1.
குட்டி கைப் பையோடு
உத்யோகத்திற்கு விரையும் சீனத்துக்காரி
வெளியேறுவதற்கு முன்னதாக
ஆடியில் காண்கிறாள் முகத்தை.
குட்டை பாவாடை
குறுஞ் சிரிப்பு தோன்றி மறைகிறது அதில்.
அலுவல் அழைக்கும் நேரம்
முகத்திற்கு பொலிவு கூடுகிறது.
மாலை காய்ந்த குப்பையாகிவிடும் என்பதை அறிவாள்.
ஆடியில் விழும் முகம்
மெல்லஅலையுறத் தொடங்குகிறது.
தலைக்கு அவள் சூடியிருந்த
வாசனை மலர்கள்
தழைத்து அரும்புகின்றன-ஒரு
வைகறைத் தோட்டத்தின்
வைராக்யத்தோடு.
2.
ஒரு இளவரசனைப் போல கம்பீரம்-
தேர்ந்த நடிகனின் மிடுக்கு-
மர சாய்வு நாற்காலியில் சாய்கிறேன்.
என் பார்வை தாண்டிப் போகிறது-
நகரத்தை,
தோட்டத்தை,
தேசத்தின் வரைபடத்தை,
இப்போது என் தலையை கழற்றி வீசுகிறேன்.
அழகிய ஒரு பூ ஜாடியைப்போல
ஒரு ரோஜாவை அதில் செருகுகிறேன்.
இன்னும் நிறைய வண்ண மலர்கள்
எனக்கு முகம்.
மலர்களின் தோட்டம்-
இளவரசனின் கம்பீரம்-
நடிகனின் மிடுக்கு-
எல்லாம் பொறுந்திய என் முகம்
இன்று முதல்
அழகிய மலர்கள் அரும்பும்
பூக்குடை.
No comments:
Post a Comment