ததில்லை.
தீராநதி: இப்போது என்ன படிக்கிறீர்கள்? உங்கள் புத்தகங்களை எப்படித் தெரிவுசெய்கிறீர்கள்?
அ. முத்துலிங்கம்: சமீபத்தில் முழுப்புத்தகத்தையும் படிக்க வைத்த நூல் Dave Eggers â¿Fò A Heartbreaking Work of Staggering Genius தலைப்பே விநோதமானது. இது ஒரு சுயசரிதைத் தன்மையான புத்தகம். இவருடைய பெற்றோர் இருவரும் ஒரு மாத கால இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிடுகிறார்கள். இவருக்கு வயது 22. இவருடைய தம்பிக்கு வயது எட்டு. தம்பியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். தன் தம்பியுடன் விளையாடுவார், சில சமயம் தகப்பன்போல கண்டிப்பாக இருப்பார். சமூக நலக்காரர்கள் வந்து தம்பியை அபகரித்துப் போய்விடுவார்களோ என்ற பயத்தில் அலைச்சல் வாழ்க்கை வாழ்கிறார். ஒவ்வொரு சம்பவத்தையும் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் சொல்ல அவரால் முடிகிறது. அவருடைய பெற்றோர் இறந்த சம்பவத்தைக்கூட சர்வசாதாரணமாக சொல்லிக்கொண்டு போகிறார். ஆனாலும் மனதுக்கு அடியில் நெகிழ்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. நான் படித்த அடுத்த புத்தகம், இன்னும் சுவாரஸ்யமானது. காவ்யா விஸ்வநாதன் என்ற 19 வயதுப் பெண் எழுதிய ஆங்கில நாவல். அதன் பெயர் How Opal Mehta Got Kissed, Got Wild and Got a Life. என்ன நடந்தது என்றால் இந்தப் பெண் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் நுழைவதற்கு நடத்திய தேர்வில் வெற்றி பெற்று அங்கே சேர்ந்துவிட்டார். இரண்டாவது வருடத்தில் இந்தப் புத்தகத்தை எழுதி வெளியிடுகிறார். அவருக்கு முன் பணமாக பெரும்தொகை 500,000 டாலர்கள் கிடைக்கின்றன. ஆனால், புத்தகம் வெளிவந்த சில வாரங்களுக்குள் பல பகுதிகள் களவாடப்பட்டிருக்கின்றன என்பது தெரியவருகிறது. பதிப்பாளர் ஒப்பந்தத்தை முறித்து, விற்பனையை நிறுத்தி, புத்தகத்தை மீளப்பெற்றுவிடுகிறார். ஆகவே, இந்தப் புத்தகம் கடைகளில் கிடைக்காது. பழைய புத்தகக் கடை ஒன்றில் தேடிப்பிடித்து வாங்கினேன். ஒரு பெண் ஹார்வர்ட்டுக்குள் நுழைய எடுக்கும் கஷ்டத்தையும், பெற்றொர்கள் படும் பாட்டையும் விவரிக்கிறது. தேர்வு கண்டவர் புத்தகப் படிப்பு மட்டும் போதாது; வாழ்க்கையையும் அனுபவித்து பார்க்கவேண்டும் என்று அறிவுரை சொல்கிறார். இவர் தன் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைத்து பல அனுபவங்களுக்கு உள்ளாகிறார். அதுதான் கதை. இது தீவிர இலக்கியத்தில் சேராது. இளைஞர்களுக்காக எழுதியது என்றாலும் நல்ல வசன நடையில் இலகுவாக நகர்கிறது.அதிர்ஷ்டவசமாக நான் வாங்கிய புத்தகத்தில் எனக்கு முன் படித்தவர் களவாடிய வசனங்களை அடிக்கோடிட்டு வைத்திருந்தது எனக்கு வசதியாகப் போய்விட்டது. காவ்யா களவு செய்த வசனங்கள் அவர் எழுதிய சொந்த வசனங்களிலும் பார்க்க மோசமானவையாகவே இருந்தன. இந்த வசனத்தையா போய் களவாடினார் என்று ஒரே வியப்பாக இருந்தது. Roots நாவலை எழுதிய Alex Haley என்பவர் மூன்றே மூன்று பொதுவான வார்த்தைகளை தன் புத்தகத்தில் களவாடி எழுதியிருந்தார். அவை pitched rolled and trembled. அவர் விட்ட பிழை அந்த வார்த்தைகளை அதே ஒழுங்கில் உபயோகித்தது. களவு கொடுத்தவர் வழக்குப்போட ஹேலி பல ஆயிரம் டாலர்கள் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்கவேண்டியிருந்தது. இந்தப் பெண்ணோ பாவம், ஒன்றுக்கும் உதவாத வசனங்களை களவாடி தன் எதிர்காலத்தை அழித்துக்கொண்டார். சென்னையில் பிறந்த ஒரு நல்ல தமிழ் இளம் பெண்ணின் படைப்புக்கு இது நேர்ந்துவிட்டது சோகமானதுதான
தீராநதி: எழுதுவதைத் தவிர வேறு ஏதாவது ஈடுபாடுகள் உங்களுக்கு கனடாவில் உள்ளனவா?
அ. முத்துலிங்கம்: தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பு கனடாவில் இருக்கிறது. அதில் நான் இயங்கி வருகிறேன். தன்னார்வலர்களால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், லாபநோக்கற்ற குழுவாக ரொறொன்ரோவில் பதிவுசெய்யப்பட்டது. இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான விருதை வழங்கி கௌரவிக்கிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் தங்கள் நாடுகளில் இலக்கியம் படைப்பவர்களுக்கு கௌரவம் செய்கிறது. ஆனால், இந்த அமைப்பு உலகளாவிய ரீதியில் செயல்படுகிறது. சென்ற வருடம் இந்த விருது பேர்க்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட்டுக்கு வழங்கப்பட்டது. இது நாடு, சமயம், நிறம், சாதி கடந்தது. இதற்கான ஒரு நிதியம் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரொறொன்ரோ ஆர்ட்ஸ் கவுன்சில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்தியிருக்கிறது. இதற்கு நடுவர்கள் 15 பேர் இந்தியா, இலங்கை, மலேசியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் சுற்றுமுறையில் விருதுத் தேர்வுக் குழுவில் பணியாற்றுவார்கள். தமிழ் இலக்கிய சாதனை விருது மட்டுமல்லாமல், மேலும் மூன்று பரிசுகளும் வருடாவருடம் வழங்கப்படுகின்றன. புனைவு இலக்கியம், அபுனைவு இலக்கியம், சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் தமிழ் தகவல் தொழில்நுட்ப சாதனை விருது. தமிழின் எதிர்காலம் தமிழ் தகவல் தொழில்நுட்பத்தில் பெரிதும் தங்கியிருக்கிறது. ஆகவே, இந்த விருது முக்கியத்துவம் பெறுகிறது. மற்ற விருதுகள் போல இதுவும் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் பூட்டிய அறைக்குள் இருந்து தமிழ்ச் சேவை புரியும் தகவல் தொழில்நுட்பக்காரர் ஒருவருக்குப் போய்ச்சேரும்.அடுத்து நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது தமிழ் விக்கிபீடியாவில். இது ஒரு கலைக்களஞ்சியத்துக்குச் சமம். ஆனால் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. தமிழ் விக்கிபீடியாவை இணையம் மூலம் உலகில் எங்கிருந்தும் யாரும் பயன்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவது, இது கல்வியாளர்களால் மாத்திரம் உருவாக்கப்படுவது இல்லை. யாரும் எழுதலாம். எவரும் பங்கு பற்றி திருத்தங்கள் செய்யலாம். ஆகவே, கட்டுரைகளில் ஆசிரியர் பெயர் இராது. ஆங்கிலத்தில் உள்ள விக்கிபீடியாவில் பத்து லட்சம் கட்டுரைகள் இருக்கின்றன. இந்திய மொழிகளில் தெலுங்கில் 26000 கட்டுரைகள், வங்காளியில் 12700 கட்டுரைகள் சேர்ந்துவிட்டன. தமிழ் விக்கிபீடியா இந்த மாதம் 10,000 கட்டுரைகள் இலக்கை தொட்டுவிட்டதாக அறிகிறேன். அதற்கும் கீழே ஹிந்தி, கன்னடம், மலையாளம் என்று வருகிறது. என்னுடைய வேலை எனக்குத் தெரிந்த படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் என்று அணுகி அவர்களிடம் கட்டுரை பெற்று களஞ்சியத்தில் சேர்க்க உதவுவது. தங்கள் பெயர் வராததால் பலர் தயங்குகிறார்கள். உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் தன்னார்வத் தமிழர்கள், இந்தப் பணியில் முழுமூச்சுடன் வேலை செய்கிறார்கள். இந்த வருடம் முடிவதற்கிடையில் கட்டுரைகளின் எண்ணிக்கையை 20,000_க்கும் மேலாக உயர்த்தும் முயற்சியில் இருக்கிறார்கள்.ரொறொன்ரோவில் எனக்குத் தெரிந்த ஓர் இளைஞரின் பெயர் நற்கீரன். பொறியியல் முதுகலை படிக்கிறார். நாளுக்கு இரண்டு மணித்தியாலம் ஒதுக்கி இதற்காக உழைக்கிறார். அவருக்கு இதனால் ஒரு சதம் லாபம் இல்லை. முழுக்க முழுக்க தமிழ்ச் சேவை என்பது இதுதான். உலகம் முழுக்க வாழும் கல்வியாளர்கள், படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மனமுவந்து உதவவேண்டும். கட்டுரைகளை எழுதி 'தமிழ் விக்கிபீடியா' என்று தலைப்பிட்டு யாரும் natkeeran@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

No comments: